நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில் அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?) இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான்.
நாளை அவன் செல்வனும், கற்றறிவாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.
நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியாவெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர் உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்?
நாமும் மனிதர்களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற்காகவும் நாம் என்ன செய்கின்றோம், நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா?
அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங்களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவுகின்றது? நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப்பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது; மற்றெங்குமன்று....
அன்பும் நல்லெண்ணமுமடைய உங்கள்
விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன் குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.