எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழைய கள் - புதிய மொந்தை'யே! பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து - அறிக்கை

17 ஆம் மக்களவைத் தேர்தலையொட்டி பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது - பி.ஜே.பி.,க்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற் கான தன்னிலை விளக்கம் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின் நகலாகவே பல்லிளிக்கிறது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், அனை வருக்கும் வங்கிக் கணக்கு, ஸ்மார்ட் இரயில் நிலையம், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பிடம், டிஜிட்டல் பரி வர்த்தனை செய்யப்படும்'' என்பனவெல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட ஒரு அரச னின் ஆட்சியைப் பொற்காலம் என்று சொல்லும் போது, மரங்கள் வைத்தார், நிழல் தரும் மரங்கள் வைத்தார், வைத்திய சாலைகள் கட்டினார், மிருகங் களுக்கும் வைத்திய சாலைகள் கட்டினார்' என்று ஒட்டுமொத்தமாக எல்லா அரசர்களுக்குமே மாண வன் தேர்வு எழுதுவான் - அந்தக் கதைதான் பி.ஜே.பி. யின் தேர்தல் அறிக்கை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை....

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை என்பது அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் முதுகையே குத்துகிறது.

குறிப்பாக, பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்த தமிழக அரசியல் கட்சிகள் நீட்' தேர்வு கூடாது என்றே கூறுகின்றன. ஆனால், பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலோ அதனைக் கண்டு கொள்ள வேயில்லை. இவர்கள் முகத்தில் கரி பூசியது.

இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கச் செய்வது - இந்த நீட்' என்றாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது முக்கியதோர் பிரச் சினை! தந்தை பெரியார் பிறந்த - பாடுபட்ட - சமுகநீதி செழித்த பூமியாகும். கட்சிகளைக் கடந்த ஒரே குரலில் நீட்' எதிர்க்கப்படுகிறது. அதேபோல் இட ஒதுக்கீடு - சமுகநீதி!

இரணத்தில் நெருப்பைக் கொட்டுவதா?

ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்'டிலிருந்து விலக்குக் கோரி இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை கேட்பாரற்ற ஒன்றாகவே ஆகிவிட்டது. குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு அந்தக் கோப்புப் போகவில்லை என்பது எத்தகைய அவலம்!

அந்த இரணம் இன்னும் ஆறாதிருக்கும்போது பி.ஜே.பி. தன் தேர்தல் அறிக்கையில் அதனைக் கண்டுகொள்ளாதது இரணத்தின்மீது நெருப்பைக் கொட்டுவதற்குச் சமமாகும்.

சமஸ்கிருதத் திணிப்பு

இரண்டாவது, பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதோடு, அதனைப் பிரபலப்படுத்தப் போகிறார் களாம். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை என்றைக்குமே தமிழ் மண் ஏற்றுக்கொண்டது கிடையாது. சமுகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தி திணிப்பும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கான சுக்கானாகவே கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது.

தமில் வால்க', வண்ணக்கம்' என்று கூறிடும் மோடி அரசு செம்மொழி நிறுவனத்தை அழித்துக் கொண்டே இப்படிக் கூறுவதா?

மாநிலப் பட்டியலில் கல்வி, மாநில உரிமைகள் பற்றியெல்லாம் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், பி.ஜே.பி. அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி இருப்பது அதன் சவக்குழிக்கான காரணிகளாகும்.

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற அளவுக்குக் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை என்பது - பி.ஜே.பி.,க்கு ஏன் வாக் களிக்கக் கூடாது என்பதற்கான தன்னிலை விளக்க அறிக்கை'' என்றே கூறவேண்டும்.

யாருக்குவாக்களிப்பது என்பதில் அரை - குறை சிந்தனையோடு இருந்தவர்களும், காங்கிரஸ் - பி.ஜே.பி.தேர்தல்அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க் கும் நிலையில், கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையி லான தேசிய முற்போக்குக் கூட்டணியின் வேட் பாளர்களுக்கே வாக்களிப்பார்கள் என்பதில் அய் யமேயில்லை.

ராமன் கோவில் பிரச்சினை

ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லியுள் ளார்கள்;சபரிமலைப்பிரச்சினைப்பற்றியும்குறிப்பிட் டுள் ளனர். இப்படி மதப் பிரச்சினையைத் தேர்தலில் முன்வைப்பது சரிதானா என்பதைத் தேர்தல் ஆணையம் நியாயமாக சிந்திக்கவேண்டும். பி.ஜே.பி.க்கே உரித்தான சிறுபான்மையினர் மீதான சீண்டலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மதச்சார்பற்றவர்களும், சிறுபான்மை சமுகத்தினரும் சிந்திக்கவேண்டும்.

ஜம்மு - காஷ்மீருக்கென்றுள்ள சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றும் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஜம்மு - காஷ்மீர் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவும், ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி ஆகியோரும் கூறியிருக்கின்றனர்.

வம்பை விலைக்கு வாங்குவது - வெகுமக்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிராக உயர்ஜாதி சிந்தனையின் அடிப்படையில் காய்களை நகர்த்துவது எல்லாம் இத்தேர்தலில் பி.ஜே.பி.,க்குப் பெருங்கேடாக முடியப் போகிறது - இது கல்லின்மேல் எழுத்தாகும்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

திருச்சி

10.4.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner