வரலாற்று சுவடுகள்

28.02.1948  - குடிஅரசிலிருந்து...

வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக் காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - பாட்டாளி மகனுக்குத் துணை செய்ய முன்வராது. அதன் இயல்பும் அதுவல்ல.

நம் நாடும் எதிர்காலத்தில் அமைத்துக் கொள்ளப்போகும் அரசியல் முறை இது.

இன்று வரியால் பிழைக்கும் அரசியல் முறையில், பாட்டாளி மக்களையும், அவ்வரிக் கொடுமைக்கு ஆளாக்கும் போது கொடுமை! கொடுமை என்ற கூக்குரல் உண்மையொலி யோடு அடிவயிற்றிலிருந்து எழுந்து முழங்கப் படுவதைக் கேட்கிறோம். இக்கொடுமை தொலைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதாபிமானம் உள்ளவனும் நினைப்பான்.

இந்த நிலையோடு, இந்நாட்டில் பார்ப்பனர் களுக்குக் கொடுத்துவரும் வரிகளையும் சேர்த்து எண்ணும்போது, அரசாங்க வரிகொடு மைக்கு முன்னால் உஞ்சிவிருத்திக் கூட்டம் மக்கள் உழைப்பை உறிஞ்சிவரும் கொடுமை முதலில் ஒழிய வேண்டுமென்றே வஞ்சகம் - தன்னலம் இல்லாத எந்த அரசியல்வாதியும் எண்ண முடியும் - எண்ண வேண்டும்.

அரசாங்கத்திற்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் எண்ணிக்கை வரையறையும் இதற்குண்டு.

ஆனால், பார்ப்பானுக்கு வரி கொடுப் பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் இல்லை; வரையறையும் இல்லை. இந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற வனாய் சூத்திர பட்டியலில் இருக்கும் எல்லோ ருமே எத்தகுதியுடையவர் களாய் இருந்தாலும் கொடுத்து வருகின்றார்கள் எப்படி?

1. குழந்தை பிறந்தால், அது பிறந்தவுடனே பார்ப்பனனுக்கு வரி (தட்சணை) கொடுக்க வேண்டும். இல்லையேல் குழந்தை நலமுடன் வளராது.

2. குழந்தை பிறந்த 16 ஆவது நாள் தீட்டுக்கழியும் சடங்கு. இந்தத் தீட்டைக் கழிக்க மந்திரத்தையும், தர்ப்பைப் புல்லையும் கொண்டு வருவான் பார்ப்பான். இதற்கு அவனுக்கு வரி.

3. குழந்தை பிறந்த சில நாள் கழித்துக் குழந்தைக்குப் பெயரிடல். பெயரைத் தேர்ந்தெடுத்தவர்கள் பெற்றோர்கள். இதை அவன் வாயால் அழைத்துப் போவதற்கு அவனுக்கு வரி.

4. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு முடிந்தால் அப்பொழுது ஆண்டுவிழா. இந்த விழாவிற்கும் அவனுக்கு வரி.

5. பிறகு அந்தக் குழந்தைக்கு உணவூட்டல். இந்த உணவூட்டுவதற்கும் பார்ப்பானுக்கு வரி.

6. குழந்தை ஆணாயிருந்தால், அக் குழந்தைக்குச் சிரைத்துக் குடுமி வைக்க வேண்டும். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

7. அய்ந்தாவது அல்லது ஏழாவது வயதில் குழந்தைக்கு அட்சராப்பியாசம். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

8. பெண் குழந்தையாயிருந்தால் அது பருவமடைந்தவுடன் ருது சாந்தி. இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

9. எந்தக் குழந்தையாயிருந்தாலும் கலியாண மென்றால், பொருத்தம் பார்ப்பது, நாள் குறிப்பது, கலியாணம் செய்து வைப்பது, இருவரையும் படுக்கவைப்பது என்கிற பெயர்களால் இத்தனைக்கும் பார்ப்பானுக்கு வரி.

10. இறந்தால், இறந்த பிணத்தை அடக்கம் செய்ய, இருப்பவர்கள் பிணத்திற்காகப் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

11. இறந்தவர்களின் மகன் உயிரோடிருக்கும் வரை, ஒவ்வொரு ஆண்டும் திவசம் என்ற பெயரால் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

12. கிரகண நாளாயிருந்தால், கிரகணத் திற்கும், மாதாமாதம் அமாவாசைக்கும் பார்ப் பானுக்கு வரி.

13. இன்னும் கலப்பை கட்டுவது, விதைப் பது, அறுப்பது ஆகிய உழுதொழிலுக்கும், அவைகளுக்கு நாள் பார்த்துக் கொடுப்பதற்கும் பார்ப்பானுக்கு வரி.

இவை போன்ற - எந்த அரசாங்கமும் வாங்காத வரிகள் எல்லாம் பார்ப்பனியம் வாங்கிக் கொள்ள கொடுத்து வருகிறோம். எப்படி?

பார்ப்பான் காலில் விழுந்து, நான் கொடுக்கும் இது எவ்வளவு குறைவாயிருந்தாலும், அதைக் குறைவாகக் கருதாமல், பூரணமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிராத்திக்கின்றோம். இதற்குப் பார்ப்பான் காட்டும் நன்றி, முழங்கால் முட்டி அடிபட, விழுந்து விழுந்து எழுந்திருக்கச் செய்வதும், மாட்டு மூத்திரம், சாணிகளை மாகாத்மியமாக எண்ணிக் குடிக்கச் செய்வதும், தேவடியாள் பிள்ளை என்ற பட்டமும்.

இந்த வரிகள் கொடுக்க வேண்டுமா? பார்ப்பான் பழங்கதையும் சாஸ்திரத்தையும் காட்டிப் பணம் பிடுங்கத்தான் வேண்டுமா? நாங்கள் இழிவையேதான் அடைந்து வர வேண்டுமா? இதையெல்லாம் கேட்பதா வகுப்புத்துவேஷம்? உன் சொந்தப் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பின் நீ முடிவு கட்டு!

 

இனி இந்துவாக இருக்க மாட்டேன். நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன். இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் கூறுவார் களானால், பார்ப்ப னர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப் பட்டதல்ல. அது தேவாளுக்கு எழுதப்பட்டதாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

*******

கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும், பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும். உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

*******

சட்டசபையைப் பற்றிக் கவலை வேண்டாம். மந்திரி பதவிக் கவலை வேண்டாம். அதைப் பார்ப்பனருக்கும் அவர்கள் அடிமைக்கும் விட்டு விடுங்கள். நாம் கட்டுப்பாடான பிரசாரம் செய்து மக்களை மானமுள்ளவர்களாக ஆக்கினால் எந்தக் காரியமும் கைகூடும். மந்திரிகள் நமக்குச் சலாம் போடுவார்கள்.

19.06.1932 - குடிஅரசிலிருந்து...

மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில் இந்தியாவின் சமுதாய சீர்திருத் தங்கள் சம்பந்தமாக சட்டங்களை அமலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொதுஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும் இதனால்தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம் சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர் என்று பேசியிருக்கிறார்.

இப்பேச்சிலிருந்து பொதுஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமுக சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இடமிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசியிருப்பா ரானால், இது அலை ஓய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம் என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம்.

பொது ஜனங்கள் எப்பொழுதும், மூடநம்பிக்கை யுடைய வைதிகர்களுடைய பேச்சுக்களுக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் அவர்களே சமுதாய சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்க முன்வரவேண்டுமென்று எதிர் பார்ப்பது தவறாகும். குற்றஞ் செய்கின்றவனை தானே குற்றஞ் செய்யாமல் திருந்திவரட்டுமென்று விட்டுக் கொண்டிருந்தால்  அவன் திருந்துவது எப்பொழுது? அவன் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டித் தண்டனையும் அளித்தால்தான் அவன் திருந்துவான் என்பது உண்மையல்லவா? அதுபோலவே, பழைய நம்பிக்கையினாலும் குருட்டுப் பழக்க வழக்கங்களினாலும் பொது ஜனங்கள் கைக்கொண்டு வரும் சமுக ஊழல்களைப் போக்க அரசாங்கத்தாரே முற்பட்டு, சட்டங்களைச் செய்து, அச்சட்டங்களின் கருத்துக்களைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்வதன் மூலமே சமுகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் சமுதாய சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கும், துருக்கி முதலிய தேசங்களை எடுத்துக் கொண்டால், அங்கெல்லாம் பொதுஜனங்கள் சமுதாய சீர்திருத்த உணர்ச்சி பெற்ற பிறகுதான் சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் செய்யப்பட்டதா? அல்லது அரசாங் கத்தாரே முன்வந்து சமுதாய சீர்திருத்தச் சட்டங் களைச் செய்து அவைகளுக்குப் பொதுஜன ஆதரவைப் பெற்றார்களா? என்று பார்த்தால், இவ்வுண்மை விளங்கும்  அரசாங்கமே தைரியமாகச் சமுதாயச் சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றி அவைகளைப் பொது ஜனங்கள் அனுசரிக்கும் படி செய்தார்கள் என்பது யாவருக்கும் தெரியும்.

இப்பொழுது இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங் கத்தைக் காட்டிலும் சமுதாயச் சீர்திருத்தம் சம்பந்த மாகக் கொஞ்சம் முன்னணியில் நிற்கும் சமஸ்தானங் களில் முதன்மை பெற்று பரோடாவும், இரண்டாவது மைசூருமாக இருக்கின்றது என்று புகழப்படுகின்றது. இந்த நிலைமையில் திவான் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள் சட்டசபையில் ஆலோசனைக்கு வரும்போது பொது ஜன ஆதரவு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாங்கள் ஆதரிப்போம் என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருப்பது போல மைசூர் அரசாங்கத்தின் சார்பாகவும் பாட ஆரம்பித் ததைப் பற்றி நாம் வருந்துகின்றோம் ஆயினும் திவான் அவர்கள் அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கப் பின்வாங்குகின்றனர் என்று தான் கூறு கிறாரே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போல ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறவில்லை என்பதைப் பார்க்கச் சிறிது சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு பின்வாங்கிய மனதுடனாவது சமுகச் சீர்திருத்த சட்டங்களுக்குக் கூடியவரையிலும் ஆதரவு அளித்து வரும் மைசூர் அரசாங்கத்தையும் திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்களையும் பாராட்டுகின்றோம்.

சென்ற சட்டசபைக் கூட்டத்தில் பால்ய விவாகத் தடைச் சட்டம் மைசூர் சட்ட சபையில் நிறைவேறி இருப்பதும் அவ்வரசாங்கம் சமுதாயச் சீர்திருத்த விஷயத்தில் ஊக்கம் காட்டி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும் என்பதையும் இச்சமயத்தில் நினைப்பூட்டுகிறோம்.

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

திரு. பாண்டியன் அவர்கள் பெரிய தனவந்தர். அதாவது வருஷம் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் தனக்குப் பணமில்லாததால் பணக் காரரை வெறுத்தார் என்று யாரும் சொல்லி விட முடியாது.

திரு. பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லாபோர்டுத் தலைமைப் பதவியில் பட்டுக் கொண்டதாலும், மற்றும் அரசியல் தொல்லையாலும் சுயமரியாதை இயக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதே தவிர, அதாவது அவர் வெளியில் இருந்தால் எவ்வளவு பலன் ஏற்பட்டு இருக்குமோ, அவ்வளவு பலன் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.

இது நிற்க, ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதும், சீர்திருத்தம் என்பதும், அரசியல் சுதந்திரம் என்பதும் நாட்டிற்கும், பாமர மக் களுக்கு ஏழை மக்களுக்குத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதைப் பொது ஜனங்கள் அறிய இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டது மற்றொரு விதத்தில் மகிழ்ச்சி யடையத் தக்கதாகும்.

ஆகவே, இன்றைய தினம் இந்நாட்டில் பொதுஜனங் களுக்குப் பிரதிநிதியாக பிரபுத் தனமும், வைதிகமும்தான் இருக்க யோக்கி யதையுடைய அரசியல் சுதந்திரங்கள் இருக் கின்றனவே ஒழிய உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித சாதனமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

இது தவிர தல ஸ்தாபன நிர்வாகங்கள் இந்த மாதிரி காரணங்களில் அடிக்கடி மாறி மாறித் தொல்லையடையாமல் ஒரே ரீதியில் நடை பெற வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங் களுக்குச் சுதந்திரமாய் நடக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் இருப்பாரானால் இம்மாதிரிக் காரியங்களால் கொள்கைகள் மாறுபடாமல் இருக்கலாம். ஆனால் இன்றுச் சட்டசபையிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைமையிலும் ஒரே கனவான்கள் பெரிதும் இருப்பதால் அதை ஏற்படுத்த முடியவில்லை. ஆனபோதிலும் இவைகளுக்காக வெல்லாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானச் சட்டம்  வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. அது இருந்துதான் தீர வேண்டும். இன்றைய தினம் கட்சி பிரதிக்கட்சிகளால் மந்திரி போட்டிகளால், அரசியல் தகராறுகளால் தான் இது வரை மேற்படி சட்டம் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றதே தவிர, நிர்வாகக் குற்றத் திற்குத் திறமைக்குப் பிரயோகிக்கப்பட வில்லை. இம்மாதிரி காரியங்களால் உடனே தலைமை ஸ்தானம் காலிசெய்யப்பட வேண்டி யதும் ஒரு விதத்தில் அவசியமாகும்.. இல்லாத வரை இக்கட்சிகள் நிர்வாகத்திற்குள் புகுந்து, ஸ்தாபனங்களை மிக்க கேவலமாக ஆக்கி விடும். இந்தக் குறிப்பிட்ட சம்பவம்கூட சுய மரியாதை உணர்ச்சியினால் ஏற்பட்ட தாகும்.

ஏனெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியானாலும் இம்மாதிரி மனப்பான்மை உள்ள இடத்தில் இனி இருப்பது கொஞ்சமும் சுயமரியாதை அல்ல என்றே விலகி விட்டார். ஆனால் மற்ற சம்பவங்களில் மெஜாரிட்டி மெம்பர்கள் எந்தக்  காரணத்தைக் கொண்டானாலும், ஒருவரை வேண்டியதில்லை என்று கருதி விட்டால், அவர் மறுபடியும் அதிலேயே இருக்கும் படியாக இருந்தால் அந்த மெஜாரிட்டி மெம்பர்கள் தொல்லையால் நிர்வாகம் பாதிக்கப்படாதா என்று கேட்கின் றோம். மெஜாரிட்டிக்கு  விரோதமாய் உள்ளே இருந்து எப்படி யாருடைய தயவின் மீது சமாளித்துக் கொண்டிருந்தாலும் அது சுயமரியாதை அற்ற தன்மையோடு, நிர்வாகம் பாழ் என்றே சொல்லுவோம். பொதுவாக பதவிகள் அடையும் மார்க்கமும் மந்திரிகளாய் வரப்பட்டவர்கள் நிலையும் இன்று இருப்பது போலவே என்றும் இருக்குமேயானால் கீழ் நிர்வாகங்களுக்கு எவ்வளவு பந்தோபஸ்து ஏற்படுத்தினாலும் இப்படித்தான் நடக்கும். சாதாரணமாக மந்திரிகளுக்குக் கூட இந்த நிபந்தனைகள்தானே இருக்கின்றது? அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் விட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்பதாகத் தானே இருக்கின்றது. ஆகவே மேலுள்ளது போலவே தான் கீழ் இருப்பதும் இருக்கின்றது. ஆதலின் நாம் இதை மாத்திரம் குற்றம் சொல்வது ஒழுங்காகாது.

இவைகளையெல்லாம் நினைப்பதற்கு முன் ஜனநாயகம் நல்லதா? தனி நாயகம் நல்லதா; அல்லது பஞ்சாயத்து குடிஅரசு நாயகம் நல்லதா? என்று முடிவு செய்வதில் தான் உண்மை, நன்மை கிடைக்க முயற்சி செய்ய முடியும்.

(முடிந்தது)

 

ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லையென்றும், அவைகள் போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின்றேன். ஆகையால், அதை விட்டுவிட்டு, மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்தவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலை

நிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.

திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் 4.8.1935 மாலை 6 மணிக்கு ''சோஷியல் ஹோமில்'' தலைவர் டி. வி. சோமசுந்தரம் பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரும் பாலான அங்கத்தினர்கள் அது காலை விஜய்ஞ் செய்திருந்தார்கள். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேறியது.

தீர்மானங்கள்

1. காரியதரிசிகளிலொருவரான தோழர் உறையூர் ச.ம.சி. பரமசிவம் அவர்கள் சங்கக் கொள்கைகளுக்கு விரோதமாக தனது திருமணத்தை வைதீக சமய சாதிச்சடங்குகளுடன் புரோகிதனை வைத்து திருநெல்வேலியில் நடத்திக்கொண்டதைப் பற்றி இக்கூட்டம் வருந்துவதோடு அவர் இதுவரை ராஜிநாமா கொடுக்காத படியால் காரியதரிசி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தீர்மானிக்கிறது.

2. சங்கத்தை ரிஜிஸ்தர் செய்ய அடியிற்கண்ட தோழர்களைக் கமிட்டியாக ஏற்படுத்தி, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி அதிகாரம் அளிக்கிறது.

கமிட்டியார் 1. டி. வி. சோமசுந்தரனார், பி.ஏ., பி.எல். 2 நீலாவதியார் 3. என், எஸ். எம். செல்வக்கணபதியார்

3. காரியதரிசியாகவிருந்த தோழர் ச.ம.சி.பரமசிவம். அவர்களை சங்க சம்பந்தமான எல்லா ரிக்கார்டுகளையும் கணக்குகளையும் சங்கத் தலைவர் அவர்களிடம் ஒப்புவித்துவிடும்படி தீர்மானிக்கிறது.

4. சங்கத்தின் காரியாலயத்தை தற்காலிகமாக திருச்சி கோட்டை 41 நிர் திப்புரான் தொட்டித்தெரு சோஷியல் ஹோமில் அமைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கிறது.

4ஏ. இச்சங்க சம்பந்தமாக தோழர்கள் எழுதியனுப்பும் எல்லாக் கடிதப் போக்குவரத்துக்களும், நன் கொடை, சந்தா முதலியவைகளும் ''தலைவர்” தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கம் சோஷியல் ஹோம் 41 திப்புரான் தொட்டித் தெரு

திருச்சி என்ற விலாசத்திற்கே அனுப்ப வேண்டுமெனத் தெரிவிக்கிறது.

5. சங்கத்தின் புதிய வருடத்தேர்தல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 25.8.1935 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருச்சி சோஷியல் ஹோமில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெற வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

மேற்படி கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது. தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு உள்ளூர் வெளியூர் தோழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் டி.வி.சோமசுந்தரம் உபதலைவர் நீலாவதி ஆகியவர்கள் அறிவிக்கிறார்கள்.

Banner
Banner