எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

இன்று உலக மகளிர் நாள்!

மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டும், கட்டுரைகள், கவிதை மலர்களால் மகளிர் மாண்பைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பதை பரப்பும் பரப்புரை நாள் என்றால், மிகையல்ல!

ஒரு கேள்வி - மகளிர் விடுதலைப் போராளிகளில் அறிவு ஆசான் தந்தை பெரியாரைப் போல் சிந்தித்து, செயல்பட்டு, மாற்றத்தைச் செயல் வடிவிலும், சட்ட வடிவிலும் உரிமைப் பாதுகாப்புப் பெட்டகமாக்கிய பெண்ணினத்தை வாழ வைக்கும் தொலைநோக்கும், செயற்போக்கும் தனது வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்ட ஒருவரை விரல் காட்டிக் கூற முடியுமா?

மற்றவர்கள் பெருமைகளைக் குறைக்க அல்ல இக்கேள்வி! தந்தை பெரியார் என்ற ஓர் ஆண், தனது ஆசாபாச - எஜமானத்துவ' எண்ண ஓட்டங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பெண்ணினத்தை மானுடத்தின் ஒரு சமப் பகுதி என்ற உணர்வு மேலோங்க, உரிமைப் போரை 1908 முதல் - தனது தங்கையின் மகள் ஒருவர் பால்ய விதவையானவரை, தூக்கி நிறுத்தித் துணிந்து மறுமணம் செய்து வைத்து, தன் குடும்பத்தாரையே ஜாதி விலக்குக்கு ஆளாக்கியதைப்பற்றி அலட்சியம் செய்த நெஞ்சுரத்திற்கு வேறு எவரே சொந்தம் கொண்டாட முடியும் தோழர்களே?

மகளிரை தோழர்களே'' என்று அழைத்து பாலின வேற்றுமைச் சுவரை இடித்து தள்ளிய கடப்பாரை அல்லவா அவர்?

மண்ணுக்கு உரிமை வருமுன்னே, பெண்ணுக்கு உரிமை தாருங்கள்'' என்று முழங்கியதோடு, கல்வி உரிமை, வேலை உரிமை, சுதந்திர மண் உரிமை, சொத்துரிமை முதலிய உரிமைகளுக்கு முதலில் ஏடு தொடங்கி, எழுதி, நாடு முழுவதும் போராடி, ஆட்சிக்குப் போகாமலேயே ஆளுமையோடு அவ்வுரிமைகளை அடையச் செய்த அசகாயப் போராளி அல்லவா அவர்!

புரட்சியில் பூத்த மலர்களலல்லவா அன்னைகள் நாகம்மையாரும், மணியம்மையாரும்!

அய்யாவின் புரட்சிக் கருத்துகளை 21 ஆம் நூற்றாண்டிலும் செரிமானம்'' செய்துகொள்ள பல பெண்களாலேயேகூட முடிவதில்லையே!

இருட்டிலேயே பல காலம் வசித்தவர்கள் - பகலவனின் கதிரொளியைக் கண்டு கண்கள் கூசுவது இயல்புதானே!

கூடிவாழ்தலே சாலச் சிறந்த நட்புரிமை!

தலைசிறந்த ஒழுக்கமும், நாணயமும்

அதில் செழிப்புடன் வளரும்.

ஏமாறுவது, ஏமாற்றுவதும் என்றும்

இருக்காத ஏற்பாடு அல்லவா அது!

கருத்துரிமைகளிலேயே தலையாயது வயது வந்து மனம் பக்குவப்பட்ட நிலையில், அவர்தம் வாழ்வுரிமையில் மற்றவர் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமும், அதிகார ஆணவமும்கூட! இன்றும் இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் - பெண்ணுரிமைபற்றிய கிளப்புகளில்' விவாதிக்கும் கண்ணாடி மாளிகைப் பதுமைகளால் கூட ஏற்க முடிவதில்லையே!

திருமணமே கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்'' என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றவர் அய்யா - இன்று அதிர்ச்சி - நாளையோ அது அன்றாட நிகழ்ச்சி!

அடிமைகளாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமைத் த(ன)ளத்தில் சுகம் காணும் விசித்திரம்!

எனவே, இளம் பெண்ணே!

இன்றைய தலைமுறையின் எழுச்சியே!

இதோ பெரியாரின் கைத்தடி

உனக்கு இனி சம்மட்டி!

தடுமாற்றம் வந்து கீழே விழும்போதெலாம்

உறுதியாய் அதைப்பற்றி நில்!

உறையிட்ட வாளாய் யிராதே

சுழலும் போர்வாளாக மாறு!

புரட்சியைத் துவக்கு!

ஒப்பனைகளோ, சொப்பனங்களோ

உனக்கு உரிமைகளைத் தராது!

உன்னை இழந்து'' உன்

வர்க்கத்தைக் காப்பாற்று!

உரிமைப் போரில் பின்வாங்காதே!

நீ ஒருபோதும் பாலினப் பண்டம் ஆகாதே!

சமத்துவப் புரட்சியின் போர்க் கருவியாக மாறு!

முன்னே நட!

முனைந்து நட!

அடையவேண்டிய வெற்றி இலக்கு

உன் காலடித் தடத்தில்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner