வரலாற்று சுவடுகள்

 

- தந்தை பெரியார்

கனவான்களே!

தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின் றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக் காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமுகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சைத் தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்பதும் எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமுகத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம் வந்துவிட்டால், பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய ராமராஜ்யமும், சத்திய சந்தன ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும், இவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும், இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வரு மானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்களதும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப் பற்றியும் சீர்திருத்தக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு. 'கல்' என்பதற்கு 'அறி' என்று பொருள். கல்வி என்றால் அறிவி, தெரிவி என்பதுதான் பொருளாகயிருக்க வேண்டும். எனவே, எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும், மனிதத் தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தையாகும். இதற்கு உதாரணமாக, 'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள்' வைக்கப்படும்

உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையையும், அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையுமே முக்கியமாகக் கொண்டு கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொறுத்த மானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக, ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக் கொண்டு நிரந்தரமாய் தன் இச்சைப்படி ஆட்சி புரிய வேண்டும் என்று கருதுகிற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகிறது. அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இது அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கடவுள் பக்தி, மதபக்தி இராஜபக்தியாகிய அறிவுத்தடையும், அடிமைப் புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலைக்குள் தலை காட்டவே கூடாது. ஏனெனில் கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும் அரசனிடத் திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்து கொள்ள வேண்டுமே ஒழிய இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத் தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம் முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதார் ஆக்கப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமுகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டியதே யில்லை. எனவே குறைந்தது ஒரு பதினைந்து வருஷத் திற்காவது உயர்தர கலாசாலைகளையும், எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களையும் காலி செய்து, கதவைச் சாத்தி மூடிவிட்டு முன் சொன்ன கல்வியும், அறிவும் இல்லாதவர்கள் என்கிற கூட்டத்திற்கே பள்ளிக் கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும். உண்மையான சீர்திருத்தக்காரர்களும் கல்வித் துறையில் இதைத்தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

சீர்த்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு, நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கிய மானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந்திருக் கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களா யிருக்கிறார்கள்.

கடவுள், மதம், பக்தி, வேதம் முதலியதுகள் மாத்திரம் அல்லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்பந்தமான சடங்குகள், நோன்பு, விரதம், வேண்டுதல், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம், காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகள் ஆகியவைகளின் பாற்பட்டதேயாகும்.

இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்முடைய அறிவு ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவைகளை யெல்லாம் அடியோடு கெடுத்து விடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும், அறிவும் இல்லாமல் செய்து விடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றை யும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் சவுகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட மிகவும் மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடையமுடியாத அடிமைத் தன்மையிலும், அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணமே இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்தனமாக அடிமையா யிருப்பதுதான்.

நமது நாட்டைவிட மிகவும் பின்ன ணியிலிருந்து மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங் களையும், குருட்டு நம்பிக்கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத் தறிவுக்கு மதிப்பும் கொடுத்து ஆராய்ச்சிச் துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.

நாம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றா யறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டு மானாலும் நடுங்குகின்றோம்; தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும், ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக்கல்லாய் நிறுத்தி விடுகின்றது. இவைகளையெல்லாம்கூட ஒருவிதத்தில் சமாளித்து விடலாம். ஆனாலும் 'பெரியவர்கள் நடந்த வழி' என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடை யாய் விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாட் சண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.

இந்த மூடநம்பிக்கை குருட்டுப் பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம், அய்ந்து லட்சம், பத்து லட்சம், இருபது லட்சம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வருஷத்தில் பத்து லட்சம், இருபது லட்சம், அய்ம்பது லட்சம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேகமிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக் கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங்களும், சமயாச்சாரியார்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மியங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பதுகளும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.

உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்துக் கொள் ளுங்கள். அவர்களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளி னிடத்திலாவது, புண்ணியஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையா கிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப்போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக்காலமும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.

("துலா ஸ்நானத்திற்குப் போகவில்லையா?" "வைகுண்ட ஏகாதசிக்குப் போகவில்லையா?" "ஆடி அமாவாசைக்குத் தனுஷ்கோடிக்குப் போகவில்லையா?" "பிரயாசைக்குச் சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா?" "கார்த்திகை தீபத்திற்குத் திருவண்ணாமலைக்குப் போகவில்லையா?" "கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா?" "மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா?" "ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில்லையா?") என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகை களில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படிச் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோட்சமடைவதற்காகவா? நமக்குப் புண்ணியம் சம்பாதித் துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

ஆனால், மற்றெதற்கு? நம்மை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்காக நம்மிடத்தில் சற்றும் அன்பும் காதலும் இல்லாமல் தங்களை நன்றாய் அலங்கரித்துக் கொண்டு நம்முன் நின்று கண் ஜாடை காட்டும் கீழ்த்தர விபசாரிகளின் மனப் பான்மையை ஒத்ததான ஏமாற்றமல்லவா இது? இதன் மூலம் இரயில்வேக்காரர்களுக்குப் போகும் பணம் எவ்வளவு? இதுபோல் தானே புராணமும் ஆகமமும் ஸ்மிருதிகளும் எழுதியவர்கள் மனப்பான்மையும் இருந் திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கின்றது. இல்லா விட்டால் நம்முடைய மோட்சத்தைப் பற்றி இந்த கூட்டத் தாருக்கு இவ்வளவு அக்கறை எதற்கு? எனவே, நமது மூடப்பழக்கம், குருட்டு நம்பிக்கையாகிய தன் மூலமாக நமது பணங்கள் எத்தனை கோடி பாழாய்ப் போகின்றது என்பதைப் பாருங்கள்.

சர்க்கார் நம்மிடம் அரசாட்சியின் பேரால் வசூலிக்கும் வரி என்னும் கொள்ளையை விட இந்த மூடநம்பிக்கையா லும், குருட்டுப் பக்தியாலும் செலவிடும் பணமும் இதன் பேரால் பலர் கொள்ளையடிக்கும் பணமும் குறைந்த தொகை கொண்டதெனக் கருதுகின்றீர்களா? சர்க்கார் அதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லையென்று கத்தும் பொருளாதாரத் திட்ட நிபுணர்கள் இந்தப்பால் வழிப்பறிக் கொள்ளைக்கு ஏதாவது கவலை கொள்ளுகின் றார்களா? இதைப்பற்றி பேசவாவது அனுமதிக்கின்றார்களா? இந்தப் பக்கம் சற்றுதலை வைத்தாவது படுக்கின்றார்களா? அனுகூலமான துறையில் ஒன்றும் செய்யாமலிருப்பதோடு இந்த ஒழுக்கமற்ற கொள்ளைக் கூட்டத்தாருக்குத் தரகர் களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் குழியில் தள்ளுவதற்கு உடந்தையாய்த் தானே இருக்கின்றார்கள்.

இந்தப் பணங்களும் நேரங்களும் கல்வியிலாவது ஆராய்ச்சித் துறையிலாவது செலவு செய்யப்பட்டிருக்குமா னால் நமது நாட்டில் 100-க்கு 93-ஆண்கள் தற்குறிகளாயி ருப்பார்களா? 1000-க்கு 999 பெண்கள் தற்குறிகளாயிருப் பார்களா? என்பதுகளை யோசித்துப் பாருங்கள். நமது நாடு தரித்திரமாயிருப்பதற்குக் காரணம் விளைவில்லையா? விளைவுக்கு விலையில்லையா? போதிய பணம் புழக்கம் இல்லையா? எல்லாப் பணமும் சாமிக்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் உற்சவத்திற்கும் சடங்குகட்கும் மூடநம்பிக் கைக்கும் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றகின்றவர்களுக்கும் அழுவதற்கே செலவாகிவிடுகின்றது. சூதாட்டத்தில் எப்படி சீட்டுமேஜை வாங்கினவனுக்கே எல்லாப் பணமும் போய் சேர்ந்து விடுகிறதோ அதுபோல் நம்மை மூடநம்பிக்கையில் அழுத்தி வைத்திருப்பவர்களுக்கே எல்லாப் பணமும் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.

எனவே, நமக்கு செல்வமே கல்வியோ, அறிவோ, ஆராய்ச்சியோ, வேண்டுமானால் இந்த மூடநம்பிக்கையை அடியோடு ஒழிக்கவேண்டும். இந்தத் துறையும் மற்றெல்லாத் துறைகளைவிட மிகுதியும் அழிவு வேலை செய்யப்பட வேண்டியதாகும். மற்றதை முடிவுரையில் சொல்லுகின்றேன்.

- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 02.12.1928

சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பதாக மறுபடியும் கூச்சல் போட கிளம்பிவிட்டார்கள். இக்கூச்சலின் உள் கருத்து அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழிதேடவே யாகும். இதற்காகவே இச்சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதற்காகவே பார்ப்பனர் அல்லாதாரிலும் சில தேசிய வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளையும் கஞ்சிக்கு வேறு வழியில்லாமல் பிழைக்க வகையில்லாத ஆசாமிகளையும் பிடித்துக் கூலி கொடுத்துச் சைமன் பகிஷ்காரம் என்னும் பேரால் பார்ப்பனக்கட்சி ஆதிக்கப் பிரச்சாரமும், பார்ப்பன ரல்லாதார் கட்சிகளையாவது அதன் முற்போக்குக்கு இடையூறான பிரச்சாரமும் நடத்தப் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் இதற்குப் பல தடவைகளில் எழுதி சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கும் ஒரு வகுப்பாரின் சுயநலம் என்பதற்கும் பல ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி வந்தோம். அவைகளில் ஒன்றுக்காவது எந்த தேசியவாதியாவது தேசிய பத்திரிகை யாவது அல்லது பார்ப்பனர்களின் தாசியாவது, தாசிய பத்திரிகையாவது இதுவரை பதிலுரைத்தவர்கள் அல்ல. நமது கேள்விகளை மூடி வைத்துக் கொண்டு பாமர மக்களின் மூடத்தனத்தைத் தங்களுக்கு ஆதரவாய் வைத்துக் கொண்டு தங்களால் கூடுமானவரை சூழ்ச்சிப் பிரச்சாரம் செய்த வண்ணமாகவே இருந்தார்கள். இச்சுய நலக்கூட்டத்தாரும் வயிறு வளர்ப்புக் கூட்டத்தாரும் எவ்வளவு சூழ்ச்சிப் பிரச்சாரம் செய்தும், எவ்வளவு போலி தேசிய வேஷம் போட்டும், இவர்களது நம்பிக்கைக்கு விரோதமாய் இப்போலிகளின் பிரச்சாரத்தால் தாங்கள் ஏமாற வில்லை என்பதைக் காட்டவும், போலிகளுக்கு இனி நாட்டில் இட ம் கொடுக்க மாட்டோம் என்று முடிவு செய்ததைக் காட்டவும் பாமர மக்கள் அர்த்தால் தினத்தை நன்றாய் உபயோகித்துக் கொண்டு தக்கபடி புத்தி கற்பித்து விட்டார்கள்.

அதன் பலனாகவே மறுபடியும் அர்த்தால் என்கின்ற பேச்சுகூட பேச முடியாமல் செய்து விட்டார்கள். ஒன்றிரண்டு மாதம் வரை கூட்டம் போட்டுப் பேசவும் யோக்கியதை இல்லாமல் செய்ததோடு இப்போலி தேசிய வாதிகள் தாங்களே நாங்கள் அர்த்தால் செய்யப் போவதில்லை என்று சர்க்காருக்குத் தெரிவிக்கும்படியான நிலைமையில் வைத்து விட்டார்கள்.

சர்க்கார் இனி அர்த்தால் செய்யக்கூடாது என்று போட்ட 144-ஆம் தடை உத்திரவையும் வாங்கிப் பூஜை வீட்டில் வைத்து அதற்குக் கீழ்ப்படிந்து பூஜை செய்து கொண்டி ருக்கும்படியான நிலைமைக்கும் வந்துவிட்டார்கள்.

அன்றியும் இந்தியா முழுவதும் பகிஷ்காரத்தில் இருக்கின்றது என்றும், வெற்றி மேல் வெற்றி என்றும் கத்திக் கொண்டிருந்ததும் மறைந்து போய், அவர்கள் மாறிவிட்டார்கள்! இவர்கள் மாறிவிட்டார்கள்! அந்த மாகாண சட்டசபை ஒத்துழைக்கப் போகின்றது! இந்த மாகாண சட்டசபை ஒத்துழைக்கப் போகின்றது! இனி என்ன செய்வது? என்று கூடி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் பகிஷ்காரப் போலிகளினுடையவும் கூலிகளினுடையவும் உண்மை வேஷம் வெளிப்பட்டு விட்டது.

அதாவது, திருவாளர்கள் ஒ. கந்தசாமி செட்டியார், குழந்தை, அண்ணாமலை, நைனியப்பர், பஷீர் அகமது, அமீத்கான், இரத்தின சபாபதி முதலியார்கள் திக்கு விஜயம் செய்ய தமிழ் நாட்டிற்குள் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளையும் கூப்பாடு போட்டு உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் வேலைகளைக் கவனித்துப் பார்த்து வருபவர்களுக்கு இவர்களின் வேஷம் விளங்காமல் போகாது.

அதாவது, பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சித் தலைவர்களையும் காரணமில்லாமல் இழிஉரைகளில் வைதுரைப்பதும், அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனக் கூலிகளுக்கும் அடிமைகளுக்கும் ஓட்டுக் கொடுங்கள் என்றும் எழுதுவதும் கூப்பாடு போடுவதுமான கூலிக்கு மாரடித்து வரும் காரியங்களாலும், எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு தொண்டை கிழிய கத்தினாலும், அதை நம்பி ஏமாந்து போகும் காலமே மலையேறிப் போய்விட்டதால், சென்றவிடமெல்லாம் தக்க மரியாதை கற்பிக்கப்பட்டும், கூட்டம் கலைக்கப்பட்டும், கூலிகள் ஓட்டப்பட்டும் நடந்து வரும் காரியங்களாலும் நன்கு உணரலாம்.

நிற்க, பகிஷ்கார விஷயத்தில் பார்ப்பனர்கள் கூலி கொடுத்து பார்ப்பனரல்லா தாரிடையில் மாத்திரம் பகிஷ்காரப் பிரச்சாரம் செய்யச் செய்திருக்கிறார்களே ஒழிய, தங்கள் சமுகத்தைப் பொறுத்தவரை பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே பிரச்சாரம் செய்து ஜாக்கிரதையாய் இருக்கின்றார்கள். அதாவது,

பார்ப்பன சபையும் வர்ணாசிரம பார்ப்பன சபையும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கக் கூடாது என்று சொன் னதோடு, கமிஷனில் சாட்சி சொல்லவும் ஒத்துழைக்கவும் தீர்மானங்கள் செய்து யாதாஸ்த்து தயார் செய்தும் அனுப்பி விட்டன. திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் போன்ற பிரபல தேசிய வாதிகள் எல்லோரும் அதில் அங்கத்தினர்களாகவும் தலைவர்களாகவும்தான் இருந்து வருகின்ற சபைகளாகவே அவைகள் இருக்கின்றன.

தவிர முதல் வகுப்புத் தேசியத் தலைவர்களான திருவாளர்கள் விஜயராக வாச்சாரியார், ஸ்ரீனிவாசய்யங்கார், எ. ரங்கசாமி அய்யங்கார் முதலியோர்களும் தங்கள் யாதாஸ்த்தைத் தனியாக அச்சுப்போட்டு சைமன் கமிஷனுக்குப் போய் சேரும்படி செய்தாய் விட்டது. அவைகள் கடைகளிலும் விற்க ஏற்பாடு செய்தாய் விட்டது. திருமதி பெசண்டம்மையார் கூட்டமும் தங்களது யாதாஸ்தைப் பகிரங்கமாகவே ஒப்படைத்தாகி விட்டது.

