வரலாற்று சுவடுகள்

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி யின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப் பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞான மற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லா ருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனி தர்கள் புராணப் புரட்டை உணர்ந்த வர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய் தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்த வர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிர யோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப் பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொது வாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண் டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ் வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்கு வதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங் களொருபுறமிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல் லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்தி வாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத் தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங் கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ் விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய்விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ் வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதா வது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண் டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிர சண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமேயொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும் என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரி யான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண் டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர் களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூடபக்தி யாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண் மூடி வழக் கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன் றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக் கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பன ரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தி யோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச்சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திரா விடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின் றோம்.

'குடிஅரசு' - கட்டுரை - 16-10-1938

 

21.08.1932 - குடிஅரசிலிருந்து...

இப்பொழுது இந்துக்களுக்குள்ளேயே, வடநாட்டிலும் தென்னாட்டிலும், சாதி வேற்றுமையையும், பெண்ண டிமையையும் ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தோன்றியிருப்பதைக் கண்டு நமது இயக்கத்தின் நோக் கமும், வேலையும் வீண்போக வில்லை யென்று களிப்படை கிறோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 08.08.1932இல் புதிய டில்லியில் இந்து சீர்திருத்த மகாநாடு என்னும் பெயருடன் இந்துக்களால் ஓர் மகாநாடு நடத்தப் பட்டதையும், அம்மகா நாட்டின் தலைவர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களின் பேச்சுக்களையும், அம்மகா நாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களையும் கூறலாம்.

அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திரு. ராமலால் வர்மா என்பவர் மூட நம்பிக்கைகளாலும், இழிவான வைதி கங்களாலும், பலவிதமான சாதி பேதங்களும் பிரிவுகளும் ஏற்பட்டக் காரணத்தால் இந்து சமுகம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது. இந்து சமயம் தீண்டாமை என்னும் கறையினால் தாழ்வையடைந் திருக்கிறது. ஆகையால் இந்தச் சாதி வேற்றுமைகளையும், தீண்டா மையையும் அடியோடு ஒழிக்க வேண்டியது அவசியமாகும். என்று பேசியிருக்கிறார்.

அம் மகாநாட்டின் தலைவர் சுவாமி சத்திய தேவ பாரி பிரஜாத் என்பவர், இந்துக்கள் வீண்பெருமையையும் துவேஷத்தையும் விடு வார்களானால் அவர்கள் ஆதிக்கம் மிகுந்தவர்களாவார்கள். இந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்படு வதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதென்பது முயற் கொம்புதான். இந்தியாவின் மக்களாகிய இந்துக்கள் அனை வரும் தமக்குள் உள்ள சமுகத் துவேஷங்களை விட்டொ ழித்தும், சமுகக் கொடுமைகளை ஒழித்தும், சுயநலத்தை விட்டு கொடுத்தும் இந்தியாவுக்குத் தொண்டு புரிய வேண் டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று பேசியிருக் கிறார். இன்னும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சிறந்த தீர்மானங்களாகும், அவைகள் வருமாறு:-

1. இம்மகாநாடு இந்து சமுகத்தில் பிறப்பினாலேயே சாதி வேற் றுமை பாராட்டும் காரணத்தால் ஆயிரக் கணக்கான சமுக வேற்றுமைகளும், தீண்டாமையும் வளர்வதாகக் கருதுவதால் சாதி வித்தியாசம் பாராட்டுவதை இந்துக்கள் அதிவிரைவில் விட்டொழிக்க வேண்டுமென்றும் இதன் பொருட்டு இந்துக்களின் பல விரிவான சாதியினரும் தங்களுக்குள் சமபந்தி போஜனமும், கலப்பு மணமும் செய்ய வேண்டுமென்றும் யோசனை கூறுகிறது.

2. இம்மகாநாடு தீண்டப்படாதவர்களுக்கும் தாழ்த்தப் பட்ட வகுப்பாருக்கும் பொது இடங்கள், பொதுக்கிணறுகள், பொதுப் பாதைகள் முதலியவற்றை மற்ற இந்துக்களைப் போல் சம உரிமை யோடு அனுபவிக்க உரிமை உண்டு என்று கருதுவதுடன், பொதுப் பள்ளிக் கூடங்களில் மேற் கண்ட வகுப்புப் பிள்ளைகளைத் தடையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்கோயில் களிலும், மற்ற பொது இடங்களிலும் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறது.

3. இம்மகாநாடு இளம்பருவத்தில் பெண்களுக்கு மணம்புரியும் காரணத்தாலேயே விதவைகள் பெருகு வதனால் இந்துக்கள் அனை வரும் இளம்பருவ மணத்தை ஒழித்துச் சாரதாசட்டத்தின்படி மணம் செய்யுமாறும், சமுக ஒற்றுமையுடன் அச்சட்டத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.

மேற்கண்ட மூன்று தீர்மானங்களிற்கண்ட விஷயங்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்குப் புறம்பானவையல்ல. அத்தீர்மான விஷயங்கள் இந்துக்களால் அனுஷ்டானத் துக்குக் கொண்டு வரப்படுமானால் நமது விருப்பத்தின் படி இந்துக் களின் சமுகம் வளர்சியடைவதுடன், அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதமும் அழிந்துதான் தீரும்.

ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் கோயில்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பொதுக்கிணறு, பொதுப்பாதை களிலும், தாழ்த்தப் பட்டோருக்கு உரிமை இல்லாதிருப்பதும், இளமை மணமும் இந்து மதத்திற்கு அடிப்படையானவைகள்; ஆகையால் இவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் பேசிக் கொண்டு வரு வதையும் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தவர்கள் டில்லி இந்து சீர்திருத்த மகாநாட்டுத் தீர்மானங்கள் இந்து மதத்திற்கு மாறுபட்ட தென்பதையும் இந்து மதத்திற்கு அழிவைத் தேடுவது என்பதையும் ஒப்புக் கொள் ளாதிருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்குப் புறம்பான தாயிருந்தாலும் இருக்கட்டும், இதனால் இந்து மதம் அழிந்தாலும் அழியட்டும் என்ற தைரியத் துடன் இந்து சமுக வளர்ச்சி ஒன்றையே கருதி மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய டில்லி இந்து சீர்திருத்த மகா நாட்டாரை நாம் பாராட்டுகிறோம். இச்சமயத்தில் சுய மரியாதை இயக்கத்தைக் கண்டு முணுமுணுக்கும் பண்டிதர் களும், தென் னாட்டுக் கும்பகோணம் மடி சஞ்சிகளும் திரு. எம்.கே.ஆச்சாரியார் கூட்டத்தாரும், வடநாட்டில் இந்துக்கள் கூடி இவ்வாறு தீர்மானம் பண்ணியிருக் கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.

இதனால் தான் நமது இயக்கத்தின் ஆக்க வேலை களாகக் கலப்பு மணங்களையும், விதவா விவாகங்களையும், சமபந்தி போசனங்களையும், தீண்டாமை ஒழித்தலையும் செய்து வருகிறோம் இக்காரியங்களின் மூலம் சடங்குகளும், சாதிகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இக்கொள்கை இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுமாயின் இந்துக் களைப் பிடித்த கஷ்டம் விரைவில் அழிந்து ஒழிவது நிச்சயமென்பதில் அய்யமில்லை.

இன்று சாதிகள் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சமத் துவம் கொடுக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும், மூட நம்பிக் கைக்கான சடங்குகளைஒழிக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும் என்னும் கொள்கைகளைப் பழுத்த இந்து மத பக்தர்கள் கூட ஒப்புக்கொண்டு பிரசாரம் பண்ண முன் வந்திருப்பதை நோக்கும் போது, இன்னுஞ் சில நாட்களில் இவர்களே, இந்து மதத்தினர் வரவர தரித்திர திசையை அடைவதற்கு காரணம் எனன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார் களாயின் அதற்குக் காரணம் கோயில்களும், சாமிகளும், சடங்கு களும், பண்டிகைகளும் என்பதையுணர்ந்து இவை களையும் ஒழிக்க முன்வருவார்களென்றே நம்பலாம்.

ஆகையால் எப்பொழுதாவது இன்றில்லாவிட்டாலும் இன்னுஞ் சில தினங்கள் கழித்தாவது மக்களின் முன்னேற் றத்திற்குத் தடை யாயிருக்கின்ற இந்து மதம் வைதிக மதம் தெய்வீக மதம் புராதன மதம் என்று சொல்லப்படுகின்ற பாழும் மதம் அழிந்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதலால் இனியாவது சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்ற விஷயங் களில் உண்மையை உணர்ந்து மக்களின் முன்னேற்றத் திற்கான முயற்சியைப் புரியுமாறு பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.


விதவையிலும் பணக்காரனியமா?
04.02.1934- புரட்சியிலிருந்து..

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ் அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செல வுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிரா மணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர் களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் விதவைகள் விடுதியில் தலைமை உத்தி யோகம் ஒரு பிராமண விதவை அம் மாளிடமும், விதவை விடுதி யில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள் களாலேயே நிரப்பப்பட்டிருக்கிற தென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது. கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராம ணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறுகிறோம்.

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்
02.09.1934 - பகுத்தறிவு - கட்டுரையிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய தேசத்து தேசியத் தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.எ., எது கிரியம்மாள் ஆகியவர்களாவார்கள். இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி இருக்கிறார்கள். சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்க மில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.


மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. - என்று சொல் லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் - என்று சொல்லு கிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜ கோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப் படுத்த இவை உதவுகின்றன போலும்.

சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்.

உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப்போய் விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவ தோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த் தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லா மியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர் களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதா வது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழு கிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப் பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?

ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார் கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட் கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.

குடியரசு - கட்டுரை - 06-11-1943

நம் அரசியல் கொள்கை

நமக்குப் பிரிட்டிஷ் ஆட்சி ஒழியவேண்டும். ஆனால் கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சியோ மத்திய அரசாங்க ஆட்சியோ கூடவே கூடாது. திராவிட நாட்டு ஆட்சியே வேண்டும். திராவிடநாட்டு ஆட்சிக்கு திராவிட நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களுடைய சம்பந்தமே கூடாது.

திராவிட நாட்டுக்குள் காந்தியார் வருவதானாலும், ஜவகர்லால் பண்டிதர் வருவதானாலும், ஜின்னா சாயபு வருவதானாலும், அம்பேத்கார் வீரர் வருவதானாலும் பாஸ்போர்ட் (அனுமதிச் சீட்டு) வாங்கிக்கொண்டுதான் வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் உண்மையான சுயேச்சை நாட்டுக்கு அறிகுறியாகும்.

அப்படிப்பட்ட ஆட்சி கிடைக்கவில்லையானால் காங்கிரஸ் தவிர வேறு எந்த ஆட்சி இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்.

மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்ற உயர்வு தாழ்வு நிலைக்க இடம் வைத்துக் கொண்டு மேல் ஜாதிப்பெண்கள் எல்லாம் கீழ் ஜாதி ஆண்களைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், மேல் ஜாதியார் எல்லாம் கீழ் ஜாதியாருக்கு சூத்தி ரர்களாய் இருக்கவேண்டும் என்றும், இராணுவ உத்தரவு போட்டு ராணுவ அமல்நடத்துவதாக வாக்குக் கொடுக்கிற ஆட்சியாய் இருந்லும் கூட நாம் ஒரு நாளும் ஒப்ப மாட்டோம். வாழ்வில், பொதுவில், எப்படிப்பட்ட அடிமைத் தன்மை இருந்தாலும் சரி, பிறவியால் மேல், கீழ் ஜாதி இல்லாத ஆட்சியே நமக்கு முதலில் வேண்டும்.

அது திராவிட நாடு சுயேச்சை ஆட்சி கிடைத்தால் தான் முடியும். மற்றபடி வேறு எந்த ஆட்சியிலும் கனவு கூடக் காண முடியாது.
இந்தியா சுயேச்சை ஆட்சி என்பது கிடைக்குமானால் சர்.ராமசாமி முதலியார் வங்காள கவர்னர் ஆகலாம். சர்.சண்முகம் பம்பாய் கவர்னர் ஆகலாம். குமாரராஜா சர். முத்தைய செட்டியார் வைசிராய்சபை வியாபார மெம்பர் ஆகலாம். இன்னும் மேலேயும் போகலாம். ஆனால் இவர் கள் மூவரும் சூத்திரர்கள் ................. என்கின்ற பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களாக ஆகமாட்டார்கள் என்பது உறுதியாகும்.

ஆகவே நமக்கு எந்த ஆட்சி வேண்டும்? என்று கேட்டால் ஆச்சாரியாரே முதல் மந்திரியாக வருவதானா லும் நமக்கு திராவிட நாடு சுயேச்சை ஆட்சிதான் வேண் டும் என்போம்.

'குடிஅரசு'  துணைத்தலையங்கம், 30.10.1943

இந்து மதம்

திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது முடிவாகும். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டில் திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்ற பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக் கிறோம். ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக்கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்க ளுக்கு இருக்கவேண்டிய பதவிகளைப் பற்றியோ தங்களது இழி நிலையைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்தக் கார ணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும்படிப்பும், ஆராய்ச்சி அறிவும் மேல்நாட்டு நாகரிகமும் தாராளமாய்க் கொண்ட மக்கள்கூட தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷ யத்தில் போதிய கவலைப்படாமலே இருந்துவருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டிருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில் சிறப் பாகத் தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் பறந்து ஓடி இருக்கும்.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடு களவு அறிவு உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்துமதம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்தி, கீழ்மைப் படுத்தி அவர்கள் முன்னேறுவதற்கு இல்லாமல் ஒடுக்கி வைத்திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் - அதற்காகவே இந்து மதம் என்பதாக ஒரு போலி வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள் கையுடனோ குறிப்புகளுடனோ அது (இந்து மதம்) இருக்க வில்லை.  உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும். 1940 வருஷம், டிசம்பர் மாதம் 8ஆம் தேதியில், சென்னைத் திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர் வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:- நாம் அனை வரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாகும். இந்து மதம் என் பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததே யாகும். நாம் ஆரியர்கள். ஆரியப் பழக்கவழக்கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர்களே யாவார் கள்.  கண்டவர்களை ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்டதானது ஆரிய மதத்தின் பலவீனமேயாகும் என்பதாகப் பேசி இருக் கிறார். இந்தப் பேச்சு 10-12-40 இந்து, மெயில், சுதேசமித்திரன், திணமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு விடுதலையில் இதைப்பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது. மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் இந்து மதத் திற்கு ஆதாரம் வேதங்களேயாகும் வேதத்தை ஒப்புக் கொள் ளாதவர் இந்துவல்ல என்றும் பேசி இருக்கிறார். எனவே இந்து மதம் எனபதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர் களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கை களைக் கொண்ட மதம் எனபதும், அது வேதமதம் என்பதும் இப்போதா வது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.

அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களை யும், தங்களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுப வர்களையும், திராவிடர்கள் வேறு ஆரியர்கள் வேறு ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்பவர்களையும், தென்னாட்டுச் சிவனே போற்றி என்பவர்களையும், அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேதசாரங்களான புராண இதிகாசங்களையும், வேதக் கடவுள்களையும், வேத ஆகமங் களையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கின்றேன்.  பொதுவாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப் பனரல்லாதார் என்றும்,ஆரியர் அல்லாதார் என்றும், சொல்லிக் கொள்ளுகிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் சொல் லிக்கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட்கின்றேன். ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிட தைரியமில்லை ஆனால், தன்னை சூத்திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும்.

மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100-க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர் களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள் மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழிமக்களாகவும் இருப்பது உலகத்தில் 8ஆவது அதிசயமல்லவா என்று கேட்கி றேன். இதற்கு தமிழ்ப் பெரியார்கள், பண்டிதர்கள், கலைவா ணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்துமத கலை, ஆச்சாரம், கடவுள், கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி,உடை, நடை முதலி யவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம்தான் அவனுக்குச் சுயமரியாதையும் மனிதத் தன்மையும் வரப் போகிறது என்றும் அவ்வளவு தூரம்தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்கமுடியும் என்றும் வலிமையாய் கூறுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 30-10-1943இராஜீய உலகத்தில் பார்ப்பனர்களு டையவும் அவர்களது வால்களினுடைய வும் நாணயமும் யோக்கியதையும் அடி யோடு ஒழிந்து அவர்களின் அயோக்கி யத்தனம் வெளியாய்விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கி யதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய்முழு பார்ப் பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத் தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்ப னர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழை யாமைக்கு டில்லியில் உலை வைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்ட சபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப்பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூ. பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங் கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக் கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட் டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் குறைந்ததாக தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல் லது தமிழ்நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக் யதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித் தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச் சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனு தர்ம சாஸ்திரப் பிரச்சாரம் செய்யத் துணிந் தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத் தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய்க் கொடுத்ததான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமூகத் தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூல மாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப் பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட் கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழை யாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத்தன்மை முதலியவைகள் ஆகிவிடுகின்றன.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறு நன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசீய அயோக்கியத் தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய்இருக்கும் போது இரும்பு என்ன செய்யும் என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அது போல் பார்ப்பனரல் லாதாரிலே உள்ள கோடலிக் காம்புகளை நினைக்கும் போது ஸ்ரீராஜகோபாலாச் சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரி யமாகத் தோன்றவில்லை.

- குடி அரசு, தலையங்கம் - 01.04.1928

சுயராஜ்யம் என்றால் என்ன?

நமது மகாத்மா காந்தியடிகள் தமது சுயராஜ்யத் திற்கு இன்னும் அர்த்தம் சொல்லவில்லை. ராஜப் பிரதிநிதி கேட்டபோது கூட அவர் சொல்லவில்ணீலை. சுயராஜ்யம் கிடைத்தால் அதை அடைய யோக்கி யதை வேண்டுமென்றுதான் நிர்மாணத் திட்டத் தையே சுயராஜ்யம் என்று சொன்னார். அதை விட்டுவிட்டு உத்தியோகம் அடைவதை சுயராஜ்யம் என்று உங்களை பிராமணர்கள் ஏமாற்றுகிறார்கள். நாம் உண்மையை உணர வேண்டும்; உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்; உண்மையை எடுத்துச் சொல்லுவதில் என்ன வந்தாலும் பொறுத்துக் கொள் ளத்தான் வேண்டும். நம் பயித்தியக்காரத்தனம் நீங்கவேண்டும். இப்போது நாளுக்கு நாள் மகாத்மா காந்தி யென்பவர் ஒருவர் இருந்தார் என்று சொல் லும் ஸ்திதிக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது நமது யோக்கியதை என்ன என்பதுதான் நமது கவலை. நாம் இத்தனை கஷ்டப்பட்ட ஒத்து ழையாமைக் காங்கிர ஸின் பலனை சுயநலக்காரர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள விடுவதா என்பதுதான் எனது கவலை.

- குடிஅரசு, 27.6.1926

சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரண காரிய தத்துவ உணர்ச்சியையும் காரணகாரிய விசா ரணையையும் உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற் றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடு கின்றது. இயற்கையையே ஆராயத்தலைப்பட்டாய் விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத் தின் தத்துவமே அதுதான். எந்தக்காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங் களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தான் சுதந்திரமாகும். சுதந்தரத்திற்கும் சுயமரியாதைக் கும் அதிக தூரமில்லை. இன்றைய சுதந்திரவாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரி யாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரி யாதை அற்றவர்களுக்கு - சுயமரியாதை இல்லாதவர் களுக்குச் சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த் தையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் - சுதந்தரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத்தக்கதாய் இருக்குமென்றும், சுதந் திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்த தாக மாத்திரம் இருக்கும்.

- குடிஅரசு, 18.7.1937

வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சிமுறை ஒழிய வழி

நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரி யாதைக்கும் பார்ப்பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும், அவர்களாலேயே நமது நாடு அடிக்கடி அந்நிய ஆதிக்கத்திற்கும் கொடுங்கோல் அரசு முறைக்கும் ஆளாகி வந்துக் கொண்டிருக்கின்றது என்றும், பார்ப்பன அயோக்கியத்தனம் வீழ்ந்த அன்றே வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சி முறை பட்டு மாய்ந்து விடும் என்றும் நாம் விப ரம் தெரிந்த காலம் முதல் தொண்டை கிழியக் கத்தியும் வருகின்றோம், கை நோக எழுதியும் வருகின்றோம்.

ஆனாலும், வேறு வழியில் வயிறு வளர்க்க முடியாத இழிமக்கள் தங்கள் வாழ்வுக்காக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி சிலர் கடவு ளுக்கு வக்காலத்து பேசுவது போல் இவர்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து பேசி நமது முயற்சியைக் கெடுக்க வந்து விடுகின்றார்கள்.

பொதுஜனங்களும் முக்கியமாய் பாமர மக்க ளும் இவ்விஷயத்தில் கவலை இல்லாமலும் தங்கள் பகுத்தறிவை சரியாய்உபயோகிக்காமலும் கவலை அற்ற முறையில் பார்ப்பானைக் குற்றம் சொல்லாத முறையில் நமது வேலை நடக்கக் கூடாதா என்போர்களும் பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்கள் தானே, அவர்கள் நமக்கு ஒரு எதிரிகளா? என்று தர்மம் பேசுவோர்களும், மற்றும் பலவிதமாக அர்த்தமில்லாத சமாதானம் சொல்வோர்களுமாக இருந்து வருகிறார்கள்.

என்றைக்காவது நமது நாடு யோக்கியமான முன்னேற்றமும் சுயமரியாதையும் பெறவேண்டு மானால் பார்ப்பன அயோக்கியத்தனமும், சூழ்ச் சியும், ஆதிக்கமும் ஒழிந்த பிறகுதான் சாத்தியப் படக்கூடிய விஷயமேயல்லாமல் பார்ப்பனீய ஆதிக்கம் அடியோடு அழிபடாமல் ஒரு நாளும் முடியாது என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவு வோம்.

- குடிஅரசு, 11.3.1928

நாளைய தினம் சுயராஜ்யம் வந்து விட்டதாகவோ, அல்லது வெள்ளைக்காரர் கள் பெண்டு, பிள்ளை, துப்பாக்கி மருந்து முதலியவைகளுடன் ஓடி விட்டதாகவோ வைத்துக் கொள்ளுவோம். அதன் பிறகு நடப்பது எந்த தேசிய ராஜ்யம் என்று தான் தேசிய வீரர்களைக் கேட்கின்றோம்? திரு வாங்கூர் சமஸ்தானத்தைப் போல் ஜாதி யைக் காப்பாற்றும், சனாதன தர்மமும், ராமராஜ்யமும் நடைபெறு வதைத் தவிர வேறு வழியிருக்கின்றதா என்றுதான் மறு படியும் கேட்கின்றோம். அல்லது வக்கீல் ராஜ்யமானால் அது பகற் கொள்ளை ராஜ் யமல்லவா? என்று கேட்கின்றோம். அல் லது வியாபாரிகள் முதலாளிகள் ராஜ்யமா னால் அது இப்போதைப் போலவே வழிப் பறிக் கொள்ளை ராஜ்யமா அல்லவா என்று கேட்கின்றோம்.

எந்தக் காரணத் தாலாவது பார்ப்பன ராஜ்யமும், வக்கீல் ராஜ்யமும், முதலாளி ராஜ்யமும் ஒழியும்படியான திட்டம் கொண்ட சுயராஜ்யமோ, தேசிய ராஜ் யமோ ஏற்படுத்த இப்போது நம் நாட்டில் ஏதாவது இயக்கம் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம். பார்ப்பனர் மோட்சத்தின் பேராலும், காலிகள் ஆதிக்கத்தின் பேரா லும், வக்கீல்கள் நீதிவாதத்தின் பேராலும், பண்டிதர்கள் சமயத்தின் பேராலும் வயிறு வளர்ப்பதுபோல் சில போலிகளும், போக் கற்றவர்களும் இப்போது சுயராஜ்யத்தின் பேராலும், தேசியத்தின் பேராலும், சுயேச் சையின் பேராலும் வாழ நினைத்துப் பாமர மக்களை ஏய்த்துப் பிழைப்ப தல்லாமல் மற்றபடி இவற்றில் கடுகளவா வது உண்மை இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

தாடியில் நெருப்புப் பிடித்து எரியும் போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்பு கேட்கும் கொடிய கிராதகர் களைப்போல் நாடு மானமிழந்து, அறி விழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து, கொடுங் கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கிச் சாகக் கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத்தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக் கொண்டு சுயராஜ்யம், ராமராஜ்யம், தேசி யம், புராணம், சமயம், கலைகள், ஆத்தீகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற் றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட மக்களையுடைய நாடு மானமுடையநாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்றுங் கேட்கின்றோம்.

குழந்தையைத் துராக்கிருகப் புணர்ச்சி செய்ய வேண்டாமென்றால் ஒரு கூட்டம் மதம் போச்சு என்கின்றதும், பணத்தைப் பாழாக்காதே, கோயிலை விபச்சார விடுதி யாக்காதே என்றால் மற்றொரு கூட்டம் கடவுள் போச்சு என்கின்றதும், பொய்யும் புளுகும் ஜாதி மதத்துவேஷமும் கொண்ட புஸ்தகங்களைப் படியாதே என்றால், மற் றொரு கூட்டம் கலை போச்சு என்கின் றதும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கையா ளாக இருக்க வேண்டாமென்றால் இன் னொரு கூட்டம் தேசியம் போச்சுது என் கின்றதும். ஏழைகளைக் காட்டிக் கொடுத்து ஏழைகள் வயிறெரிய வரி வசூலிக்க உள் உளவாயிருந்து மாதம் 1000, 2000, 5000 ரூபாய் உத்தியோகத்திற்கு ஆசைப் படாதே! அதுவும் பிள்ளைக்குட்டிகளே கொள்ளை கொள்ள வேண்டுமென்று கரு தாதே என்றால் ஒரு தனிக்கூட்டம் தேசத் துரோகமென்கின்றதும், மனிதனை மனி தன் தொட்டால் தீட்டு, தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் இறங்கக்கூடாது, பக்கத்தில் வரக் கூடாது என்று சொல்லுவது அக்கிரமம், மானக்கேடு, கொடுமை என்று சொன்னால் அதே கூட்டம் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம், பிராமணத் துவேஷம் என் கின்றதுமாயிருக்கின்றன.

இவ்வளவும் போதாமல் இப்போது திருவாங்கூர் ராஜ்யம் ஜாதி வித்தியா சத்தை ஒழிக்க வேண்டுமென்கின்றவர் களைத் தனது நாட்டுக்குள்ளாகவே வரக் கூடாது என்கின்றது. எனவே இந்தியாவின் தேசபக்திக்கும், சுயராஜ்யக் கிளர்ச்சிக்கும், தேசிய உணர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

- குடிஅரசு - தலையங்கம் - 14.07.1929

ஆரியரின் அடிமைகள்

ஆரியக்கொடுமையில் இருந்து, ஆரியர் சூழ்ச்சி யில் இருந்து, ஆரிய  ஆதிக்கத்திலிருந்து தமிழன் மீள்வதே சுயராஜ்யம் என்று, நாம் சுமார் 15 வருஷ காலமாகப் பேசியும் எழுதியும் வருகிறோம். திரா விடப் பெரியார்கள் பலர், இதற்காக, சுமார் 1500, 2000 வருஷத்துக்கு முன்பிருந்தே முயற்சித்து வந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது.

இந்நாட்டிற்கு ஆரியர் வருவதற்கு முன் தமிழர் கள் என்ன நிலையில் இருந்தார்கள், எவ்வளவு சுதந்திரமும் வீரமும் நாகரிகமும் பெற்று இருந்தார் கள் என்பதும், ஆரியர்கள் வந்தபிறகு தமிழர்களை (திராவிடர்களை) அவர்கள் எவ்வளவு கொடுமையும் சூழ்ச்சியும் செய்து ஆதிக்கம் பெற்றார்கள் என்பதும், ஆரியர்களும் மற்றும் தமிழர்கள் அல்லாத அந்நிய மாகாணத்தவர்களும் அய்ரோப்பிய நாட்டு ஆராய்ச்சி வல்லார்களும் எழுதி வைத்திருக்கும் அநேக ஆராய்ச்சி நூல்களில் இன்றும் காணலாம்.

இந்தப் படியாக ஏமாற்றி இழிவு படுத்தி அடிமைப் படுத்தப்பட்ட திராவிட மக்கள் ஆரியர்களைவிட ஜனத்தொகை 33 பங்கு அதிகமாக இருந்தும் இன் றைய வரையிலும் கூட ஏன் ஆரியர்கள் கொடுமை யில் இருந்தும் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட வில்லை என்றால் இதற்கு ஒரு காரணம்தான் கூறலாம் என்று தோன்றுகின்றது.

ஆரியர் ஆதிக்கத்திற்கு வந்தவுடன் திராவிடர் களின் கலைகளை அழித்து விட்டதும், திராவிடர் களைக் கல்வி அறிவில்லாமல் செய்ததும், மீறிப் படித்தவர்களைக் கொடுமைப்படுத்தி அழித்தும், அழிபடாதவர்களைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி தங்கள் சமயங்களையும் கலைகளையும் தங்கள் உயர்வுக் கதைகளையுமே தமிழ் பாஷையில் மொழி பெயர்த்து எழுதச்செய்து, அதிலேயே அவர்களது பிழைப்பையும் பெருமையையும் கட்டுப்படுத்தி ஆரியக் கூலிப்பிரச்சாரகராய் ஆக்கிக்கொண்டதால், படிப்பு வாசனையற்ற தமிழ் மக்கள் இந்தத் துரோகி களும் வஞ்சகர்களுமான இழிமக்களை நம்பி, தமிழ் மக்கள் பூராவும் ஆரியர் அடிமைகளாகவும், ஆரி யர் இன்பத்திற்கும் போக போக்கியத்துக்குமாகவே தமிழர்கள் வாழவேண்டியவர்களாகவும் ஆக்கப் பட்டு விட்டார்கள்.

- குடிஅரசு, 5.11.1939

பிழைக்க வந்தவர்கள்

பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குச் சுமார் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பிழைக்கவந்தவர்கள்; வந்ததும் இந்த நாட்டு வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாமல் இந்த நாட்டுவளப்பத்தை அனுபவிக்கத் துவங்கி விட்டார்கள்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால்தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யாவிட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடுகட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகளை அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எங்காவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கின்றாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி, நாம் முன்னேற வேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

- தந்தை பெரியார், விடுதலை, 31.7.1951

Banner
Banner