வரலாற்று சுவடுகள்

13.11.1932 - குடிஅரசிலிருந்து....

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேச பக்திக் கிளர்ச்சிக்கும், ஜாதியக் கிளர்ச்சிக்கும், அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்விதக் கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதன் பேரால் சோம்பேறி வாழ்க்கைப் பிரியர்களாலும், பேராசைக்காரர்களாலும் நடத்தப்படும் போட்டி வியாபாரங்களே இன்று தேசியமாயும், ஜாதியுமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர, அவற்றுள் நாணயமோ, உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடித்துக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகிறதென்றும் வாழ இஷ்டமிருக் கின்றவர்கள் அதற்கு தகுந்த படி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்போதைய பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.

கட்சிகள் என்றால் என்ன?

கேள்வி: கட்சிகள் என்றால் என்ன?

விடை: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிர கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.

கேள்வி: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?

விடை: சேராது!

கேள்வி: ஏன்?

விடை: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக் கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பொன்மொழிகள்

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங் களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

- தந்தை பெரியார் பொன்மொழி

27-07-1930 - குடிஅரசிலிருந்து...

தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் சென்று சுயமரி யாதைக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்பு ணர்ச்சியை உண்டாக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையினை மனதில் பதியும்படி எடுத்துரைத்தார். அதன் விளைவாக சிங்கப்பூர் தமிழர்கள் பெரியாரின் கொள்கை களை உள்ளடக்கி தமிழர் சீர்த்திருத்த சங்கம் ஏற்படுத்தினர். அச்சங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பற்றிய செய்தியினை குடிஅரசு இதழ் வெளியிட்டது. அது வருமாறு:

21-04-1930இல் சிங்கப்பூரில் கூடிய தமிழ் மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் இவ்வூரில் சீர்திருத்தக் கொள்கையோடு ஒரு தமிழர் சீர்திருத்தச் சங்கம் ஒரு சுயமரியாதைச் சங்கம் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்வதைப் பற்றி யோசிப்பதற்காக 13-07-1930ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-30 மணிக்கு இவ்வூர் பிரபல வர்த்தகரும், தனவந்தருமான உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் தலைமையில் இந்தியச் சங்க கட்டிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடந்தது. இவ்வூர் பிரபல வியாபாரிகளும், தலைவர்களுமாக சுமார் 150 பேர்களுக்கு மேல் விஜயம் செய்திருந்தனர். தலைவர் உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் சங்கத்தின் நோக்கங்களையும், அவசியத்தையும் குறித்து முகவுரையாக கூறியதாவது:-

அன்பார்ந்த சகோதரர்களே!

அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த நீங்கள் எல்லாம் கூடியிருக்கும் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கும்படி பிறப்பித்த கட்டளைக்கு நான் மனப்பூர்த்தியாய் நன்றி செலுத்திக் கொள்ளுகிறேன். இன்று கூடியிருக்கும் இக்கூட்டத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி நான் அதிகமாக விவரித்துக் கூறவேண்டியதில்லையெனக் கருதுகிறேன். அதாவது சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இச்சங்கத் திடலில் கூடிய சிங்கை தமிழ் மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் தமிழ் மக்களாகிய நமக்கு இவ்வூரில் சீர்திருத்தக் கொள்கையோடு ஒரு சங்கம் நிறுவ வேண்டியதைப் பற்றி யோசனை செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கெனவே இக்கூட்டம் கூடியிருக் கிறோம். மேல்சொன்ன ஏப்ரல் மாதக் கூட்டத்தில் என்னையும், திருவாளர்கள். பா. கோவிந்தசாமி செட்டியார், கோ. இராமலிங்கத்தேவர், அ. சி. சுப்பையா, சா. கோபால் ஆகியவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து மேற்படி சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் எடுத்துக் கொள்ளும்படி தீர்மானிக்கப்பட்டது - அதன்படி நாங்களும் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்பதை உங்களுக்கு முன்னதாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இவ்வூரில் நம் தமிழ் மக்களால் நிறுவப்பெற்ற பல சங்கங்கள் கொஞ்ச காலத்திலேயே மூடிவிடப்பட்டருக் கின்றனவென்பது நீங்கள் ஒவ்வொருவரும் நேரில் அறிந்த விஷயமாகும். இப்படி ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் இச்சங்கங் களெல்லாம் போதிய ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்டு சங்க வாடகைகூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதேயாகும். 4, 5 மாதங்களுக்கு சேர்ந்தாற்போல வாடகை தங்கியிருந்தும் சங்கத்திலிருந்து பணம் கொடுக்க சக்தியின்றியும், பொது ஜனங்களிடம் பணம் வசூலித்து வாடகை கட்டிய சங்கங் களும் பல உண்டு. இதிலிருந்து வாடகைக் கட்டிடங்களில் ஆரம்பிக்கப்படும் சங்கங்களுக்கு எப்பொழுதும் ஆபத்து இருந்துகொண்டு தானிருக்குமென்பது விளங்குகிறது. ஆகவே, நாம் எல்லோருமிருந்து ஆரம்பிக்கப்படும் சங்கம் இவ்விதமான சங்கடங் களுக்கு ஆளாகாமலும் பிறர் பார்த்து பரிகாசம் செய்யாத வண்ணமும் இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகுமென்பதை நான் உங்கள் யாவர்க்கும் தெரிவித்துக் கொள்ள வேண்டியதில்லையென நினைக்கிறேன். தமிழன், கூலிக்காரன் இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நமது சகோதரர்களாகிய இலங்கையரும் வட இந்தியரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த இலங்கையரும், வட இந்தியரும் முற்பட்டு செய்யும் எந்த காரியத்திற்கும் தென்னிந்தியர்களாகிய நம்மால் மற்ற எல்லோரையும்விட அதிகமாகப் பணம் கொடுக்கப்படுகின்றது - இதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அதிகமான தொகை கொடுத்தாலும் நம்மை தமிழன், கூலிக்காரன், என்ன தெரியும் என இழிவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறார்கள். இவர்களெல்லாம் இவ்விதம் நம்மை இழிவுபடுத்திக் கூறுவதற்குக் காரணம் நாம் பொது விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமலும், அதிகமாய் ஈடுபட்டு வேலைகள் செய்யாமல் இருப்பதுமேயாகும். இனியும் நாம் இவ்விதமே இருந்துகொண்டே இருப்போமேயானால் நமது சுயமரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டவர்களாக மாட்டோமென்பதல்லாமல், அறிவு உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு நியாயமாய் உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய ஸ்தானத்தை நாம் என்றும் அடைய முடியாது. ஆகையினால் நாம் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான பொது விஷயங்களில் பிறரின் தூண்டுதலும் வற்புறுத்தலுமின்றி முன்னணியில் வந்து நின்று இயன்ற அளவு தொண்டாற்ற வேண்டியது மிகவும் அவசியமென்பதை ஒவ்வொரு வருக்கும் நான் வணக்கமாய் விண்ணப்பித்துக் கொள்ளுவதுடன் நீங்களும் பொது ஜனத் தொண்டில் உங்கள் பங்கைச் செய்ய முற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சமுதாயச் சீர்திருத்தத் துறையில் நாம் செய்யவேண்டிய தொண்டுகள் பல உண்டென்பது நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்த விஷயமாகும். இத்துறையில் இது காலை நமது தாய்நாட்டில் வேலை செய்துவரும் சுயமரியாதை இயக்கத் தையும், அதன் உயரிய கொள்கைகளையும் நோக்கங் களையும் நீங்கள் யாவரும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தாய்நாட்டில் நம் மக்கள் ஈடுபட்டுக் கையாளும் அவ்வளவு மூடவழக்க பழக்கங்களும் இந்நாட்டில் கைக் கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களிடையில் சீர்திருத்தக் கொள்கைகள் பரப்ப வேண்டுமானால் இடையறாதப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். பிரசாரம் செய்வதற்கு ஓர் சங்கம் அவசியமிருத்தல் வேண்டும். அச்சங்கத்தை நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டியதே இக்கூட்டத்தின் முக்கிய கடமையும் காரியமுமாகும். இவ்வூரில் ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்கள் மூடிவிடப் பட்டதின் காரணங்களை நான் முன்பே தெரிவித்துவிட்டேன். எனவே, நாம் நிறுவப்போகும் சங்கத்திற்கென ஓர் இடம் சொந்தமாயிருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். இவ் விஷயத்தைப் பற்றி நாங்கள் பலதடவை கலந்து ஆலோசித்து இச்சங்கத்திற்கென நானும் உயர்திரு பா. கோவிந்தசாமி செட்டியார் அவர்களும் சேர்ந்து ஓர் கட்டி டத்தை வாங்கிக் கொடுத்து விடுவதென தீர்மானித்தி ருக்கிறோம். உயர்திரு. கோவிந்தசாமி செட்டியார் அவர்கள் சீர்திருத்த இயக்கத்தில் கொண்டுள்ள பற்றுதலுக்கும் ஊக்கத் திற்கும் தயாள குணத்திற்கும் நான் மனமார்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக் கிறேன். கட்டிடத்தைக் கூடிய சீக்கிரம் வாங்கி  முடித்துவிடுகிறோம். சங்கத்தையும் அடுத்த மாதம் அதாவது ஆவணி மாதம் பத்துப் பன்னிரண்டு தேதிக்குள் நிறுவிவிட வேண்டுமென விரும்புகிறேன்.

நிற்க, நாம் ஆரம்பிக்கப் போகும் சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் சிலவற்றை உங்கட்குச் சொல்ல விரும்புகிறேன்.

1.            மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம தருமத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

2.            பெண்களுக்கு உரிமை அளித்தல்.

3.            அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

4.            சிக்கன முறையைக் கைக்கொள்ளுதல்.

5.            அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல் ஆகியவைகளே குறிப்பிடத்தக்கன. இவையாவும் நீங்கள் ஒவ்வொருவரும் மனப்பூர்த்தியாய் விரும்பும் சீர்திருத்தங்களே யாகுமாதலால் இச்சங்கம் நிறுவுவதற்கான யோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ள விஷயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்படி உங்கள் யாவர்களையும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறேன் என் பேசிமுடித்தார்.

முகவுரை முடிந்ததும் நிறுவப்போகும் சங்கத்திற்கு பெயரிடுவதை பற்றி பல நண்பர்கள் பேசியபிறகு தமிழர் சீர்திருத்த சங்கம் என்று பெயரிடுவதாய் தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

02.02.1930 - குடிஅரசிலிருந்து...

ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரி கையில் சில விஷயமும் காணப்படுகின்றது.

அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ் தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் தமிழ்நாடு பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப்பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய்க் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறை வேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்துவிட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால், நம்மைக் கேட்காமல் திடீ ரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை. என்று சொன் னார்கள். இதை அனுசரித்து திரு.ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பி விட்டார். இருந்தபோதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டாலும் அக்கொள்கையைக் காப்பாற்றவேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதே நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்தோம். இந்தக் கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக்கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப்படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜென்டு திரு.காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்க்கு மேலாகவே வசூல் செய்தனுப்பப்பட்டது. நமது மைத்துனர் திரு.மாப்பிள்ளை ராமசாமி, ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப் பட்டதாக அவர் சொன்னார். இது தவிர, இக்கேசு சம்பந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருக்கும் ஜாகை சௌகரியம், சாப்பாடு ஆகிய வைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது. திரு.ஈஸ்வரனுக்கும் அவரது சினேகிதர்களுக்கும் கேசு ஆரம்பித்த காலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளிவந்த மறுநாள் வரை சாப்பாடு நமது வீட்டில்தான் நடந்துகொண்டு வந்தது; வருகிறது. அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில்தான் சாப்பிட்டு வருகிறார். தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ் வக்கீல் களையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இன்னும், இதுவிஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதனால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்டுக்கு வந்துவிட்டுப் போனதற்குக்கூட நாம்தான் மலாய் நாட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம். மலாய் நாட்டுக்குப் புறப்படும்போதும் ரயிலேறியபின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத்தான் பயணம் சொல்லிக்கொண்டோம், இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு.கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப் போகும்போது நமது வீட்டில்தான் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். கோவிலுக்குள் இருந்தபோதுகூட நாம் ஊரில் இல்லாவிட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள்.

இவ்வளவு காரியங்களையும் பெற்றுக்கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும், யாரையும் உதவி செய்யவிடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைக்கப்பட்ட திரு.பி.வரதராஜுலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேற நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும்.

செய்துவிட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை. நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்குப் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால், நாம் ஒன்று ஒப்புக் கொள்ளுகின்றோம். அதாவது இக்கேசுக்குப் பணம் கொடுக்கும்படி பொதுஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஓர் அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு. காரணம் கேசுக்கு அதிக பணச் செலவில்லை. ஏனெனில் சாப்பாடு நம்முடையது. வக்கீல்களுக்குப் பீசு கிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும்தான் வேண்டியது. இதற்கு அதிக மான பணம் தரவேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல் கண்டபடி ஒரு தடவைகூட இல்லை என்று சொல்லாமல் பணம் கொடுத்திருக் கின்றோம். அடிக்கடி பொது ஜனங்களைப் பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்து விடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம். மற்ற காரணங்களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூறுகளையும், நஷ்டங்களையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுவந்த நமது சகிப்புத் தன்மையும் பின்னால் விவரமாய் எழுதுகிறோம். ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகுவீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும் தமிழ்நாடு திரு.பி.வரதராஜுலு, திரு.ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாற்றியதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா என்றாவது, இதுமாத்திரமல் லாமல் வேறு எந்த சத்தியாக் கிரகத்திலாவது கையெழுத்தும், வாக்குத் தத்தமும் செய்து நாணயமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப் பார்த்தால் இவ் வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படுவாரென்றே சொல்லுவோம்.

எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை

என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட

யோக்கியதை அற்றவனாவான்.

28.09.1930- குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கிய மாய் இதற்காக வேண்டியேதான் ஆத் மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படு கின்றோம். இது போலவே மண மகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண் ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனு பவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண் டும். தனக்கு அடிமைக் காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.

இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டு மானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப் பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங் களே பெரிதும் மனிதத் தன்மைக் கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண் களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண் ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவ தாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத் தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது. அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண் களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண் கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.

இப்பொழுது பெரும்பான்மையான தெய் வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமண மாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்ட தாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந் தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.

இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையா னாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.

இதற்கு முன் பக்குவமான சாந்தி முகூர்த்த மான விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.

வேறு ஜாதியில் ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப் பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது.

ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப் பட்டிருக்கிறார்கள். அடிமை களுக்கு லட் சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் முடியாது போ, உன் வேலையை பார் என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட தூக்குவதற்குள் என்னய்யா அவசரம் என்பார்கள்.

ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டு மானால் அமிதமான கொள் கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டி ருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.

14.12.1930 - குடிஅரசிலிருந்து...

ஜாதிப்பெயர் கொடுக்க

வேண்டிய அவசியமில்லை

சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்ச சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண்டுக்கு அனுப்பிய விண்ணப் பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரிவித்திருக் கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்பதென்ன வென்றால்,

ஜாதி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டு மென்னும் விஷயத்தில் கவர்ன்மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை செசன்ச குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற் கில்லை. ஆனபோதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள்கையை உண்மையாய் அடியோடு விட்டு இருக்கின்றவர்கள். தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக்கணக்கு எடுப்பவர்கள் (அதாவது  என்யூமிரேட்டர்கள்) ஒப்புக் கொண்டு அந்தக் காலத்தில் ஜாதியில்லை அதாவது சூடை என்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார் நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்கே இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.

ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திர மல்லாமல், அனுபவத்திலும் பாராட்டாமலிருக்கின்ற வர்கள் தைரியமாய் என்யூமிரேட்டர்கள் - கணக் கெடுப்பவர்களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது (சூடை) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.

அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லை யென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக் கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாக வேண்டு மென்று கேட்டால் பகுத்தறிவு மதம் என்று சொல்லி விடலாம்.

ஆதலால் யாரும் சர்க்காருக்குப் பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.

 

தந்தைபெரியார் பொன்மொழிகள்

* சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

* உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்?

Banner
Banner