எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்

புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி

புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான்.  அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத் தடுக்க, அவர்களுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கலாமா? என்றெல்லாம் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால்,கட்சிகளைப்பற்றிகவலைப்படாமல்,அவர் களுடைய ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கண்ணுசாமி அவர்களின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக  11.1.2019 அன்று சென்றபோது புதுக்கோட்டையில்  திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கண்ணுசாமி அவர்களின் பெயரால் நினைவுப் படிப்பகம்

நூறாண்டுகள் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் அறக்கட்டளைக்கு இந்தப் பகுதியில் நிலத்தைக் கொடுத்து, அங்கே படிப்பகங்கள், நூலகங்கள் உருவாக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு அய்யா கண்ணுசாமி அவர்களுடைய பெயரால், பெரியார் அறக்கட்டளை சார்பாக, விரைவில் அவர் கொடுத்த நிலத்தில், மருத்துவமனையையொட்டிய அந்தப் பகுதியில் ஏற்படுத்துவதற்கு மிகத் தீவிரமாக இருந்தார்கள். ஆகவே, அந்தப் பகுதியில் அய்யா கண்ணுசாமி அவர்களின் பெயராலே ஒரு நினைவுப் படிப்பகம் உருவாக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் ஆறுதலாக உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றபடி அய்யா போன்ற தோழர்கள், பதவியை நாடாது, நன்றியை எதிர்பாராது, மானம் பாராது மக்களுக்குத் தொண்டாற்றிய தொண்டர்கள். பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட முதுபெரும் பெரியார் தொண்டர்கள் போன்று பலரும் வரவேண்டும். அப்படிப் பட்டவர்களுடைய தொண்டை பாராட்டுவதற்காக, கட்சி களுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் இங்கே வந்திருப்பது மிகவும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது.

சமஸ்கிருத்ததையும், இந்தியையும் திணிப்பது மோடி ஆட்சியினுடைய கொள்கை

செய்தியாளர்: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வெளிநாட்டில் படிப்பதற்காக மும்பை விமானம் நிலையம் சென்றிருக்கிறார்; அவரிடம் இந்தியில் பேசும்படி அங்கே உள்ள அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அந்த இளைஞரோ, இந்தித் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், நீ தமிழகத்திற்குத் திரும்பிப் போ'' என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக வந்துகொண்டிருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா கட்சி இந்தி மொழியைத் திணிப்பதாக நாம் கருதலாமா?

தமிழர் தலைவர்: கருதவேண்டிய அவசியமில்லை. அதுதான் உண்மையானது. அவர்களைப் பொருத்த வரையில், ஏற்கெனவே இதேபோன்று மும்பை நிகழ்ச்சியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் தகராறு ஏற்பட்டது. வைகோ அவர்கள், நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்; எனக்கு இந்தி தெரியாது'' என்று அந்த அதிகாரிகளிடம் சொன்னபொழுது, நீங்கள் இந்தி மொழியைத் தெரிந்துகொள்ளவேண்டும்'' என்று சொன்னபொழுது, பெரிய தகராறு ஏற்கெனவே நடந்திருக்கிறது. அதேபோன்றுதான் இப்பொழுதும் அங்கேயுள்ள அதிகாரிகள் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் ஒரு செய்தி வந்தது, கல்வித் திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்கப் போகிறார்கள் என்கிற செய்தி வந்தது. பிறகு அந்தச் செய்தியை வேண்டுமென்றே மறுத்து இருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும், நடைமுறையில், தத்துவ ரீதியாக, கொள்கை ரீதியாக அதை நடைமுறைப் படுத்தாவிட்டாலும், சமஸ்கிருத்ததையும், இந்தியையும் திணிப்பது என்பது மோடி ஆட்சியினுடைய கொள்கை யாகும்.

ஏனென்றால், அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வரு வோமா என்று தெரியாது. அதுவரையில், Now or Never என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோன்று, இப் பொழுது செய்யாவிட்டால், எப்பொழுதும் செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆகவே, இதுதான் அவர்களை வழியனுப்புவதற்கு மிகவும் வசதியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

எனவேதான், அவர்கள் தோண்டுகிற குழி இருக் கிறதே, அது தமிழுக்கோ, பிற மொழிகளுக்கோ அல்ல. அவர்களுக்காகத்தான்.

இந்தி மொழியை சாதாரணமாக யாரும் படிப்பதற்கு ஆட்சேபனை செய்யவில்லை. தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா இருக்கிறது; மத்திய அமைச்சராக உள்ள சுஷ்மா சுவராஜ் போன்றவர்களும் அங்கே வந்து செல்கிறார்கள்.

ஆனால், இந்தி மொழியைப் படிக்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆங்கிலம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற நேருவினுடைய வாக்குறுதி என்பது அரசியல் சட்டத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

மோடி அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது, இந்தியிலா பேசுகிறார்? ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்.

ஆகவேதான், இதுபோன்ற அதிகாரிகள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக' இருக்கிறார்கள். அதற்குக் காரணம் இந்த ஆட்சிதான்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு அம்சத் திட்டம்தான். அதுமட்டுமல்ல, இந்த மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இன்றுவரை ஒரு அனுதாப வார்த்தையைக்கூட பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் சொல்லவில்லை.

புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்ட தொகைக்கு மாறாக, யானைப் பசிக்கு சோளப் பொரி' என்ற அளவில்தான் இருக்கிறது.

மோடி ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்

இதற்கு எல்லாம் ஒரே வழிதான் - ஒரு அம்சத் திட்டம்தான் - எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து என்று சில நேரங்களில் சொல்வார்கள், அது சரியானதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், இந்த அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான்.

அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத் தடுக்க, அவர்களுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கலாமா? என்றெல்லாம் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், கட்சிகளைப்பற்றி கவலைப்படாமல், அவர்களுடைய ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். இனிமேல், கட்சிகள் அவர்களு டைய பின்னால் போகவேண்டிய அவசியமில்லை.

மூழ்குகிற கப்பலில் யார் போய் ஏறினாலும்....

செய்தியாளர்: வாஜ்பேயி வழியில், தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதை அ.தி.மு.க.வோடு கூட்டணியாக எடுத்துக்கொள்ளலாமா? அல்லது தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதற்கான வழி என்று எடுத்துக்கொள்ளலாமா?

தமிழர் தலைவர்:வாஜ்பேயி வழியிலே என்று சொன்னால், அந்த வழி அடைக்கப்பட்டு நீண்ட நாள்களாகி விட்டன. அதை நாங்கள் அடைப்பதைவிட, ஏற்கெனவே, பா.ஜ.க.வே அடைத்துவிட்டது.

ஆகவேதான், யார் அவர்களோடு சென்றாலும், எந்தக் கட்சி போனாலும், மூழ்குகிற கப்பலில் யார் போய் ஏறினாலும், அதனுடைய விளைவு என்னாகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

நீதிமன்றத்திலும் நிற்காது; வீதிமன்றங்களிலும் போராட்டம் வெடிக்கும்!

செய்தியாளர்:மத்திய அரசு உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அது நீதிமன்றத்திலும் நிற்காது; வீதிமன்றங்களிலும் போராட்டம் வெடிக்கும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner