எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா?

தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்சிக்கு மத்திய அரசு துணை போகலாமா?

மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை இடங்களுக் கான தேர்தலையும் இணைத்து நடத்திட வேண் டும். அப்படி தேர்தல் நடத்தினால், அ.இ.அ.தி.மு.க. தோல்வி; ஆட்சிக் கவிழக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், சட்டப்படி இடைத்தேர்தலை நடத்திட அஞ்சும் நிலையில், அதற்கு மத்திய பி.ஜே.பி. அரசும் துணை போவது ஜனநாயக முறையாகாது - சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம், தடுமாறக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகள் கடந்த 15 மாதங்களுக்கு மேல் காலி யாக இருக்கின்றன. மற்ற மூன்று தொகுதிகளும் நிரப்பப்படாமல் உள்ளன.

இவை காலியாக இருக்கின்றன என்று அறிவிக்கப் பட்டும் உள்ளது.

சட்டமன்றத்தில் அ.தி.மு.க. பெரும்பான்மையாக உள்ளதா?

தமிழ்நாட்டில் தற்போது உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மொத்த எண்ணிக்கையிலிருந்து கணக்குப் பார்த்தால், பெரும்பான்மை என்பது கேள்விக்குறியாக - மைனாரிட்டி மந்திரி சபை''யாகவே இருக்கிறது.

இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.

எதற்கெடுத்தாலும் அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி'' என்று சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறவர்களுக்கு - குறிப்பாக அமைச்சரவைக்கு நாம் நினைவூட்டுகிறோம். முன்பு தி.மு.க.வைக் கேலி செய்தவர்கள் இன்று இப்போது என்ன பதில் கூற முடியும்?

தேர்தல் ஆணையம் குறிப்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்; ஆனால், வருகிற செய்திகள் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளன!

மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடத்தப்படவேண்டும்

மக்களவைத் தேர்தலோடு இந்த இடைத்தேர்தல் களையும் (21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் களையும்) இணைத்து நடத்திடவேண்டும். இவ்வளவு நாள் கால தாமதமே ஜனநாயகத்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் தள்ளியது போன்றது!

முன்பு தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு தலைமைச் செயலாளரை விட்டு, மழைக்காலம் - தேர்தலைத் தள்ளி வையுங்கள் என்று கடிதம் எழுதச் செய்து, தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்தியது அ.தி.மு.க. அரசு.

உண்மையான மழைக்காலங்களில் எல்லாம்கூட முன்பு தேர்தல்கள் - இடைத்தேர்தல்கள் நடத்தப்படாமல் இல்லை.

அதற்குப் பிறகு மற்ற தொகுதிகளை விட்டுவிட்டு திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலை மட்டும் நடத்திட அறிவிப்பு வந்தது, ஒரு விசித்திரமானது.

இதை உச்சநீதிமன்றம் புரிந்து - வழக்குப் போடப்பட்ட நிலையில் நிறுத்தியது.

இதற்கடுத்து, நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலையொட்டி - 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவேண்டியது அரசியல் சட்ட விதிகளின்படி உள்ள கடமையும், பொறுப்பும் ஆகும்!

செலவும் மிச்சமாகுமே!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல்களை, நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று அரசியல் சட்ட விதிமுறைகளையே புறந்தள்ளக் கூடிய வகையில் - நடைமுறை சாத்தியமற்ற யோசனையை வலியுறுத்திய மோடி அரசும், அப்படி நடத்தத் தயார் என்று ஜால்ரா' போட்ட தேர்தல் ஆணையமும், இப்போது தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தினால் செலவும் மிச்சமாகும், ஜனநாயகமும் காப்பாற்றப்படுமே!

தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை தெளிவாக தற்போது இல்லாத நிலையில், 21 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களை - துணி வுடன் எதிர்கொள்ள முடியாத நிலையில் அச்சம் ஏற்பட்டு  தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மறைமுக அழுத்தம் தரப்படுவதாக வரும் செய்திகள் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவது அல்லவா?

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா?

தேர்தல் ஆணையம் இதில் சுதந்திரமாக செயல் படுகிறது என்று காட்டிடவேண்டும் என்றால், 21 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போடுவதே கூடாது!

இது தமிழ்நாட்டு  மக்களின் - வாக்காளர்களின் - அதிருப்தி என்ற எரிமலை மக்கள் கிளர்ச்சியாக - போராட் டங்களாக வெடிக்கும் விரும்பத்தகாத நிலையைத் தூண்டுவதாக அமையக்கூடும்!

ஏற்கெனவே பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடக்காததால், கிராமங்களின் நலன் - வளர்ச்சி தேக்கத்தில் சிக்கியுள்ளது.

21 தொகுதிகளில் மக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களது சட்டமன்ற பிரதிநிதிகள் இல்லை. வெறும் அதிகாரிகளை அணுகி தங்கள் குறைகளை வாக்காளர்கள் தீர்த்துக் கொள்ள முடியுமா?

மத்திய அரசின் தலையீடு?

மத்தியில் உள்ள பிரதமர் தலைமையில் உள்ள அரசின் செல்வாக்கை இதில் பிரயோகித்து சட்ட மன்ற இடைத்தேர்தல்களைத் தள்ளிப் போடச் சொல்லப்படுகிறது என்ற செய்தி உண்மையாகிவிட்டால், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் பகிரங்கமாகவே கேள்விக்குறியாகி விடும்!  சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே' இருக்கவேண்டும் என்பதுபோல் தேர்தல் ஆணையம் இதில் காட்டிக் கொண்டால்தான் அதன் கடமையைச் சரியாகச் செய்ததாக இருக்க முடியும்!

ஒன்றுபட்டுப் போராடவேண்டும்!

சட்டமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.க. - அ.தி.மு.க.வைத் தவிர, ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இதில் நீதிமன்றத்திற்குச் சென்று தீரவேண்டும் என்ற நிலை தேவைப்பட்டால், அதனையும் நடத்தியாக வேண்டும்.

இது அவசரம் - அவசியம்!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் காப்பாற்றப்படா விட்டால், மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போய்விடும், எச்சரிக்கை!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

11.2.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner