எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி

தருமபுரி, ஏப்.14  மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தனியார் தொலைக்காட்சிக்குத்

தமிழர் தலைவர் பேட்டி

நேற்று (13.4.2019) தருமபுரிக்கு மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி நாடாளுமன்ற  தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்குச் சென்ற     திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட் பாளர் டாக்டர் செந்தில்குமாரையும், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும் தருமபுரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

கேள்வி: தருமபுரி தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்று சொன்னால், முன்னாள் மத்திய அமைச்சரும், அதேபோல 2016 இல் முதலமைச்சர் வேட்பாளராக  மாநிலம் தழுவிய அளவில் பார்க்கப்பட்ட, மாநில தலைவர்களில் ஒருவரான அன்புமணி இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். உங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர் தற்போதுதான் அறிமுகமாகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் எப்படி இருக்கிறது? உங்களுடைய வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு எந்த மாதிரியான போட்டி இருக்கிறது?

தமிழர் தலைவர்: இரண்டு பேரும் டாக்டர்கள் என்று சொன்னாலும்கூட, இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு நல்ல இளைஞரான டாக்டர் செந்தில்குமார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்.

பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ள

பா.ம.க.வுக்கு 'நீட்'டில் நிலை என்ன?

நண்பர்  அன்புமணி அவர்கள் வெளியில் இருந்து வந்து இங்கே வேட்பாளராக நிற்கக்கூடியவர். அன்புமணி உள்ளூர்க்காரரா? வெளியூர்க்காரரா? என்பதுகூட இரண்டாவது பிரச்சினைதான். மோடி அரசு - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு ரத்தாகுமா? என்பதில் அன்புமணியினுடைய நிலைப்பாடு என்ன?

நேற்றுகூட ராகுல் காந்தி தெளிவாக அறிவித்திருக் கிறார். ஏற்கெனவே நீட் தேர்வினை எதிர்த்து நடந்த போராட்டத்தினால் ஒன்றுபட்டவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியாக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும்; ரத்து செய்யப்படும் என்பதும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையிலும், இந்தக் கூட்டணியினுடைய வாக்குறுதிகளில் ஒன்றாக மிகத் தெளிவாக இருக்கிறது.

அதேபோல, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மருத்துவர் இராமதாசும், அவருடைய மகன் அன்புமணி ஆகியோர் வேகமாகப் பேசுகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள்.

நேற்றைய நிலவரம் என்னவென்றால், ராகுல் காந்தி மிகத் தெளிவாகவே அதனை அறிவித்துவிட்டார். அவர் அடுத்த வெற்றி வாய்ப்புள்ள, மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளவர்.

ஏற்கெனவே மோடி அவர்கள் இங்கே வந்தபொழுது, அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள், நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று.  அதற்கு அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று.

பியூஸ் கோயல் என்று சொல்லக்கூடிய, தமிழ் நாட்டுப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர், ஆர்.எஸ்.எஸ்.காரர் அவர். அவருடைய கொள்கையை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்னுங்கேட்டால், அவர்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அந்தக் கூட்டணியே முரண்பாடான கூட்டணி என்பதற்கு அடையாளம், தனி நபர்கள், வேட்பாளர் களுடைய சிறப்பு, உள்ளூர்க்காரர், வெளியூர்க்காரர், உடனடியாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு இருக் கிறது? யாருக்கு இல்லை என்பதெல்லாம் அடுத்த பட்சம். கொள்கை ரீதியான கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி. அந்தக் கூட்டணியின் மிக முக்கியமான திட்டம் - நீட் தேர்வை ரத்து செய்வது தான்.

அனிதாக்களோ, சுபசிறீக்களோ, மற்றவர்களோ மீண்டும் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலை வரக்கூடாது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில், தமிழ்நாட்டவர்கள்தான்  படிக்கவேண்டும். வெளி மாநிலங்களிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ கொண்டு வந்து நிரப்புகின்ற வாய்ப்பு இருக்கக்கூடாது.

நம்முடைய கிராமத்துப் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நீட் தேர்வு கூடாது என்று கூறுகின்றோம்.

ஆனால், இதனை ஏற்க முடியாது என்று தெளிவாகவே, ‘‘நாங்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம்'' என்று பா.ஜ.க.வினர் சொல்லுகிறார்கள்.

மாறாக, இப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய  அ.தி.மு.க.வினரை தெளிவுபடுத்தி, ஒப்புக்கொள்ளச் செய்வோம் என்று சொல்கிறார்கள்.

பா.ஜ.க. உத்தரவால் அமைந்த கூட்டணி

பா.ஜ.க.வினர் உத்தரவு போட்டுத்தான் இந்தக் கூட்டணியே அமைந்திருக்கிறது. பா.ஜ.க. 5 இடங்களைப் பெற்றாலும், இந்தக் கூட்டணிக்கு பெயர் வைக்கின்ற உரிமை அ.தி.மு.க.விற்குக் கிடையாது.

இந்த சூழ்நிலையில், எஜமானர்களாக அவர்கள் நடந்துகொள்கிறார்கள். இவர்கள் கொத்தடிமைகளைப் போன்று இருக்கிறார்கள்.

அதைவிட இன்னொரு செய்தி என்னவென்று சொன்னால், இவர்கள் எங்களிடம் கேட்டது, தமிழிலே நீட் தேர்வு வரவேண்டும் என்றுதான் கேட்டார்களே தவிர, 'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கேட்கவில்லை என்று பியூஸ் கோயல் சொல்லி, இங்கே ஆட்சியில் இருப்பவர்களின் முகமூடியை அகற்றிவிட்டார். ஒப்பனை கலந்துவிட்டது; உண்மை புரிந்துவிட்டது.

இந்நிலையில், மிக வேகமாகப் பேசிய, அன்புமணி அவர்களோ, டாக்டர் இராமதாசு அவர்களோ என்ன நிலைப்பாட்டினை எடுக்கப் போகிறார்கள்?

நீட் தேர்வை ஏற்றால்தான், இவர்கள் அந்தக் கூட்டணியில் இருக்க முடியும். ஏற்கெனவே இவர்கள், இந்தக் கூட்டணிக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் வரமாட்டோம் என்றார்கள். அ.தி.மு.க. ஆட்சியைப்பற்றி கடுமையான விமர்சனங்களை செய்தார்கள்; குற்றச்சாட்டுகளை சொன்னார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,

நீட் தேர்வு பிரச்சினையை எடுத்துக்கொண்டு பார்த்தாலே, நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று முடிவு செய்யும்பொழுது, நிச்சயமாக இந்த நிலைப்பாடு, முரண்பட்ட நிலைப்பாடு மட்டுமல்ல, திக்குமுக்காடக்கூடிய  நிலைக்கு பா.ஜ.க.வினர் இவர்களைக் கொண்டு வந்து நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டார்கள்.

இவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருக்கக்கூடிய அளவிற்கு இன்றைக்குத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும்!

நாங்கள் நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணத்திற்குச் சென்று வந்தோம். இது கடைசிக் கட்டம். எல்லாப் பகுதிகளிலும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இது ஒரு லட்சியக் கூட்டணி என்ற அளவிலே இருக்கிறது. அதிலும், தெளிவாக நேற்று ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘மோடியே கொஞ்சம் பெரியார் புத்தகங்களைப் படியுங்கள்'' என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

ஆகவேதான், இதில் தனி நபர் என்பதைவிட, பொதுநலம் என்பதுதான் மிக முக்கியம்.

அதற்கடுத்தபடியாக, டாக்டர் செந்தில்குமார் அவர்கள் நல்ல இளைஞர்; உள்ளூர்க்காரர், பாரம்பரியமிக்கவர். காங்கிரசைச் சேர்ந்த வடிவேலு அவர்கள் என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களே பிரச்சாரம் செய்தார்கள்; நாங்களெல்லாம்கூட பிரச்சாரத்திற்கு வந்தோம். அவர்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அந்த நேரத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அப்பொழுது நடந்தது இடைத்தேர்தல். இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த நேரத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்,  மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதே பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்தான் இந்த வேட்பாளர்.

தனிப்பட்ட  நபர்களுடைய வேட்பாளர்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.  இப்பொழுது மிக முக்கியமானது கொள்கையுள்ளவர்களா? கொள்கையற்றவர்களா?

அந்த வகையில், டாக்டர் செந்தில்குமார் வெற்றி என்பது பிரகாசமாக உள்ளது.

அதுமட்டுமல்ல, வேறு எந்தக் காரணத்தைக் காட்டியும், குறிப்பாக ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று நினைப்பதற்கு வாய்ப்பில்லை. இது திராவிட மண். அதுவும் தருமபுரியைப் பொறுத்தவரையில், அதனுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால், தெளிவான வரலாறாகும்.

ஆகவே, தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள்  வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

விவசாயியின் மகனா எடப்பாடி!

கேள்வி: நாங்கள் கடந்த சில நாள்களாகப் பார்க்கிறோம்; முதலமைச்சர் அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக மூன்று நாள்களாக  தருமபுரி, அரூர், மேட்டூர் பகுதியில் பேசுகிறார். நான் ஒரு விவசாயியின் மகன் என்று பேசுகிறார். மருத்துவர் இராமதாசு அவர்கள் சமுகநீதிப் போராளி என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது; காவிரி உபரி நீர்த் திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம்; குறிப்பாக, மொரப்பூர் தருமபுரி திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்; உங்கள் பக்கம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

தமிழர் தலைவர்: மூன்று நாள்கள் அல்ல; முப்பது நாள்கள் முதலமைச்சர் பேசினாலும், அவர் விவசாய முதலமைச்சர் என்று சொன்னாலும், அண்மையில், எட்டு வழிச் சாலைப் பிரச்சினையில் உயர்நீதிமன்றம் கொடுத்த குட்டு என்பது, இந்த அரசினுடைய முகத்தில் அறைந்த அறை அது.

ஜனநாயக உணர்வு உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் ராஜினாமா செய்திருக்கவேண்டும். இரண்டு வாரங்களுக்குள் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

விவசாயிகள், அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் இருக்கிறதே, அந்தக் கண்ணீர் சாதாரணமானதல்ல. உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு, ஆனந்தக் கண்ணீர் வடிக்கக்கூடிய அளவிற்கு விவசாயிகள் இருக்கிறார்கள்.

எந்த வகையில், இவர் விவசாயி என்று சொல்லுவதற்கு வாய்ப்பு இருக்கிறது? மோடி ஆட்சியிலே, 2015 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, விவசாயி களுக்காக அதை செய்தேன், இதைச் செய்தேன் என்று சொல்லுகின்ற முதலமைச்சர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அய்ந்து நாள்களில் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே, அதை எதிர்த்தவர் யார்? மோடி  தானே!

அவர்களுக்கு அதிகாரமே கிடையாது, ஆனாலும், அதற்காக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாதாடினார்.

அதற்குப் பிறகு, ஒப்புக்காக, இவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்த பிறகு, மேகதாது அணைக்கு கருநாடகத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டார். இனிமேல், ஒகேனேக்கல்லில் தண்ணீர் வருவதற்குக்கூட  சிக்கலாகத்தான் இருக்கும். தமிழ்நாடே பாலைவனமாகக்கூடிய  அளவிற்கு இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் -

வெற்றுக் காகிதம் தானா?

மற்றொரு முக்கியமான கேள்வி, விவசாயிகள் அடிக்கடி நினைவூட்டவேண்டிய கேள்வி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது; வெறும் காகிதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்குரிய அதிகாரம் இல்லை; நிரந்தரமான தலைவர் இல்லை; நிரந்தரமான உறுப்பினர்கள் இல்லை. எத்தனை மாதங்கள் ஆயிற்று? அதனைக் கேட்பதற்கு, தமிழக அரசுக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கு இதுவரை தெம்போ, திராணியோ இல்லை.

ஆகவே, இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று சொல்லுவது சரியா? ‘‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக் கிழித்து வைகுந்தத்தைக் காட்டுவானாம்'' என்ற ஒரு பழமொழி உண்டு வைதிகத்தில். எங்களுக்கு வைகுந்தத்தில் நம்பிக்கை இல்லை.

ஆனால், இவர்கள்பால், இவருடைய திறமையின் மையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்களை அவர்கள் சந்திப்பதற்குத் தயாராக இல்லை. காவல்துறையினரின் பாதுகாப்போடு தனியே வந்திருக் கிறாரே தவிர, விவாதம் என்றால், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாது.

இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே கிடையாது; விபத்தின் காரணமாக வந்த முதலமைச்சர் இவர்.

திராவிட மண்ணா?

கேள்வி: நீங்கள் திராவிட மண் என்று சொல்கிறீர்கள். ஆனால், அன்புமணி ராமதாசு பேட்டி கொடுக்கும்பொழுது, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லாமல், நாங்கள் இங்கே வெற்றி பெற்று இருக்கிறோம். கடந்த 20 ஆண்டுகால வரலாறை எடுத்துப் பார்த்தீர்களேயானால், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,  தி.மு.க. வேட்பாளர் தாமரைச் செல்வனைத் தவிர, அதற்கு முன்பு இருந்து நாங்கள்தான்; இந்த இடத்தைக் கோட்டையாக வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். பிறகு எப்படி நீங்கள் இங்கே வெற்றி பெறுவீர்கள் என்று சொல்லுகிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஜனநாயகத்திலே மாற்றங்கள் என்பது சில நேரங்களில் வரும். ‘‘மாற்றம், மாற்றம்; மாற்றம் தேவை'' என்று சொன்னார். ஏன் அதை மட்டும் சொல்லுகிறார்? முதலமைச்சர் ஆகவேண்டும் என்பது அவர் திட்டம்; வெளிநாட்டுக்காரர்களைப் போலவே, அவர்களின் பாணியிலே நடந்து, முதல் கையொப்பம் என்றெல்லாம் சொன்னாரே, ஏன் அது மறந்துவிட்டது; அதை வசதியாக மறந்துவிட்டு, இதை மட்டும் சொல்கிறார்கள். எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி  சேரமாட்டோம் என்று சொன்னார்கள் அல்லவா! இப்பொழுது கூட்டு சேர்ந்துதானே வரப் போகிறேன் என்று சொல்லுகிறார். அவருக்குப் பலம் தனியாக இருந்தால், நான் இப்பொழுதும் தனியாக நிற்கிறேன் என்று சொல்லி, அவர் தனியாக அல்லவா நிற்கவேண்டும்.

அவருடைய கட்சி தனியாக நிற்கவில்லை. இவர்கள் பேசாத பேச்சா? இவர்கள் வருணிக்காத வருணனையா?

இரு கழகங்களைப் பற்றியும் டாக்டர் அன்புமணி என்ன சொன்னார்?

இரு கழகங்களும் எவ்வளவு மோசமானது என் றெல்லாம் சொன்னார்களே; அ.தி.மு.க. ஆட்சியைப்பற்றி புகார் கொடுத்தார்கள். இதற்குப் பிறகு, அவர்களோடு சேர்ந்து கூட்டணி வைத்து நிற்பதற்கு அவர்கள் வெட்கப்படவேண்டாமா?

ஆகவேதான், பலம் என்று சொல்வது இருக்கிறதே, அவர் பலகீனத்தைக் காட்டுவதுதான் இப்பொழுது அவர் சேர்ந்திருக்கின்ற கூட்டணி. அப்படி அவர் அந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும், இப்பொழுது அவர் வெற்றி பெற முடியாது.

அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு; ஜாதி, மற்ற பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பினார்கள்; தேர்தலில் சில மாற்றங்களை விரும்புவார்கள் மக்கள். அந்த அளவிற்கு இருக்குமே தவிர, இவரால் ஏற்பட்டது மாற்றமல்ல; ஏமாற்றம் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

தனிப்பட்ட முறையில் நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை. இது கொள்கையா? கொள்கையில் லையா? என்பதுதான் இந்தக் கூட்டணி வெற்றிக்குப் பிரச்சாரத்திற்கு அடிப்படையே தவிர, நான் தனி நபர்களைப்பற்றி எப்பொழுதும் பேசுவதில்லை; நீங்கள் கேள்வி கேட்டதால், அதற்குரிய விளக்கத்தை சொன்னேன்.

வாக்குச் சாவடியை கைப்பற்றுவார்களா?

கேள்வி: வாக்குச் சாவடிகளில் நாம்தான் இருப்போம் என்கிறார்; நத்தம்மேடு போன்ற கிராமங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாவட்ட ஆட்சித் தலைவரைப்  பார்த்து, சில இடங்கள்  சென்சிட்டிவான வாக்குச் சாவடிகளாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள்கூட, ஜாதிப் பிரச்சினைதான் கடந்த காலகட்டத்தில் இந்தத் தொகுதியில் இருந்தது என்று சொல்லியிருந்தீர்கள். இளவரசுவினுடைய மரணம் சந்தேக மரணம் என்றுகூட சொல்லியிருந்தீர்கள். இதெல்லாம் இன்றைக்கு இம்பேக்ட் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? தங்களுடைய சமுதாய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சில நாள்களுக்கு முன்பு தொகுதி மக்களிடம் அழுது இருக்கிறார்; மக்கள் ‘‘அழாதீர்கள் அய்யா, நாங்கள் உங்களோடு இருக்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார்கள். அது அவருக்கு சாதகமாகத்தானே இருக்கும்?

தமிழர் தலைவர்: பா.ஜ.க. என்ற மூழ்கும் கப்பலில், யார் ஏறினாலும், அது கவிழப் போவது உறுதி. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

நான் சொன்ன நீட் தேர்வு பிரச்சினையில், நான் வைத்த கேள்விக்கு அவர் பதில் சொல்லட்டும்.

ஆகவே, பா.ஜ.க. என்பது மூழ்கும் கப்பல்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் மட்டுமல்ல,  இந்தியா முழுவதும் ஒரு வேகமான, மோடிக்கு எதிர்ப்பான அலை வீசுகிறது. அதுபோலவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,  பல இடங்களில் அவர்களுடைய கூட்டணிக்குள்ளேயே ஒருவிதமான ஒருங்கிணைப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.

ஆகவேதான், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியின்மீது இருக்கக்கூடிய வெறுப்பு, நம்முடைய உரிமைகளையெல்லாம் டில்லிக்கு அடிமைப்படுத்தி, இப்பொழுது ஆள்வது எடப்பாடி அல்ல; எடப்பாடி என்பவர், மோடியினுடைய பிடியில் இருக்கக்கூடிய ஒருவர் என்பது நன்றாகத் தெரிகிறது.

ஆகவே, தமிழக அரசின்மீதும், மக்களுக்கு வெறுப்பு; அதைவிட பல மடங்கு மோடியின்மீது வெறுப்பு. என்னதான், அவர் ராமேசுவரத்திற்குப் போய் ராமநவமி கொண்டாடினாலும், அவரைப் பார்ப்பதற்காக திரட்டப்பட்ட கூட்டம் வருமே தவிர, வேறொன்றும் கிடையாது.

இரு புதிய ஆட்சிகள் மலரும்

மோடியினுடைய எதிர்ப்பலையில், பலர் காணாமல் போவார்கள்; பல கட்சிகள் காணாமல் போகும். மே மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டு புதிய ஆட்சிகள் வருவது என்பது உறுதி.

கேள்வி: தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தி.மு.க. வேட்பாளர்களை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆவார் என்று சொல்கிறார், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? தமிழகம் முழுவதும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. காரணம், எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி மாறவேண்டும், அவ்வளவு சீக்கிரம் மாறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்று சொன்னால், அந்த அளவிற்கு எல்லாத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவேதான், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். டில்லி முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதால், இந்த ஆட்சி நீடிக்கிறதே தவிர, மற்றபடி வேறொன்றுமில்லை.

ஆகவேதான், ஜூன் 3 ஆம் தேதி என்ன? அதற்கு முன்னதாகவே வந்துவிடுவார்கள். ஒரு பொறுப்புக்காக, கலைஞருடைய பிறந்த நாளில் ஒரு புதிய மாற்றம் இருக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தேர்தல் முடிந்தவுடன்,  பெரிய அளவிற்கு மாற்றங்கள் வரும்.

22 சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்துவதற்கு இவ்வளவு நாள் தயங்கியதற்குக் காரணமே அதுதான். அதனால்,  பல இடங்களில் கலவரம்; பல இடங்களில் காலித்தனம்; பெட்டிகளைத் தூக்கலாமா என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றால், தோல்வி பயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்; அதிலிருந்து வெளியே வருவதற்கு கடைசி நேரத்தில், கலவரங்களை, ரகளைகளை நடத்தலாம் என்று திட்டமிட்டால், அது அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அவர்கள் மற்ற கட்சிகளோடு கூட்டணி சேர்ந்திருப்பதற்குக் கார ணமே, வெற்றிக்காக அல்ல; நோட்டாவை விட கொஞ்சம் கூடுதலான வாக்குகளை வாங்கவேண்டும் என்பதற்காகத்தான்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

4 சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன்  தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எஞ்சியுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்தே நடைபெற வேண்டும் என்று தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. திமுக வழக்கும்கூட போட்டது.

இதற்கிடையில் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானதால் அத்தொகுதியும் காலி யானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வருகிற மே 19ஆம் தேதியில் நடைபெறும் என்று நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

இந்த இடைத் தேர்தலால் ஆட்சி மாற்றமே நிகழும் வாய்ப்பும் இருப்பதால், இவைகளின் முடிவுகள் மிக முக்கிய அரசியல் திருப்பமாக அமையும்.

திமுக சார்பில் - திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, சூலூருக்குப் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரம் (தனித் தொகுதி) எம்.சி. சண்முகய்யா ஆகியோர் போட்டி யிடுவார்கள் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

அவர்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டில் மோடியை அதிமுகவின் "டாடியாக"ப் பேசும் கொத்தடிமை அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட அத்தொகுதி வாக்காளப் பெரு மக்கள் உதயசூரியனுக்கே வாக்களித்து - தமிழக ஆட்சி மாற்றம் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்பட வழி வகுப்பீர்!

- கி. வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner