வரலாற்று சுவடுகள்

சென்னை மந்திரிகளைப் பின்பற்றுதல்
24.11.1929- குடிஅரசிலிருந்து...

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன் மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும், மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும், வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்த தாகும்.

அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும், வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும், மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன் படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

தவிர, காந்தி மடத்தின் சட்டாம்பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும், பிரச்சாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களிலும், மேல்நாடுகளில் பல பக்கம் பின்பற்ற துவங்கிவிட்டன. அதாவது, அய்க்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தார் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுவதும் இப்பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி அய்ம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கிவிட்டார்கள்.

நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்க வில்லையாம் ஏன்? மதுவிலக்குப் பிரச்சாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும், மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர் களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

ஆகவே, இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பன ரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப் பத்தை விட்டுவிட்டாமல் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரசாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவளிக்க வேண்டுவ துடன் ஜில்லா தாலுகா போர்டு தலைவர்களும் முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரசாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

புதிய சகாப்தம்
10-11-1929 - குடிஅரசிலிருந்து...

திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டு பண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறி வோம். இது முதற் கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திரக் கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடான தாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடைய முடியாமல், பெர்க்கன் ஷெட் பிரபுவின் இழிதகையான பழிச்சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கின்றது.

ஏனெனில், நம்முடைய பிரச்சாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது தேசியம் என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டுள்ளது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ் காரம், இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் அய்யமில்லை.

எப்போது வெள்ளையர்கள் நம்மை விட அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின் றோமோ, அப்போதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர் அக்கிளர்ச்சி ஓய்ந்து விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்ததேயொழிய, சுதந்திரத்தாகம் தைல தாரையைப் போல் நம்மக்களின் மனத்தில் நிலவவே இல்லை. இதுதான் நமது இந்தியாவின் பரிதாபிக்கத்தக்க நிலைமை. இதை மாற்ற நினைத்தாலும் நினைவளவில் ஏற்படும் சுதந்திரக் கனவு கூட நிலவரமாய் இருக்காது என்பதும் உண்மை.

இதற்குக் காரணம், நம்மக்களின் அறியாமையே என்று கூற வேண்டும். அறிவு உதயமாய் உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற மேனாட்டு மக்கள் கையில் சிக்குண்டிருக்கும் நாம், அவர்களிடமிருந்து நமது நாட்டை அடைய நமக்குத் தலைமையாக வேண்டியது அறிவு டைமையே தவிர சுதந்திரத்தாகமன்று, அறிவுடைய மக்கட்குச் சுதந்திர தாகம் ஏற்பட்டிருப்பின் அத்தாகம் நிலவரமாக ஒரே முறையாக ஓங்கிப் படர்ந்து செழித்து சுதந்திரக் கனி உதவியிருக்கும் என்பதில் அய்யமில்லை. அறிவில்லாத மக்கள் கையில் உள்ள சுதந்திரத் தாகம், பேடி ஒருவன் மணந்த பெண்ணையே ஒக்கும்: இதனாற் பயனில்லை. அதனாற்றான் தாதாபாய் நௌவ்ரோஜி காலத்தில் துவக்கப்பட்ட நமது சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஏமாற்றுப் பேச்சுக்கும் இலக்காயிற்றே தவிர, ஒரு சிறிய துறையிலும் வெற்றி அளிக்கவில்லை. இச்சுதந்திர தாகம் பழைய மூட வைதிக சகாப்தத்தின் இறுதியில் எழுந்தது. ஆனால், இப்பழைய சகாப்தம் அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இனிமேல்தான் இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு வெற்றி ஏற்படும் காலம் அணுகிவிட்டது. இப்போதுதான் மக்கள் மனதில் பண்டைய மூடப்பழக்க வழக்கங்களும், உயர்வு தாழ்வுக் கற்பனைகளும் தகர்க்கப்படுதல் அவசியமென்றும், பகுத்தறிவுக்கு முரணாக மதம் வந்து எதிர் நின்றாலும், முதலில் அந்த மதத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்ப்பதும் என்றும் தோன்றி விட்டது.

இதன் அறிகுறியாய் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயர்கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பம்பாய் மாகாணத்தில் புரோகித எதிர்ப்பு இயக்கம் என்னும் பெயர் கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பஞ்சாப் மாகாணத்தில் யுக்தி வாத சங்கம் என்னும் ஒரு அறிவு இயக்கமும் தோன்றி இப்போது அந்தந்த மாகாணங்களில் இவ்வியக்கக் கொள்கைகள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. வங்காளத்திலும் முல்லாக்கள் எதிர்ப்புச் சங்கம் என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வியக்கத் தலைவர்களெல்லாம் பழுத்த தேசிய அமிதவாதிகளாய் இருப்பதும் மிகவும் குறிப்பிடற்பாலது.

உதாரணமாக நமது சுயமரியாதை இயக்கத் தலைவர் களின் தேசிய உணர்ச்சியும் அவர்கள் தேசியத்திற்கு ஆற்றி வந்த தொண்டும் இம்மாகாணம் அறியும் - பார்ப்பனரறியாவிடினும் இதேபோல் பம்பாயில் புதிதாகத் தோன்றி இருக்கும், புரோகித எதிர்ப்புச் சங்கத்துத் தலைவராக, திரு.நாரிமன் அவர்களே இருந்து வருகின்றார். மற்றும் திரு.டயர்சி, அம்பேத்கர் முதலான முதிர்ந்த அறிவாளிகளும் இச்சங்கத்தில் சார்பு கொண்டிருப்பதும் கவனித்தற் பாலது. எனவே, இப்போது இந்தியா முழுவதும் அறிவு இயக்கங்கள் தோன்றி வருவதும், இவ்வியக்கங்கள் தேச பக்தி உடைய பெரியார் களையே தலைவர்களாகக் கொண்டிருப்பதும், இவ்வியக்கங்கள் தீவிரமிக்க மன எழுச்சி படைத்த இளைஞர்களைக் கவர்ந்தீர்ப்பதுவும், இந்தியாவில் உதயமாயிருக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் அறிகுறிகளாகவே தோன்றுகின்றன. இச்சகாப்தத்தில் நமது மக்களின் சுதந்திரக் கோரிக்கை ஈடேறும் என்பதை நாம் மீண்டும் எடுத்துக்கூற வேண்டுமோ?

ஆனால், பழைய மூட மதி புதிதாகத் தோன்றிய அறிவு இயக்கத்தைப் பார்த்து, நான் நெடுநாளாக, பன் நூற்றாண்டுகளாக கடவுள், மதம், புரோகிதம், சடங்கு, கலை இவைகளின் பேரால் இவ்விந்தியாவில் வளர்ந்து வந்தேனே; நீ தோன்றியதும்; என்விருத்தாப்பிய திசையில் என்னை மக்கள் கைவிட்டுவிட்டனரே. நான் இறந்துதான் போவேன்; பழைமை பொருட்டு, கிழவன் என்று என்மீது மனமிரங்கி என்னைக் காப்பாற்ற மாட்டாயா? என்கின்றது. நமது அறிவியக்கம் கிழப்பிணமே! நீ இது வரையில் இழைத்த கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் அறிகுறி இவ்விந்தியாவின் அடிமைத் தன்மைதான்; அதை நினைக்கும் தோறும் உன்னை ஏன் இன்றே கழுத்தை முறித்துக் கொன்று விடக்கூடாது என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த சமயத்தில் உன்னைக் காப்பாற்றுவதாவது. செயற்கை மரணம் நேரிடுவதற்கு முன்பாக நீயாகவே தற்கொலை செய்து கொள் என்கின்றது. இந்நிலையில் பண்டைய சகாப்தத்தின் பிரதிநிதிகளாய் காசி கிருஷ்ணமாச்சாரி, எம்.கே,ஆச்சாரி, சத்தியமூர்த்தி, சேஷ அய்யங்கார், சங்கராச்சாரிகள் முதலானவர்களின் கதி என்னாகும் என்பதையும், உண்மைத் தேசியமும் இத் தேசியத்திற்கு உண்மை வெற்றியும் யாரால் ஏற்படக்கூடும் என்பதையும் நம்மக்களே உணர்ந்து கொள்ளக்கடவர்.


தந்தை பெரியார் பொன்மொழிகள்

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரி யாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற் பட்டதல்ல.
 

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக் கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத் துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதா பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடு களில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ் வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொரு ளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராயபேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக் காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன் னால்தான் உண்மையாகக் கஷ்டப் படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக் கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்கவேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படு கின்றது.

மகமதியர்கள் குரானை மதிப்பதை விட கிறிஸ்த வர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என் றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப் படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வ மும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண் டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்ற வர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங் களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர் களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கை களையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களு டையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல் லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடு வதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?

அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவு ளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட் டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப்பட்ட கடவு ளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லா விட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குரு வாய், சங்கராச் சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத் தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல் லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டி யவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

1935 செப்டம்பர் முதல் வாரத்தில்  தேவக்கோட்டையில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (‘விடுதலை', 2.12.1951).15.01.1933 - குடிஅரசிலிருந்து...
ஓ! மூடசிகாமணிகளே ! இரண்டு மூன்று மாதகாலமாய் ஒரு பார்ப்பனர் சென்னையில் இருந்துகொண்டு, தன்னை சங்கராச்சாரி என்றும், லோக குருவென்றும், சுவாமி களென்றும், அவதார புருஷ பரம்பரை என்றும் சொல்லிக் கொண்டும், பல பார்ப்பனர்களை ஏவிவிட்டு அந்தப்படியே சொல்லி பிரசாரம் செய்யச் செய்துகொண்டும், உங்க ளுடைய பணங்களைக் காணிக்கைப் பிச்சையென்னும் பேரால் தினம் 500, 1000, 2000, 3000, 5000, 10000 என்பதாகக் கொள்ளை அடித்துக் குதிரில் போட்டுப் பார்ப்பனர்களுக்கு, அதாவது நம்மைச் சூத்திரன் என்றும் நாலாவது வரு ணத்தான் என்றும், அடிமை என்றும், பல ஜாதிக்கலப்பால் பிறந்த மக்கள் என்றும், சண்டாளர்கள் என்றும், நம்மைத்தொட்டால் குளிக்கவேண்டுமென்றும் சொல்லும் அயோக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கே மூட்டை மூட்டையாய் பொங்கிப் பொங்கிப் போட்டுத் திரிகின்ற அக்கிரமங்களை யெல்லாம் சகித்துக்

கொண்டிருக் கின்றீர்களே! உங்களுக்கு மானமில்லையா! வெட்க மில்லையா!! சுயமரியாதை உணர்ச்சியில்லையா!!!
நமது நாட்டு அயோக்கியப் பணக்காரர்களும், கொள் ளைக்கார, கொடுமைக்கார, வன்நெஞ்சப் பணக்காரர்களும் எவ்வளவு இழிவாய் - பித்தலாட்டமாய் - மோசடியாய் பணம் சம்பாதித்து அந்தப் பணங்களை யெல்லாம் எந்த அறிவீனர்களிடம் - பாமர ஜனங்களிடம் - ஏழைகளிடம் இருந்து சம்பாதித்தார்களோ அவர்களுக்காகச் சிறிதும் பயன்படுத்தாமல், மேற்குறிப் பிட்ட அந்தச் சோம்பேறிக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவருக்கும் நம்மைச் சூத்திரர்கள், நாலாம் வருணத் தார்கள், சண்டாளர்கள் என்றழைக்கும் மிலேச்சப் பார்ப் பனர்களுக்குமே அழுகின்றார்களே; இதன் சூழ்ச்சியும், இதிலுள்ள புரட்டும் உங்களுக்கு விளங்குகின்றதா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். இந்தப் பணக்காரர்கள் எல்லாம் ஏழைகளின் குடும்பங்களைக் கெடுத்து  அவர்கள் வீடு வாசல்களைப் பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் பிள்ளை குட்டிகளுடன் அலையச்செய்து விட்டு - பட்டினியினால் மடியச் செய்து விட்டு சம்பாதித்த பணங்களை இந்தச் சோம்பேறிக் கூட்ட பார்ப்பனர்களுக்கு அழுவதென்றால் அதில் ஏதாவது இரகசியம் இருக்குமா இருக்காதா? என்பதை யோசித்துப் பாருங்கள். அது என்னவென்றால் அதுதான் உங்களை மறுபடியும் மறுபடியும், மேலும் மேலும் கொள்ளை யடிப்பதற்கு - வஞ்சிப்பதற்கு - உங்கள் குடும்பங்களைக் கெடுத்து வாழ்வதற்கு - உங்களைப் பட்டினி போட்டு பணம் சேர்ப்பதற்காக செய்யப்படும் சூழ்ச்சியாகும்.

எப்படியென்றால், சங்கராச்சாரிக்குப் பணத்தைக் கொடுத்து, பெண்டு பிள்ளைகளுடன் அவர் காலில் விழுந்து, அவர் கால் கழுவிவிட்ட தண்ணீரை வாங்கிக் குடித்து தலையில் தெளித்துக்கொண்டால், முன் சொன்னபடி அவன் எப்படிப்பட்ட கொள்ளைக் காரனா னாலும், கொலைகாரனானாலும் எத்தனை குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினவனானாலும், மகாப்பிரபு, தர்மவான், தர்மப்பிரபு என்று பார்ப்பனர்களாலும், அவர்கள் பத்திரிகைகளாலும், அழைக்கப்பட்டு விடு கிறான். இதனால் இந்தப் பணக்காரர்கள் செய்யும் புரட்டுகளும், அயோக்கியத் தனங்களும் எல்லாம் மறைந்து விடுகின்றன. சற்றும் மானம், வெட்கம் இல்லாமல் இவன்கள் மறுபடியும் பொதுஜனங்கள் முன்னிலையில் வந்து நிற்பதற்குத் தைரியமும் ஏற்பட்டு விடுகின்றது. நமது மூடமக்களும், அந்தப் பணக்காரன்களை மகாப்பிரபு என்றும், தர்மப்பிரபு என்றும், லட்சுமிபுத்திரன் என்றும் அழைக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். இந்த மாதிரி பித்தலாட்டத்திற்காக தான் மேற்கண்ட பணக்கார கொள்ளையன் சங்கராச்சாரிக்குப் பணத்தையும் கொடுத்து மற்ற காரியத்தையும் செய்கின்றார்கள்.

ஆகவே நம்மை சூத்திரன் என்றும், கீழ்ஜாதி என்றும், பல ஜாதி விந்து கலப்பு என்றும், விபசாரத்தில் பிறந்தவர்களென்றும், சண்டாளர் என்றும், ஒரு கூட்ட அயோக்கியர்கள் சொல்லுவதற்கு மற்றொரு கூட்ட அயோக்கியர்கள் ஆதாரமாய் இருந்து உதவி செய்கின் றார்களா இல்லையா என்பதை கூர்ந்து கவனித்துப் பாருங்கள் என்பதற்காகத்தான் இதை உங்களுக்கு தெரிவிக்க வந்தேன்.
நிற்க.

ஓ! சைவர்களே! சங்கராச்சாரி என்றால் யார்? சங்கராச்சாரி கதைப்படி பார்த்தால் அவர் ஒரு விதவை பெற்ற பிள்ளை என்று காணக்கிடக்கின்றதா இல்லையா? அவர் கடவுள் இல்லை (தானே கடவுள்) என்று சொல்லு கின்றவரல்லவா? சைவர்களுக்குப் பிறவி எதிரியல்லவா? தன்னைச் சந்நியாசி என்ற சொல்லிக்கொண்டு யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு முதலாகிய ராஜபோகத்தை அடைந்து கொண்டிருக்கிறார் அல்லவா? சகலத்தையும் சமமாய் பாவிக்கின்றவர் என்று சொல்லிக்கொண்டு கீழ், மேல் ஜாதியையும் பிராமணன், சூத்திரன், சண்டாளன் என்பதுபோன்ற உயர்வு தாழ்வு இழிவு பிரிவுகளையும் ஆதரித்துக் காப்பாற்றியும், அதற்காக ஆதாரங்களைப் பிரச்சாரம் செய்து அதை மக்களுக்குள் பரப்புகின்றவரும் அல்லவா? இவர் கொள்கைப்படி எந்தச் சைவனும் தாசிமகன் - அடிமை - சூத்திரன்தானே. இந்தப்படி சொல்லும் இவர் காலில் விழுவதற்கும் காணிக்கை கொடுப்பதற்கும் சாதம் சாப்பிடும் சைவனுக்கு அதாவது பகுத்தறிவுள்ள சைவனுக்கு எப்படித்தான் மனம் வந்தது? என்பது நமக்கு விளங்கவில்லை. உண்மையான சைவன் ஸ்மார்த்தப் பார்ப்பனரைக் கண்டால் அய்யோ அந்த தோஷம் தீர உடுத்தின வேஷ்டியுடன் ஸ்நானம் செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டு அந்தப்படியே ஆதாரங்கள் இருப்பதாய் பேசிவிட்டு பிறகு சங்கராச்சாரி காலில் பணத்தைக்கொட்டி விழுந்து கும்பிடுவதென்றால், சுயமரியாதைக்கும் நாணயத்துக்கும், பகுத்தறிவுக்கும் இந்த சைவர்களுக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என் பதை முட்டாள்தனத்தையும், சுயநலத்தையும், சூழ்ச்சி யையும் கொண்டு யோசிக்காமல் பகுத்தறிவையும், நேர்மையையும் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

ஓ! மார்வாடி சேட்டுமார்களே! பண வியாபாரத்தில் பணம் பெருக்கும் தொழிலாளிகளே! ஏழை மக்களிடம் - கூலிக்காரர்களிடம் - ஆப்பம் சுட்டு, எருமுட்டை தட்டிப் பிழைக்கும் பெண்களிடம், ரிக்ஷா வண்டி இழுப்பவர் களிடம் தினம் 1-க்கு ரூபாய் 1-க்கு ஒரு அணா வரைகூட வட்டி வாங்கி பணம் சேர்த்து அந்தப் பணங்களை இந்த மாதிரியான அக்கிரமமான காரியத்திற்காகவா செல வழிக்கவேண்டும் என்று கேட்கின்றேன். இது ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் காரியமல்லவா?
அரசியல் சட்டப்படி கொள்ளையடித்து மதக்கொள் கைப்படி மக்களை இழிவு படுத்தும் காரியமல்லவா நீங்கள் செய்யும் இந்த மோசமானதும் யோக்கியப் பொறுப் பற்றதுமான காரியம் என்பதை யோசித்துப்பாருங்கள்.

ஓ! பொதுஜனங்களே! இந்தப் போலி தேசியத்தை, மானங்கெட்ட தேசியத்தை, வயிற்றுப் பிழைப்பு தேசி யத்தை ஒழித்தால்தான், அழித்தால்தான் இந்திய மக்கள் மானத்துடன் சுயமரியாதையுடன் சமமான மனிதனாய் வாழமுடியும். சங்கராச்சாரி முதலிய கொள்ளையை விரட்டி அடிக்க முடியும் என்பதை உணருங்கள் ! உண ருங்கள் !! முக்காலும் உணருங்கள்!!!

26.02.1933  - குடிஅரசிலிருந்து...
தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில்கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:  
ஆலயப் பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை  ஆனால் பிறருடன் சரி சமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது, ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும் என்ற குறிப்புகள் இருக்கின்றன.

இவைகளில் ஏதாவது இன்றைய அனுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா? என்பதை யோசிக்க வேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக் கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சமஉரிமையை தாரளாமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று  நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறி களாகவும், நூற்றுக்குத் தொண்ணூத் தொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர்களது பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி கொடுக்கவோ, நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம்.

இன்று மக்களுக்குப் பொதுவாக அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாதவர் தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் மனிதத் தன்மையிழந்து மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும், மிருகங்களுக்கு இருக்கும் நிலைமையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும், கோவி லையும், காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.
இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும், படிப்புக்கும் காந்தியார் கண்டு பிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய  பட்டினிக்கும் படிப்புக்கும், காந்தியார் கண்டு பிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள்.

இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும், பணக்காரர் கொள்கை கொண்ட அரசாங்கத்திற்கும் உள் ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நண்பராய் இருந்து உதவி செய்தவரா கிறாரா? என்பதை உணர்ந்து பாருங்கள்.

இந்தியக் கடவுள்கள்

17.11.1929- குடிஅரசிலிருந்து....

1929 நவம்பர் மாதம் 11ஆம் தேதி வெளி யான சுதேசமித்திரனின் பதினோராவது பக்கத்தில் திருப்பதி வெங்கிடாசலபதி என்கின்ற கடவுளின் தேவஸ்தான வருஷாந்திர வரவு செலவு (பாலன்ஸ் ஷீட்) கணக்கு வெளிப்படுத்தப்பட்டிருக் கின்றது. அதில் இந்த ஒரு வருஷத்திற்கு, அதாவது, 1337ஆம் பசலிக்கு மேற்படி தேவஸ் தானத்திற்கு ஒட்டு மொத்தம் இருபத் திரண்டே முக்காலே அரைக்கால் லட்ச ரூபாய் வசூலாயிருக்கின்றது. இந்த ரூ.22,82, 695-8-9 பைசாவுக்கும் செலவும் காட்டப்பட்டிருக்கின்ற விவர மென்னவென்றால், ஆறு லட்சத்துச் சில்லரை ரூபாய் நிலுவை மொத்தம் என்று காட்டப்பட்டிருப்பது போக மீதி பதினாறு லட்சத்து சில்லரை ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கும் செலவு களைப் பார்த்தால், இந்து மதமும், இந்துமதக் கடவுள்களும் நமது இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது என்பது முழு மூடர்களுக்கும் எளிதில் விளங்கும்.
அதாவது :-

கோயில்களுக்குக் கொடுத்தது        ரூ. 23,515

படித்தர சாமான் வாங்க            ரூ. 1,38,932

பழுதுகள்                ரூ. 4,55,701

சமஸ்கிருத ஆங்கில வித்யாசாலை    ரூ. 1,07,941

சிப்பந்திகள்                ரூ. 2,51,045

எஸ்டேட் நிர்வாக செலவு        ரூ. 3,57,229

இந்த கோயில்களுக்கு கண்டிரி பியூஷன்     ரூ. 60,600

எண்டோமெண்ட் போர்டுக்கு        ரூ. 14,613

இதர சில்லரைச் செலவு            ரூ. 1,21,360

டிரஸ்ட் பண்டு செலவு            ரூ. 3,527

இதர சில்லரைச் செலவு            ரூ. 70,838

என்றவாறு, பதினாறு லட்ச ரூபாய்களுக்குச் செலவு காட்டப் பட்டிருக்கின்றது.

தவிர திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்துக்களை காட்டும் ஜாப்தாவில் மேற்படி தேவஸ்தான சொத்து பெறுமானம் ஏழு கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தையாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது ரூபாய், மூன்று அணா பத்துபைசா என்று குறிக்கப்படிருக்கின்றது. இந்த 7,19,85,980 ரூபாய் பெறுமான சொத்துக்களில் ஆறரைக்கோடி ரூபாய்க்கு கட்டடங்களும், நிலங்களும், நகைகள், துணிகள் வாகனங்களுமாக 21 லட்ச ரூபாயும், இரும்பு சாமான்கள் முதலியவை 4 லட்ச ரூபாயும்,  டிக்கிரி மொத்தம் 9 லட்ச ரூபாயும் கடன் பத்திரங்கள் 33 லட்ச ரூபாயும், கிஸ்தி பாக்கி 71/2 லட்சரூபாயும், மற்றும் ஏதேதோ சில்லரை வகையில் மீதியுமாய், கணக்குக் காட்டப்பட்டிருக்கின்றது. இந்த ஒரு கோயில் கணக்கை மாத்திரம் பார்த்தால் நமது நாடு தரித்திரமடைந்து கல்வியற்று சுதந்திரமற்று அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருப்பதற்குக் காரணம் வெள்ளைக்கார அரசாங்கமா அல்லது நமது மதமும் கடவுள்களுமா என்பது விளங்காமல் போகாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுயமரியாதை இயக்கத்தின் பலன்

03.11.1929- குடிஅரசிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர் களும், புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர் களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரச்சாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களைப் பற்றியும், இரண்டொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்.

பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்பதென் பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வ தென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்களில் அடி யோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல், ஆகிய காரியங்களில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்த வைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

பண்டிகைகள் விரதங்கள், சடங்குகள் முதலிய வைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலட்சியமாக ஏதோ நிர்ப்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.

விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவையான விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து வருகின்றது. ஜாதி வித்தியாசம் ஒழித்தல் தீண்டாமை ஒழித்தல், முதலிய வித்தியாசங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பயன்கொடுத்து வருகின்றன. அதாவது தினமும் மக்கள் மகமதிய ராவதும், கிறிஸ்தவராவதுமான செய்திகள் வெளியா கின்றன. கோயில் பிரவேசம் பல இடங்களில் நடக் கின்றன. புரோகித விலக்கு சங்கங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.

மதத்தைப் பற்றிய புரட்டுகள் வெகுதாராளமாய் வெளிப்படுத்தப் படுவதோடு மதப் புரட்டர்கள் எல்லாம் மூலையில் முக்காடிட்டு ஒடுங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டன. அன்றியும் அவர் களின் உண்மையான தோல்வியைக் காட்ட அறிகுறி என்னவென்றால் தாங்கள் வாய் திறக்க யோக்கியதை அற்றும்போய், புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில் இறங்கியிருப்பதேயாகும்.

இந்து மதப்புரட்டு தேசமெல்லாம் பரவி வரு வதுடன், அடுத்த ஜன கணிதத்தில் ஒவ்வொருவரும் இந்தியன் அல்லது இந்துவல்லாதவன் என்று சொல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் ஜாதியையும், ஜாதிப் பட்டத்தையும் சொல்லக் கூடாதென்றும், நூற்றுக்கணக்கான சங்கங்களும் மகாநாடுகளும், தீர்மானங்கள் செய்தனுப்புவது மேயாகும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தேசத்துரோகம், தேசியத்திற்கு விரோதம் என்று எவ்வளவோ தூரம் பார்ப்பனர்களும், அவர்களது வால்களும், கத்தியும், இப்போது சட்டசபையிலும், சர்க்கார் உத்தியோகத் திலும் ஏற்பட்டு நிலைத்து அனுபவத்திற்கு வந்துவிட்ட தோடு, பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்குள்ள உரிமையை கெஞ்சிக் கேட்கவேண்டிய அளவுக்கு, தைரியமாய் வெளியில் வந்து விட்டார்கள். உதாரணமாக சர்க்கார் மதுவிலக்குப் பிரச்சார ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்ப்பனர் என்கின்ற கணக்கு வைத்து நியமிக்கவேண்டும் என்று திவான்பகதூர். திரு. ராமச்சந்திர ராவே, முயற்சி எடுத்துக் கொண்டதோடு தேவஸ்தானக் கமிட்டிகளில், பார்ப்பனர்களுக்கு உண்டான பங்கு ஏன் கொடுக்க வில்லை? என்று சட்டசபையில் திரு.சத்தியமூர்த்தியே பல கேள்விகள் கேட்கவும், இந்தக் கேள்வியை திரு.சத்தியமூர்த்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை ஒப்புக்கொண்டு கேட்கின்றாரா? என்று திரு.சி.எஸ்.இரத்தின சபாபதி முதலியார் கேட்கவும் சர்க்காரர் ஆம் என்று பதில் சொல்லவுமான நிலைமைக்கு வந்துவிட்டது.

மற்றும் ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம் பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனிவரும்படி எதிர்பார்க்க முடியாது என்று காணப்பட்டிருக்கின்றது.

மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார் களை நியமிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டி ருக்கின்றது.

வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங்களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்து விட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாத வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.

சென்னைப் பச்சையப்பன் காலேஜில் தீண்டப் படாதவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக் கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ் தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பன ரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.

பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.

பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.
விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படு கின்றது. இவ்வளவும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக்கிணறுகளில் தீண்டப்படாதார் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது.

விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.

சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரிகளாக்கப் பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம். இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத்தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக் கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.

Banner
Banner