எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உண்மையை வெளியில் கொண்டு வந்த 'இந்து' என்.ராம்மீது வழக்குத் தொடுக்க முடிவா?

ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகையின் உரிமையைக் காப்பாற்றிட ஓரணியாய்த் திரளுவோம்!

ரபேல் விமான பேர வழக்குத் தொடர்பாக இந்து' ஏட்டில் அதன் ஆசிரியர் குழுத் தலைவர் என்.ராம் எழுதிய கட்டுரைக்கான தகவல் திருடப்பட்டது என்று கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்தால், பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க ஊடகத் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து, அதனை எதிர்த்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ரபேல் விமான பேரம் - ஊழலாகத் தோற்றமளிக்கும் வண்ணம் பல்வேறு சந்தேகங்களை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எழுப்பியதோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு தீர்ப்பு வந்ததில், பல்வேறு முக்கிய தகவல்கள் விடுபட்டுள்ளனவா அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டனவா என்ற கேள்விகள் எழுந்ததால், மறுசீராய்வு மனு விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, சில முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேர்கோட்டில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டினை நிரூபிக்கும் வண்ணம் அது அமைந்தமையால், அவை திருடப்பட்ட ஆவணம் என்றதால், அதுபற்றி விளக்கமாக இந்து' ஆங்கில நாளேட்டில் அதன் ஆசிரியர் குழு தலைவரும், பிரபல பத்திரிகைச் சுதந்திரப் போராளியுமான என்.ராம் அவர்கள் கட்டுரைகளாகவும் எழுதி வந்தார்!

திருடப்பட்ட ஆவணமா?

'இந்து' என்.ராம்மீது வழக்கா?

அந்த ஆவணம் திருடப்பட்ட ஆவணம் என்று, திரு.என்.ராம் அவர்கள்மீது வழக்குப் போட (மோடி) மத்திய அரசு யோசித்து வருகிறது என்ற செய்தி, சரியான செய்தி என்றால், வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

(அண்மைச் செய்தி: தலைகீழ் பல்டி அடித்துள்ளனர் என்பதாகும்).

நாட்டின் மக்கள் வரிப் பணத்தில் ஊழல்களோ, தவறுகளோ நடைபெற்றால், புலனாய்வு பத்திரிகை முறைப்படி (Investigative Journalism) தனது முயற்சியை மேற்கொள்ளும் என்பது உலக முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகும்.

இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்பதுதான் முக்கியம். பொய்யாக இருந்தால், நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு சட்டப்படி; ஆனால், அது வெளியானது, அது திருடப்பட்டது' என்று கூறி உண்மையை ஜமுக்காளம் போட்டு மூட முயற்சி செய்யக்கூடாது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை!

பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்னும்போது, நாட்டு நலன் - பொது நலன் கருதி இப்படி மக்களாட்சியில், மக்களின் வரிப் பணம் சரியான வகையில்  செலவிடப்படுகிறதா என்று கண்காணித்து உண்மையை உலகறியச் செய்வது பத்திரிகைகளின் கடமை அல்லவா!

எனவே, இந்து' பத்திரிகை ஆசிரியரை மிரட்டி, அச்சுறுத்தி வழக்குப் போட்டு பணிய வைக்கும் முறை ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல; பாசிச ஆட்சியின் வழிமுறை. அதை மோடி அரசு பின்பற்ற முயன்றால், அதன் பொருள் என்ன?

பத்திரிகையின் சுதந்திரத்திற்காக ஓரணியில் நிற்பீர்!

இந்து' ஏட்டின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் பற்பல விஷயங்களில் எதிரும் புதிருமான நிலைப்பாடு இருக்கும். அது வேறு; ஆனால், எந்தக் கருத்தையும் மக்கள் நலக் கண்ணோட்டத்தில் கூறும் உரிமை எந்த ஏட்டிற்கும் உண்டு ஜனநாயகத்தில்; நமது அரசியல் சட்டம் அளிக்கும் பறிக்கப்பட முடியாத உரிமைகளில் இதுவும் ஒன்று!

செய்தியாளர்கள், ஏடு நடத்துவோர் இந்தப் பத்திரிகை சுதந்திர உரிமைக்கு ஆபத்து, அச்சுறுத்தல், மிரட்டல் வந்தால், அதனை ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு எதிர்த்து முறியடிக்க முன்வரவேண்டும். இன்றேல், ஜனநாயகம் பாசிசப் பாதைக்குச் சென்றுவிடும்!

சத்தியமேவ ஜெயதே' வாய்மையே வெல்லும் என்று போட்டுக்கொண்டா இப்படி மிரட்டுவது?

கூடாது! கூடவே கூடாது!!

கி.வீரமணி

ஆசிரியர் 'விடுதலை'.

சென்னை

9.3.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner