எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே!

திக்கெட்டும் பாய்வோம்  - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம்!

தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் திட்டங்கள் தீட்டும் மாநாடுகளாகும். நமக்குத் திருவிழாக்கள் என்றால் நமது மாநாடுகள்தானே - குடும்பம் குடும்பமாக திரளவேண்டும் என்று கழகத்தினருக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

மானமிகு

கழகக் கொள்கை உறவுகளே,

பெரியாரியத் தோழர்களே,

பகுத்தறிவாளர் கழகக் கொள்கைக் குடும்பத் தவர்களே,

அன்பு வணக்கம்!

இத்திங்கள் (பிப்ரவரி 23, 24) நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாய் சந்தித்து, கூடி குலவி மகிழும் வாய்ப்பு - நமது திராவிடர் கழக மாநில மாநாடு, சமூக நீதி மாநாடுகள் - வியத்தகு பேரணி மூலமாக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது!

சிறுகனூர் - பெரியார் உலகப் பணிகள்!

கடந்த 2 ஆண்டுகளுக்குமுன், திருச்சி சிறுகனூர் பெரியார் உலக'த் திடலில் நடைபெற்றது.

பெரியார் உலக''ப் பணி பெரும் பணி; அரும்பணி. 188 அடி உயர அறிவு ஆசானின் சிலை; 45 அடி பீடம். மின் தூக்கியில் மேலே செல்லும் வழிமூலம் பெரியார் சிந்தனைக் கூடம் - நூலகம் - காட்சியகம் போன்றவைகள் - பெரியார் பிஞ்சுகள்' கண்டு கற்கும் - களிக்கும் பல்வேறு அரிய ஏற்பாடுகள் - பல்வேறு கட்டடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்கள், கலை நயம்கொண்ட சிற்பிகள் கற்பனைகள்மூலம் திட்ட மிடப்பட்டுள்ள அந்த வரலாற்றுப் பெருமைக்குரிய பணி காலத்தை வெல்லும் கவினுறு சாதனைகளாக கம்பீரமாக எழுந்து நிற்கும் பணி பல கட்டங்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறது - ஓய்வு ஒழிச்சலின்றி!

தஞ்சையில் 23, 24 (பிப்ரவரி 2019) நடக்கவிருக்கும் நமது மாநாடுகள் இந்திய அரசியலில், சமூகவியல், பொருளாதார, பகுத்தறிவு, பண்பாட்டுத் தளங்களில் பல அரிய மாறுதல்களை உருவாக்கிட முரசொலிக்க விருக்கும் ஏற்பாடுகள் ஆகும்!

தஞ்சையில் புதியதோர் விடுதலைக்கான மாநாடுகள்!

கலங்கரை விளக்குபோல, மங்காஒளியூட்டி, வழி காட்டிடும் மாநாடுகளாக அதன் வேலைத் திட்டங்கள் - அதிலும் குறிப்பாக வருகின்ற பொதுத் தேர்தலில் காவி பாசிசத்திலிருந்து நாட்டை விடுவித்து, புதியதோர் விடியலுக்காக பூபாளங்கள் பாடும் மாநாடுகளாக அமைவது உறுதி!

முதல் நாள் கழக மாநில மாநாடு - பல அரங்குகள் - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு முன்னோட்ட கருத்தரங்கு உள்பட!

எழுச்சிமிகு லட்சியப் பேரணி - எல்லோரும் குடும்பம் குடும்பமாய் சங்கமிக்கும் பெரியாரின் ஜீவநதியென ஓடிடும் கொள்கை வெள்ளம் பெருகி தஞ்சையை கழக நஞ்சையெனக் காட்டும்!

பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு விடை கொடுப்போம்!

இரண்டு நாள்களிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநில சமூகநீதியாளர்களும், சிந்தனையாளர்களும் கூடி, தற்போதுள்ள பாசிச - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் ஆட்சியை வழியனுப்பி வைக்க - அமைதியான வாக்குச் சீட்டுப் புரட்சிமூலம் வருங்காலம் விடுதலை பெற்ற விவேக ஆட்சிகள் அமைவதற்கு வழிகாட்டும்!

திக்கெட்டும் பாய்வோம்!

நம் இளைஞர்கள், மகளிர், மாணவர், வணிகர், வேளாண் பெருமக்கள், சுதந்திரக் கருத்தாளர்கள் படும் துயரம் தொடர் தொல்லைகளிலிருந்து அவர்களை விடுதலை செய்யும், பல்வேறு அரிய திட்டங்கள் உண்டு. ஆளும் வாய்ப்பு தேர்தலுக்குப் பின் பெறவிருக்கும் கூட்டணிக்கும், பொதுநலம் பேணி, பகுத்தறிவு, மனிதநேயம் கொண்ட பார்வையுடன் கூடிய ஆட்சி அமைக்கவும், புதிய சமுதாயத்தை நோக்கி, மாற்றம் வருவதற்கான திட்ட வழிமுறை அறிவார்ந்த போர்க் களங்களைஅமைக்கத்திட்டங்களைத்தீட்டி,தீரர் களைத் திக்கெட்டும் பாய்ந்திடச் செய்யவும் தயாரா வோம்!

கானல் நீராக காட்சியளிக்கும் சமூகநீதியை உண்மையில் வென்றெடுக்க அனைத்து இந்தியாவிலும் உள்ள ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டும் பணியின் முன்னோட்டமே சமூகநீதி மாநாடு!

நமக்குத் திருவிழா - நமது மாநாடுகள்தானே!

மாநாட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டீர்களா?

இருப்பது இன்னும் ஒன்பதே நாள்கள்!

கொள்கைக் குடும்பங்களே! குடும்பம் குடும்பமாகக் கிளம்பிட ஆயத்தமாகுங்கள்!

இவைகளைத் தவிர வேறு  பெரும் விழாக்கள் நமக்கேது?

எல்லாப் பாதைகளும் தஞ்சையை நோக்கியே அமையட்டும்! அமையட்டும்!!

நன்றி! நன்றி!!

உங்கள் தோழன், தொண்டன்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

13.2.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner