வரலாற்று சுவடுகள்

07.07.1929 - குடிஅரசிலிருந்து...

சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக் கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகிய வைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப் பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளா கவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத் தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

 

07-07-1929 - குடிஅரசிலிருந்து..

எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தி யாயர்களின் கொடுமை யானது சகிக்க முடியாத அளவில் பெருகிக் கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லா தாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ் தர்களும் பார்ப்பனரல் லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தி யானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தியாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளாய் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர் களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர் களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாய மாகவும் பேசுவோமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.

பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச் சாலை களை அடைத்துவிடுவது, மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில், முதலாவ தாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப் பனனும் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி தாம் பிராமண ரென்றும், மற்றவர் சூத்திரரென்றும் எண்ணிக் கொண்டி ருப்பவர்கள் எந்தக் கொள்கைப்படி தன்னை பிராமணரென்றும், மற்றவனை சூத்திரரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அதே கொள்கையின்படி பிராமணன் சூத்திரனைப் படிக்க வைக்கக் கூடாதென்றும், சூத்திரன் படித்தால் வருணதர்மம் கெட்டுப் போகுமென்றும் பிராமணனுக்கு ஆபத்தாய் முடியுமென்றும் சூத்திரனைப் படிக்க வைத்தப் பிராமணர் நரகத்தை அடைவார் என்றும் கருத்தப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள் உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.

கல்வியில் இருக்கும்  சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்ல லாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள் ளைகள் பி.ஏ. பாஸ். செய்வதென்றால் பிள்ளை களுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18, 19, 20 வயதிற்குள் பி.ஏ. பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர் களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், அது பிராமணப்பிள்ளை. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம். அதனால் சீக்கிரம் வருவ தில்லை என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம்பிள்ளை களும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ்வொரு வகுப்பிலும் பாசு ஆகிக்கொண்டே போனா லும் எப்படியும் பி.ஏ. பரீட்சைக்கு போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறினால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருஷம் தவறினால் இருப்பதைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களாகி விடுகின்றார்கள். ஆனால் பார்ப்பனர் பிள்ளை களோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின் றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக்கூடத் திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின் றோம். 7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல் தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும் ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ.பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக் கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு அய்ந்து வருடமும், 4-வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம், அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய்தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தை களை 5-வது வயது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுபோய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள்.

தலைமை உபாத்தியா யர்கள் பார்ப்பனர் களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும் இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத் தையும் கேட்டுவிட்டு முதல் பாரத்திற்கு லாயக்கு என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு அய்ந்து வருடப் படிப்பும் காலமும் காலச்செலவும் மீதியாகி விடுகின்றன. 14 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் பாரத்தில் சேர்க்-கின்றார்கள்..

அந்த நிபந்தனையும்  இல்லாதிருக்குமா னால் மூன்றாவது பாரத்தில்கூட சேர்த்து விடு வார்கள். தவிர 18, 19இல் அவர்கள் பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25ஆவது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர்களுக்குச் சாவகாசம் இருக்கின்றது.

தொடரும்

சென்ற வாரத் தொடர்ச்சி

30.10.1932 - குடிஅரசிலிருந்து...

டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமுகங்களும் ஒற்றுமை யடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில்., எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர் களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.

இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக் களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும் என்று கோருவ தாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ் வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லீம் களுடைய மசூதிகளில் முலீம்கள் அல்லாத வர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லீம்கள் அந்நிய மதத்தி னரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத் தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும், எந்த மதத்தினர்களும் தாராள மாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய் விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா? என்று தான் நாம் கேட்கிறோம்.

சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என் றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல் லது கடவுளிருக் கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிர வேசத்தை ஆதரிக்க வில்லை. கோயில் களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறை யில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண் டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவே சத்தை முழுமனதுடன் ஆதரிக் கின் றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சி யையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.  (முற்றும்)

17.07.1932 - குடிஅரசிலிருந்து..

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப் பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ள தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நா கரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும் அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும். இதனால் இந்திய நாகரிகமே மூழ்கி விடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராய முடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக்கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும் அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும்.

சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார் அப்பொழுது அவர்,

பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்று தலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார் களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்தவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும். என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசி யிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டு மென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி கிறிஸ்துவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பியக் கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.

அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதப்பிராயம். மதத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமை புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமை புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களை பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆனால் தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்வி தான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதே யொழிய வாழ்க் கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்வி முறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமை புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.

நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத் தனமும், மூடநம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந் திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

- தந்தைபெரியார்

13.11.1932  - குடிஅரசிலிருந்து...

இந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசய மாயும்  ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை  வருத்தி செல்வம் பெருகிக் கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப் பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங் களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத் துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்ட வர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரி யாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமுகத்தை 2-வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து  போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தை யும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடு மென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி  பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரண தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார் களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

 

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

Banner
Banner