எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடுக்கடுக்கான இயக்க நிகழ்வுகளால் பெரும் பேறு பெற்ற மகிழ்ச்சி!

அரும்பாடுபட்ட அத்துணைத் தோழர்களுக்கும் பாராட்டு! பாராட்டு!!

வேலூரில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா உள்பட தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளால் பெரும் பேறு பெற்ற மகிழ்ச்சியினை அடைகிறோம். விழா வெற்றிக்குப் பாடுபட்ட தோழர்களுக்குப் பாராட்டு - உதவியவர்களுக்கு நன்றி, நன்றி என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு விழாத் தொடக்க மாநாடு, வேலூரில் எதிர் பார்த்ததைவிட, மிக சீரும் சிறப்புடனும் வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு நூற்றாண்டு விழாத் தொடக்கமாக அமைந்திருந்தது!

வேலூர் நகரெங்கும் கொடிகள்! கொடிகள்!!

வேலூர் மாநகரம் கழகக் கொடிகளின் பொலிவுடன் எங்கெங்கு நோக்கினும் காட்சியளித்த மாட்சி கண்டோரை வியக்க வைத்தது!

1953 ஆம் ஆண்டு (மே 27) பிள்ளையார் சிலை உடைப்பின்போது, நமது இயக்க முக்கிய பிரமுகர்கள் இ.திருநாவுக்கரசு, மோகன்ராசு, வேலூர் நகரத் தலைவர் சுந்தரமூர்த்தி, டாக்டர் முருகேசனார் போன்றவர்கள் - சத்துவாச்சாரி தோழர்கள் தாக்கப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ்காரர்கள் இணைந்து மண்டையைப் பிளந்து, காலித்தன தர்பாரை நடத்தினார்கள்!

அப்படிப்பட்ட எதிர்ப்பு அலை வீசிய நகரில் அன்னையார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைத்துத் தரப்பு மக்கள் - கட்சியினர் - வியாபாரிகள் - இளைஞர்கள் - மாணவி - மகளிர் - ஊடகவியலாளர்கள் அனைவருமே சிறந்த ஒத்துழைப்புத் தந்து, ஊக்கமூட்டி, நமது கழகச் செயல் வீரர்களின் உழைப்பை, பலன் தருமாறு ஆக்கிடத் துணை நின்றார்கள்!

பழைய வடாற்காடு மாவட்டம் இப்பொழுது பல புதிய மாவட்டங்களாகப் பிரிந்துள்ளது. அத்துணைப் பகுதி கழகப் பொறுப்பாளர்களின் பங்களிப்பும், உழைப்பும், உற்சாகமும் மிகவும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தன!

தானே திரண்டு வந்த மக்கள் கடல்!

தானே திரண்டு வந்த மக்கள் கடல், கழகக் குடும்பத்தவர்களின் சரித்திர சங்கமம் விழா நேர்த்தியை மேலும் பல மடங்கு அழகுபடுத்தியது!

நிகழ்ச்சிகள் கடும் வெய்யிலிலும், மாலை 5 மணிக்கு திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வத்தின் இசைப் பெரு மழையுடன் தொடங்கி, தொய்வின்றி, விறுவிறுப்புடன் ஓடிய திரைப்படம்போல அமைந்து, களை கட்டின!

ஏராளமான தாய்மார்களும், இளம் மகளிரும் பல்லா யிரக்கணக்கில் திரண்டு அன்னையாருக்கு மரியாதை செய் யும் வண்ணம் கூடினர்; சுவைத்தனர் - மக்கள் மகிழ்ந்தனர்!

ஆக்கப்பூர்வமான அரிய தீர்மானங்கள்!

அருமையான ஆக்கப்பூர்வ தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நேரத்தின் நெருக்கடியால் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், பொருளாளர் வீ.கும ரேசன் மற்றும் முக்கியத் தோழர்கள் உரை நிகழ்த்தாமல், பார்வையாளர்களாகவே அமர்ந்து தங்களது நேரத்தை நமக்கே தந்துவிட்டது ஓர் அரிய எடுத்துக்காட்டு!

பொதுத் தேர்தல் அறிவிப்பு மாலை வந்துவிட்டதால், இரவு 10 மணி கெடுபிடியும் இணைந்துவிட்ட நிலையில், சட்டத்தை மதிக்கும் நாம் அதனை மீறிடுவோமா? இல்லை! இல்லவே இல்லை!

ஒத்துழைத்த கழகக் கண்மணிகள்

இதற்கெனவே 10 நாள்களுக்கு மேல் ஒத்துழைத்த கழகக் கண்மணிகள் அங்கே முகாமிட்டு, மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன், மற்றும் மண்டலத் தலைவர் வி.சடகோபன், மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், செயலாளர் கு.இளங்கோவன், மருத்துவரணி டாக்டர் ஜெகன்பாபு, திருப்பத்தூர் கே.சி.எழிலரசன் உள்ளிட் டோரின் பணி மகத்தானது. (பட்டியல் 3 ஆம் பக்கம் காண்க).

அத்துணைப் பேரின் கடும் உழைப்பு, தி.மு.க.வின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் வேலூர் முகமது சகி, அவரது மகன் டாக்டர் முகம்மது சஹி ஆகியோரின் பெரு ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

தஞ்சையில் மாநில மாநாடு நடைபெற்ற (பிப்.23, 24) 15 நாள்களுக்குள் இப்படி ஒரு பெரியதொரு மாநாடு!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது;

வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்''

என்ற வாசகங்களை செயல் முறை வெற்றியாகக் காட்டினர் நமது கருஞ்சட்டைக் கழகப் பொறுப்பாளர்கள்!

யாம் பெற்ற பேறே பேறு!

யாம் பெற்ற பேறு என்று வியந்து மகிழும் வண்ணம், அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1978 இல், 2017 இல் நீதிக்கட்சி திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா, அண்மையில் புதுவையில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரை சி.மு.சிவம் அவர்களது நூற்றாண்டு விழா, மார்ச் 10 இல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா என்று திராவிடர் வரலாற்றில் முத்திரை பதித்த விழாக்களை நடத்தி, மகிழ்ந்திடும் வாய்ப்பைப் பெற்றதை எமது பொது வாழ்வின் தனித்த பலனாக எண்ணி அசைபோட்டு மகிழ்கிறோம்.

அருமையான கலை நிகழ்ச்சிகள்!

திருச்சி - பெரியார் கல்வி நிறுவனங்கள் வழங்கிய அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் வாழ்க்கை வரலாற் றுக் கலை நிகழ்ச்சி, குடியாத்தம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் - இதற்குக் காரணமான கலைத் துறை தோழர்கள்,   தோழர் ப.சுப்பிரமணியம், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த ஆசிரியை ஆர்.பிரான்சிட்டா  மற்றும் மணியம்மையார் பவுண்டேசன் நன்கொடையாளர்கள், அன்னையார் சிந்த னைக் களஞ்சியம் தயாரிப்பதற்கு உழைத்த விடுதலைக் குழும வீரர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!

நன்றி! நன்றி!! நன்றி!!

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்

சென்னை

12.3.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner