வரலாற்று சுவடுகள்

பெருங்காமநல்லூர் கலவரம்

9.2.2019 அன்று மதுரையில் நடைபெற்ற மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இலா.சந்தானம் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குற்றப்பரம்பரை ஒழிப்பு குறித்து குறிப்பிட்டார். அதற்கான ஆதாரம் இது!

சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுப் பதிவுகளை தமிழ் இலக்கியங்களில் பார்க்கிறோம். அத்தகைய மக்கள் வரலாற்றில் கடந்த நூற்றாண்டின் ஒரு பதிவு தான் "தென்னக ஜாலியன் வாலாபாக்'' என்றழைக்கப்படும் மதுரை மாவட்ட பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த அநீதியான செயல். உரிமை காக்க பதினாறு பேர் உயிரிழந்த சோக வரலாறு இது. பலர் அறிந்திடாத சம்பவமும்கூட.

19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் குறிப்பாக வங்காளத்தில் பெருகிவந்த குற்றங்கள் குறித்து ஆங்கிலேய அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசயங்கள், அவர் களுக்கு இடையேயான தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகிய வற்றை ஆங்கிலேயர் கவனமாகக் கண்காணித்தனர்.

பலமாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுக் கலவையாக இந்தியா திகழ்ந்ததால், அவர்களுக்கு அந்தக் கண்காணிப்புகூட குழப்பமானதாக இருந்தது.

இருப்பினும், நெடிய ஆராய்ச்சிகளின் முடிவில் தக்கீ என்கிற இனத்தவர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இன மக்கள்தான் குற்றங்களின் முக்கியக் காரணியாக இருப்பதாக முடிவு செய்தனர். தக்கீ இன மக்கள் நாடோடிக் கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி, காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களிடமிருந்து வேறுபட்டிருந்தன. கொள்ளை இவர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தூரத்துக்கு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காகினர். தங்களுக்குப் பணம் தர மறுத்தாலோ, கொள் ளைக்கு இடையூறாக இருந்தாலோ, அவர்களைக் கொலை செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை. திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவற்றை இணைந்தே செய்து வந்தார்கள். இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தக்கீயர்கள் கொன்றிருப்பதாகத் தகவல்கள் உண்டு. கொள்ளையை ஒழிப்பதா அல்லது கொள்ளையர்களை ஒழிப்பதா என யோசித்த ஆங்கிலேயருக்கு கொள்ளையை ஒழிக்கும் அள வுக்குப் பொறுமை இல்லை. எனவே கொள்ளைக்காரர்களை ஒழிக்க முடிவு செய்தார்கள்.

ஆயிரக்கணக்கான தக்கீ இனத்தவர்களைத் தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தும் வேட்டையாடினர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை இந்த வேட்டை நடந்தது. இதையடுத்து வங்காளத்தைச் சுற்றி வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்தன. குற்றங்களைக் குறைக்க இது எளிய வழியாக இருக்கிறதே என்று பூரித்த வெள்ளையர்கள், எங்கெல்லாம் குற்றப் பிரச் சினை தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் இந்த 'வேட்டை'யை நடத்துவது என முடிவு செய்தார்கள்.

இதன் சட்ட வடிவம்தான் "குற்றப் பரம்பரையினர் சட்டம்" 1871, என்றானது. இந்தச் சட்டத்தை நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் முன் மொழியும்போது, 'கைவினை, தச்சுவேலை செய்வது எப்படி சிலருக்குத் தொழிலோ அதுபோல் சிலருக்குக் களவும் குலத்தொழில். அவர்களை முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி'' என்றார். இப்படியாக முன் மொழியப்பட்ட சட்டம் பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப் பட்டு, கோடிக் கணக்கான அப்பாவி மக்களை பிறவிக் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இருபதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் உலக அரசியல் அரங்கில் தங்களது இடம் ஆட்டம் காண்கிறதோ என்ற அச்சம் ஆங்கிலேய அரசை பீடித்திருந்தது. உலகப்போர் உருவான சூழல் மேலும் அச்சத்தை ஏற்படுத் தியது. அதே நேரத்தில் இந்தியாவில் காங்கிரஸ் எழுச்சிபெற்ற இயக்கமாக வளர்ந்து வந்தது. இந்த காங்கிரஸ் தலைவர்களுடன் பழங்குடி மக்களும் கலந்து போராட்டத்தில் ஈடுபடுவார்க ளேயானால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே காங்கிரஸ் அரவணைப்புக்குள் பழங்குடி மக்கள் புகாவண்ணம் பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவும் குற்றப்பரம்பரைச் சட்டம் அமல் செய்ய ஒரு காரணம் எனலாம்.

1871ஆம் ஆண்டுச் சட்டம் வங்காளம், அய்க்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லைப்பகுதிகள் மற்றும் பஞ்சாப் ஆகிய வட இந்தியப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதை மற்ற பகுதிகளுக்கும் அமல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்ததால் 1896இல் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. 1896 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் மேலும் கூர்மையாக்கப்பட, 1911ஆம் ஆண்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. குற்றங்களுக்குப் பழகிப்போன எந்தவொரு பிரிவின் நபர்களையும் குற்றப் பரம்பரையினர் என்று அறிவித்திடும் அதிகாரம் உள்ளூர் அரசுக்கு இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ஆங்கில அரசு யாரைக் கண்டெல்லாம் அச்சப்பட்டதோ, யார் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களோ, அவர்களுக்கு எதிராகவெல்லாம் இந்தச்சட்டத்தைப் பாய்ச்சியது. இந்தச் சட்டம் படிப்படியாக இந்தியா முழுவதிலும் விரிவுபடுத்தப்பட்டது. சுமார் 213 சாதிகளை குற்றப்பரம்பரையினர் பட்டியலில் ஆங்கிலேய அரசு இணைத்தது. 1913 இல் சென்னை ராஜதானியில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 89 சாதிகள் பட்டியலில் இடம் பெற்றன.

இந்தச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த வொரு சாதியையும் 'குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. குற்றவாளி', - நிரபராதி' என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் 'பிறவிக் குற்றவாளிகள்' என்றது அந்தச் சட்டம். அந்தச் சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும் கூட விதிவிலக்கு கிடையாது. பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரிகூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகப்படும்படி ஒருவர் நடந்து கொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனங்களிடையே அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறெங் காவது ஊருக்குப் போய்விட்டு வரவேண்டுமானால்கூட ராதாரி சீட்டு (கிராமத் தலைவரால் வழங்கப்படும் அனுமதி சீட்டு) வாங்கவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்படி ஏராளமான அடக்கு முறைப் பிரிவுகள் அந்தச் சட்டத்தில் இருந்தன.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக குற்றத் தொழிலில் ஈடுபடு வோர் பட்டியலைத் தயாரித்து அனுப்ப, மாவட்ட போலீசாருக்கு 1914-இல் மதராஸ் போலீஸ் தலைமை உத்தரவிட்டது. அதன்படி கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடு படுவோர் பட்டியலை மாவட்ட போலீசார் தயாரித்து அனுப் பினர். தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குற்றத் தொழில் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அரசின் குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு அப்பாவி மக்களி டம் கூட எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்த்து நாடெங்கிலும் தேவர் குலமக்கள் நடவடிக்கைகளில் இறங்கினர். அதே நேரத்தில், அந்தச் சமுதாயத்தில் செல்வாக்குடனும் வசதியு டனும் இருக்கும் நபர்கள் மீது போலீசாரால் குற்றம் சாட்டமுடியவில்லை . தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்கானவர்கள் ஒன்றுபட்டு, இந்தச் சட்டத்தை அமல்படுத் தக்கூடாது என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தஞ்சையில் ராவ்பகதூர் வீரையா  & வாண்டையார் முயற்சியில் கள்ளர் மகாசன சங்கம் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் தேவர் சமுதாயக் குழந்தைகளுக்குக் கல்வியும் உணவுவிடுதியும் ஏற்படுத்தித் தந்தனர். இப்படி அந்த சாதியைச் சேர்ந்தவர்களே முன்வந்து சமூக மக்களின் நன்னடத்தையிலும் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டியதை அரசால் நிராகரிக்க முடியவில்லை .

மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் இந்தச் சட்டம் அமல்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பமான நேரத்தில் பெரியாற்றுப் பாசனம் அந்தப் பகுதிக்கு வந்ததையடுத்து மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். விளைச்சலை அதிகரித் தார்கள். மது அருந்தும் பழக்கம் பலரிடமிருந்து விடைபெற்றது. இதையெல்லாம் பார்த்த அதிகாரிகள் அவர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தை அமல்படுத்திடத் தயங்கினார்கள். அமல்படுத்தியிருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அத்தோடு அந்த மக்களை என்ன செய்யலாம் என யோசித்த அதிகாரிகள், மேலூர் கிராம முன்சீப் வையாபுரி அம்பலக்காரருக்கு ராவ்சாகிப் பட்டம் கொடுத்து, அவருடைய கட்டுப்பாட்டில் நாட்டு மக்கள் இருக்கும் வகையில் கலெக்டர் ஏற்பாடு செய்தார்.

சேதுபதி மன்னர் மற்றும் தென் மாவட்ட ஜமீன்தார்கள் ரேகைச் சட்டம் தங்கள் பகுதியில் அமல் செய்ததை ரத்து செய்யவேண்டும் என சென்னை கவர்னருக்கு வேண்டுகோள் வைத்ததோடு நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிரமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உரப்பனூரைச் சேர்ந்த சிவனாண்டித் தேவன் என்பவர் பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஓர் ஆட்சேபணை மனுவை அனுப்பி வைத்தார்.

அதில் 'விவசாயமே எங்கள் வாழ்வாதாரம். சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகி றோம். மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டயங்கள் உள்ளன. 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்ற வாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, நீதிக்குப் புறம்பான இந்தச் சட்டத்தை நிறுத்தி வையுங்கள்' என அந்த மனுவில் கேட் டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

1915ஆம் ஆண்டு மதுரையிலிருந்து ஒரு தந்தி. கள்ளர் சாதியினர் சார்பில் அரசு அதிகாரிக்குச் சென்றது. அதில் 'மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் தேவ மார்கள் ரூ. 3500க்கு கிஸ்தி செலுத்தக்கூடிய பட்டாதாரர்கள். இவர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பிரயோகிக்கும் முன் விசாரணை செய்யவும்' ஒப்பம் வெள்ளையத் தேவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்றாலும், ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தார் ஆகிய இடங்களில் ரேகைச் சட்டம் அமல் செய்யப்பட்டது. 1915 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட பிரமலை நாட்டிலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலை தொடங்கியது

பிரமலை நாட்டில் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்கள் போலீசாரின் கண்காணிப் புக்குள் வந்தார்கள். இந்தக் கண்காணிப்பு வேலையில் ஈடுபட்ட போலீஸ்காரர் பெயர் ரெங்காச்சாரி. அவரை எல்லோரும் 101 என்று சொல்வார்கள். அது அவரது எண். எப்போதும் குதிரையில் வரும் அவர், கூடவே ஒரு நாயையும் வைத்திருப்பார்.

இவர் அதிகமாக கிராமங்களில் முகாமிட்டு ரவுடிகள் பட்டியலை விரிவுபடுத்தினார். அவரை யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, பகைத்தாலோ சரி, அந்த நபர் ரவுடி பட்டியலில் இடம் பெற்று விடுவார். அந்தப் பட்டியலில் நந்தக்கண்ணு, மாயாண்டி, அமாவாசை, மொட்டவாயன், காயாம்பு, மொட்ட தவசி என நீண்ட பட்டியலே உண்டு. இந்தக் கண்காணிப்பு 1918 வரை தொடர்ந்தது.

அப்போது மதுரை கலெக்டராக இருந்த நேப்புத் துரைக்கு இந்தச் சட்டத்தை மதுரை மாவட்டத்தில் அமல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. எனவே, நிர்வாக வசதிக்காக தனது விருப்பத்தின்படி சட்டத்தை அமல்படுத்திட அரசிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் சென்னை அரசின் முக்கிய செயலாளர் அந்தக் கோரிக் கையை ஏற்றுக்கொள்ள வில்லை . அவர் கலெக்ட ருக்கு எழுதிய கடிதத்தில், 'குற்றவாளிகளை மட்டுமே பதிவு செய்யவேண்டும். கண்காணிக்க வேண்டும்' என கண்டிப்புடன் எழுதி விட்டார். அது கள்ளர் களை குற்றப் பரம்பரையினர் சட்டத்திலிருந்து நீக்கிவிடலாம் என்ற நல் லெண்ணத்தின் காரணமாக அல்ல. குற்றம் செய் யாதவர்களைப் பதிவு செய்ய 1911 ஆம் ஆண்டு சட்டத்தில் இடமில்லை . குற்றப் பரம்பரையினர் சட்டத்தின் மேனு வலைத் திருத்தி னால்தான் முடியும். அதற்காகவே கலெக்டரைக் காத்திருக்க வைத்தார்கள்.

என்றாலும், பிரமலை நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டத் தைப் பயன்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் மேனுவல் திருத்தப்பட்டது. அதன்பிறகு கலெக் டரின் ஆசை நிறைவேறத் தொடங்கியது.

இந்தச் சட்டம் 1914 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் கீழக்குடி கிராம கள்ளர் சாதியினரிடையே நடைமுறைப்படுத்தப் பட்டது. மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி க்னப் என்பவர் கள்ளர்கள் பதிவு செய்யப்படுதலை ஆரம்பித்து வைத்தார். ஒட்டு மொத்தமாக கள்ளர்களின் குற்றவியல் தன்மையைச் சுட்டிக்காட்டிய அவர், கள்ளர்களின் ஒரு பிரிவினரான கீழக் குடிக் கள்ளர்களை மட்டுமே பதியப் போவதாக அறிவித்தார்.

கீழக்குடி கிராமத்தின் புள்ளிவிபரப்படி பதிவு செய்யப்பட்ட 321 ஆண்களில் 79 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்பட்டவர்கள். நீதிபதி க்னப்பின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, கீழக்குடிக் கள்ளர்களைக் குற்ற பரம்பரையினராகப் பிரகடனம் செய்தது. அதன் காரணமாக பதினாறு வயதுக்கு மேற்பட்ட கள்ளர் சாதியினர் ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொண்டவர்கள் தங்கள் இருப்பிட, இருப்பிட மாற்றம் மற்றும் வெளியூர் செல்லுதல் ஆகியவற்றைக் குற்றப்பரம்பரையினர் சட்டப்பிரிவு 10இன் படி அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.

கைரேகைச் சட்டப்படி பதிவு செய்யும் வேலை மதுரை திருமங்கலம் தாலுகாவிலும் தொடங்கியது. காளப்பன்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரன் பட்டி ஆகிய ஊர்கள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன. கள்ளர் சமுதாயத்தினரைப் பதிவு செய்தல் வேகமாக நடந்து வந்தது என்றாலும், அது அவ்வளவு எளிதானதாக இல்லை . மாவட்ட உரிமையியல் நீதிபதியாக இருந்த ரெய்லி என்பவர், 'திருமங்கலம் தாலுகாவில் 1920 ஜனவரி முதல் தேதி வரை தேர்வு செய்யப்பட்டிருந்த 158 கிராமங்களில் 11இல் மட்டுமே பதிவு முடிக்கப்பட்டிருந்தது. திருமங்கலம் தாலுகாவில் உள்ள கள்ளர் மக்கள் தொகை சுமார் அறுபதாயிரத்தில் பதிவுபெற வேண்டிய வயது வந்த ஆண்கள் சுமார் மூவாயிரம் பேரும் அந்தத் தாலுகாவுக்கு வெளியே ஆயிரம் பேரும் உள்ளனர்' என அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதிக எண்ணிக்கையிலான கள்ளர்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமானது' என மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எலியட் தொடர்ந்து கூறி வந்தார். அதுமட்டு மில்லாமல், 'குற்றப் பரம்பரையினராக பதிவு செய்த ஒவ் வொருவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, பரி சோதனை மய்யத்திலோ தன் இருப்பிடத்திலிருந்து அய்ந்து மைல் தொலைவிலுள்ள புறக்காவல் நிலையத்திலோ, பகல் 11 மணியிலிருந்து மாலை நான்கு மணிக்குள் ஆஜராக வேண்டும். அப்படி அய்ந்து மைல்களுக்குள் பரிசோதனை மய்யமோ, காவல்நிலையமோ இல்லாது போனால் அருகிலுள்ள கிராம உரிமையியல் நீதிபதியிடம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்.

மதுரை மாவட்டம் பிரமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், இறுதிக் கட்டமாக பெருங்காமநல்லூர் கிராமத்துக்கு வந்தனர். அந்தச் சட்டத்துக்கு அடிபணிய அந்தப் பகுதி மக்கள் மறுத்தனர். 'சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் உகந்த சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்துக்குக்கட்டுப்பட முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மதுரை மாவட்ட ஆட்சியர் தீவிரமாக இருந்தார்.

எனவே, சட்டத்தை மறுப்பது குற்றம்' என அதிகாரிகள், சமூகப் பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர். 'நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டை யில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப் படை, ஆயுதப்படையோடு வந்து எங்களை பயமுறுத்து கிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேத மில்லாமல் ஒட்டு மொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது தவறு அல்லவா? அந்தச்சட்டத்தைக் கூறி எங் களைப் பயமுறுத்தி, கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்சினையாகும். அதைக் குற்றம் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது...' என சமூகப் பெரியவர்கள் அதிகாரிகளிடம் வாதிட்டனர். ஒவ் வொரு முறையும் இந்த வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ரேகைப் பதிவு அதிகாரிகளுடன் போலீசார் 2 மார்ச் 1920 அன்று கிராமங்களில் முகாமிடத் தொடங்கினர். கிராமங்களுக்குள் செல்லும்முன் கிராமத்து பெரிய ஆட்களும் செல்வாக்கானவர்களும் போலீசாரை அணுகி, 'இது பெரிய அநியாயம். கள்ளர்கள் விவசாயிகள். அவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து ரேகை பதிவதை ஏற்கமாட்டோம்' என எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அத்தோடு நாங்கள் மதுரை சென்று கலெக்டரைப் போய் பார்த்து பேசிக்கொள்கிறோம் என்றனர். அதையடுத்து அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை ஒத்திப் போட்டனர். தேவசகாயத் தேவர், காளப்பன்பட்டி முன்னாள் கிராமமுன்சீப் பட்டியான், கருப்பத் தேவர், பெருங்காமநல்லூர் உடையார் தேவர், சிந்துப்பட்டி முத் திருளாண்டித் தேவர் ஆகியோர் அன்று அதிகாரிகளிடம் ஆவேசமாகப் பேசியவர்கள். சொன்னது போலவே கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிந்துப்பட்டி போலீஸ் சரகம் கள்ளப்பட்டி, கட்டதேவன் பட்டி உட்பட பக்கத்து பனிரெண்டு ஊர் கள்ளர்கள் தும்மக் குண்டு சந்தை மைதானத்தில் 24.3.1920 அன்று பொதுக்கூட்டம், கூட்டினர். அதில், 'இந்தச் சட்டம் பயங்கரமானது. அநியாயமாக அரசு நம்மீது குற்றம் சுமத்துகிறது. தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு கமிட்டி ஒன்று அமைக்கவேண்டும்' எனத் தீர் மானம் நிறைவேற்றினர். அன்றைய கூட்டத்தில் இருநூறு பேர் பங்கேற்றனர். அதில், தேவசகாய தேவர், மரியசூசை தேவர், விருமாண்டி தேவர், பட்டியான் கருப்ப தேவர், குடையன் பூசாரி தேவர், முத்துமாய தேவர், உடையார் தேவர், முத்துக்கருப்ப தேவர் ஆகியோர் கொண்ட ரேகை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டது.' அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அது போலீசிற்கு தெரிய வர, அவர்கள் இன்னும் வேகமெடுத்தனர்.

பெருங்காமநல்லூருக்கு சிந்துப்பட்டி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் 28 & மார்ச் 1920 அன்று ஒரு போலீஸ் படையுடன் வந்து கிராமத்தில் வசிக்கும் நாயக்கர் சமுதாயத்தினரிடம், 'நீங்கள் கள்ளர் களுக்கு காவல்கூலி கொடுத்து வருகிறீர்களா? அப்படியானால் அது தொடர்பாக அறிக்கைத் தாருங்கள், அவர்களை கேஸ் போட்டு தண்டிக்கப்போகிறோம்.' என்றார் கள். ஆனால் நாயக்கர்கள் கள்ளர்களுக்கு ஆதரவாகவே சாட்சியம் கொடுத்தார்கள். அது போலீசாருக்கு மேலும் கோபத் தைக் கிளறியது. பெருங்காமநல்லூரில் ரேகைப் பதிவை உடனடியாகச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமானார்கள்.

'பெருங்காமநல்லூரில் வசிக்கின்ற ஏழு வயதுக்கு மேற்பட்ட கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் 1920 ஏப்ரல்  & 3ஆம் தேதி காலை பதினொரு மணிக்கு பதிவு செய்வதற்காக போத்தம் பட்டியில் தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராகவேண்டும்' என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி 29 மார்ச் 1920 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பு கிராம முன்சீப்புகள் மூலம் சுற்றுக்கு விடப் பட்ட து.

இந்நிலையில் 1 ஏப்ரல் 1920 அன்று பெருங்காமநல்லூர் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த கள்ளர்கள் காத்தாண்டம்மன் கோயிலில் கூடினர். ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடி பணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்திரித்து, காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்குவேட்டுப் (அதிர்வேட்டு) போட்டு, பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும். அடி பணியக்கூடாது' என முடிவு செய்தனர்.

அதற்கு மறுநாள் (2-ஆம்தேதி) இரவு ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர், நான்கு தலைமைக்காவலர்கள் மற்றும் சார்ஜன்ட் கீட்ஸ் ஆகியோர் சிந்துப்பட்டியிலிருந்து அரை மைல் தூரத்திலும் இன்னொரு படையினர் திருமங்கலத்திலிருந்து பதினொரு மைல் தூரத்திலுள்ள தும்மக்குண்டுவிலும் வந்து தங்கினர். திருமங்கலத்திலிருந்து வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சிந்துப்பட்டியின் சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் சிலருடன் பெருங்காமநல்லூர் நோக்கிப் புறப் பட்டார். ஆயுதப்படைப் பிரிவும் அவர்களுடன் இணைந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை ஆறரை மணிக்கு பெருங்காம நல்லூரை அடைந்தனர்.

போலீஸ் படையினர் வருவதைக் கண்டதும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இரண்டு அதிர்வேட்டுகள் கிராமத்தினர் தரப்பி லிருந்து வெடிக்கப்பட்டன. உடனே வடகிழக்கே குமரன்பட்டி மற்றும் அல்லிக்குண்டத்திலிருந்தும், தென்கிழக்கே கம்மாளப் பட்டி மற்றும் காளப்பன்பட்டியிலிருந்தும் கம்பு, அரிவாள், ஈட்டிகள் என ஆயுதங்களுடன் கள்ளர் சமுதாயத்தினர் குவிந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ட போலீஸ் படைக்கு கொஞ்சம் அதிர்ச்சி. புறப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் நின்று விட்டது. கிராமத்தினர் குலவையிட்டனர். ஆரவாரித் தனர். தனி சார்நிலை ஆய்வாளருடைய குதிரைக்கு முன்னால் குதித்த முத்துக்கருப்ப தேவன் என்பவர், 'கிராமத்தினுள் போலீஸை நுழைய விடாதீர்கள் என எங்கள் தெய்வம் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறது..' எனக் கூறினார். ஓவாயன் என்பவர் போலீசாரைத் திரும்பிப் போகுமாறு கத்தினார். இல்லையென்றால், அவர்களது குதிரை கர்த் தாண்டம்மன் கோயிலில் பலிகொடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த நிலையில் தனித்துணைக் கலெக்டரும் சார் நிலை உரிமையியல் நீதிபதியும் அங்கு வந்தனர். பதிவுக்கு இணங்குங்கள் என மிரட்டும் தொனியில் சொன்னார்கள். அப்போது ஓவாயன் தனித்துணைக் கலெக்டரை நெருங்கினார். அவரது ஒரு கையில் கேழ்வரகு ரொட்டியும் இன்னொரு கையில் கல்லும் வைத்திருந்தார். அதாவது, அவர்கள் அமைதியாக திரும்பிப் போவதற்கு அடையாளமாக கேழ்வரகு ரொட்டியை எடுக்கவேண்டும் அல்லது கல்லால் அடிபடுவார் என்பதை சங்கேத மொழியில் சொன்னார்.

அந்த நேரத்தில் தலைவர்களுக்கும் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அது பயனற்றுப் போகவே, மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். போலீசாரை அங்கிருந்து அகலுமாறு எச்சரித்தனர். போலீசார் முன் னேற முற்பட்டனர். எனவே கும்பல் போலீசார் மீது கற்களை வீசியது. அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற துணை கலெக்டர், துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுமாறு சார்நிலை உரிமையியல் நீதிபதிக்கு ஆலோசனை கூறினார். அவரும் அப்படியே செய்தார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட இளைஞர்கள் பயங்கரமான வேகத்தில் விரைந்து வந்து பிரிட்டிஷ் போலீஸ் படையை எதிர்கொண்டனர். கத்திகள், மூங்கில் கழிகள், ஈட்டிகள், கவண்கள் மற்றும் பூமராங் சகிதமாக எதிர்த்தனர். எனினும் துப்பாக்கிக்கு முன் நிற்க முடியவில்லை. பதினாறு பேர் உயிரிழந்தனர்.

அந்தத் துப்பாக்கிச் சூட்டில் (1) மாயாண்டித்தேவர் என்ற நொத்தினி மாயாண்டி தேவரின் (வயது 35) வலது மார்பிலும் வயிற்றிலும் - குண்டுகள் பாய்ந்திருந்தன. ஈரலும் குடல்களும் வெளியில் கிடந்தன. (2) குள்ளன் பெரியகருப்பன் (3) விரு மாண்டி தேவர் (4) சிவன் காளை தேவர் (5) பெரியாண்டி தேவர் (6) ஓவாயன் என்ற முத்துக் கருப்பன் (வயது 42) நெஞ்சிலும் வயிற்றிலும் பல குண்டுக் காயங்கள்.(7) மோளை சின்னாத்தேவர் (வயது 50). துப்பாக்கிச்சூடு முடிந்த பிறகு இவரை ஏட்டு காளிமுத்து சேர்வை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டு, ஈட்டியால் குத்திக் கொன்றார். மோளை சின்னாத்தேவர் விரல் ரேகை சட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர். இவருக்கும் காளிமுத்து சேர்வைக்கும் முன்விரோதம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள காளிமுத்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டார்.

(8) மாயாண்டி தேவர் (9) முனியாண்டி என்கிற மாயாண்டி தேவர் (வயது 50) இவருக்கு வயிறு நெஞ்சு ஆகியவற்றில் குண்டு காயங்கள். ஆஜானுபாகுவாக இருந்தவர். ரேகை பதிவுசட்டத்துக்கு எதிராகப் போராடியவர். அரசு அதிகாரி களைத் துச்சமாகப் பேசியவர். இவரை ராஜுபிள்ளை என்கிற போலீஸ்காரர் சுட்டுத் தள்ளி, சடலத்தின் மீது ஏறி குதித்தார். (10) உடையார் தேவர் , (வயது 35) மண்டை நொறுக்கப்பட்டது. கண்விழிகள் வெளியே வந்துவிழுந்தன. நீண்டநேரம் இவருக்கு உயிர் போகவில்லை. ஏட்டு காளிமுத்து சேர்வை இவரைத் துப்பாக்கியால் பல தடவை குத்தி, பக்கத்து கிணற்றுத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்.

(11) சின்னமாயத்தேவர் (வயது 32) நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்தார். (12) பெரியகருப்பத் தேவர் (13) வீரணத்தேவர் சுடப்பட்டும், துப்பாக்கி முனையால் குத்தப்பட்டும் இறந்தார். (14) முத்தையா தேவர் (15) வீரத்தேவர். (16) மாயக்காள் (வயது 43) இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒரே பெண் இவர். இவரது அடிவயிற்றிலும் மார்பிலும் குண்டுக்காயங்கள். உடம்பில் 'பல பாகங்களிலும் பிறப்புறுப்பிலும் குத்துக்காயங்கள். கலகம் நடந்து கொண்டிருந்தபோது கூடையில் கற்களைக் கொண்டு வந்து கவண் வீசுபவர்களுக்குக் கொடுத்தாராம். மேலும், காயம்பட்ட வர்களுக்குக் குடிதண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது இவரை போலீஸ்காரர் வீராசாமிநாயுடு சுட்டுக் கொன்றார். இரண்டு போலீசார் குத்தித் தள்ளித் தூக்கியெறிந்தனர். வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு, நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்துக்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி, வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

குற்றப்பரம்பரையினர் சட்ட அமலாக்கத்துக்குக் கள்ளர் சமுதாயத்தினர் காட்டிய கடுமையான எதிர்ப்பும் அவர்களது மரபார்ந்த போர்க்குணங்களும் சேர்ந்து பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் இ.பி. லவ்லக் சமர்ப்பித்த அறிக்கையில், 'கள்ளர்கள் தெள்ளத்தெளிவாக போலீஸை விஞ்சியுள்ளனர். மற்றும் பல பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு கள்ளர் ராஜ்ஜியத்துக்கு எதிராக ஆற்றலின்றி இருந்தது' எனக் குறிப்பிடுகிறார்.

பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அந்தப் பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேற்ற இந்தியாவிலிருந்த ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது. பிரிட்டிஷ் இந்திய அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தம் இது.

அதன் பிறகு வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து, மக்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார். அவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது 'ரோசாப்பு துரை' என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலை யில் நடந்த விசாரணையில் இந்தச் சட்டத்தின் கொடுமைகளை யும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து அம்பேத்கர் பேசினார்.

அப்போது அவர், 'குற்றப் பரம்பரையினர் எனப்படுவோரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டம் பத்தி 108இ-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன? ஒருவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன், அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது' என்றார்.

அந்த விசாரணையில்தான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்யுக் காரணமானார் அம்பேத்கர்.

பெருங்காமநல்லூர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது. கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு அய்.சி.எஸ். அலுவலரை நியமித்தது. லேபர் கமிஷனர் என்பது அந்தப் பதவியின் பெயர். அவர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.

1934 மே 12, 13 தேதிகளில் அபிராமத்தில் நடந்த மாநாட்டின் தீர்மானப்படி ஆப்ப நாட்டு மறவர்களை குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசை சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜுலு நாயுடு. உறுப்பினர்களாக முத்துராமலிங்க தேவர், நவநீதகிருஷ்ண தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழு நீதிக்கட்சி அரசி டம் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அந்தப் பிரிவு மக்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது நீதிக்கட்சி அரசு. அப்போது பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் முதலமைச்சராக இருந்தார்.

1947 ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்தவரும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான பி. சுப்பராயன்தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து, அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இந்தச் சட்டத்தை ஒழித்தார்.

1981-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு, பெருங்காமநல்லூரில் மனித உரிமைக்காக உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு அஞ்சலி -செலுத்தும் முறையைத் தொடங்கிவைத்தார். ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப ஆறே முக்கால் செண்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங் களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண்டுக்கு அனுப்பிய விண்ணப் பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரி வித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்ப தென்ன வென்றால்,

ஜாதி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டுமென் னும் விஷயத்தில் கவர்ன்மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற் கில்லை. ஆனபோதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள் கையை உண்மையாய் அடியோடு விட்டு இருக்கின்றவர்கள். தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக்கணக்கு எடுப்பவர்கள் (அதாவது  என்யூமிரேட்டர்கள்) ஒப்புக் கொண்டு அந்தக் காலத்தில் ஜாதியில்லை அதாவது சூடை என்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார் நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்கே இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.

ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திர மல்லாமல், அனுபவத்திலும் பாராட்டாமலிருக்கின் றவர்கள் தைரியமாய் என்யூமிரேட்டர்கள் - கணக்கெடுப்பவர் களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது(Nil) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.

அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லை யென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக் கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாகவேண்டு மென்று கேட்டால் பகுத்தறிவு மதம்(Rationalist) என்று சொல்லி விடலாம்.

ஆதலால் யாரும் சர்க்காருக்குப் பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.

-  குடிஅரசு - 14.12.1930

 

 

 

வினா - விடை

வினா:- ஆண் விபசாரர்கள் வீபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:- அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டிய தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர்திரு. கீ.றி.கி  சவுந்திர பாண்டியன் அவர் கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை கண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரணமாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த தானத்தை ஒருபோதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத் தலுக்காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியா தையுடனும் யாருடைய தயவு தாட்சண்யத் திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார்.

முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமுகத்தாருக் கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித் தியாசமில்லாமல் அதிகாரத் தையும், சலு கையையும் பிரயோகித்து வந்தார். பணக் காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது, ஜாதித் திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரிய மாய் கண்டித்து நடவடிக்கை நடத்தி வந்த தோடு அவர்களுக்கு அடிக்கடி புத்தி புகட்டி யும் வந்தார். அப்பதவியின் மூலம் சுயமரி யாதைக் கொள்கையை பல விஷயங்களில் நடை முறையில் நடத்திக் காட்டினார். தனக் கென்று வேறு தொழில் ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் அதிலேயே செலுத்தி வந்தார். இவை மாத்திர மல்லாமல் எந்த நிமிஷத்திலும் நாளைக்கும் அந்த வேலையில் இருக்க வேண்டும் என்றாவது மறுபடியும் அதை அடைய வேண்டு மென்றாவது கருதாமல் ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் பதவியை அலட்சியமாய் கருதிக் கொண்டே நடுநிலையிலிருந்து பிசகாமல், தான் செய்ய வேண்டிய காரியங் களை துணிவுடன் செய்து வந்தார். (இவ்வளவு காரியங் களும் சர்க்கார் நியமனத் தின் மூலம் அப்பதவி கிடைத்ததினா லேயேதான் செய்ய முடிந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றோம். ஏனெனில் தேர்தல் மூலம் பதவி பெற்றிருந்தால், அங்கத்தினர்களுக்கு விலை கொடுத்தோ, வியாபாரம் பேசியோ அடிமைப்பட்டோ அடைந்திருக்க வேண்டு மாதலால் இவ்வளவு சுயேச்சை யோடும் சுயமரியாதையோடும், நாணயத்தோடும், நீதியோடும் இருந்திருக்கவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு பெருமையும் நீதியும் வாய்ந்த கனவானின் நிர்வாகம் சிலருக்காவது தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாமல் போவதில் ஆச்சரிய மொன்றுமில்லை. அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்க அரசியல் வானம் கருத்து அடித்த சண்ட மாருதத்தால் பொதுக் கட்டுப்பாடு நாணயம் ஆகியவைகள் சின்னாப் பின்னப் பட நேர்ந்து. சுயநலமும், பேராசையும் நாட்டில் தாண்டவ மாடியதின் பயனாய் நடந்த நிகழ்ச்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங் களுக்கு அதிகமான தலைவிரி கோலம் ஏற்பட்டு அதைச் சுலபமாய் யாரும் கையாளும்படி செய்துவிட்டது.

ஆகவே அது உசிதா உசிதமில்லாமல் கையாளப்படும்படியாக ஆனதும் அதிசிய மல்ல. இந்த நிலையில் சிலர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் மீது அதை பிரயோ கிக்கக் கருதி அது வெளிப்பட்டால் தங்களுக்கு ஆமோதிக்கவும், ஆதரிக்கவும் கூட நபர்கள் கிடையாதென நினைத்து வெகு பத்திரமாக இரகசியத்திலேயே ஏற்பாடு செய்து திடீ ரென்று கொண்டு வந்திருப்பதாகத் தெரிகின் றது. இத் தீர்மானம்  வருமென்று தெரிந்திருந் தால், உடனே முன்னமேயே ராஜினாமா செய்திருப்பார். வெறும் மந்திரி சம்மதமான கட்சி காரணமாய் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது தவிர திரு. பாண்டியன் அவர்கள் நிர்வாகத்தைப் பற்றி சிறிதாவது அதிருப்தி அடைந்து அதனால் கொண்டு வரப்பட்டது என்று யாராலும் சொல்லமுடியாது. அவரது நிர்வாகத்தில் யாரும் எந்தச் சமயமும் மீட்டிங்கில் அதிர்ப்தி பட்டதாக காட்டினதே கிடையாது.

உதாரணமாக சமீபத்தில் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் திரு. மெக்வீன் அவர்கள் மீட்டிங்கில் ஒரு காரியத்தில் பிரசிடெண்டின் நடவடிக்கைக்கு அதிர்ப்தி காட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ கூட அந்த கூட்டத்தில் ஒரு மெம்பரும்  இல்லை. ஜில்லா கலெக்டரை அனுசரித்துப் பேசக்கூட ஆளில்லை இதுவரை எந்தப் பத்திரிகை களாவது அவரது நிர்வாகத்தை ஆட்சே பித்தோ, அதிர்ப்தி காட்டியோ அல்லது கட்சிவாதம் நடந்ததாகவாவது காட்டியோ ஒரு வரியும் எழுதப்பட்டதாக சொல்ல முடியாது. அவர் நிர்வாக நேர்மைக்கு ஒரு சிறிய உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் காட்டுவோம். அதாவது எந்த மோட்டார் காரராவது தீண்டப்படாத மக்கள் என்ப வரை  ஏற்றிச் செல்ல மறுத்தால் அந்த லைசென் கேன்சல் செய்யப்படும் என்று உத்தரவு போட்டார். பள்ளிக்கூட விஷயங் களில்  தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்க்காத பள்ளிக்கூட உபாத்தியாயர் களையெல்லாம் மாற்றியும், தண்டித்தும் சர்வசாதாரணமாக எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் யாரும் படிக்கும்படியாய் செய்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் விஷயங்களில் பணக்காரர்களை விட சாதாரண மக்களிடமே அதிகநேசம் வைத்தும் சீர்திருத்த வாலிப உலகத்திற்கு உற் சாகத்தை தந்து அவ்வகுப்பில் அநேகருக்குப் பணமே எல்லாம் செய்யவல்லது என்கின்ற உணர்ச்சியை மாற்றி, அன்பைப் பெருக்கி வந்தார்.. வைதிகர்களிடமும் பணக்காரர் களிடமும் பேசும் நேரம்மெல்லாம் தனக்கு மிக்க கஷ்டமாக இருப்பதாகவே இருக்கும். வாலிபர்களிடமும், சாதாரண மக்களிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் பேசும் நேரத் தையே மிக்க உற்சாகமாகக் கருதுவார். இப்படிப்பட்ட குணமுள்ளவர் ஆட்சியில் வைதிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், பிரபுத்தனக்காரருக்கும் அதிருப்தி ஏற்பட் டதும் நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டி வந்ததும் திரு. பாண்டியன் அவர் களுக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகும். இதன் மூலம் மற்ற மெம்பர்கள் போர்டிலிருந்து சீர்திருத்த உலகத்திற்கும், சுயமரியாதை உலகத்திற்கும், சமதர்ம உலகத்திற்கும் தொண்டு செய்ய திரு. பாண்டியனை உத வியது ஒரு பெரிய உப காரமேயாகும். ஆதலால் இந்த நிலை ஏற்பட்ட தற்கு நாம் உண்மையாகவே மகிழ்ச்சி யடைகின்றோம்.

(தொடரும்)

மீனாட்சி கோவிலில் நாடாரும் பஞ்ச மரும் நுழைந்ததால் மீனாட்சி தீட்டா யிட்டா கோத்திரமும் தீட்டாயிட்டு தாம் கேளுங்கோ, கேளுங்கோ!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை யடுத்து கோயில் மூடப்பட்டு, சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டன. 80 ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத்தில் ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் இதேபோல சுத்தீகரணச் சடங்கு செய்யப்பட்டது.

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின் செயலர் எல்.என். கோபாலசாமியும் பட்டியல் இனத்தவர்களை(நாடார் உட்பட)யும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய அய்ந்து தாழ்த்தப் பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்று மன்றத்தின் நூலகத்தில் உள்ள அன்றைய கும்மிப்பாடல் சிறு நூல் ஒன்றில் கூறுவ தாவது:-

பஞ்சமரும், நாடாரும் கோவிலுக்குள் நுழைந்ததால், மீனாட்சி தீட்டாயிட்டா, மீனாட்சி தீட்டான மதுரை தீட்டாச்சி, மதுரை தீட்டானால் நாடு கோத்திரமும் தீட்டாச்சு, என்று கூறி  கோவிலில் உள்ள மூலவர் மீனாட்சி சிலையை எடுத்துக் கொண்டு இன்றைய மதுரை மய்ய தபால் நிலையம் எதிரே உள்ள ஒரு கோவிலில் சிலையை வைத்து வழிபட ஆரம்பித் தனர்.

அதை எடுக்கச்சென்ற நீதிமன்ற ஊழியர்களை நெருங்கவிடாமல் கோவி லிலில் இருந்த பார்ப்பனப் பெண்கள் கோவில் வாசலை சுற்றி நின்று கொண்டு கோவில் நுழைவிற்கு எதிராக முழக்க மிட்டனர்.

சுமார் 1 வாரத்திற்கு மேல் நடந்த இந்த இழுபறிக்குப் பிறகு மீனாட்சி சிலையை மீண்டும் மீனாட்சிக் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஒரு வாரகாலத்தில் பஞ்சமர்கள் கோவிலில் நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டிற்குப் பரிகாரம் செய்யப்பட்டது, சிலை யும் சில நாட்கள் புனித நீரில் முழுமையாக மூழ்கவைக்கப்பட்டு பிறகு வெளியே எடுக்கப்பட்டது.

அந்தக் கும்மிப்பாடல்

பஞ்சமனும் சாணானும் கோவி லுக்கு வந்ததாலே,

மீனாட்சி ஆயிட்ட தீட்டு

தீட்டு ஆயிட்ட மீனாட்சி.,

மீனாட்சி தீட்டானதால

கோத்திரமும் தீட்டாச்சி,

கோத்திரம் தீட்டனதால

நாடு நகரமும் திட்டாச்சி,

கச்சேரிக்கு (நீதிமன்றம்) தெரியுமா சாத்திரம்?

கெட்டுப்போச்சு நம்ம கோத்திரம்

மீனாட்சி ஆயிட்டா தீட்டு

நாட்டார் வழக்காற்று மன்ற நூலகத்தில் உள்ள கோவில் நுழைவு கும்மிப்பாடல் தொகுப்பு.

திரு. சொ.முருகப்பர்

07.07.1929 - குடிஅரசிலிருந்து..

திரு. முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையைப் பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.

நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலானதும் நியாயத்திற்கும் மனிதத் தன் மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும். கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்தத் தியாக புத்தியும், வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகதவல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக!

Banner
Banner