எழுத்துரு அளவு Larger Font Smaller Font

என் மதம் - என் மொழி - என் கலாச்சாரம் பேசுவது முறியடிக்கப்படவேண்டும்!

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்

குடந்தை அருகே பா.ம.க. தோழர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது - மதத்தை மய்யப்படுத்தி எந்த வன்முறை நடந்தாலும், அதனை ஏற்க முடியாது - உண்மைக் குற்ற வாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறிய  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்று பேசுவதை ஏற்க முடியாது என்றும், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே திருபுவனத்தில் சில தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதை அப்பகுதியில் உள்ள பா.ம.க.வின் பொறுப்பாளர் இராமலிங்கம் என்பவர் கண்டித்தார் என்பதற்காக, அவரை சிலர் தாக்கி கொலை செய்தார்கள் என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

அவரது கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பகைமையின் விளைவா? என்று ஆராயவேண்டியதும், குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதும் காவல்துறையின் கடமை யும், பொறுப்பும் ஆகும்.

நேற்று (7.2.2019) மனுதர்ம எரிப்புக்காக காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு எங்களை வெளியே அனுப்பியது சென்னை நகர காவல்துறை.

வீட்டிற்கு வந்தவுடன் இந்து' ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, திராவிடர் கழகத்தின் கருத்து இதில் என்ன வென்று கேட்டார்.

நான் ஆங்கிலத்திலேயே சொன்னவற்றை அப்படியே வரிவிடாமல் - கூட்டாமல், குறைக்காமல் வெளியிட்டு இருக்கிறது இந்து' ஆங்கில நாளிதழ் - அதற்கு நம் நன்றி!

மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும்...

அடிப்படை வாதம், மதவெறி - எந்த ரூபத்தில் - எந்த மதம் சார்ந்ததாக இருந்தாலும் அது வன்மையான கண்டனத்திற்குரியதே!

இதில் திராவிடர் கழகத்திற்கு இரட்டை நிலைப்பாடு என்பது கிடையாது. இந்துத்துவா'பற்றி ஏன் அதிக மாக கண்டிக்கின்றோம் என்றால், இரகசிய நிழல் ராணு வத்தைத் தன்னிடம் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அதன் பின்புலத்தில் உள்ளது. பகுத்தறிவு அறிஞர்களான கல்புர்கி, இதர பகுத்தறிவாளர், செயல்பாட்டாளர்களுக்கு என்ன கதி ஏற்பட்டது? இந்துத்துவா' மதவெறியே அவர்களின் கொலைக்குக் காரணம்.

பெரியார் மண்ணாகிய, தமிழ்நாடு அமைதிப்பூங்கா; பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் விளைவாக, நம் நாட்டின் இதர  மாநிலங்களில் பயங்கரக் கலவரம், இரத்த ஆறு, கொலைகள்  நிகழ்ந்த போதும், அமைதிப் பூங்காவாக இருந்தது தமிழ்நாடு; அதற்குக் காரணம் தந்தை பெரி யாரும், திராவிட இயக்க ஆட்சிகளுமே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரையே அப்போது வெளிவந்தது!

கோவையில் ஃபரூக் படுகொலை

ஃபரூக் என்ற கோவை இளைஞர் கடவுள் மறுப் பாளராக, பெரியார் பற்றாளராக திராவிடர் இயக்கக் காரராக விளங்கியவர். அவர் மதவெறியர்களால் கொல் லப்பட்டபோதும் நாம் கண்டிக்கத் தயங்கவில்லை.

தேவையற்ற வீண் மதக்கலவரங்களால் ஏற்படும் இந்த மாதிரி சிறு பொறி'' பெருந்தீயாக மாறுவதோடு, ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும்கூட சவால் விடுவதாக ஆகிவிடக்கூடும்.

இதுபோன்ற மதக்கலவரம், மதவெறிக்கு வித்திட்டதே பாபர் மசூதி இடிப்புதான்!

வினை, எதிர்வினையை உருவாக்கும் என்றாலும், ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிட முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

மதச்சார்பின்மைக் காக்கப்படவேண்டும்

மதச்சார்பின்மையைக் காக்க வேண்டியது அரசியல் சட்டக் கடமையாகும். ஏற்கெனவே மதச்சார்பின்மையைக் கூட தவறான வியாக்யானத்திற்கு ஆளாக்கிவிட்ட நம் நாட்டில், அத்தகைய வியாக்கியானங்களைத் தகர்த்து துடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் பன்மொழி, பன்மதம், பல கலாச்சாரம் உள்ள நாட்டில், என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்று இந்துராஷ்டிரம்'' பேசுவோர், மதவாத அடிப்படைவாதிகளையும் மிஞ்சுபவர்களே, எச்சரிக்கை!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

8.2.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner