வரலாற்று சுவடுகள்

ராஜி

27.07.1930-  குடிஅரசிலிருந்து...

திருவாளர்கள் ஜயகர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக்கும், கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.

இம்முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொது ஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சி யைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப் படுகின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்குச் சலிப்பு தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசிய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது.

சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை தேசியவாதிகள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரி களும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்குச் சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.

நிற்க, திருவாளர்கள் ஜயகரும், சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்குத் திரு காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள். திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாட்சிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்களது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டார். இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப்பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியாதென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும்.

எனவே இந்த யோக்கியதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக்காரர்களும் காட்டும் உற்சாகத்திலிருந்து சத்யாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மையையும் இப்பொழுதாவது உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிய வருகிறது.
முன்னைய ஒத்துழையாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்பமும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதாயிருக்கின்றது.

என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்குப் பயந்தவனா னால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதா பிரியர்கள் சொல்லித் திரிவார்கள்.

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது. கிறிஸ்துவையும், மகமது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும்  அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படுகையில், அம்மத வித்தியாசங்கள் ஒழியவேண்டும் என்றும், மதக் கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்த வனேயாகின்றான். அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதியரல்லாதவர் காபீர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவைகளுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும்- பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காக பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒருபுறம் சிலர் கோடீஸ்வரராய்  இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந் தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்கவேண்டியதில்லை என்றும், அப்படியிருந் தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக்கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம்.

இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி. ஏனெனில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக் கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளை யாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங் களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ் விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.

‘குடிஅரசு' - கட்டுரை - 21.05.1949


அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத் தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி. முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக்கூடும்.

யார் யார் தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக்கிறாரோ என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் பிரம்மா எழுதின சங்கதி உத்தியோகம் போன பிறகுதான் தெரியும். எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ் வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக் காரர் என்றுதான் சொல்ல வேண்டும்! இது ஒரு புற மிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனமான பிறகுதான் தங் களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்ன ரையும் பிரம்மாவையும் போற்றவோ, தூற்றவோ போகிறார்கள்.

இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவது ஏமாற்ற மடைவதும், வெறும் மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர்களுடையவும், ஏமாற்றமடைகிறவர்களு டையவும் தலையெழுத்துக்களை மாத்திரம் பொறுத்த தாய்  இல்லாமல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர் பார்ப்பவர்களுடையவும் வரக்கூடாது என்று எதிர் பார்ப்பவர் களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுடையவும் தலையெழுத்துக்களை யும் பொறுத்திருப்பதால் இந்த தலையெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.12.10.1930- குடிஅரசிலிருந்து...
2500 ஜனங்கள் விஜயம் செய்தனர்.
நாட்டுக்கோட்டை வாலிபர் - பெண்மக்கள் ஊக்கம்
சகோதரிகளே! சகோதரர்களே!!

இன்றைய தினம் நாம், நீலாவதி - ராமசுப்ரமணியம் திருமணத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்கமாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம்மாதிரிக் கல்யாணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே  இருக் கின்றன. அறிவு கொண்டு உண்மை  நோக்கத்தோடு இவ் விருவரின் திருமணம்  நடைபெறப் போகின்றது. திருமணம்  நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளுமாறு மணமக்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். இங்கு எல் லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற திரு மணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடமையு மாகும்.

இப்பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிறதென்றால், ஒரு பெண்ணையும், ஆணையும் பிடித்து இருவரின் சம்மதமில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண் ணானவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி, நாத்தி, கொழுந்தன், புருஷன் ஆகியவர்களுக்கு என்றும் அடிமையாகவே இருந்து வரவேண்டியவளாயிருக்கிறாள். கல் லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று கூறிப் பெண்ணினுடைய வீரத்தையும், மனிதத் தன்மையையும்  அழிக்கப்பட்டிருக் கிறது.

நளாயினி, சீதை, சந்திரமதி முதலியவர்களைப் போல்  இருக்க வேண்டுமென்று பெண்களுக்குச் சொல்லப் படுகிறது. சந்திரமதியைப் போல் இருக்கவேண்டுமென்றால், கடனுக்காக புருஷன் தன் மனைவியை விற்றுவிடலா மென்றுதான் அர்த்தம், புருஷன் தன் மனைவியை விற்பனை செய்ய உரிமையுள்ளவன் என்றால், இதைவிடப் பெண்களுக்கு மரியாதை கெட்டதனம் வேறென்ன இருக்கிறது? சீதையைப் பற்றிய கதை ரொம்ப ஆபாசமானது.

சீதை நிறைமாத கர்ப்பமாய் இருக்கும்பொழுது காட்டுக்கு விடப்பட்டாளென்றால், அது எவ்வளவு மூடத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள். நளாயினி சரித்திரமும் ரொம்ப ஆபாசமானது. புருஷன் ரொம்பக் குஷ்டரோகி. அவன் தாசி வீட்டிற்குப் போக வேண்டு மென்று பிரியப்பட்டானாம். அவனைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் விட்டாளாம். இது எப்படி யிருக்கிறதென்றால் தாசி வீட்டிற்குப் போக லைசென் கொடுப்பது போலிருக்கிறது. புருஷனைத் தாசி வீட்டில் கொண்டு போய் விடுவது தான் பெண்ணின் கற்பா என்று கேட்கிறேன். புருஷன் தாசி வீட்டிற்குப் போக வேண்டுமென்று கூறினால், அவனை வெளியில் தள்ளி கதவைச் சாத்துவதுதான் சுயமரியாதை யுடையவளின் செயலாகும்.

ஒருவர்:- ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள் கையா? இந்துமதக் கடவுள்கள் பல மனைவி களையுடைய வர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க, மற்றொரு  மனைவி மணம்  செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.

திரு. இராமசாமி அவர்கள் பதில்  கூறியதாவது:-

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென்றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும் ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுய மரியாதை  இயக்கத்தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல.

தேவர்கள் சாப்பிடுகிறார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சு விடக்கூடாது என்பது முட்டாள்தனமாகும். பகுத்தறிவிற்கு  எது பொறுத்தமயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ள வேண்டுமென்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின்  நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனுடைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்து வராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையைப் பெண்ணுக்கும் கொடுக்க  ஆண் தயாராயிருக்கிறார். கல்யாணத்தைக் கத்திரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும் படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறித்தவர். கிறித்துவ மதச் சட்டப்படி ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும்.  எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த  இத்தம்பதிகள்  சிறந்து வாழ விரும்புகிறேன்.

 

28.09.1930- குடிஅரசிலிருந்து...

லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்கமானது இந்து சமுகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாசமென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது.

அடுத்த சென்சஸின் போது (ஜனத்தொகைக் கணக்கு கொடுக்கும் போது) இந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை. ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ்  கமிஷனரைக்  கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாத வர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதெனக் கேட்டுக் கொண்டதற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிராய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:-

பற்பல மாகாணங்களிலுமுள்ள  இந்து சமூகத்தினரில்  பலர் இந்து மதத்துக்கு  ஜாதி வித்தியாசம்  அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தி யாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு  இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்ட தென்றும் உணர்ந் திருக்கின்றனர்.

இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது.

அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றியிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சில ஆதாரங்கள் இப்போது அவசியமில்லை யென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.

ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிட லாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப் பட்டவர் களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாகா அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொள்ளு கிறோம்.

இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது. ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில்  ஒன்றுமில்லை  என்று குறிப்பிட்டுவிடுவதும் தவறாகாது.

ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாதாக்கள் ஜாதியைக் கூறும்படி கட்டாயப் படுத்தலாகாதென்றும், ஜனங்கள்  சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத்  தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர் களென்று  எதிர்பார்க்கிறோம்.Banner
Banner