எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி

திருவாரூர், மார்ச் 26   நரேந்திர மோடிக்கும், அவர் ஆட்சிக்கும் எதிரான அலை இந்தியா முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இன்று (26.3.2019) காலை திருவாரூரில் தேர்தல் பரப்புரை யின்போது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ்விவரம் வருமாறு:

தஞ்சையில் பிரச்சாரம் நிறைவடைகிறது

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத்தேர்தல்களுக்குப் பிரச்சாரம் செய்வதற்காக திராவிடர் கழகம் தனியே ஒரு அமைப்பாக - பிரச்சாரகர்களை அமைத்துக்கொண்டு நாங்கள் இன்று நாகை நாடாளுமன்றத் தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி தொடங்கி, காலையில் பல கிராமங்கள், மாலையில் நாகையில் பொதுக்கூட்டம், திரு வாரூரில் பொதுக்கூட்டம், நாளை காலை கொரடாச்சேரி பகுதி களில் பிரச்சாரம் - மாலையில் மன்னார்குடி, பட்டுக்கோட்டை என்று தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எல்லா பகுதிகளுக்கும் சென்று,  இறுதியாக தஞ்சையில் 16.4.2019 அன்று மாலை எங்களுடைய பிரச்சாரம் நிறைவடைய இருக்கிறது.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், தமிழர் தலைவர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார் (திருவாரூர், 26.3.2019).

மோடி ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்!

மக்கள், கொள்கையில்லாத கூட்டணியையும் அடையாளம் கண்டிருக்கிறார்கள்; கொள்கையோடு மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணியாகிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை யில் இருக்கின்ற கூட்டணியின் பணிகளையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

மக்களைப் பொறுத்தவரையில், மோடி ஆட்சி என்பது, மிகப்பெரிய ஏமாற்றத்திற்குத் தங்களை ஆளாக்கியிருக்கிறது  என்ற கோபத்தோடு இருக்கிறார்கள். எனவே, மோடிக்கு எதிரான ஒரு அலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவினுடைய எல்லா பகுதிகளிலும், வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கி, மேற்கு பகுதிகள், ஏன் அவர்களுக்கு மிகப்பெரிய கோட்டை என்று கருதப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற பல்வேறு இடங்களில் அந்தச் சூழ்நிலைகள்தான் பரவலாக இருக்கின்றன.

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், மிக முக்கிய மான ஒரு செய்தி என்னவென்றால், மோடிக்கு எதிரான ஒரு அலை நாடு முழுவதும் இருக்கிறது. அதற்காகத்தான் கடைசி நேரத்தில், பாகிஸ்தானுடைய தீவிரவாதத்தை தேர்தல் பக்கம் திருப்பலாமா என்று பார்த்தார்கள்; அதிலும்கூட அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.

எனவே, பெரிய அளவிற்கு வெற்றி இருக்கும்; இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லி, வாஜ்பேயி ஆட்சி மீண்டும் வரும் என்று கனவு கண்டார்களோ அதில்  ஏமாந்தார்களோ - அதுபோலத்தான், இன்றைக்கும். அவர்கள் கட்சிக்குள்ளேகூட மிகப்பெரிய அளவிற்கு அதிருப்தி மோடியின்மீது இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பா.ஜ.க.வினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

அந்த வகையில் நிச்சயமாக மோடிக்கு எதிரான அலை வீசுகின்ற காரணத்தால், அடுத்து மோடி ஆட்சி இருக் காது. காரணம், பொதுவானவர்கள் எல்லாம்கூட மோடி ஆட்சியின்மீது தங்களுடைய அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளியிடுவதற்குக் காரணம், வெளிப்படையாகவே பா.ஜ.க. வினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்தலே இருக்காது'' என்று. பாசிசத்திற்கு ஒரு பெரிய நியாயம் கற்பிக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்தப் பிரச்சாரத்தில் முழுமையான வெற்றி மக்களுக்கு. மக்களுடைய உணர்வுகளுக்கு உண்மையான வெற்றி இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை அவர்கள் பெற்றிருப் பார்கள் என்பதுதான் மிக முக்கியம். ஆகவே, இந்தப் பிரச்சாரத்தை நாங்கள் இன்றைக்குத் தொடங்குகின்றோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

செய்தியாளர்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது உங்களுடைய பார்வையில்?

தமிழர் தலைவர்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பல நேரங்களில் ஒருதலைப்பட்சமாக நடக்கிறதோ என்ற அய்யப்பாட்டினை மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக, பிரியாணிக்கெல்லாம் ரூ.200 வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று சொல்வது என்பது அசல் கேலிக்கூத்தாகும்.

காரணம் என்னவென்றால், பிரியாணி பொட்டலங்களோ மற்றவையோ கொடுக்கக்கூடாது - அதைத் தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை!

நாளைக்கு, குவார்ட்டர் பாட்டில் கொடுக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கும் மதிப்புப் போட்டு வேட்பாளர் செலவு கணக்கில் எடுத்துக்கொள்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருவார்களா?

தண்ணீர் பாட்டிலுக்கு 50 ரூபாய் என்று கணக்கெடுத்துக் கொள்வோம் என்று சொல்வது என்பதெல்லாம், வேட்பாளரின் செலவுக் கணக்கை அதிகப்படுத்திக் காட்டி, வெற்றி பெற்ற அந்த வேட்பாளர்களின் தேர்வு செல்லாது என்று சொல்வதற்கான வாய்ப்பை இப்பொழுதே உருவாக்குகிறார்களோ என்ற அய்யம் ஏற்படுகிறது.

அப்படிப் பார்த்தால், பல்வேறு கணக்குகள் தேர்தல் ஆணை யத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கிறது. பல வேட்பாளர்கள் ஜோசியர்களைக் கலந்துதான் செயல்படுகிறார்கள்; ஜோசியர் களுக்குக் கட்டணம் கொடுப்பதைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டாமா?

பல வேட்பாளர்கள் யாகங்கள் நடத்துகிறார்கள்; புரோகிதர் களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்; யாகம் செய்வதற்காக  நெய் உள்ளிட்ட பல பொருள்களை வாங்குகிறார்களே, அதையெல்லாம் தேர்தல் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்களா?

நேற்று எழுதிய அறிக்கையில்கூட ஒரு தகவலை சொல்லி யிருக்கிறேன், தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற நேரத்தில், சிலரிடம் எழுந்து நின்று வாங்குவது; சிலரிடம் உட்கார்ந்துகொண்டு வாங்குவது  என்ற நிலை. எழுந்து நின்று வாங்கினால், எல்லோரிடமும் எழுந்து நின்று வாங்கவேண்டும்; உட்கார்ந்து கொண்டு வாங்கினால், யாராக இருந்தாலும் உட்கார்ந்து கொண்டுதான் வாங்கவேண்டும்; அவர் முதலமைச்சராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அது முக்கியமல்ல; அங்கே அவர் வேட்பாளர்தான்.

ஆகவே, அந்த சூழ்நிலையில், சட்டத்தை சரியாக அமல்படுத்தவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்'' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

கொடிக் கம்பங்களை அறுத்தெறிய வேண்டிய அவசியமில்லை!

அதுபோல, தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல் நடந்துகொள்ளவேண்டும். தேவையில்லாமல், கொடிக் கம்பங் களை அறுத்தெறிய வேண்டிய அவசியமில்லை. கொடியை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்றால், கம்பங்களிலிருந்து கொடியை மட்டும் கழற்றி எடுக்கலாமே தவிர, அதற்காக கொடிக் கம்பங்களையே வெட்டி எறிய வேண்டும் என்பது தவறான ஒரு போக்காகும். ஆகவே, அது தேவையற்ற ஒன்று.

எனவே, பல மாறுதல்களை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். அது நடைமுறைக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.

முதலமைச்சர் கனவு காண்கிறார்!

செய்தியாளர்: தமிழக முதல்வர் அவர்கள், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் குறைந்த வாக்கு சத விகிதம் உள்ள கட்சிகள்; அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகள்; மெகா கூட்டணி; ஆகவே, எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆசைகள் குதிரைகளாகின்றன, கனவு காணச் சொல்லியிருக்கிறார் அப்துல்கலாம். அது வேறு கனவு! முதலமைச்சர் கனவு கண்டதினுடைய விளைவுதான், தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. மக்கள் அவரை வெறுப்போடு பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான், அவரே தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner