வரலாற்று சுவடுகள்

13.11.1932  - குடிஅரசிலிருந்து...

இந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசய மாயும்  ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை  வருத்தி செல்வம் பெருகிக் கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப் பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங் களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத் துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்ட வர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரி யாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமுகத்தை 2-வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து  போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தை யும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடு மென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி  பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரண தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார் களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

 

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

30.10.1932 - குடிஅரசிலிருந்து...

அடுத்து வரப்போகும் சென்னை சட்ட சபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப் பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமுக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும் ஆர் வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் பெறும் புகழுக் காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமுகத்தின்பாலும் கொண்டிருக்கும் உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சம வுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று அய்யமறக் கூறுவோம்.

ஆனால், இம்மசோதா சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை. ஆனால் அரசாங்கத்தார், இம்மசோதாவுக்கு ஆதரவளிக்காவிட்டாலும், கூட மனம் வைத்தால், சென்னைச் சட்டசபை அரசாங்கத் தின் தயவில்லாமலே, இம்மசோதாவைச் சட்டமாக்கி விட முடியும். எப்படியெனில் இப் பொழுது சென்னைச் சட்டசபையில் அதிகாரத் தில் இருக்கும் கட்சியும், மெஜாரிட்டியாக யிருக்கும் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியாகும். இப்பொழுது ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு வரப்போகும்,     திரு. சுப்பராயன் அவர்கள் எதிர்க்கட்சியின் தலைவராவார். ஆகவே திரு. சுப்பராயன் அவர்களின் மசோ தாவை அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் களெல்லாம் ஆதரிப்பார்கள் என்பதில் அய்யமில்லை சட்டசபையின் மெஜாரிட்டிக் கட்சியினரான ஜஸ்டிஸ் கட்சியினரும் இம் மசோதாவை ஆதரிப்பார்களானால், அது சட்டமாகிவிடுமென்பதற்குச் சந்தேகமில்லை.

ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமுகச் சீர்திருத்தக் கொள்கையையே அடிப்படை நோக்க மாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினர் களுக்கும் ஆலயங்களில் சமவுரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகை யால், அவர்கள் தமது எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்கமாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகின்றோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர், திரு சுப்பராயன் அவர் களுடைய கட்சிக்கும், தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும், எதிர்க் கட்சியினர் எந்த நல்ல மசோதாவைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே நமது கடமை என்னும் அரசியல் வஞ்சந்தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும், அல்லது எதிர்த்தாலும், அது மிகவும் வெறுக்கத்தகுந்த செய்கை யாகுமென்றே நாம் கூறி எச்சரிக்கின்றோம்.

இப்பொழுது வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதா சட்டமாகுமானால், அதன் மூலம் எல்லா வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும், இந்து மதக் கோயில்களில் தடையில்லாமல் செல்லுவதற்கு உரிமையுண்டாகுமென்பது நிச்சயம். ஆதலால், இத்தகைய மசோதா ஒன்று சென்னைச் சட்டசபையில் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே, நமது நாட்டு வைதிகர்கள் அதைக் கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த மசோதாவைச் சட்ட சபையில் கொண்டு வர அனுமதியளிக்கக் கூடாது என்று மேன்மை தங்கிய வைசிராய், கவர்னர் முதலியவர்களுக்கு தந்திகளும், தீர்மானங்களும் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல பொது கூட்டங்கள் என்னும் பெயரால் வைதிகர்கள் இம்மசோதாவைக் கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தீண் டாதார்களுக்கு ஆலயப் பிரவேசம் அளிப்பது, சாதிரங்களுக்கு விரோதம், மதத்திற்கு விரோ தம், பழக்கவழக்கங்களுக்கு விரோதம். ஆகை யால், தீண்டாதர்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும்படியான சட்டஞ் செய்யக் கூடாது என்று கூச்சலிடுகின்றனர். இக்கூச்சலைச் சட்டசபை உறுப்பினர்களும், அரசாங் கத்தார்களும் ஒரு சிறிதும் லட்சியம் பண் ணாமல். டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோ தாவைச் சிறந்த திருத்தங்களுடன் சட்டமாகச் செய்ய ஆதரவளிக்க வேண்டு கிறோம். வெகுகாலமாக நமது நாட்டில் கோயில் பிரவேசத்திற்குத் தடை செய்து கொண்டிருந்த சமுகம் பார்ப்பன சமுகம் ஒன்றேயாகும். இன்று அச்சமுகத்திலும் பகுத்தறியும் மூளையற்ற - சாத்திரப்பித்தும், சுயநலப்பித்தும் கொண்ட வைதிகர்களே கோயில் பிரவேசத்திற்குத் தடை கூறிக் கொண்டிருக்கின்றவர்கள். ஆத லால். மற்ற சமுகங்களின் ஜனத் தொகையை விட, மிகக் குறைந்த ஜனத் தொகையையுடைய ஒரு சமுகத்திலுள்ள சில எண்ணிக்கையை யுடைய வைதிகர்களின் கூச்சலுக்கோ, தடைக் கோ, பயந்து சென்னைச் சட்டசபையானது இம்மசோதா நிராகரிக்குமாயின் அதை விட பேடித் தன்மையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை முன்னெச்சரிக்கை யாகவே கூறிவிட விரும்புகின்றோம்.

இச்சமயம், தீண்டாதார்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பொதுஜனங்கள் விரோதமாக இருக்கிறார்கள் என்னும் சாக்குச் சொல்ல முடியாது. இந்தியா முழுவதும், சுதேச சமதானங் களிலும் கூட, தீண்டாதார்க்கு ஆலயப்பிரவேச உரிமையும், மற்றும் இந்துக்களுடன் சம உரிமையும் இருக்கவேண்டும் என்னும் கொள்கையை ஆதரித்து வருகிறார்கள். பொதுஜனங்களின் அபிப்பிராயம் அவர்கள் சமத்துவ உரிமைக்குச் சாதகமாகவே திரும்பி இருக்கிறது என்பதை நாட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சிகளைக் காண்போர் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அரசாங்கத்தாரும், சட்டசபை உறுப்பினர்களும் இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விடாமலிருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட்டு விடுவார்களானால், அவர்கள் பொது ஜன அபிப்பிராயத்தை அலட்சியம் செய்த வர்களாகவும், பொது ஜன நம்பிக்கைக்குச் சிறிதும் தகுதியில்லாத வர்களாகவும், ஆகிவிடு வார்களென்று எச்சரிக்கை செய்ய விரும்பு  கிறோம்.

* மக்களுக்கு மானம் ஈனம் இருந்தால், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு சிறு அந்நியக் கூட்டத்திற்கு அடிமையாக இருப்பார்களா? பார்ப்பான் மட்டும் எல்லாவற்றிலும் உயர்ந்தவனாக இருப்பானா? ஆயிரக் கணக்கான குழவிக் கற்களெல்லாம் நமக்குக் கடவுள்களாகவும், பார்ப்பனர்கள் அவற்றின் பேரால் கொள்ளையடிக்கும் நிலையும் இருக்க முடியுமா?

* பொருளாதார பேதத்துக்கும், சமுக ஜாதிபேத முறைதான் பெரிதும் காரணமாய்க் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கும் இடமளித்து வருகிறது.

 

05.02.1993 - குடிஅரசிலிருந்து...

காந்தியவர்கள் உயிர்விடுகிறேன்! உயிர் விடுகிறேன் என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப் பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம், ஆனால், பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த மகாத்மா உயிர் விட்டால் அவருக்குச் சமாதி கட்டி குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்குப் பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர் களால் முடியும், ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர் களிடம் மாத்திரம் செல்லாது.

ஆகையால் காந்திமகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன் என்று உப்புக்காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும் படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லாவிட்டால் எப்படியாவது ராஜி செய்துகொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்ல தாகும்.

29.10.1933 - குடிஅரசிலிருந்து....

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என் றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டு மானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்து விட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது.

ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Banner
Banner