எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும்

செய்யாத குற்றத்திற்காக 2 ஜி வழக்கில் ஆ.இராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர்; கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயகப்படி பதவி விலகி, சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:

தொலைக்காட்சிப் பேட்டிகள்

இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு பங்களா பற்றியும், அதில் நடைபெற்ற தொடர் கொள்ளைகள், கொலைகள்பற்றியும், அதற்கு முழுக் காரணம் தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச் சாமிதான் என்றும், கொலைபற்றி டெகல்கா' முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் மற்றும் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட நபர்களான சயான் - வயலார் மனோஜ் என்பவர்கள் தொலைக்காட்சிகளில் பேட்டிகளை ஒரு முறையல்ல, இரண்டு முறை தந்துள்ளனர்!

கொள்ளை, கொலை சம்பவங்கள் 'மர்மக் கதை'போல்...

ஜெயலலிதாவின் மரணம், அதற்கடுத்து திருமதி.சசிகலா கைது, பெங்களூரு சிறைவாசம் என்ற நிகழ்வு களுக்குப் பிறகு அடுத்து சகலவிதமான பாதுகாப்பு களுடன் அமைந்த கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் மர்மக் கதை'போல் நடந்துள்ளன.

1. கொடநாடு எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த 27 சி.சி.டி.வி. கேமராக்களும் ஒட்டுமொத்தமாகச் செயல் படாது போனது.

2. 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் தனி இணைப்பை அந்த எஸ்டேட் பெற்றுள்ளது.

3. அது முன்னாள் முதலமைச்சரின் அலுவலகமாகவும் அறிவிக்கப்பட்டு செயல்பட்டும் வந்துள்ளது.

4. ஜெயலலிதா மறைந்த இரண்டு மாதங்களில் கொடநாடு பங்களாவிலிருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி மர்மமான' முறையில் கொலை செய்யப்படுகிறார்!

5. அதற்கடுத்து 29.4.2017 அன்று மாலை 5 மணிக்கு கேரளாவில் சயான் என்பவர் குடும்பத்தோடு சென்ற கார் விபத்தில் தன்னுடைய மனைவியை, குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பித்துக் கொள்கிறார்.

(இந்த சயான்தான் டெகல்கா'வின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூசுடன் இருந்து தொலைக் காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கும் காட்சி ஊடகங்களில் வந்தது).

6. 4.7.2017 அன்று சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ்குமார் என்பவர் மர்மமான' முறையில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் ஒப்புதல் வாக்குமூலம்

7. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் - கொடநாடு எஸ் டேட்டின் எல்லா இடங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பும், நடைமுறையும் உள்ள கனகராஜ் என்பவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின்படிதான் அங்கே இருக்கிற சில ஆவணங்கள், சில கம்ப்யூட்டர்கள், மின்பொருள்கள், சில விவரங்கள், பென் டிரைவ் போன்றவைகளை பெற்றுச் சென்றோம்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பிறகு, கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தியும் வருகிறது!

உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்திருக்க வேண்டாமா?

இவ்வளவு தொடர் சம்பவங்கள், குற்றங்கள் அதுவும் முன்னாள் முதலமைச்சரும், கட்சித் தலைவருமான ஜெய லலிதா மரணத்திற்குப் பிறகு, அதுவும் திருமதி. சசிகலா சிறைவாசத்தில் இருக்கும்பொழுது நடைபெறுகின்றன என்றால், உடனடியாக அ.தி.மு.க. அரசு இதுபற்றிய தீவிர விசாரணையை முடுக்கிவிட்டு, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்திருக்க வேண்டாமா? மற்ற சாதாரண காதல் கொலைகளில் காட்டிய அவ சரத்தைக்கூட இதில் காட்டாது ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுவும் டெகல்கா'வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் உடன் இருந்து, தப்பித்த குற்றவாளிகள் தந்துள்ள வாக்குமூலங்களுக்குப் பிறகு, முதலமைச்சர் புகார் கொடுத்து, அவர்களைக் கைது செய்வதன்மூலமே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை எளிதில் போக்கி விட முடியுமா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி, தன்னைக் குற்றமற்றவர் என்று  காட்டவேண்டும்

எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், இந்தச் சம்பவம்பற்றிச் சுட்டிக் காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி, தம்மை நீதி விசாரணைக்கோ அல்லது சி.பி.அய். அல்லது (பதவியில் உள்ள) நீதிபதிகள்மூலமோ குழு விசாரணை நடத்தி தன்னைக் குற்றமற்றவர் என்று  காட்டவேண்டும் என்று கேட்பது சரிதானே! எதிர்க்கட்சித் தலைவரின் கடமை அல்லவா?

இதற்காக அவர்மீது பாயவேண்டியது'' நியாய மல்ல; அவரைத் தாக்கி சில கட்சிக்காரர்கள், அமைச்சர் களைவிட்டு அறிக்கை விடுவது மக்களின் சந்தேகத்தைப் போக்க எவ்வகையிலும் உதவாது!

டெகல்கா' முன்னாள் ஆசிரியரின் பேட்டிக்குப் பின்னணியில் யார் என்பதைவிட, அது உண்மையா? கற்பனையா? பொய்யா? என்று காட்டவேண்டியது முதல் வரின் முக்கிய கடமையாகும்!

பதவியிலிருந்து விலகி, தாம் குற்றமற்றவர் என்று ஆன பிற்பாடு, பதவிக்கு வரலாமே! பழி நீங்க வாய்ப்பு ஏற்படுமே!

எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அத்துணை கட்சித் தலைவர்களும் இதனை வலியுறுத் தியுள்ளனர் என்பதும் முக்கியம்.

'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வராக இருக்கவேண்டும்' என்பது பழைய ஆங்கிலப் பழமொழி. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள்மீது பழி வந்தால், அதனை நீக்கிட ஆவன செய்ய

வேண்டும்.

2ஜி வழக்கின் அளவுகோல் - இதற்கும் வேண்டாமா?

2ஜி வழக்கில் இவர்கள் அ.தி.மு.க. மற்ற பல கட்சிகளும், மத்திய அமைச்சர் ஆ.இராசா, கவிஞர் கனிமொழி ஆகியோர்மீது வழக்குப் போட்டு, இராசா அவர்கள் பதவி விலகி, சிறையில் ஒன்றரை ஆண்டுகாலம் இருந்தார். கனிமொழி அவர்கள் 6 மாதங்கள் செய்யாத குற்றத்திற்கு சிறையில் வதிந்தார். அது வெறும் அனுமான யூகத்தின் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டு.

அதே அளவுகோல் - நடைமுறை அ.தி.மு.க.விற்கு - அதுவும் தொடர் கொலைகள் என்னும்போது (Gravity of offence allegations very serious) உடனே மேல் நடவடிக்கை தொடரவேண்டாமா?

இப்போது  மூடினால், வருங்காலத்தில் இந்தக் கொலை களுக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளும், அவர்களின் செயல்களின் மூலங்களும், தூண்டியவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படாமலா போகும்?

முதலமைச்சர் பழியைத் துடைக்க முற்படுவதுதான் ஒரே நியாயம்!

ஜனநாயக மரபுப்படி பதவி விலகி, சரியான நீதி விசாரணையை சந்தித்து, முதலமைச்சர் பழியைத் துடைக்க முற்படுவதுதான் ஒரே நியாயம்!

'உண்மை ஒரு நாள் வெளியாகும்

அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்!'

- பட்டுக்கோட்டை கவிஞர்

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

14.1.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner