வரலாற்று சுவடுகள்


சிறீவரதராஜுலு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :-ஜஸ்டிஸ் கட்சியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்... ஜஸ்டிஸ் கட்சியின் ராஜிய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங் களாகப் பாடுபட்டு வருகிறார்.

நாயக்கர் பிரச்சாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது...

கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?

பிராமணர்களை தேசியக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...

என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார்.

இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப் பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்ப னர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமையானது இதை யெல்லாம் எழுதச் செய்கின்றது.

ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக் கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவை களை நாம் எழுதுகிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக்கின்றது என்பதை முதலில் காட்டி, பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பாரா னால் அது ஆண்மையும் யோக்கியமும் பொருந்தின காரியமாயிருக்கும்.

ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இல்லாதிருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கு ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது ஸ்ரீ வரதராஜுலு போன்றார் பார்ப்பன வால்களாயிருந்து கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள்உளவாயிருப்பதால் தமிழ் மக்களுக்கு சுயமரி யாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.

12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் நயவஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீ நாயுடு வேலை செய்தது என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற் காகவா தனது சுயநலத்துக்காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காகப் பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியையாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லாதிருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை பூதக் கண்ணாடி கொண் டாவது காணமுடியுமா என்று கேட்கின்றோம்.

நாயக்கர் பிரச்சாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். போன தேர்தலில் ஸ்ரீ வரதராஜுலுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள்.
தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

ஸ்ரீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர் இராஜினாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும் படி செய்ததும் பொது ஜனங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரச்சாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக்கட்டையாயிருக்கின்றது என்று சொல் வது தேசியம் என்றால் என்ன? அதற்காக யார் எந்தவிதமான பிரச்சாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றி குடிஅரசு சுமார் ஒரு நூறு, இருநூறு தடவை ஸ்ரீ வரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசிய வீரர்களைக் கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை ஸ்ரீ வரதராஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது தேசியத்திற்கு வியாக் யானம் சொன்னவர்கள் அல்ல. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசியத்திற்கு முட்டுக்கட்டை என்பது ஏமாற்றுப் பிரச்சாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.

ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத்துரோகம் செய்தது என்பது  இதைப் பற்றி இதே மாதிரி பார்ப்பனர்களும் ஸ்ரீ வரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக்கிறோம். அதற்குச் சமாதானம் சொல் லாமல் மறுபடியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண் ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.

ஸ்ரீ கிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக்கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி., சர் கிருஷ் ணசாமி, சர். ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீ வெங்கட்ட ராம சாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேசபக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அப்படிக்கில்லாமல் தேசத் துரோகம் என்று எழுதுவது வயிற்றுப் பிழைப்புக் காகச் செய்யும் இனத்துரோகமேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

பிராமணர்களை விலக்க முடியாது என்பது ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப் பனர்கள் சேர்க்காவிட்டாலும் ஸ்ரீ வரதராஜுலுவின் ஆயுள் வரை வரதராஜுலு பார்ப்பனர்களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம்.

எனவே ஸ்ரீ வரதராஜுலுவின் இவ்வாக்கியங் களிலிருந்து அவர் எவ்வளவு தூரம் தனது சமுகத்தாரின் கேடுக்குத் தயாராயிருக்கிறார் என்பது முதலியவை களை விளக்கவே இதை எழுதுகிறோமேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரச்சாரத்தில் ஏதாவது விளைந்து விடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவரவில்லை என்பதையும் தெரிவிக்கின்றோம்.

பெரிய அக்கிரமம்

25.03.1928- குடிஅரசிலிருந்து...

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர் களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய் யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டன வாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி.ராஜ கோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார்களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என் பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவை களுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதி நாராயண செட்டியா ராகவாவது வெகு சீக் கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர் களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண் டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமை யாகும்.

தர்மத்தின் நிலை
08.04.1928- குடிஅரசிலிருந்து..

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ் தரான ஸ்ரீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத் தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லா தாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யா ணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங் கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகி விட்டதை யும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர் களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெ னில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தா ருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண் டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக் கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற் பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண் ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பன ரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.

01.09.1929 - குடிஅரசிலிருந்து...

சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை (டிபன் பாக்ஸ்)த் தொட்டுவிட்டான், உடனே பார்ப்பனரல் லாதார் தருமத் திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின் டெண்டெண்டிடம் போய் முறையிட்டான்.

அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பிவிட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை. தன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம் மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பி விட்டது.

ஆகையால் அப்பார்ப்பன சூப்பரின்டெண் டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள சித்தாந்தம் ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு பாலசுப்ரமண்யம் அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம். நம் பார்ப்பன முதலியாராகிய திரு.பாலசுப்பிர மணியத்திற்கு பெரும் சீற்றம் உண்டாய்விட்டது. அவருடைய பெருத்த கொழுத்த உடம்பு துடித்தது. கொண்டுவா பார்ப்பன மாணவனின் சாப்பாட்டுப் பேழையைத் தொட்ட பார்ப்பன ரல்லாத மாணவனை என்றார்.

பழைய காலத்து அயோத்தி ராமன் காட்டில் தவம் செய்த சூத்திரனை எவ்வாறு கொன்றானோ, அவ்வாறே சித்தாந்தப் பார்ப்பன முதலியாரும் பார்ப்பன மாணவன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனைக் கடிந்து வெருட்டி ஆறு அடி அடித்தாராம். பாவம் ஏழைப் பார்ப்பனரல்லாத மாணவன் என்ன செய்வான்? அடி பொறுத்துக் கொண்டான்; கோர்ட்டிற்குச் சென்று சித்தாந்த ஆசிரியர் மேல் கிரிமினல் வழக்குத் தொடுக்கலாமென்றாலோ, வயிற்று சாப்பாட்டில் இடி விழுந்துவிடும், கையிலோ பணம் இல்லை, ஆகையால் சித்தாந்த ஆசிரியர் தப்பித்துக் கொண்டார். இல்லாமல் போனால் ஒரு கை பார்த்து விடலாம்.

சித்தாந்த ஆசிரியர் பி.ஏ.பி.எல். படித்திருந் தும், தமிழில் பெரிய புலவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தும் என்ன பயன்? சிறிதாவது சுயமரியாதையாவது, உணர்ச்சியாவது அன்றி பகுத்தறிவாவது இருந்தால் இவ்வண்ணம் செய்வாரா? ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் பார்ப்பான் சாப்பாட்டுப் பேழையைத் தொட்டால் என்ன தீட்டு வந்து விட்டது? இதை ஆய்ந்து நோக்கினாரா? சித்தாந்த ஆசிரியர் சரியான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால் அப்பார்ப்ப னரல்லாத மாணவனுக்கு நேர்ந்த அவமானம் தனக்கும் தன் வகுப் பாருக்கும் நேர்ந்ததென்று கருத வேண்டாமா? இத்தகைய சுயமரியாதை யற்ற அறிவுகெட்ட பார்ப்பனரல்லா பாலசுப்பிர மணியங்கள் இருந்தால் ஏன் பார்ப்பனர்கள் வருணாச்சிரமக் கொழுப்பு பிடித்தாட மாட்டார்கள்? என்று தான் இவருக்கு சுயமரி யாதை உணர்ச்சி உண்டாகுமோ? அன்றுதான் இவரை நாம் அசல் பார்ப்பனரல்லாதார் என்று கருதுவோம்.

இனி மணலி விடுதியில் மட்டுமல்ல. எங்கும் பார்ப்ப னரல்லாத மாணவர்கள் இவ்வாறுதான் துன்புறுகின்றார்கள். இவர்கட்கு எப்பொழுதுதான் விடுதலை பிறக்குமோ? நம் சுயமரியாதை அரசாங்கம் வந்தால் விடுதலை! விடுதலை!! என்று திராவிடன் 28. 8. 29 வெளியீட்டிற் கூறப் பட்டுள்ளது.

பார்ப்பனனின் சோற்றைத் தீண்டிய பார்ப்பன ரல்லாத மாணவர் இந்நாகரிக காலத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சட்டதுரந்தாரர் திருவிலாப் பாலசுப்பிரமணியத்தின் கசையடிக் கிலக்காயினார்.

இவரது சித்தாந்தமும், சட்டப்பயிற்சியும், ஒரு மாணவரை இச்செயல் பொருட்டுக் கசைகொண் டடிக்கும்

முடிவைப் பற்றியதெனில், அந்தோ, இவரது சைவ சித்தாந்தத்திற்கு நாம் மிகவும் இரங்குகின்றோம். மாட்டு மலத்தை உண்டு, மாட்டுச் சிறுநீர் பருகி, மாட்டு மலத்தைச் சாம்ப ராக்கி அங்கம் முழுதும் பூசி, கொட்டையணிந்து, லிங்கத்திற்குப் பூசை புரியும் இச்சித்தாந்த ஆசிரியரிடம், வயிற்றுக்குச் சோறின்றி இவ் விடுதியில் அபயம் புகுந்த ஒரு மாணவர் மீது, கருணையினையும், நீதியினையும் நாம் எதிர்பார்ப்பது மிகவும் மடமையே. பூணூல் தரித்த பார்ப்பனனிலும், பூணூல் தரியா இப்பார்ப்பனனை நாம் கல்லென்போமா, மரமென்போமா, இரும்பென்போமா, அல்லது காடு வாழ் விலங்கென்போமா? என்னென்போம்? மதவெறிகொண்ட சித்தாந்திகளிடம் நாம் கருணையை எதிர்பார்க்கவில்லை. ஆயின் சட்டம் பயின்ற ஓர் மனிதரிடம், ஆண்பிள்ளை யினிடம், நற்குடும்பத்தில் உதித்தாரிடம் நடுநிலை மையை எதிர்பார்க்கின்றோம். நடுநிலைமையற்று, ஆண் தன்மையற்று தன் பயிற்சியெல்லாம் இரண்டு எழுத்துக்கள் என்னும் முடிவிற்கே ஒப்படைத்துவிட்டதன் பயனாய், பரவிய எண்ணம் அற்று, பார்ப்பனியத்தையும், அத னைப் பாதுகாக்கக் கசை அடியையும் கைக் கொண்ட, சித்தாந்தம் ஆசிரியர் இனியேனும் தம் மூளையில் சிறிது அறிவும், மனதில் கருணையும் பிறக்குமாறு இவர் தன் வழிபடு கடவுளாகிய லிங்கத்தை வணங்கித் துதிப்பாராக. பார்ப்பன ரல்லாத ஒரு மாணவர் கசையடியேற்ற ஒரு கொடுமையை ஏனைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் கண்டும் வாளாவிருந்திருக் கின்றனர். பொறுமை கடலினும் பெரிதென்பர். ஆயினும் சுயமரியாதை இவ்வண்டத்தினும் பெரிது; சித்தாந்தத்திலும் பன்மடங்கு பெரிது; இவ்வாசிரியர் அறிவிலும் ஒழுக்கத்திலும் ஓராயிரம் மடங்கு பெரிது என்பதை நாம் நம் வகுப்பு மாணவர்கட்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம்.இக்கொடுமையை எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும், நாம் அமைதியை இழப்போம் என்றஞ்சு வதனால், இதைப் பற்றி விரித்துரை வரையாது விடுக்கின் றோம். பார்ப்பனரல்லாதார் இத்தகைய செயல் களைக் கண்டும், கேட்டும் எத்துணை நாட்கள் தாம் சும்மாவிருக்கப் போகின்றனர் என்று கேட்கின்றோம். (ப-ர்.)

சுயராஜ்யக் கட்சி செத்தது,
அது நீடூழி வாழ்க!
27.05.1934- புரட்சியிலிருந்து...

சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேரில்லை யென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த தீட்டு வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு காங்கிரசே சட்டசபை களுக்குப் போட்டிபோட வேண்டும்.
ஆனால் சுயராஜ்யக் கட்சியின் பிரமுகர் களே சட்டசபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண் டார்கள்.

இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப் போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேட்சகர்களாகத் தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.  

சட்டமறுப்பு இயக்கம்
20.07.1930 - குடிஅரசிலிருந்து...

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

றைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது.

ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும் படியாகி விட்டது.

மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணி யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக் கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள்  (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.

ஜாதிக்கென்று தொழில் செய்வதால் தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.


இ.பி.கோ. 124-கி செக்ஷன்படி தொடரப்பட் டுள்ள ‘பொதுவுடைமை’ பிரச்சாரத்திற்காகவும் ‘இராஜ நிந்தனை’ என்பதற்காகவுமுள்ள வழக்கு கோவை யில் 12 ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் நி.கீ. வெல்ஸ் மி.சி.ஷி. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட் மெண்ட்:

என் பேரில் இப்போது கொண்டு வரப்பட்டி ருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.

2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.33 தேதி “குடி அரசின்” தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.

3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக் காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.

4. என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக் காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியா சத்தின் விஷயத்திலாவது, பதங் களிலாவது, நோக் கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.

5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச்செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவ தில்லை யென்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெரும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும் உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.

6. நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளா தாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டு மென்பது அப்பிரச் சாரத்தின் முக்கிய தத்துவமாகும்.

7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காக செய்யப் பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.

8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ, பிரசாரத்திலோ, அதற்காக நடை பெறும் ‘குடி அரசு’ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாக்கா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிர சங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கைகளையும், சுமார் பத்து வருஷத்திய “குடி அரசு” பத்திரிகையின் வியாசங்களையும் சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படி யாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக் கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தீர வேண்டிய வர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும் படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரச்சாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவை இருப்பதாக கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட் டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப் பட்டாலும் பொதுவாக என் மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால் அப்படிப் பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கி விட வேண்டு மென்றே இந்த ஸ்டேட் மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்கு பலமேற்படக் கூடுமாத லால் என் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்ட னையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித் தாலும் சரி அல்லது இந்த பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத் தையும் லக்ஷியம் செய்து வழக்கைத் தள்ளி விட் டாலும் சரி இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

சுயமரியாதைக்காரர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள்; சகலத் தையும் நடுநிலைநின்று ஆழமாகிப் பார்ப்பவர்கள். படித்த அறிவாளிகள் பண்டி தர்கள் முதலிய யாரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவ டைந்தவர்கள்.

நம் சமுகத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொதுநல வேடமிட்டுக் கொண்டு இருந்தால், அவர்கள் தமிழர்களாயிருந்தாலும் அவர் களெல்லோரும் தமிழர்களுக்கு எதிரிகளே மனிதனுக்கு மனிதன் சரிசமமாக நடத்தப்பட வில்லை யென்றால் இதைத் தடுப்பதைத் தவிர வேறு பெரிய வேலை நமக்கு இப் பொழுது என்ன இருக்கிறது?

இன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது மக்களிடம் உள்ள கடவுள், மூடநம்பிக்கையால், ஜாதிமுறைகளால், மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமை யைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாடுகளில் மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்படுவது அங்கு ஜாதிபேதம் இல்லாத காரணமே.

சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
18.11.1934 - பகுத்தறிவிலிருந்து...

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த ஆனந்த லாகிரியில் மெய் மறந்து பேசிய பேச்சு:-
எனக்குள் சில சமயங்களில் பிராமணர் - பிராமணரல்லாதார் என்கின்ற உணர்ச்சி வந்தது.

ஆனால் இப்போது அது மறந்து

போயிற்று. பிராமணரல்லாதார் எனக்குச் செய்த இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

என் சரீரத் தோலை உரித்து பிராமணரல் லாதாருக்கு செருப்பாய் தைத்துப் போட்டாலும் கூட அது சரியான நன்றியாகாது என்று பேசியிருக்கிறார். லாகிரி தீர்ந்தால் என்ன பேசுவார் என்று எழுத வேண்டுமா?

முடிந்து போன விஷயமாம்!
02.12.1934- பகுத்தறிவிலிருந்து...

கும்பகோணத்தில் தேர்தல் கொண்டாட்டம் கொண்டாட வந்த தோழர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களைக் கூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள்.

அதாவது இந்திய சட்டசபை மெம்பர் ஆகிவிட்டதற்காக இவ்வளவு பிரமாதமான வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுகின் றீர்களே! நீங்கள் எல்லோரும் அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட் டார்கள். அதற்கு ராஜ கோபாலாச்சாரியார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார். அதாவது இது முடிந்து போன விஷயம். எப்படியோ ஒரு விதத்தில் நாங்கள் ஜெயித்து விட்டோமாகை யால், முடிந்து போன விஷயத்துக்கு இனி கேள்வி கேட்கவோ பதிலளிக்கவோ இட மில்லை என்று சொல்லிவிட்டாராம். எந்த விதத்திலோ காரியம் கைகூடின பிறகு வெற்றி பெற்றவர்கள் சொல்ல வேண்டிய பதில் இது தான். அவர்களது தைரியத்தை கண்டு நாம் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.


நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆம் தேதி

ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை. ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்ட கையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.

4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

முன், தலைமை வகிக்க விருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார்.

அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங் களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப் பட்டது. பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.

தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.

மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லா விட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப் பிடத்தக்கதாகும்.

சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.

சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.

அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்க ளுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.

வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம்.தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.

மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.

நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடுகளும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப் படுகிறோம்.

விதவையிலும் பணக்காரனியமா?
04.02.1934 - புரட்சியிலிருந்து...

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய்

27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும். இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.

கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலை மையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமண ரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப் போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறுகிறோம்.

கேள்வி முறை ஏது?
04.02.1934 - புரட்சியிலிருந்து...

சென்ற சட்டசபையில் கூட்டத்தில் இனாம்தார்கள் குடிகள் சம்பந்தமாக ஒரு மசோதா செய்யப்பட்டதை எல்லாவிடங்களிலும் கண்டித்துத் தீர்மானங்கள் அனுப்பப்படுகிறது.

பத்திரிகையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையை விட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது.

சர்க்கார் இம்மசோதாவுக்கு ஆதரவு காட்டிய போதிலும் அதைப் பயன்படா தடிக்கச் செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம் தார்கள்தான். பெரும்பாலும் பத்திரிக்கையைப் படிக்கும், ஆதரிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.

இனாம்தார்கள் குடிகளில் பெரும்பான்மை யானவர் களுக்குத் தங்களுக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கக் கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிற தென்பதே தெரியாத விஷய மாகும்.

இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அறியும்படிச் செய்ய சர்க்கார் விளம்பர அதிகாரி களாவது முயல வேண்டும்.

தந்தை பெரியார்
பொன்மொழிகள்

* ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மை தான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப்போய் விடுவ தில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது.

* கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது. செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.

*  மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை. இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.

தற்காலம் நமக்கு வேண்டியதென்ன?

04.02.1934 -புரட்சியிலிருந்து...

தற்காலம் நமது நாட்டிற்கு வேண்டியது. வர்ணாசிரமமாகிற மக்களுக்குள் (ஆண் டானடிமை உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாடுகளை விருத்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற சமத்துவக் கொள் கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக்குள் பரப்பி வரவேண்டுமா? ஆகிய இந்த இரண்டு கேள்வி களைப் பற்றி நமது மக்கள் நிலை மையையும், அந்ததையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு மக்கள் நிலை மையையும் அந்தஸ்த் தையும் கவனித்துப் பார்த்தால் நம் நாட்டின் மக்களுக்கு இத்தரு ணத்திற்கு வேண் டியது எது என்பது விளங்கா மற் போகாது.

ஆகையால் வர்ணாசிரமம் ஒழிந்த சமத்துவக் கொள்கை யாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும். ஏனெனில். நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பிடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய் வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், ஜாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தற் காலிகத் திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந் தேயாகும்.

உதாரணமாக வர்ணாசிரம பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லாத) கிறித்தவ, முகம்மதிய, புத்த என்கிற வைகளுக்குட்பட்ட ஜன சமுகத்தார் இன்றைக்கும் அரசாட்சி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்று மைக்குட் படாத முன் சொன்னவர்களால் ஆளப்படுவோர்களாக வாழ்விலும், பேச்சிலும், எழுத்திலும் நடத்தை அனு பவம் முதலியவை களிலும் சுதந்திரங்களை இழந்து அடிமைகளா கவும் அறியாமையில் சூழப்பட்ட வர்களுமாக வாழ்ந்து வருவது நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். இன்னமும் சொல்லப் போனால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரிக முதிர்ச் சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதே யில்லாமல் ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த் தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடுகூட ஒழிந்து யாவரும் சமமென் பதைக் காண்கிறோம்.

இப்படியாக மேன்மேலும் நாகரிகம் விருத்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலை யடைந்து சமுகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்தி களுக்கு முள்வேலி இட்டது போலுள்ளதற் கேற்றபடி யாகிற வர்ணாசிரம தர்மம் இருக்க வேண்டு மென்றும் அதன்பயனாக ஒரு சிலர் கொடு மைக்குள் ளாக்கப்பட்டுவிட்டார்கள், அவர் களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணா சிரமத்துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டு மென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களாலியன்ற வைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வதுவென்று சொல்லப்படு கின்றதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவரா யினும் அவரை நம்நாடு தற்போதிருக்குமிவ்வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பகிஷ்கரிக்கலாமா? வென் பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்.

இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக் கிறோமா வென்றால் வர்ணாசிரமங்களை நிலைநாட்டி வைப் பதற் கென்றே பரம்பரையாக இருந்து வருபவர் களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச் சாரியாரும்கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார். - உதாரணமாக,

பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர் கூர்ந்து கவனிக்க வேண்டு கிறோம்.

அதாவது காந்தி ஒரு இந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லையென்று வேதங்களில் 259 ஆதாரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆரா தனை யொழிப்புக்காரரான ஆர்ய சமாஜத்தா ரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக் கிறார் என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிரா விடர்களுக்கு ஆலய பிரவேசம் வேண்டுமென பலத்த பிரச்சாரம் செய்கிறார் களென்றும், மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன், என் அபிப்பிராயம், அப்படித்தான் செய்ய வேண்டு மென்பதுதான் வீரர்கள் வழக்க மென்றும் இயேசு கிறித்து, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தி யோ வருணாசிரமம் உண்டு, ஆதி திராவிடருக்குக் கோவில் பிரவேச உரிமையும் வேண்டும் என்று சொல்லுவது வீரர் வாழ்க்கை யாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக்கூடாதென்றும், கூறி மேலும் குறிப் பிட்டதாவது நாஸ்திக தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும்.

அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையைப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பூரி சங்கராச்சாரியார் அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார் என்பதாகும்.

மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப் போகி றார்களோ, அத்திருக்குலத்தடியார்களையே ஹரிஜனங்க ளென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னை யிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலை யாள நாடுகளிலும் விருது நகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங் களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்கத் தாங்கள் வேண்டுவதில்லை. எண்ணாயிரம், பதினாயிரம், லட்சம் கையெழுத்திட்ட அறிக் கைப் பத்திரங்களையும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக்கிறது.

இது மட்டுமல்ல இன்னும் இப்பெரியாருக்கு இவர் செல்லு மிடங்களிலெல்லாம் பகிஷ்காரங் களும் நிகழுமென்பதற்கு அநேக அறிகுறி களும் காணப்படுகின்றன.

நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டி ருக்கிற இப் பெரியார் பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்விதச் சுற்றுப் பிரயாணங் களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல் களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டு வது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

  

குழந்தை வளர்ப்பு

25.11.1934 - பகுத்தறிலிருந்து...

குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலையே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அந்தந்த தாய் தகப்பன்மார்களைவிட அர சாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல்நாட்டில் ஒவ் வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக் கென பொதுவிடங்கள் அமைத்து அங்கு சில ஆயா மார்களை நியமித்து சுகாதார முறைப்படி குழந் தைகள் வளர்க்கப்படு கின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் சொந்த பொறுப்பிலும் ஆயாமார்களை நியமித்து குழந்தைகள் மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கப்படுகின்றனர்.

சுருங்கக்கூறின் மேல்நாட்டில் ஏழை முதல் எல்லா பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆயா மார்கள் மூல மாகவே வளர்கின்றன. மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஒரு ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்து விட்டுத்தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந்திருந்தாள்.

இதற்குக் காரணம் என்ன வென்று கேட்டதில், தன் குழந்தையை வளர்க்கத்தான் மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன் னார்.

இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆயாமார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தை களுக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியே சுகா தாரமும் தேகாரோக்கியமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன. நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை.

நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும் வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகிறார்கள்.

மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கியமாய் கவனிக்க வேண்டி யதாகும். அதோடு பிரசவப் பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

(20-11-1934-ல் ஈரோடு சுகாதார கல்வி வாரக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து..

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டு வதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன.

இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு புதுக் கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனு மதித் திருக்கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்று கின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள் தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம். பழைய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விடவில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்ட மான காரியமல்லவா? தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக் கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.

தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை  தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ் வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சி களும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்க ளையும் முழுமூடர்களாக்கிவருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?

Banner
Banner