கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப். 4- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை விரும்புகிறேன் என்று யாரும் அவசரப்படக்கூடாது என்று தி.மு.க. பொதுக்குழுவில் கலைஞர் பேசினார்.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பேசியதாவது:-

தி.மு.கழகத்தின் பொதுக்குழு சீரோடும் சிறப்போடும் அமைதியாக நடைபெறுகிறதே என்பதை ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப்பட்டு அவர்களை விட்டே சிலரைத் துண்டி விட்டு, வீரபாண்டி ஆறுமுகம் பேச்சில் எந்தத் தவறும் இல்லாத சூழ்நிலையில், அவர் தி.மு. கழகத்திலே உள்ள தொண்டர்களுக்கு, பிரமுகர்களுக்கு விடுத்த வேண்டுகோளை தவறாகத் திரித்து அவர் மீது மோதுவது போல இங்கே தம்பி ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு ஒரு பிளவை கழகத்திலே ஏற்படுத்த சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதில் நீங்கள் ஸ்டாலினுக்கு உதவி புரிந்ததாக அர்த்தம் இல்லை. ஸ்டாலின் வளர்ந்து வருகின்ற காலத்திலே இந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் அவர் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சி அமைந்து விட்டதே என்று தான் நான் கவலைப்படுகிறேன்.

தி.மு. கழகத்தில் எந்த ஒரு தேர்தலும் சுமுகமாகத் தான் நடைபெற்றிருக்கிறது. பொதுச்செயலாளருடைய தேர்தல் ஆனாலும் சரி, பொருளாளருடைய தேர்தல் ஆனாலும் சரி, தலைவர் தேர்தல் ஆனாலும் சரி இவைகள் எல்லாம் சுமுகமாகத் தான் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் இந்தக் கூட்டம் - இந்தப் பொதுக் குழு - சில தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் - கழகத்தின் கட்டுக்கோப்பை வலுப்படுத்துவதற்காகவும் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதற்காக ஒரு நாள், இரண்டு நாள் - இங்கே பேராசிரியர் சொன்னார் - நேற்றிரவெல்லாம் கண் விழித்து இன்று காலையில் கலைஞர் வந்திருக்கிறார் என்று சொன்னார். அவருக்குத் தெரியும், இந்தத் தீர்மானங்களை, திருத்தங்களை கொண்டு வருவதற்கு நானும், கழகத்தினுடைய முன்னணி வீரர்களும் எத்தனை நாள் இரவு பகல் கண் விழித்திருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும்.

இப்பொழுது உடல் நலிவோடு, இவ்வளவு காரியம் செய்ய வேண்டுமா என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் எல்லாம் கூட கொஞ்சம் கடிந்து கூறியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் என்றைக்கும் கவலைப்படாதவன் என்று உங்களில் என்னை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். உங்களை மாத்திரம் உணர்ந்தவர்களுக்குத் தெரியாது. என்னை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

இந்தப் பொதுக்குழு அமைதியாக நடந்தது என்ற செய்தி பத்திரிகையிலே வராமல் செய்ய வேண்டும், பெரிய கலவரம், அமளி, தி.மு.க. இரண்டாக ஆகி விட்டது, அவ்வளவு பெரிய கலவரம் நடைபெற்றது என்று நாளைக் காலையில் பத்திரிகைகளிலே வருகின்ற செய்திகளைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக யாராவது அந்த முயற்சியிலே ஈடுபட்டால், ஈடுபட்டிருந்தால் நான் அவர்களை எச்சரிக்கிறேன் - உங்களுடைய சூழ்ச்சி தி.மு. கழகத்தில் பயன்படாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே காங்கிரசோடு உறவு வேண்டுமா என்றெல்லாம் அந்தப் பிரச்சினை எழுவதற்குத் தேவையே இல்லை. அந்த உறவு வேண்டாம் என்பதை நானே உங்களையெல்லாம் கேட்காமல், நானும் பேராசிரியரும் கலந்து பேசி, நம்முடைய செயற்குழுவைக் கூட்டி, உயர் நிலை செயல் திட்டக் குழுவிலே அதைப்பற்றி சிந்தித்து, நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலிலே தனித்தே நின்றோம்.

உங்களுடைய யோசனையை கேட்டா அது நடைபெற்றது? பொதுக்குழுவைக் கூட்டாமலே, நம்முடைய அதிகாரம் பெற்ற சில குழுக்களின் மூலமாக எடுத்த முடிவு தான் அந்த முடிவு.

நாடாளுமன்றத் தேர்தலிலும், அதே முடிவை எடுக்க வேண்டுமென்று சொன்னீர்கள். எங்கள் காதுகளிலே அது விழுந்தது. எங்கள் கவனத்திற்கு வந்தது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் என்பது உள்ளாட்சி மன்றத் தேர்தலைப் போன்றது அல்ல. அதை மறந்து விடக் கூடாது. நான் ஏதோ நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தோழமையை வேண்டுகிறேன், விரும்புகிறேன் என்று யாரும் இங்கே அவசரப்பட்டதைப் போல அவசரப்பட்டு விடக் கூடாது.

ஏன் இந்தியாவினுடைய எதிர் காலத்தை எண்ணிப் பார்க்கின்ற சர்வ சாதாரணமான ஒரு அரசியல்வாதி கூட, இந்திய நாட்டில் பலாத்கார அரசியலோ, வன்முறை அரசியலோ, மதவாத அரசியலோ ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடக் கூடாது என்பதில் தி.மு. கழகம் தனியாக கவனம் செலுத்துகின்ற கட்சி.

மதவாதத்தை வளர்க்கிற, சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரான முற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரான தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளுக்கு மாறான அறிஞர் அண்ணாவின் இன உணர்வுக் கொள்கைகளுக்கு மாறான எந்த ஒரு கட்சியின் கொள்கைகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், அதை தடுத்து நிறுத்தக் கூடிய முதல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் தான் இருக்கும்.

அதைப் போல வேறு சில நண்பர்களும் காங்கிரசோடு உறவு கூடாது என்று உரக்க உரக்கப் பேசினார்கள் அல்லவா? நீங்களும் பலத்த கைதட்டல் உங்களுடைய கைகளிலே பலம் உள்ள அளவுக்கு ஒலித்து ஆதரவைக் காட்டினீர்கள் அல்லவா? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நான் சொல்வதை நீங்கள் கேட்டால் உங்களுக்கே கூட அந்தத் திகைப்பும் மலைப்பும் வரும்.

அடுத்து நாடாளுமன்றத்திற்கு நடைபெறுகின்ற தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை எந்தக் கட்சி பிடிக்கிறதோ அந்தக் கட்சியின் தலைவர் தான் பிரதமராக வர முடியும்.

இப்போதே பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத் தான் என்று தமிழ்நாட்டிலே உள்ள சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான வேலையை டெல்லியிலே உள்ளவர்கள் இப்போதே தொடங்கி விட்டார்கள்.

நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. யார் வேண்டுமென்றாலும் பிரதமராக வரட்டும். ஆனால் எந்த இயக்கம் இந்தியாவின் தலைமையை கையிலே எடுத்துக் கொண்டால் இந்தியா முன்னேற்றப் பாதையிலே செல்லும், இந்தியா கம்யூனிசப் பாதையிலே செல்லும், அல்லது இந்தியா பொதுவுடைமைப் பாதையிலே செல்லும் என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் பா.ஜ.க. வந்தால் மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

அது வராமல் தடுக்க வேண்டுமேயானால், நமக்கு இருக்கிற வேறு வழி என்ன? காங்கிரஸ் தானா?

காங்கிரஸ் உங்களுக்கு நன்மை செய்ததா? காங்கிரஸ் உங்கள் மகள் கனிமொழியை இன்றைக்கு திகார் சிறைச்சாலையிலே, கொடுமையான சிறைச்சாலையிலே, வெயிலில் வாட வாட வதக்கி எடுத்தார்களே, அந்தச் சிறைச்சாலையிலே தம்பி ராசாவை பூட்டி மகிழ்ந்தார்களே, அந்தக் காங்கிரசுக்கா உங்கள் வாக்கு என்று கேட்பீர்களேயானால், நான் இதிலே தன்னலத்தை மறந்து விட்டு, நம்முடைய இந்தியத் திருநாட்டினுடைய எதிர்காலத்தைத் தான் யோசிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

எனக்கு கனிமொழியினுடைய வேதனை பெரிதல்ல. அதை விட அதிகமாக நான் இந்தியாவை மத வாதிகளின் கூடாரமாக ஆக்கி விட விரும்பவில்லை. சிறுபான்மை சமுதாயத்தை வேட்டையாட குஜராத் பாணியிலே அவர்களையெல்லாம் வேட்டையாட நான் ஒப்பமாட்டேன்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி பா.ஜ.க.வை பிரதமர் பதவிக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும்? அதற்கு வேறு என்ன வழி காண முடியும்? காங்கிரசை விட்டால், பா.ஜ.க. வை விட்டால் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான கட்சி என்று பார்த்தால் இல்லை.

காங்கிரசுக்குள்ளே இருப்பவர்களில் யார் பிரதமர் என்று கேட்டால் எனக்குக் கூடத் தெரியாது. காங்கிரசிலே இருக்கின்ற தலைவர்களுக்கே கூடத் தெரியாது. அவர்களுடைய சண்டை எப்போது ஓயுமோ அதுவும் எனக்குத் தெரியாது. அது வேறு விஷயம்.

இருக்கின்ற நண்பர்களில் - இருக்கின்ற கட்சிகளில் ஓரளவாவது மத வாதத்திற்கு இடம் தராத - பகுத்தறிவுக்கு இடம் தருகின்ற கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நான் வக்காலத்து வாங்குவது, முன்னேற்றக் கொள்கைகளுக்காக - சிறுபான்மை சமுதாயத்து மக்களை வன்முறையால் வாட்டி வதைக்கின்ற அந்தச் செயல்களுக்கு மாறாக அமைதியான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா, ஏழையெளிய மக்களை வாழ வைக்கின்ற இந்தியா, மதவாதமற்ற இந்தியா உருவாக வேண்டும். அப்படி உருவாகியிருக்கின்ற இந்தியாவை யாரும் சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்லுகிறேன்.

இந்த வாதம் எல்லாம் காங்கிரசை சிம்மாசனத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் சிம்மாசனத்தில் காங்கிரசை உட்கார வைக்க வேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஏதோ அவர்கள் நமக்கு ஒரு பெரிய நன்றியைச் செய்து விட்டார்கள் என்று யாரும் கருதவேண்டாம்.

காங்கிரஸ் இல்லாவிட்டாலும் ஒரு பஞ்சாப்பில் இருப்பவர் வந்து, நான் பகுத்தறிவாளனாக இருக்கிறேன், இந்தியாவை முற்போக்கு பாதையில் இட்டுச் செல்வேன், பா.ஜ.க. வை தொடாதே என்றால், அதையும் நான் தலை குனிந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக மாறுவேன்.

காரணம் அந்த அளவிற்கு கொள்கையிலே, சிறுபான்மைச் சமுதாயத்திற்கு ஆதரவாக இருக்கின்ற நிலையிலே பெரியார் வழியை, அண்ணா பாதையை பின்பற்றுகிறவன் என்ற முறையில் இந்தக் கருத்துகளைச் சொன்னேன்.

உடனே எல்லோருக்கும் பதில் சொல்லி கருணாநிதி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறி விட்டார் என்று யாராவது சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். நான் அப்படிச் சொல்லவில்லை.

வேறு வழி என்ன என்பதை நீங்கள் பொதுக் குழு முடிந்து வீட்டிற்குச் சென்று ஒரு வாரம் சிந்தித்து உங்களுடைய நண்பர்களோடு கலந்து பேசி இந்தக் கட்சிகளையெல்லாம் விட்டு விட்டால் காங்கிரசை தவிர வேறு யாரை நாம் மகுடம் சூட்டி சிம்மாசனத்திலே அமர வைக்க முடியும், யார் இந்த அளவிற்கு மோசமாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் மக்களுடைய நன்மைகளுக்காக மதச் சார்பற்ற முறையிலே பாடுபடுவார்கள் என்பதையெல்லாம் நண்பர்களோடு கலந்து பேசி நீங்களே நல்ல சிந்தனையாளர்கள் தான் - இல்லாவிட்டால் ஒரு பொதுக் குழுவை அமைதியாக நடப்பதற்கு இந்த அளவிற்கு ஒத்துழைத்திருக்க மாட்டீர்கள் - அந்த அளவிற்கு ஒத்துழைத்தீர்கள் - நாளைக்கு பத்திரிகைகளில் எல்லாம் உங்களுடைய முழக்கம் தான் பெரிதாக வரும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்