எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொள்கைக்காக உயிர்த் தியாகமும் செய்வோம்!

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்

திருப்பூர், ஏப்.9   86 வயது எனக்கு; 76 ஆண்டுகள் பொது வாழ்க்கை அனுபவம் உண்டு. எந்தக் காலித்தனமும் எங்களை அடக்கிவிட முடியாது. அதில் உயிர் போனாலும், நாங்கள் பெரும் பேறு என்று கருதக்கூடியவர்கள். உயிர்த் தியாகத்தை இந்தக் கொள்கைகளுக்காக செய்வோம். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம், அதேபோல, கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள். நெருப்பில் பூத்த மலர்கள். எங்களை நெருங்க முடியுமா? எத்தனை எதிர்ப்புகள்; கலைஞர் சந்திக்காத எதிர்ப்பா? அண்ணா சந்திக்காத எதிர்ப்பா? இன்றைக்கும் எதிர்ப்புகள் என்று சொன்னால், எங்களுக்கு அதுதான் வரவேற்பு. ஆகவே, இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள், பொத்தானை அழுத்தினால், அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். அறியாமை போகும்; ஆணவம் அகலும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

நேற்று (8.4.2019)  திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: இந்த மண் கருப்பும், சிவப்பும் கலந்த மண்;

காவி ஒருபோதும் கலக்க முடியாத மண்!

தேர்தல் பிரச்சார பரப்புரை நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள அருமைத் தோழர் நாடறிந்த நல்லவர் சுப்பராயன் அவர்களை ஆதரித்து நடைபெறக்கூடிய தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்கு, இந்தியா முழுவதிலும் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற உணர்வோடு இருக்கக்கூடிய நிலையில், அந்தப் பணியை சிறப்பாக செய்துகொண்டிருக்கக்கூடிய, அதற்கு மிகப்பெரிய கிரியா ஊக்கியாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மான மிகு மாண்புமிகு தோழமைமிகு அருமை நண்பர் தோழர் சுதாகர் ரெட்டிகாருவை நாம் வரவேற்கவேண்டியது நம்முடைய கடமை. பெரியார் மண்ணுக்கு வந்திருக்கிறார்; இந்த மண் கருப்பும், சிவப்பும் கலந்த மண்ணே தவிர, காவி ஒருபோதும் கலக்க முடியாத மண்.

ஆகவே, அப்படிப்பட்ட இந்த மண்ணுக்கு வந்தி ருக்கின்ற அவருக்கு நாம் அனைவரும் வரவேற்பளிப்பது முதல் கடமை. எனவே, அனைவர் சார்பாக, திராவிடர் கழக சார்பாக மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் சார்பாக மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின்படி விருந்தினரை வர வேற்பான் தமிழன் என்பதற்கு அடையாளமாக, அவருக்கு இந்த சிறப்பை செய்து என்னுரையை தொடங்குகின்றேன்.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மாண்புமிகு சுதாகர் ரெட்டிகாரு, ஏ.அய்.டி.யூ.சி.யினுடைய மாநில  பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி அவர்களே, திராவிட முன் னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற மாவட்டச் செயலாளர், மேனாள் மேயர் என்று சொல்வதைவிட, எந்நாளும் கொள்கையாளர்; மிகப்பெரிய அளவிற்கு எந்தச் சோத னைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக மாற்றிக் காட்டக்கூடிய ஒருவர் அருமைத் தோழர் சகோதரர் மானமிகு, மாண்புமிகு செல்வராசு அவர்களே,

சி.பி.எம். மாநிலக் குழுத் தோழர் காமராசு அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப் பாளர் தோழர் சம்பத் அவர்களே,

காங்கிரசு கட்சியின் மாநில பொறுப்புக் குழு உறுப் பினர் கோபால்சாமி அவர்களே,

திருப்பூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் ஆறுமுகம் அவர்களே, செயலாளர் ஆறுச் சாமி அவர்களே, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த பெரு மக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திருப்பூருக்கு வருகின்றபொழுது இங்கே எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை நாங்கள் எல்லோரும் சற்று நேரத்திற்கு முன் பார்த்தோம்.

என்றைக்கும் தயாராக இருக்கின்றோம்!

எங்களைப் பொறுத்தவரையில், அருமைச் சகோ தரர் செல்வராசு அவர்கள், எனக்கு உரிமையோடு, உறவோடு கட்டளையிட்டார் - ஒரு மணிநேரம் பேச வேண்டும் என்று. ஒரு மணிநேரம் அல்ல; பல நாட்கள் வேண்டுமானாலும் இங்கே இருந்து பேசுவதற்கு என்றைக்கும் தயாராக இருக்கின்றோம்.

ஆனால், நம்முடைய விருந்தினர் தோழர் சுதாகர் ரெட்டி அவர்கள் உரையாற்றிவிட்டு, விமானத்தைப் பிடித்து அவர்கள் திரும்ப இருக்கிறார்கள். ஆகவே, அதற்கிடையில் நான் இங்கே ஒரு சில கருத்துகளைத்தான் சொல்ல முடியும்.

திருப்பூர் தயாராகிவிட்டது; வெற்றி உறுதியாகிவிட்டது

அப்படி சொல்வதற்கு முன் ஒன்று தெரிந்துவிட்டது. தோழர் சுப்பராயன் அவர்களுக்கு வாக்குக் கேட்டு, அதேபோல, பக்கத்தில் நட்சத்திரம், கோவையில், சுத்தியல் அரிவாள், இங்கே கதிர் அரிவாள், உதயசூரியன் என்று அவர்கள் கேட்டார்கள் அல்லவா! அப்படியெல்லாம் தனித்தனியாக வாக்குகளைக் கேட்பதற்கு முன்னாலே, நாங்கள் வாக்குக் கேட்பதற்கு முன்னாலேயே, திருப்பூர் தயாராகிவிட்டது; வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை எப்படி நாங்கள் தெரிந்துகொண்டோம் என்று சொன்னால், வருகின்ற வழியில் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பின் மூலமாக நாங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.

எந்த அளவிற்கு எதிரிகள் ஆத்திரத்தோடு இருக் கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் வருமான வரித்துறையை ஏவிப் பார்த்தார்கள், சி.பி.அய்.யை ஏவிப்பார்த்தார்கள். அதற்கெல்லாம் இவர்கள் அஞ்ச மாட்டார்கள், ஒன்றுமில்லை. கையில் காசில்லாத வர்கள்; மனதில் மாசில்லாதவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

தோல்வி பயம் அவர்களை நொறுக்கிக் கொண்டிருக்கிறது

இங்கே உள்ள ஒவ்வொருவரும் எங்களுடைய வேட்பாளர் இவர், எங்களுடைய வேட்பாளர் இவர் என்று உரிமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இருக் கக்கூடிய தோழர் சுப்பராயனுடைய வெற்றி உறுதி என்பதை எப்படி தெரிந்துகொண்டோம் என்றால், நாங்கள் இங்கே வருகின்றபொழுது, எங்களை வழிமறித்துத் தாக்க முயற்சித்தார்களே, அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; தோல்வி பயம் அவர்களை நொறுக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் தோழர்களே, அதற்குமேல் சொல்லவேண்டிய தேவையில்லை.

தேர்தல் நேரத்தில், யாராவது காலித்தனம், கலவரம் செய்தால், அவர்கள் தேர்தலில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்; அவர்களுடைய தேர்தலிலே தோல்வி என்பது மிகமிக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாடெங்கிலும், இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவில். அவர்கள் என்ன செய்தாலும், அதிலிருந்து அவர்களால் மீள முடியாது. அதனால்தான், பெரியார் சிலையை உடைத்துப் பார்க் கிறார்கள்; அதனால்தான், எங்களை வழிமறித்துத் தாக்கலாமா? என்று முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

நம்முடைய காவல்துறை ஒரு காலத்தில், ஸ்காட் லாண்டு காவல்துறையைவிட பெருமை பெற்ற காவல் துறை இன்றைக்குப் பரிதாபமாக காவி ஆட்சியின் ஏவல் துறையாக இருப்பது மகாமகா வெட்கக்கேடு.

அய்.ஜி.யெல்லாம் அவாளு - கான்ஸ்டபிளெல்லாம் நம்மாளு!

நண்பர்களே, உங்களுக்காகப் பாடுபட்டவர்கள் நாங்கள். கான்ஸ்டபிளும், ஹெட்கான்ஸ்டபிளும் எங் கள் தோழர்கள்; அய்.ஜி.யெல்லாம் அவாளு - கான்ஸ்ட பிளெல்லாம் நம்மாளு என்று கேட்டு, அந்தப் பதவிக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாளைக்கு உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால், இந்த இயக்கங்கள்தான் உங்களுக்காகப் போராடும்; திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ, கம்யூனிஸ்டு இயக்கமோதான் உங்களுக்காகப் போராடும். ஏவல் துறையாக ஆகாதீர்கள்.

கூட்டணி, அரசியலிலே மட்டும் இருக்கட்டும்; காவிகளோடு, காலிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு காவல்துறை போகக்கூடாது.

எங்களைப் பொறுத்தவரையில், கலவரம் செய்ய நினைக்கின்றவர்களுக்குச் சொல்லிக் கொள்கின் றோம். இந்த அணியில்  இருக்கின்ற யாரும்  கலவரங் களுக்கு  அஞ்சக் கூடியவர்கள் இல்லை. இங்கே உரை யாற்றியவர்கள் சொன்னார்கள், பனங்காட்டு நரிகள், சலசலப்புக்கு அஞ்சாது'' என்றார்கள். அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், எங்களுடைய சுயமரியாதை இயக்கம் தொடங்கியதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியதும் ஒரே காலகட்டத்தில்தான்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே காலகட்டத்தில்தான்.

அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்!

அந்த நேரத்தில், தளபதி பட்டுக்கோட்டை அழகிரி சாமி போன்றவர்கள், கல், வில் வீசிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் அஞ்சாமல் பங்கேற்பார். பெரியார்மீது செருப்பை வீசியிருக்கிறார்கள்; மலத்தை வீசியிருக்கி றார்கள், அழுகிய முட்டையில் மலத்தை நிரப்பி வீசி எறிந்திருக்கிறார்கள்; அதைத் துடைப்பதற்குக்கூட நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், போர்வையை போர்த்திக்கொண்டு உரையாற்றியவர் எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தளபதி அழகிரி சொல்வார்,

ஈட்டி எட்டிய வரையில் பாயும்

பணம் இருக்கிறதே, அது பாதாளம் வரைக்கும் பாயும்

ஆனால், பெரியார் என்கிற கொள்கை இருக்கிறதே, திராவிட இயக்கக் கொள்கைகள், அதேபோல, கம்யூ னிஸ்ட் இயக்கக் கொள்கைகள் அண்ட பிண்ட சராசரங் கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்.''

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இதுபோன்ற காலித்தனத்தை செய்வதன் மூலமாகவோ அல்லது எங்களைப் போன்றவர்களைக் கொல்வதன்மூலமாக எங்களுடைய வெற்றியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.

நாங்கள் வீட்டிலிருந்து புறப்படும்பொழுதே, செலவுக் கணக்கு எழுதிவிட்டுப் புறப்பட்டு வருபவர்கள். திரும்பிப் போனால்தான் வரவில் வைக்கப்படும்.

உயிர்த் தியாகத்தை கொள்கைகளுக்காக செய்வோம்

86 வயது எனக்கு; 76 ஆண்டுகள் பொதுவாழ்க்கை அனுபவம் உண்டு. எந்தக் காலி(வி)த்தனமும் எங்களை அடக்கிவிட முடியாது. அதில் உயிர் போனாலும், நாங்கள் பெரும் பேறு என்று கருதக்கூடியவர்கள். உயிர்த் தியாகத்தை இந்தக் கொள்கைகளுக்காக செய்வோம். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம், அதேபோல, கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள். நெருப்பில் பூத்த மலர்கள். எங்களை நெருங்க முடியுமா? எத்தனை எதிர்ப்புகள்; கலைஞர் சந்திக்காத எதிர்ப்பா? அண்ணா சந்திக்காத எதிர்ப்பா? இன்றைக்கும் எதிர்ப்புகள் என்று சொன்னால், எங்களுக்கு அதுதான் வரவேற்பு. ஆகவே, இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

வேறு யாரு வேண்டுமானாலும் பேசட்டும்; வீரமணி மட்டும் பேசக்கூடாதாம்!

தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், இங்கே உள்ள நம்முடைய தோழர்களை மிரட்டிப் பார்த்தார்கள், வேறு யாரு வேண்டுமானாலும் பேசட்டும்; வீரமணி மட்டும் பேசக்கூடாது என்றார்கள்.

என்னய்யா, வீரமணி பேச்சுக்கு அவ்வளவு பயம்? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். பரவாயில்லை, என்னுடைய இவ்வளவு நாள் பொது வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல அங்கீகாரம். அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் உங்களுடைய தோல்வியை நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்; இந்தக் காலித்தனங்கள் மூலமாக - எப்பொழுது காலித்தனங்களை செய்வார் கள் என்றால், வேறு வழியே இல்லை என்று சொல்லும் பொழுதுதான்.

தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்,

மனிதன் நோயினாலே சாகக்கூடாது

விபத்தினாலே சாகக்கூடாது

அதைவிட அவன் கொள்கைக்காக செத்தால், அதுதான் பெருமை!''

அதுபோன்று கம்யூனிஸ்டுகள்; மிராசுதாரர்களுடைய, பண்ணையார்களுடைய சாணிப் பாலுக்கும், சவுக் கடிக்கும் சளைக்காதவர்கள்; இவர்கள் அந்தப் பயிற்சிப் பெற்றவர்கள். எனவே, எங்களிடத்தில் எல்லாம் இது போன்ற சலசலப்பு செய்து எங்களைத் தடுத்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

உறுதியோடு சொன்ன தோழர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்

அதனால்தான் எங்கள் தோழர்களை அழைத்து, சுதாகர் ரெட்டியை மட்டும் பேசச் சொல்லுங்கள்'' என்றார்கள். அப்படியென்றால் நாங்கள் யாரும் பேச மாட்டோம்; கூட்டத்தில் எல்லோரும்தான் பேசுவார்கள் என்று உறுதியோடு சொன்ன தோழர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

இதுதான் கம்யூனிஸ்ட் கட்சி; இதுதான் கொள்கைக் கூட்டணியாகும்.

இன்னொன்று கொள்கைக் கூட்டணியல்ல; கொள் ளைக் கூட்டணி. அந்தக் கூட்டணியினுடைய தன்மை என்ன தெரியுமா?

பல ஆண்டுகளாக உருவான ஒரு கூட்டணி - கொள்கைக் கூட்டணி!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி கொள்கைக் கூட்டணி - லட்சியக் கூட்டணி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்தக் கூட்டணி. கொள்கைக்காக நாங்கள் ஒன்றுபட்டு இருக்கின்றோம். இது தேர்தலுக்காக அமைந்த கூட்ட ணியல்ல; பதவிக்காக அமைந்த கூட்டணியல்ல; இது பல ஆண்டுகளாக உருவான ஒரு கூட்டணி - கொள்கைக் கூட்டணி.

போராட்டத்திலே பூத்த மலர் இந்தக் கூட்டணி. அதேபோல், கொள்கை இலட்சியத்தில் காய்த்த கனி இந்தக் கூட்டணி.

நீட் தேர்வா? அதனை எதிர்த்துப் போராட்டம்

விவசாயிகளுக்குப் பிரச்சினையா? அதனை எதிர்த் துப் போராட்டம்

கல்வி மாநிலப் பட்டியலில் வரவேண்டுமா?

மாநில உரிமைகள்  பாதுகாக்கப்படவேண்டுமா?

காவிரி நதிநீர் ஆணையமா? தொழிலாளர் பிரச்சி னையா? எல்லா போராட்டங்களிலும் கைகுலுக்கி, கைகோத்து, கையைத் தூக்கி நின்று பல ஆண்டுகளாக உள்ள கூட்டணி. பிறகு தேர்தல் வருகிறது - அப்பொழுது இது அரசியல் கூட்டணியாக மாறுகிறது. இது கொள்கைக் கூட்டணி.

ஆனால், அதேநேரத்தில், இந்தக் கூட்டணியில் எதிரணியில் இருக்கக்கூடிய கூட்டணியின் யோக்கியதை என்ன?

கூட்டணி - ஒரு பக்கத்தில் மோடி - பா.ஜ.க. - காவி;

இன்னொரு பக்கத்தில் ஆவி!

காவியும் - ஆவியும் கூட்டணி.

ஆனால், கொள்கை இருக்கிறதா? என்பதை நீங்கள் தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

அ.தி.மு.க.வினர், அய்ந்து இடங்களை பா.ஜ.க.விற்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மேடையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம்; அந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; பரப்பவேண்டும்.

அந்தப் புத்தகத்தில் எல்லா புள்ளிவிவரங்களையும் தெளிவாகக் கொடுத்திருக்கின்றோம். அதன் தலைப்பு பாசிச பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது, ஏன்? தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு அணிக்கே வாக்களிக்கவேண்டும், ஏன்?'' என்ற தலைப்பில், பல தகவல்களை தெளிவாகச் சொல்லி யிருக்கின்றோம்.

கூட்டணிக்கு பெயர் வைக்கும் உரிமையாவது பெற்றீர்களா?

ஆகவே, நண்பர்களே! எதிர்க் கூட்டணிக்கு முத லாவது  நீங்கள் பெயர் சொல்லவாவது உரிமை பெற்றிருக் கிறீர்களா? என்னுடைய அருமை சகோதரர்களே, அ.தி.மு.க. நண்பர்களே, நீங்கள் சிந்திக்கவேண்டும்.

இந்தக் கூட்டணிக்கு என்ன பெயர்? இதோ பாருங்கள், அமித்ஷா அவர்கள், ஓ.பி.எஸ். அவர்களை மதுரை விமான நிலையத்திற்கு வரவழைத்து,

உங்களுடைய கூட்டணிக்கு என்.டி.ஏ. கூட்டணி என்றுதான் சொல்லவேண்டும்; அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறார். இந்தச் செய்தியை வெளியிட்டது தி இந்து' நாளிதழ்!

நீங்கள் இடங்களைக் கொடுக்கின்ற இடத்தில் இருந்தாலும்கூட, உங்களுடைய கூட்டணிக்கு உங்களால் பெயரை வைக்கக்கூட உரிமையில்லையே!

அந்தக் கூட்டணி கொத்தடிமைக் கூட்டணி

5 இடங்களைப் பெறக்கூடியவர்கள், உங்களுக்கு எஜமானராக மாறி உத்தரவு போடுகிறார்கள் என்றால், அந்தக் கூட்டணி கொத்தடிமைக் கூட்டணியல்லவா? கோட்டைக்குள்ளே நீங்கள் கொத்தடிமைகளாக உட் கார்ந்து கொண்டிருக்கிறீர்களே, இது பெரியார் பூமியல்லவா! சமுகநீதி பூமியல்லவா! சுயமரியாதை பூமி யல்லவா! என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

5 இடங்களை வாங்குகிறவர்களிடத்தில், உங்களுடைய சுயமரியாதையை அடகு வைத்துவிட்டீர்களே! அதனால்தான் நாங்கள் சொல்கிறோம்; தமிழ்நாட்டை மீட்போம்; இந்தியாவைக் காப்போம்!

இதுதான் இந்தக் கூட்டணியினுடைய லட்சியம்; இந்தத் தேர்தலினுடைய நோக்கம்.

இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. இது கல்கி பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கம்.

அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்லக்கூடாது; மோடி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுதான் குறிப்பிடவேண்டும் என்கிறார் ஷா. கூட்டணி அமைந்தும் இப்படி நிபந்தனை விதிப்பது எதேச்சதிகாரப் போக்கைக் காட்டுகிறது. இதே மாதிரியான அதிகார மமதைக்குப் பல விஷயங்களை உதாரணம் காட்டலாம் என்று கல்கி' தலையங்கத்தில் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டை அடகு வைத்துவிட்டீர்களே!

அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், அந்த சுயமரி யாதை உணர்வுகூட, அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டுள்ள நீங்கள், இப்படி அடகு வைத்து விட்டீர்களே,  தமிழ்நாட்டை! அதுவும் நல்ல விலைக்குக்கூட அடகு வைக்கவில்லையே! மிகக் குறைந்த விலைக்கு, அதுவும் மீட்டர் வட்டிக்கு அல்லவா அடகு வைத்திருக்கிறீர்கள். இதை நினைத்தால், வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் எல்லாம் இன்றைக்கு நன்றாகப் படித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? கல்வி வள்ளல் காமராசருடைய கல்விப் புரட்சி, அதுபோல, பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன் றவர்கள்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை, மனுதர்ம திட்டத்தை மாற்றி, முழுக்க முழுக்க இன்றைக்கு ஏராளமான பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில். இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு தமிழகம் விளங்கியதற்குக் காரணம் தந்தை பெரியாரும், நீதிக்கட்சியும்தான்!

2014 ஆம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார் மோடி!

நன்றாகப் படித்த இளைஞர்கள், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பணிக்குச் சென்றார்கள். அமெரிக்காவில் பொருளாதார சரிவு வந்தவுடன், அதிபராக டிரம்ப் வந்த வுடன், அவர் அந்த ஊர் மோடி; அந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்த வந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் கதவை சத்தினார்.

அந்த நேரத்தில், மோடி வித்தை காட்டினார்; 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடி வாங்கிய வாக்கு சதவிகிதம் என்ன தெரியுமா? 31 சதவிகிதம்தான்; முழுக்க முழுக்க 69 சதவிகிதம் அவருக்கு எதிரானதுதான். 31 சதவிகித வாக்குகளை வாங்கிய மோடி, வித்தை காட்டினார்;  எப்பொழுதுமே வித்தைக்காட்டுபவர்கள் சப்தம் போடுவார்கள்; சப்கா சாத் ; சப்கா விகாஸ்'' என்று சொன்னார்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொன்னார். எங்கே வளர்ச்சி? இங்கே தோழர்கள் எல்லாம் சொன்னார்களே, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறோம் என்று சொன்னாரே,  15 ரூபாயாவது உங்களுடைய வங்கிக் கணக்கில் வந்ததா?

நான்கரை கோடி பேர் வேலை இழந்தார்கள் மோடியின் ஆட்சியில்!

அதுமட்டுமல்ல, வேலை வாய்ப்பு! இளைஞர்களுக்கு மிக முக்கியம். ஓராண்டில் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன்; 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றெல்லாம் இவர்கள் சொன்னார்களே, 10 கோடி பேருக்கு வேலை கிடைத்ததா?

10 கோடி பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்பது முக்கியமல்ல நண்பர்களே, நான்கரை கோடி பேர் வேலை இழந்தார்கள் மோடியின் ஆட்சியில்.

இதைத்தான் அவர்கள் சாதனை என்று சொல்லு கிறார்களா?

இங்கே உரையாற்றிய சகோதரர் செல்வராசு அவர் கள் சொன்னார்கள், ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு; மக்கள் நலப் பணியாளர் பெண்களுக்கு 50 லட்சம்  பேருக்கு வேலை வாய்ப்பு

பண மதிப்பிழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரசு தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லி யிருக்கிறார்கள் 34 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு என்று சொல்லியிருக்கிறார்கள்.

எதைச் செய்வார்களோ அதைத் தான் சொல்லுவார்கள்!

இந்தக் கூட்டணி தெளிவான கூட்டணி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேறு என்ன வேண்டும்.

வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் அத்தனை குடும்பத்திற்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று கேட்டால்,  பொருளாதார நிபுணர் களை வைத்து ஆராய்ந்து தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.

எதைச் சொல்லுகிறார்களே, அதைச் செய்வார்கள் -

எதைச் செய்வார்களோ அதைத் தான் சொல்லுவார்கள்

இந்தக் கூட்டணியில் கொள்கை வேறுபாடு கிடை யாது.

இந்த மதச்சார்பற்ற என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறதே, அது கொள்கை அறிவிப்பு.

தி எண்ட் ஆஃப் இந்தியா!'

பிரபலமான எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் பொதுவானவர். அவர், வாஜ்பேயி இரண்டாவது முறையாக பிரதமராக வரப்போகிறார் என்று கேள்விப் பட்டவுடன், மோடி போன்றவர்கள் பிரதமராக வருவதற்கு முன்பாகவே எழுதிய புத்தகம் தி எண்ட் ஆஃப் இந்தியா' இனிமேல் இந்தியா இருக்காது என்ற தலைப்பில்.

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஆட்சி வந்தால், இனிமேல் இந்தியா இருக்காது என்று சொன்னார்.

பல கலாச்சாரம், பல மொழிகள், பன் மதங்கள் இருக்கின்ற நாட்டில், என் மதம் மட்டும்தான்  இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது எதேச்சதி காரமல்லவா! அரசியல் சட்டத்தில் இருக்கின்ற மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பதல்லவா!

ஆகவே, நண்பர்களே! சொன்னதை செய்யாதவர்கள் அந்த அணியில்!

சொன்னதை செய்பவர்கள், செய்யக்கூடியவர்கள் இந்த அணியில்!

செய்தீர்களா? செய்தீர்களா?'' என்று கேளுங்கள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும்பொழுது,

செய்வீர்களா? செய்வீர்களா?'' என்று கேட்பார்.

ஆனால், இப்பொழுது நீங்கள் அந்தக் கூட்டணியில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கவேண்டியது என்ன வென்றால், செய்தீர்களா? செய்தீர்களா?'' என்று.

அதுமட்டுமல்ல, ஊழல்களை ஒழிப்போம் என்று அமைச்சர்களை உட்கார வைத்துக்கொண்டு சொல் கிறார்கள். அமைச்சர்கள்மீது சி.பி.அய். வழக்கு; வருமான வரித்துறையினர் வழக்கு. இன்றைக்கு அதைத்தானே இந்தியா முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்பதற் காகத்தானே அந்தத் துறைகள். இதுவரையில் அப்படி நடந்திருக்கிறதா?

எந்த அளவிற்கு அது மோசம் என்று சொன்னால், அது ஒப்புக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ தேர்தல் ஆணையம் சொல்லுகிறது - வருமான வரித்துறை நடுநிலையில் இருக்கவேண்டும் என்று.

இன்றைக்கு அவர்களுக்குத் தோல்வி பயம் வந்து விட்ட காரணத்தினால், கலவரங்களிலும், காலித்தனங் களிலும் இறங்கலாம்.

கன்னியாகுமரியில், இதேபோல, சஞ்சய் தத் அவர்கள்,  ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இங்கே இருக்கிறார்கள்; கலவரம் நடக்கக்கூடும் என்று சொல்கிறார்.

மக்கள் யாரை அடையாளம் காட்டவேண்டும் என்று தெளிவாக இருக்கிறார்கள்

காரணம் என்னவென்றால், கொள்ளையடித்தப் பணங்களை எவ்வளவுதான் கொடுக்க முன்வந்தாலும், மக்கள் வாங்கத் தயாராக இல்லை; அப்படி வாங்கினாலும், யாரை அடையாளம் காட்டவேண்டும் என்று தெளிவாக இருக்கிறார்கள்.

எனவேதான், சுப்பராயன் போன்ற தோழர்கள் உழைத்து, வளரக்கூடிய கொள்கையாளர்; கொள்கைச் சீலர். அவருடைய வெற்றி என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. மிகமிக முக்கியமான ஒன்றாகும்.

இங்கு அம்பானிக்கும் - அதானிக்கும் அடகு வைக்க முடியாத ஓர் ஆட்சி வரும், மத்தியில் ஒரு ஆட்சி.

பிரதமர் யார் என்று நீங்கள் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள். தேர்தல் என்பது ஜனநாயகத்தில் ஒரு சுயவரம். அதில் யார் என்று முதலில் சொல்லவேண்டிய அவசியமில்லை. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியும் இருக்கிறார்.

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு...

ஆகவே, நீங்கள் நிச்சயமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தென்மாவட்டங்கள் முழுவதும் சென்று விட்டுத்தான் நான் இதைச் சொல்கிறேன், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு, அந்தத் தேர்தல் முடிவிற்குப் பிறகு மத்தியில் அமையப்போவது மோடி ஆட்சியல்ல; மாநிலத்தில், இந்தக் கொத்தடிமை ஆட்சி அகற்றப்படும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 இடங்களிலும் உதயசூரியன் உதிக்கும். அதேபோல, கதிர் அரிவாள் மற்ற தோழமைக் கட்சிகளின் சின்னங்கள் வெற்றி பெறும்.

ஆகவே, நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அதிகாரிகளும், நடுநிலையில் இருக்கவேண்டிய தேர்தல் ஆணையமும் நடுநிலை பிறழாது நடந்துகொள்ளுங்கள்; எங்கள் பக்கம் சாயுங்கள் என்று நாங்கள் சொல்லமாட்டோம்; உங்கள் கடமைகளை நீங்கள் நடுநிலையில் இருந்து செய்யுங்கள்!

இவர்களுடைய ஊழல் எப்படிப்பட்டது?

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லுகிறார்களே, ஒன்றை மட்டும் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

இவர்களுடைய ஊழல் எப்படி? உங்களுக்குத் தெரியுமே! வெளிநாட்டுக்காரர்கள் ஒருவர் என்னிடம் சொன்னார், நோயாளிகளுக்காக  ஆம்புலன்சை நாங்கள்தான் கண்டுபிடித்தோம்; ஆனால், எங்களுக்கே தெரியாத உபயோகத்தை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள்'' என்றார்.

என்னவென்று கேட்டேன், நாங்கள் நோயாளிகளுக்காகத்தான் ஆம்புலன்சை கண்டுபிடித்தோம்; ஆனால், நீங்கள் நோட்டுக் கட்டுக்காக ஆம்புலன்சைப் பயன்படுத்துகிறீர்களே, இதுபோன்ற பயன்பாடு எங்களுக்குத் தெரியாது'' என்று சொன்னார்.

இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பவர்கள் என்று பேசுபவர்கள், யோக்கியர்களா?

நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு, அது என்னவென்றால்,

யோக்கியன் வர்றான், சொம்பைத் தூக்கி உள்ளே வை!'' என்பார்கள்.

அதேபோன்று கண்டெய்னர்; மூன்று கண்டெய் னர்கள் நின்றதே, அதுபற்றிய விசாரணை இன்றுவரையில் உண்டா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்று அமைச்சர் வீட்டிலிருந்து பட்டியலை எடுத்துக்கொண்டு சென்றார்களே அது என்னாயிற்று?

தலைமைச் செயலகத்திற்குள்ளேயே வருமான வரித்துறையினர் உள்ளே நுழைந்தார்களே,  தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இதுபோன்று கிடையாதே! இதற்கு என்ன பதில்?

எனவே, நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், ஆழமாக இதுபோன்ற எங்களுடைய கருத்துகளைப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் அப்படியே எங்க ளுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லமாட்டோம்.

மாநில அரசோ தரையிலே ஊழல் - மத்திய அரசோ விமான ஊழல்!

மோடியைப் பொறுத்தவரையில், இந்தப் புத்தகத்தில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறோம் தோழர்களே,

மாநில அரசு தரையிலே ஊழல், அவர்கள் மத்திய அரசு அல்லவா! அதனால், பறக்கிற ஊழல் - விமான ஊழல்.

126 ரபேல் விமானங்கள் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தது மன்மோகன்சிங் அரசு காலத்தில். என்ன விலை நிர்ணயித்தார்கள்?  526 கோடி ரூபாய். அதேநேரத்தில், இவர்கள் மோடி அரசு கொடுத்த விலை இருக்கிறதே, 1,670 கோடி ரூபாய்.

மக்கள் வரிப் பணம், நம்முடைய வரிப் பணம் இப்படி நாசமாவதா? அவர்கள் முடிவு செய்தது 36 விமானங்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய். மீதி 108 விமானங்களை எச்.சி.அய். என்று சொல்லக்கூடிய அரசாங்கப் பொதுத்துறைக்கு விட்டு, அதன்மூலமாக தொழில்நுட்ப அறிவைப் பெறுவோம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.

ஆனால், அதுபோன்று இல்லையே இன்றைக்கு! அனுபவமேயில்லாத அம்பானி நிறுவனத்தோடு ஒப் பந்தம் போட்டார்கள்.

எனவே, இவர்கள் ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு வந்தவுடன், இந்து பத்திரிகையில் ராம் எழுதினார்.

இன்னும் சாயம் வெளுத்துவிடும்''

அது திருடப்பட்ட ஆவணம் என்று சொன்னார்கள். உடனே அடுத்த நாளே, இல்லை, இல்லை என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால்,இன்னும் சாயம் வெளுத்துவிடும்'' என்று நினைத்து அவர்கள் பின்வாங்கினார்கள். வெற்றிகரமான வாபஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு.

எனவே, நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்,

நீட் தேர்வு என்ற பெயராலே, எங்களுடைய பிள்ளை களின் கனவுகளையெல்லாம் சிதைத்தீர்களே, நியாயம் தானா?

அதேநேரத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றவுடன், நீட் தேர்வு ரத்து; மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வி கொண்டு வரப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கதிர் அரிவாள் சின்னத்தில் முத்திரையிடுங்கள்!

ஆகவே, இது கொள்கைக் கூட்டணி நண்பர்களே, அந்தக் கொள்கைக் கூட்டணியின் சார்பாக, மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக, நம்முடைய ஆற்றல்மிகு தோழர், அவர் எப்பொழுதெல்லாம் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இருந்திருக்கிறார்களே, அப்பொழுதெல்லாம் முத்திரை பதித்த ஒருவர் என்றால், அது தோழர் சுப்பராயன் அவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

எனவேதான், அவர்களுக்கு கதிர் அரிவாள் சின் னத்தில் முத்திரையிட வேண்டும்; பொத்தானை அழுத்தவேண்டும்.

ஒன்றே ஒன்றைச் சொல்லி, என்னுரையை முடிக் கின்றேன்.

உண்மையாகவே ஊழலை ஒழிக்க,

உண்மையாகவே சமுகநீதியை காக்க,

தாய்மார்களே, பெரியோர்களே, 18 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குள் சென்றவுடன், பொத்தானை அழுத்த வேண்டும்; அவசரப்பட்டு நீங்கள் விரலை எடுத்து விடாதீர்கள்; விளக்கு எரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா? என்று பாருங்கள். அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். அறியாமை போகும்; ஆணவம் அகலும். அதுதான் மிக முக்கியம் என்பதை கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner