வரலாற்று சுவடுகள்


24.08.1930-  குடிஅரசிலிருந்து...

சங்கராச்சாரி மதம் பவுத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றி னதும்,  வைணவ மதம் புத்த விக்கரகங்களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்த காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுபவைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல. என்று தோன்றும். ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதா இல்லலையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது, மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதைத் தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களைச் சைவர்கள் கழுவேற் றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களா லேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமை யைக் காட்டிக் கொள்ள வருஷந்தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற்சவங்கள் நடத்திக் காட்டப்படு கின்றன. அக் கோயில்களில் இன்றும் கழுவேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக் கிரகத்தை அழித்ததற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத் தைத் திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெருமையாகவும் எழுதி புண்ணிய சரித் திரமாகப் பாவித்து தினமும் படிக்கப்பட்டும் வரு கின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கை களை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப் படும் வாள் பிரசாரத்திற்குச் சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப் பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப் பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒழியப்பட்டார். என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக் கின்றன என்பது விளங்கும் இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது நாஸ்திகர்களை நாக்கறுக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும். நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்கின்றேன்?

மற்றும் இந்து வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும் மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும், என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன். மற்றும் பெரியோர் வாக்கைப் புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாதிக னாவான். அப்படிபட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்பனவாகிய வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டது.

ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண் டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த காலத்திய வேத மதக்காரர்களுக்குத் தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண் டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க் கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக் கிறார்கள்.  தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டா மையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றன.

இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழகங்களுக்கும் அதன் கூட்டங்களுக்கும் எப்படி ஒரு செல்வாக்கும், மக்கள் கூட்டங்களும் வருகிறதோ அதுபோல் குறளுக்கு, குறள் கூட்டங்களுக்கும் செல்வாக்கும், பெரும் கூட்டங்களும் வருகின்றன.

இல்லாவிட்டால் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத இந்த மாநாட்டிற்கு, அதுவும் நான் இன்று இங்கு வருகிறேன் என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் இத்தனை பேர் இங்கு வந்து கூடுவதென்றால் முடியக்கூடிய காரியமா? தலைவர் அவர்களும், அறிஞர் முனுசாமி அவர்களும் குறளுக்கு இன்றுள்ள இந்த மாதிரியான செல்வாக்குக்கு என்னையும் ஒரு  காரணமாகச் சொன்னார்கள். நீங்களும் அதை ஆமோதிக்கும் அறிகுறியாய் ஆரவாரம் செய்தீர்கள். குறளுக்கிருக்கிற செல்வாக்கு, விளம்பரம் காரணமாக பல பேருக்குக் குறளின் பேரால் புத்தகம் போட, பத்திரிகை போட, பிரச்சாரம் தெரிய நல்ல வாய்ப்பு, வியாபாரம்,  வருவாய் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காங்கிரசுக்காரர்கள், காங்கிரஸ் பிரச்சாரகர்கள் பலர்கூட, தங்கள் ஸ்தாபனத்திற்கோ, தங்கள் பேருக்கோ கூட்டம் சேருவதில்லை என்கின்ற காரணத்தால் குறளின் பெயரை உபயோகித்துக் கூட்டம் சேர்த்துக் கொள்கிறார்கள். குறளின் பேரால் புத்தகம், பத்திரிகை, கூட்டம் நடத்துகிறார்கள். பல காங்கிரஸ் கூலிகள் காங்கிரசின் பேரால் தங்களுக்கு மதிப்பு போய்விட்டது கண்டு, தமிழ், தமிழ் கலை, தமிழ் இலக்கியம் என்னும் பேரால் விளம்பரம் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கேயாகும்.

குறளுக்கும், தமிழுக்கும் இன்றைய தினம் உள்ள உணர்ச்சிக்கு நான் காரணம் என்பதையும், நமது திராவிடர் கழகம் என்பதையும், அடியோடு நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது சிறிது காரணம் இருந்தால் இருக்கலாம். ஆனால், பெரிதும் உண்மையானதுமான காரணம் இன்று மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞானமும், பகுத்தறிவும்,  சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரசின் மாபெருந் தலைவர்களான பானர்ஜி, மாளவியா, நேதாஜி, தாதாபாய் நவுரோஜி, சங்கர நாயர், விஜயராக வாச்சாரியா, திலகர், பெசண்டு முதலிய தலை வர்கள் தலைமையில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாடுகளில் பாராட்டப்பட்டு, நன்றி செலுத்தப்பட்டு, கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தப்பட்டு, காட்டி வந்ததான பிரிட்டிஷ் ஆட்சியானது சுமார் 200 வருட காலமாய் ஆட்சி  செய்ய நேர்ந்த காரணத்தால் நம்மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞான அறிவும், பகுத்தறிவு சுதந்திரமும் மக்களை சிந்திக்கச் செய்ததன் பயனாய் மக்கள் இன்று அந்தப் பகுத்தறிவுக் கண்களால் குறளைப் பார்க்க ஆரம்பித்ததால், இன்று குறளின் பெருமை மக்களுக்கு விளங்குகிறது.

குறள் இதுவரை ஒரு மத நூலாக, பக்தி நூலாக, பார்ப்பன நூலாகவே இருந்து வந்தது. சைவன் குறளை தங்கள் மதத்து நூல் என்றும், வைணவன் தங்கள் மதத்து நூல் என்றும், சமணன் தங்கள் மதத்து நூல் என்றும் சுய வயப்படுத்தி அதை ஒரு புராணமாகவும் பக்தி நூலாகவும் கருதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள்.

அது மாத்திரமல்லாமல் குறளுக்கு ஆரிய மத சம்பிரதாயப்படியே உரை எழுதப்பட்டு, அந்த உரையையே தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் சமயவாதிகள் ஆகிய எவரும் ஒப்புக்கொண்டு அந்த உரையே பள்ளிப்பாடமாகவும் ஆக்கப்பட்டு அதை மற்றொரு மனுதர்ம சாஸ்திரமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டுவிட்டது.

இந்தநிலையில்ஆக்கப்பட்டகுறளானதுபாரதம்,  இராமாயணம், கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவைகளைவிட எப்படி உயர்ந்ததாகக் கருதப்பட முடியும்?

குறளுக்கு மதிப்புரை எழுதியவர்களும், சில தமிழ்ப் பெரியார்களும் அதாவது, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றவர்களும் குறளுக்கும் மற்ற மேற்கண்ட ஆரிய நூல்களுக்கும் உள்ள பேதத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டியிருந்தாலும், இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது குறளையும் ஆரியத்தையும் பிரித்துக் காணுவதே மாபெரும் துவேஷ புத்தி என்பதான நிலையை ஏற்படுத்தி விட்டதால் தமிழ் புலவர்கள் என்று வெளிவந்த எல்லா தமிழர்களும் ஆரியத்திற்கு அடிமையாகி குறளை மனுதர்ம சாஸ்திரம் போலவும், கீதைக்கு அடுத்த பெருமை பொருந்தியது போலவும் ஒப்புக்கொண்டு ஆரியக் கூலிகள் அதுபோல் பிரச்சாரம் செய்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் குறளுக்கு ஒரு தனிமதிப்பு எப்படி ஏற்பட முடியும்? ஒரு முஸ்லிமும் ஒரு கிறித்தவனும், ஒரு பகுத்தறிவுவாதியும் - ஒரு நாஸ்திக ஞானமுடையவனும் அதாவது ஒரு தத்துவவாதியும் இப்படி ஆக்கப்பட்ட குறளை ஏன், எதற்கு ஆக மதிக்க முடியும்?

அதிலும் ஆரிய மதமான இந்து மத பக்தன் ஒருவனுக்கு,  தன்னை ஆரிய இனம் என்று கருதி ஆரிய அடிமையாய் இருப்பவனுக்கு குறளை, பாரத இராமாயணத்தைவிட அதிகமான மதிப்பு தந்து எப்படி மதிக்க முடியும்?

ஆதலால் மக்களுக்குள் இன்று தோன்றி யிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியும், திராவிட இன உணர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும் அதாவது ``நாஸ்திக’’ புத்தியுமே தான் குறளை ஆரிய வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் இருந்தும், அவை களை ஆதாரமாகக் கொண்ட தேவார, திருவாசக, பிரபந்தம் முதலிய சமயப் பக்தர்களின் கவிகளில் இருந்தும் பிரித்துக் காண முடிந்தது. இந்த முடிவின் காரணமாகவே குறளின் மேன்மை திடீரென்று விளங்கவும் மக்கள் பாராட்டவும் மதிக்கவும் அதனிடம் அன்பு செலுத்தவும் முடிந்தது.

குறள் பக்தி நூலல்ல;  கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூல் அல்ல, மதப் பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாடு நூலல்ல. ஆனால், வேதசாஸ்திரம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம் பிரபந்தம் முதலிய எவையும் மத நூல்;  கடவுள் பெருமையைக் கூறும் வேத சாஸ்திர நூல்கள்;  பக்தி ஊட்டி மோட்சத்திற்கு அனுப்பும் பக்தி நூல்களே ஆகும்.

குறள் அப்படி அல்ல;  குறள் அறிவு நூலே ஆகும். மற்றும் கடவுளை அடைய மோட்சத்திற்கு போக மனிதனுக்கு ஒழுக்கம் தேவையில்லை. ஏனெனில் விபசாரம் புரட்டு பித்தலாட்டம் வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை முதலிய கூடா ஒழுக்கமான காரியங்கள் செய்வதும், பக்தியின் பாற்பட்டதாகவும் மோட்ச சாதனமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன, பக்தி நூல்களிலும் சாஸ்திரங்களிலும் மத ஒழுக்க நூல்களிலும்!

இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் வெறுக்கப்பட்டு உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தை போதிப்பதாக இருக்கின்றது குறள். ஆதலால்தான் குறளை பக்தி நூலல்ல, ஆஸ்திக நூலல்ல, மூடநம்பிக்கை நூலல்ல, அது ஓர் அறிவு நூல் என்றும், எல்லா மக்களும் ஏற்கக்கூடிய எல்லாமக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்க நூல் என்கின்றேன்.

எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாக கொண்டதே ஒழிய, அதை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மை’’ என்பதையோ, இலக்கண இலக்கிய அளவையோ அமைப்பையோ ``அற்புதத்’’ தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது?

ஆகவே, குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரதியட்ச வழியையும் கொண்டதாகும்.

அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப் பாராட்டியே தீருவான். சிறிதாவது பின்பற்ற குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

ஆதலால் குறளுக்கு இன்று திராவிடர்கள் சிறப்பாக தமிழ் மக்கள் இடையில் பெருமையும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் இதுதான் காரணம். இந்தப் பெருமைக்கும் செல்வாக்குக்கும் நான் சிறிதும் காரணமான வனாகமாட்டேன் என்றாலும், எனக்கு ஏதாவது ஒரு சிறு பங்காவது கொடுக்கவேண்டுமென்று அறிஞர்கள் யாராவது நினைப்பார்களானால், அந்த சிறு பங்கு இந்த விஷயங்களை நானும் எனது கழகமும் மானாவமானத்தைக் கவனிக்காமல், சிறுமை - பெருமையைக் கவனிக்காமல்,  லாப, நஷ்டங்களை கவனிக்காமல், கஷ்ட சுகங்களை கவனிக்காமல், எழுதியும், பேசியும் வருகிறோமே அதற்கு ஆக இருக்கலாம். ஆனால், அதுவும் இன்று எங்களால்தான் முடிகிறது என்று சொல்ல முடியாது. அநேகர் புறப்பட்டு விட்டார்கள், இந்த வேலைக்கு. ஆதலால், குறளின் பெருமையைப் பற்றி இனி பேசுவதை நிறுத்திவிட்டு, இனி அதை காரியத்தில் கொண்டு வரும் பணியில் பிரவேசிக்கவேண்டியது தமிழர் - திராவிடர் ஒவ்வொருவரின் கடமையுமாகும். ஏனெனில், குறளுக்குப் பெருமை ஏற்பட்டு விட்டதால், இன்று குறளின் மூலக் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்து வருகிறவர்கள் எல்லாம்கூட இன்று குறள் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

உதாரணமாக, சைவர் -வைணவர் பார்ப்பனர் - தாசிகள் - வியாபாரிகள் - வக்கீல்கள் - மந்திரிகள் - சட்டசபை மெம்பர்கள் - சில காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் குறளைப் பாராட்டவும், குறள் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டுவிட்டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கும், குறளுக்கும் எதில் ஒற்றுமை என்பது நமக்கு விளங்கவில்லை.

ஒரு மனிதன் தன்னை இந்து என்றும், ஆரிய தர்ம புராணங்களை பின்பற்றும் சமயவாதி என்றும் சொல்லிக்கொண்டு, புராணக் கூற்றுப்படி, மனு கொள்கைப்படி நடந்துகொண்டு, அவரும் குறளைப் பாராட்டுகிறார், போற்றுகிறார், பிரச்சாரம் செய்கிறார் என்றால் இதற்கு ஏதாவது பொருள் உண்டா? இக்காரியத்தில் அறிவுடைமையோ அல்லது நாணயமோ உண்டா என்று கேட்கிறேன். குறள் பிரச்சாரம் போதும். இனி அது பயன்படும் காரியமும், குறளுக்கு முரண்பாடற்ற காரியமும், குறள் வெற்றி பெறும் காரியமும் ஒவ்வொரு குறள் பாராட்டுவாதியும் செய்யவேண்டும்.

எனக்குத் தெரிகிறது, சில குறள் பாராட்டு பக்தர்கள் நமது மேடையிலும் காணப்படுவது - கம்பராமாயண, பாரத, புராண மேடைகளிலும் காணப்படுகிறது. வள்ளுவரையும் பாராட்டுவது, கம்பனையும் -வால்மீகியையும் பாராட்டுவது; குறளையும் காலட்சேபம் செய்வது, திருவிளை யாடல், பெரிய புராணங்களையும் காலட்சேபம் செய்வது; குறளில் நுண்பொருள் காணுவது, தேவார திருவாசக பிரபந்தங்களில் நுண்பொருள் கண்டு கண்ணீர் சொரிவது.

குறளை தலைகீழ் பாடம் செய்து விஞ்ஞானத் துக்குப் பொருந்த பொருள் உழைப்பது, சாம்பல் பூச்சுடன், கொட்டை கட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்று குழவிக் கல்முன் நின்றும்படுத்தும் - புரளுவது; ஆரிய மத தர்ம பண்டிகைகளைக் கொண்டாடுவது; ஆரிய மதக் குறிகளை அணிந்து மத வேஷத்துடன் திகழ்வது.

யாராயும் இருந்துகொண்டு, எந்த வேஷமும் போட்டுக் கொண்டு, என்ன காரியமும் செய்து கொண்டு குறளைக் கூறிக்கொண்டு திரிவ தென்றால் இவர்கள் உண்மையில் குறள் பக்தர்கள் ஆவார்களா?

ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானானால், அவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைக்கும் எதிரானவனாக இருக்கவேண்டும். எந்தக் கருத்துகளை - கொள் கைகளை எதிர்க்க, ஒழிக்க குறள் ஏற்பட்டதோ - குறளைப் பயன்படுத்துகிறானோ, அந்தக் கருத்துகளை எதிர்த்து, கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.

அதற்கு குறள் பக்தர்கள், குறளைப் பாராட்டுகிறவர்கள், குறள் கொள்கையைப் பரப்புகிறவர்கள், குறளுக்கு ஆக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தவர்கள் குறள் வெற்றிக்கு ஆக சில ஆக்க வேலை செய்ய வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் குறள் வெற்றிக்கு எதிரான காரியங்கள், கருத்துகள், ஆதாரங்கள், நூல்கள் ஆகியவை ஒழிய அழிவு வேலையும் கூடவே செய்பவர்களாக இருக்கவேண்டும்.

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்கள் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலை மாத்திரம் செய்தால் எதிர் சாதனங்கள், நிர்மாணத்தை அழித்துக்கொண்டே இருக்கும்.

கடவுளைக் காக்க கடவுளுக்கு எதிரான நாஸ்திகம் அழிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, பகுத்தறிவைக் காப்பதற்கு மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, சைவ, வைணவ, ஆரிய மதங்களைக் காப்பதற்கு பவுத்த மதத்தை அழிக்க வேண்டியிருந்தது எவ்வளவு அவசியமோ, தொழிலாளி ஆட்சி ஏற்பட முதலாளிகள் ஆட்சி அழிபடவேண்டியது எவ்வளவு அவசியமோ, முதலாளிகள் ஆட்சி ஆதிக்கம் நடைபெற தொழிலாளிகள் இயக்கம் அழிபட வேண்டியது எவ்வளவு அவசியமோ, தனி உடைமைவாதிகள் காப்பாற்றப்படுவதற்கு பொதுவுடைமை வாதிகளை நாசமாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, ஆரிய ஆதிக்க மென்னும் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு - ஆதிக்கத்திலிருப்பதற்கு திராவிடர் கழகம் ஒழித்துக்கட்டப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே குறள் கருத்து, கொள்கை ஆகியவைகளை மக்களிடம் பரவச் செய்ய அது அனுபவத்தில் நடைமுறையில் கொண்டு வருவதற்கு ஆரிய சாஸ்திர - புராணங்கள் அவைகளை பிரபல பிரச்சாரமாகக் கொண்ட தேவார, திருவாசகம், பிரபந்தங்கள், அந்த கருத்துகளை செய்கைகளை நடப்பாகக் கொண்ட மதக் கோட்பாடுகள், அவைகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கின்ற கடவுள்கள் முதலிய வைகள் ஒழியாமல் அழியாமல் - நாசமாக்கப்படாமல் எப்படி குறள் கொள்கை அனுபவத்தில் நடைமுறையில் ஆதிக்கம் செய்யமுடியும்?

ஆகவே, குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, குறள் ஆக்கவேலைகளாகும். அதற்கு (குறளுக்கு) எதிரான மேற்கண்ட கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்கு ஆகச் செய்யப்படும் அழிவு வேலையாகும். ஒரு காரியத்திற்கு ஆக ஆக்க வேலையும் அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உண்டாவதுபோல் - காரியம் நடைபெறுவது போல் - ஆக்கமும் அதற்கெதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அழிவில் வெற்றி பெற்றவன்தான் ஆக்கத்தில் வெற்றிபெறுவான்.

ஆகவே குறளைப் பரப்ப குறளின் மேன்மையை எடுத்துச் சொல்வதும், குறள் மாநாடு கூட்டுவதும், குறள் புத்தகங்கள் - பத்திரிகைகள் நடத்துவதும் போலவே குறள் கருத்துக்கு எதிரான ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் முதலாகியவைகளின் கேடுகளைப் பற்றி பிரசாரம்செய்ய, இவை ஒழிப்பு மாநாடு, இந்த கருத்துகளை நடப்புகளை எடுத்துக் கூறுதல் இந்த ஆதாரங்கள் ஒழியும் படி செய்தல், அதன் நடப்புகளை எதிர்த்து மக்களிடையிலிருந்து மறையும்படி செய்தல் முதலான காரியங்களை மக்கள் செய்ய வேண்டாமா?

குறளுக்கு எதிரான காரியங்களாகிய மேற்கண்ட தன்மைகளைப் பரப்புகிறவர்கள் - அதாவது மனுதர்மம், புராண, இதிகாசம் ஆகிய வைகளை பரப்புகிறவர்கள் அதற்கு ஆக எவ்வளவு முயற்சியுள்ள ஆக்கவேலையும், அதன் எதிர்ப்புகளை அழிக்கும் அழிவு வேலையும் செய்கிறார்கள் என்பதை சற்று கவனியுங்கள்.

முதலாவதாக பார்ப்பனப் பிரசாரங்களையும், பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரச்சாரங்களையும், பார்ப்பன அதிகாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள், ஓட்டல்காரர்கள், புரோகிதர்கள் அர்ச்சகர்கள் முதலியோரின் வேலைகளையும் சற்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் நம்மையும், நமது முயற்சிகளையும் நமது பண்பு, முன்னேற்றம், சுதந்திரம், உரிமை ஆகியவைகளை ஒழிப்பதையும் அழிப்பதையுமே அதாவது, மாபெரும் நாச வேலையையே தங்கள் ஆக்கவேலைப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

அய்க்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் முதல் நமது முயற்சிகளை அழிக்கும் வேலையையே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டு நடக்கிறார்கள்.

இராமாயணம், கீதை, பாரதம், புராணங்கள் பிரச்சாரமாகத்தானே இருக்கின்றது அவர்கள் வாழ்வு. பார்ப்பனர்கள் உத்தியோக முறையில் நமக்கு எவ்வளவு கேடு செய்கிறார்கள்? அவர் களது ஆட்சியில் நமது மக்களுக்கு எவ்வளவு கேடுகள் நடக்கின்றன?

ஒரு சங்கதி எடுத்துக் கொள்ளுங்கள்; உணவு விஷயத்தில் தொழில் விஷயத்தில், நமது மக்கள் ஏழைகள் - தொழிலாளிகள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?

இந்த நாட்டில் எந்தப் பார்ப்பனருக்காவது உணவு, உடை, வீடு, வேலை, கஷ்டம், உண்டா? நாம் தான் ``6 அவுன்ஸ்’’, ``வேலை இல்லை’’, ``கூலி இல்லை’’, ``பட்டினியால் சாகிறோம்‘’, ``பிள்ளையை விற்கிறோம்‘’ என்றெல்லாம் பரிதவிக்கிறோம்.

எந்தப் பார்ப்பனக் குஞ்சுக்காவது இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு சிறு குறைபாடோ அதிருப்தியோ கவலையோ உண்டா? காரணம் என்ன? அவர்களுக்கு மாத்திரம் எப்படி இவ்வளவு கஷ்ட காலத்திலும் அவ்வளவு நல்ல வாழ்வு நடந்து வருகிறது?

இதெல்லாம்,  மதமும் - மனுதர்மமும், இராமாயண, பாரத, கீதையும் தானே? அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? நிற்க. இராமாயணத்திற்கு நம் நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு மதிப்பு இருக்கலாமா? இராமனும், கிருஷ்ணனும், சீதையும், விபீஷணனும், அனுமாரும் நமக்குக் கடவுள்களாக இருக்கலாமா?

தேவாரம், திருவாசகம், பிரபந்தம் நமக்குப் பாராயணங்களாக இருக்கலாமா? நாமமும், விபூதிப் பூச்சும் நமக்கு பக்திச் சின்னமாகவும் இருக்கலாமா, அதுவும் இந்தக் காலத்தில்? குறள் பக்தர்களில் எத்தனை பேர் இவைகளை எதிர்த்து இவைகள் மறைந்து ஒழிய வேலை செய் கிறார்கள்? குறளைப் பேசிக்கொண்டு இந்த வேலைகளையும் செய்துகொண்டு இருப்பானானால் வலது கையால் செய்யும் காரியத்தை இடது கையால் அழித்துக்கொண்டு போகிறான் என்றுதானே அர்த்தம்.

அட முட்டாள்தனமே! இராமாயணம் நமக்கு ஒரு தெய்வ நூலா? அதில் என்ன இருக்கிறது? திராவிட நாசத்துக்கு வழிகாட்டியாகக் கற்பிக்கப்பட்ட நூல் அது. அதற்குத் தலையும் இல்லை, காலும் இல்லை. தேவர்களுக்கு ஆக அசுரர்களை, அரக்கர்களை, இராக்கதர்களை அழிக்க கடவுள் மனிதனாக - இராமனாகப் பிறந்து அரக்க வம்சத்தை அழித்தார் என்பதுதானே சுருக்கக் கருத்து. தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? எந்தத் திராவிடனாவது - தமிழனாவது சிந்தித்தானா? இராமயணப்படியே பார்த்தாலும் இராட்சதர்கள் என்கிற ஒரு ஜாதியோ இனமோ பிறவியோ காணப்படவில்லையே, தேவர்களுக்கு எதிரிதானே இராட்சதன் - அசுரன் - அரக்கன் - சூரன்களாகப் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.

தேவர்களுக்கு எதிரிகள் யார்? மனு தர்மப்படி நடக்காதவன், வர்ணாசிரமத்தை ஒப்புக்கொள்ளாதவன், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இல்லாதவன் என்றுதானே புராண இதிகாசங்களில் மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக விபீஷணனை எடுத்துக்கொண்டால் தேவர்கள் எங்கே? ராட்சதர்கள் அனுமார்கள் எங்கே? இவர்கள் எல்லோரும் சகோதரர்களுக்கு துரோகம் செய்து எதிரிகளிடம் சரணாகதி அடைந்து கூலி பெற்றதாலேயே தேவர்களுக்கு மேம்பட்ட ஆழ்வார்களாக ஆகி இருக்கிறார்கள். சென்ற வாரம் 2 நாள் சுதேசமித்திரனைப் பார்த்தேன். அதில் 1 நாள் மித்திரனில் விபீஷணன் சரணாகதியும். மற்றொருநாள் மித்திரனில் விபீஷணன் பட்டாபிஷேகமும் என்கிற தலைப்புகளில் 4 கலம் 5 கலம் இராமாயண பிரச்சாரம் இருந்தது. இதன் கருத்து என்ன வாய் இருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதுவும் இந்த சமயத்தில் பார்ப் பனர்களுக்கு அடிமையானால் சரணாகதி அடைந்தால் பதவி கிடைக்கும் பட்டாபிஷேகம் பெறலாம் என்பதுதானே கருத்து.

அந்த விசயங்களை பார்ப்பனர் நம் மக்களுக்கு பச்சையாய் சொல்லுவதற்கு பதிலாக, முதல் நாள் சரணாகதி படலமும், 2 ஆம் நாள் பட்டாபிஷேகப் படலமும் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பேர் என்ன? நம் ஆக்க வேலைகளை அழிப்பதுதானே அவர்கள் நோக்கம். நாம் அந்த ஆயுதங்களை சாதனங்களை அழிக்க வேண்டாமா?

விபீஷணன் யார்? இராவணன் தம்பி - இராவணன் ஆபத்தான நெருக்கடியான நிலைமையில் இருக்கும்போது அவன் இராஜ்யத்தை அடைவதற்காக துர் எண்ணங் கொண்டு அண்ணனின் எதிரிக்கு, அண்ணனை காட்டிக் கொடுப்பதற்கு ஆக துரோக வஞ்சக எண்ணத்துடன் அண்ணன் எதிரியிடம் சரணாகதி அடைந்து காட்டிக் கொடுத்து கூலி பெற்றவன்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? மறுக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் விபீஷணனைப் பற்றி மேலே நான் குறிப்பிட்ட சொற்கள் நான் சொல்லுவதல்ல, ``விபீஷணன் இராஜ்யத்திற்கு ஆக என்னிடம் வந்திருக்கிறான்’’ என்பதை மிகத் தெளிவாக இராமன் கூறுகிறான். ``என்றால் இராவணனை நாசமடையச் செய்து அவன் இராஜ்யத்தைத் தான் அடைய வேண்டுமென்று விரும்பி என்னிடம் வந்திருக்கிறான்’’

``தனது காரியம் கெட்டு விடுமே என்கின்ற பயத்தால் எனக்குக் கெடுதி செய்யாமல் இருப்பான் ஆகையால் இவனை சேர்த்துக் கொள்ள லாம்.’’

``இவன் பலவானான இராவணனிடமிருந்து தனக்கு ஆபத்து வருமே என்று அறிந்து பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்திருக்கிறான் என்று இவனுடைய தொனியாலும் வார்த்தைகளாலும் தெரிகிறது. ஆதலால், இவனை ஒப்புக் கொள்ளுவதால் யாதொரு கெடுதலும் வராது.’’

``தனது மூத்தவன் துஷ்டனாயிருந்தாலும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வராது.’’

``உடன்பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?

``ராஜ்யம் பரதனுக்கு நியாயமாய் கிடைத்ததாகும். அதை வேண்டாம் என்று கருதி என்னைக் கண்டுபிடித்துவந்து எனக்கு கொடுப்பது என்றால் இது பரதனைத் தவிர வேறு யார் செய்வார்கள்?’’ என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொண்டு இருக்கிறான். இந்த வாக்கியங்கள் இந்தப்படியே வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 17-இல் இருக்கிறது. (சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு யுத்த காண்டம் பக்கம் 76, 77-இல் உள்ளதாகும்.)

சுக்ரீவன் சொல்கிறான்: இந்த விபீஷணன் நன்றியற்றவன். தன் தமையன் இப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கும் போது அவனைக் கைவிட்டவன் - எவனைக் கைவிட மாட்டான்? என்கிறான்.

அனுமான் சொல்லுகிறான்: இராவணனுடைய முயற்சி தோல்வி அடையுமென்பதையும் தங்கள் முயற்சி வெற்றி அடையு மென்பதையும் தாங்கள் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராஜ்யத்தைக் கொடுத்ததையும் பார்த்து, தானும் இலங்கா இராஜ்யத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கே வந்திருக்கிறான். ஆகவே இவனை அங்கீகரிக்கலாம் என்கிறான்.

சாம்பவன் கூறுகிறான்: விபீஷணன் நம்மை வந்தடைவதற்கு ஏற்ற காலமல்ல இது. தனது எஜமானும் சகோதரனுமான இராவணனுக்கு ஆபத்து நேர்ந்திருக்கையில் அவனைக் கைவிட இதுதானா சமயம்? எப்படி யோசித்தாலும் இவனை நம்பக்கூடாது. என்கிறான். விபீஷணன் இராமனைப்பார்த்து சொல்லுகிறான், ஸ்வாமி என்னை நம்புங்கள். ராட்சதர்களை நாசஞ் செய்வதிலும் இலங்கையைப் பிடிப்பதிலும் என் உயிருள்ள மட்டும் என்னால் கூடியதைச் செய்கிறேன். தங்கள் சைன்னியத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்.

(சருக்கம் - 18 பக்கம் 92)

இவ்வளவு சங்கதி எதற்கு ஆக? விபீஷணன் வாயாலேயே அவன் மனதில் இருந்த பேராசை துரோகக் கருத்துகளைப் பச்சையாகக் கொட்டி விட்டான். அதாவது, இராமனும் லட்சுமணனும் நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையான சமயத்தில், ``இராம - லட்சுமணர்களுடைய வீரியத்தை அண்டிநான் க்ஷேமமடையலாம் என்று இருந்தேனே, என் எண்ணங்கள் எல்லாம் வீணாகி ராஜ்யம் கிடைப்பதும் போய்விட்டதே, இராஜ்யத்தை இழந்து பரிதவிக்கிறேனே, இனி எனக்கு விபத்து ஏற்படுமே. என் சத்துருவான இராவணன் வெற்றி பெற்றுவிட்டானே!’’ என்று புரண்டு அழுகிறான்.

``சுக்கிரீவன் தேற்றுகிறான்; ``விபீஷணா, துக்கப்படாதே!  இலங்கா இராஜ்யம் உனக்குக் கிடைப்பதில் சந்தேகமில்லை’’ என்று சொல்லி சமாதானம் சொல்லித் தேற்றினான்.

(இவை வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம், சருக்கம் 49 இல் 203-ஆம் பக்கம்)

இது மாத்திரமல்லாமல் அண்ணன் உயிருடன் இருக்கும்போதே அவன் இராஜ்ஜியத்தை அண்ணன் எதிரிகளால் தனக்கு பட்டாபிஷேகம் செய்யும்படி செய்துகொண்டு, அண்ணனின் உளவுகளையெல்லாம் இராமனுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். இப்படியான துரோகியும் அயோக்கியனுமான விபீஷணனைப் பார்ப்பனர்கள் அந்தக் குணங்களுக்கும் காரியங்களுக்கும் ஆகவே எவ்வளவு போற்றி புகழ்ந்து விபீஷணத் தன்மையை பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் எத்தனை விபீஷணர்களை உண்டாக்கிக் கொண் டார்கள். மற்றும் இராமாயணக் கதை முழுவதும் இதுபோலவேதான் துரோகம், வஞ்சனை மயமாய் இருக்கும்.  இது மாத்திரமல்லாமல் பாரதம்,  கீதை முதலியவைகளும் இப்படியே ஆபாசங்களாக இருக்கும். கீதையைப் பற்றி பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் ``கீதை முட்டாள்களின் பிதற்றல்கள்’’ என்றார். இவற்றை யெல்லாம் நாம் நம்மிட மிருந்து அழிக்க வேண்டாமா? குறளுக்கு மதிப்பு வந்து விட்டது என்றால், மற்றவைகளை - அதாவது குறளுக்கு எதிரானவை ஒழிய வேண்டும். ஆகவே அவற்றை ஒழியுங்கள். நாமத்தையும் விபூதியையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். 1951 ஆம் ஆண்டு குறள் பிரச்சாரமாக இவற்றைச் செய்யுங்கள்.’’

6.1.1951 அன்று திருச்சி தென்னூர் குறள் மாநாட்டில் தந்தை பெரியார் உரை (`விடுதலை', 13.1.1951).

சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து

26.10.1930 -  குடிஅரசிலிருந்து...

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியர் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப் பட்டவர். அவர் சமுக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும் , கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில்  என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதிகளையாவது, சர்க்காரையாவது,

சட்டசபை களை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரச்சாரம் செய்ய வேண்டு மென்று தன்னால் கூடியவரை தான் சட்ட சபையில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமுக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும்  அவர்களது பத்திரிக்கை களும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

நாம் இந்தப் பித்த லாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய ஸ்தானங்களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங் களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத் திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும். அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கர்ப்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவது போல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதி யாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

நாடார் முன்சீப்பு

26.10.1930 -  குடிஅரசிலிருந்து...

சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத்தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தி யோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத்திற்கு முன்பாகவே முன்சீப் லிடில் தாக்கல் செய்யப்பட்டவர்.

இந்நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப் பட்டதன் மூலமே கிடைக்கப்பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காராகவே தான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக் கிறார்கள்.

சப்-ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜியாகவோ பிரிட்டீஷ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்று தான் சொல்லவேண்டும். நாடார் சமுகத்திற்கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறித்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய்விடுகின்றார்கள்.

நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண்விழித்து கிறித்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களைக் கிறித்தவர்களுக் குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும்படியும், தங்கள் சமுகத்திற் குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மதம் காப்பாற்றப்படவேண்டும். ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடா தென்றும், இந்த நிபந்தனையின் மீதே சுயராஜ்யமும் சுயேச்சையும் பெற விரும்பும் ஸ்தாபனங்களும், கிளர்ச்சி களும் நடக்கும்போது நாடார் சமுகம் போன்ற வகுப்பார்கள் தங்கள் உரிமை பெறுவதில் மிக்க கவலையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியதுடன் அந்தப்படி தாராளமாய் பல்லைக் கெஞ்சாமலும் மனசாட்சியையும் கொள்கைகளையும் விற்காமலும் தானாகவே கிடைக்கும் படியாக அரசாங்க இயந்திரத்தில் தக்க மார்க்கம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும்.

இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை. எது வரையும் ஜாதிப் பிரிவும், மதப்பிரிவும், அவைகளுக்கு ஏற்றத்தாழ்ச்சி உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்றனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல்கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம்.

சுயராஜ்ய அரசாங்கம் ஏற்பட்டால் எல்லாம் சரியாய் விடும். ஆகையால் அதுவரை யாரும் தங்கள் உரிமை கேட்கக் கூடாதென்று சிலர் அதாவது இப்போது தங்கள் உரிமைக்கு மேலாக பலன் அனுபவித்துக் கொண்டிருக்கின்றவர்களும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டியவர்களும் சொல்லுவார்கள்.

அதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் இப்போது இருப்பதைவிட சுயராஜ்ய அரசாங்கம் என்று சொல்லுவதில் வகுப்பு உரிமையும், மத உரிமையும் அதிகமாகத்தான் வலியுறுத்தி, என்றும் மாறாமல் இருக்கும்படி பந்தோபஸ்து செய்ய வேண்டியிருக்குமேயொழிய இதைவிட சிறிதும் குறைவாயிருக்காது என்று கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம்.

ஏனெனில் சுயராஜ்ய கவர்ன்மெண்டில் ஜாதியையும் மதத்தையும்  பற்றியக் கொள்கை என்னவென்பதையும் அதற்காகப் பல மதக்காரர்கள் இடமும், பல வகுப்புக் காரர்களிடமும் இதுவரையும் இப்போதும் செய்து கொண்டு வந்திருக்கும் ஒப்பந்தத்தையும் ராஜியையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நிற்க இம்மாதிரி வகுப்பு  வாரி உரிமைக்குப் பார்ப்பனர்களைப் போலவே கிறித்த வர்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சிற்சில இடங் களில் சொல்ல வருவார்கள்.

ஏனென்றால் பார்ப்பனர்களைப் போலவே தாங்களும் (கிறித்தவர்களும்) அதிகம் பேர் படித்திருப்பதாகவும் கிறித்தவ ஜன சங்கைப்படி தங்களுக்கு உத்தியோகம் கொடுத்தால் அது மிகவும் போறாததாகி விடும் என்றும் ஆகையால் தாங்கள் அரசாங்க மதத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் சலுகைமேல் அதிக உத்தி யோகம் பெறுவது இந்த வகுப்புவாரித் திட்டத்தினால் குறைந்து போய் விடுமென்றும் கருதி சொல்லுவார்கள். இதையே மற்றும் இம்மாதிரியான இரண்டொரு வகுப்பும் சொல்லக் கூடும்.

ஆனால் வெகு காலமாய் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வைத்திருக்கும் மக்களுக்குக் கண்டிப்பாய் இந்த வகுப்புரிமைத் தவிர வேறு கதியே கிடையாதலால், அவர்களும் மற்றவர்களைப்போல் வரும்  வரையிலாவது  இதை வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவர்களது கடமையாகும். சர்க்கார் உத்தியோகம் பெறுவது அடிமைத்தனம் என்றுகூட சிலர் சொல்ல வருவார்கள்.

அதையும் யாரும் கவனிக்கக் கூடாது. ஏனெனில்  சுயராஜ்யமே உத்தியோகம் பெறுவதற் காகத்தான் கேட்கப்பட்டது. இன்று நாம் கேட்கும் சுயராஜ்யமும் உத்தியோகம்தான். அதாவது அதிகாரம் செய்வதும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும்தான். ஆதலால் இதை நம்பி முட்டாள்களாய் விடக் கூடாது என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ராஜி

27.07.1930-  குடிஅரசிலிருந்து...

திருவாளர்கள் ஜயகர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக்கும், கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.

இம்முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொது ஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சி யைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப் படுகின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்குச் சலிப்பு தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசிய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது.

சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை தேசியவாதிகள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரி களும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்குச் சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.

நிற்க, திருவாளர்கள் ஜயகரும், சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்குத் திரு காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள். திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாட்சிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்களது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டார். இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப்பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியாதென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும்.

எனவே இந்த யோக்கியதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக்காரர்களும் காட்டும் உற்சாகத்திலிருந்து சத்யாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மையையும் இப்பொழுதாவது உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிய வருகிறது.
முன்னைய ஒத்துழையாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்பமும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதாயிருக்கின்றது.

Banner
Banner