இனி பகிஷ்காரம் செய்திருக்கின்றவர்கள் யார் என்று பார்ப்போமானால் மேல்கண்ட கூலிப் பிரசாரக் கூட்டத்தைத் தவிர வேறில்லை என்பது புலனாகும். அவர்களும், யார் பகிஷ்காரம் செய்யாததற்காக வைகின்றார்கள் என்று பார்ப்போமானால் பார்ப்பனரல்லாதார் கட்சியாளர்களை மாத்திரந்தான் என்பது வெளியாகும். எனவே, இவ்வித கூலிப்பகிஷ்காரக் கூச்சலுக்கு இடம் கொடுக்கா மலும் அதைக் கண்டு பயந்து விடாமலும் இருக்கும்படி பார்ப்ப னரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

திராவிடன், இழிவு தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு, ஆரியத்திற்கு - ஆரிய மதம், கலை, ஆச்சாரம், அனுட்டானங்களுக்கு - அடிமைப்பட்ட தல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

- தந்தைபெரியார்

சுயமரியாதைப் பிரச்சாரங்கள்
22.07.1928 - குடிஅரசிலிருந்து..

சுயமரியாதைப் பிரச்சாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும் அதைக்கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது. அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடம் என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, குடி அரசில் கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காலாவதி யொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும். அவர்களில் சௌகர்யமில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப் படும். இஷ்டமுள்ளவர்கள் தெரிவித்துக்கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வரவேண்டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்படும்.

- ஈ.வெ.ராமசாமி

பல்லாவரத்துப் பண்டிதர்
29.07.1928- குடிஅரசிலிருந்து...

திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் தமிழ்நாடு, திராவிடன் பத்திரிகைகளில் காணப்படுகின்றது.

அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தைத் திருவாளர்கள் தண்ட பாணிப் பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்டதாகவும் பதில் சொல்ல இயலாமல் திக்குமுக்காடிய தாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது. அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத்தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்துகொண்டு போனதாகவும் அதை அக்கூட்டத்திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்ததாகவும் திராவிடனில் காணப்படுகின்றது.

அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை குடிஅரசில் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்கப்படும்.


01.04.1928- குடிஅரசிலிருந்து...

இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் சென்னை பிரதிநிதிகளான அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்ட சபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்து கிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும்போது இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதனதர்மி களின் பிரதிநிதியாகவே, தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசும் போது அதற்குப் பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரன் சரண்முன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோ தாவை எதிர்ப்பதன் இரகசியம் எனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச் சாரியார் போன்ற வர்களே காரணம் என்றும், இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையா யிருக்கு மானால் அதை ஒழித்து விடுவதே மேல் என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக் கின்றார் என்று கூறினாராம்.

இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது தமிழ்நாடு பத்திரி கையோ அல்லது ஒரு ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் முன்ஷி ஈஸ்வரசரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது ஈஸ்வரசரணர் பிரச்சாரம் என்றோ தலையங்கம் கிளம்பி யிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீ ஈஸ்வர சரணர் நல்லகாலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியர் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

சர் பாத்ரோ ஆச்சாரியார்

சென்னை சட்டசபையில், பாலிய விவா கத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மா ளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில்

சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம்போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்ப வைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல் கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான் மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு.

ஆனால் சமுக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கி யமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். சர்பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர் உண்மையில் அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராய மிருக்குமா னால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும், யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பன ரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும்படியாக வேண்டிக்கொள்ளு கிறோம்.

ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரியாரைவிட ஸ்ரீவரத ராஜூலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக்கும் படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம். தமிழ்நாடு பத்திரிகையின் புரட்டு

தமிழ்நாடு பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியி ருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப்பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல் லுவதும் இல்லை.

ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் சர்க்கார் 23.03.1928இல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதிக ஜஸ்டிஸ் பத்திரிகை இந்த இரண்டு வருஷமாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கைகளைப் பற்றி வெளிப் படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.

இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலு வின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின், கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம்.

வேடிக்கை சம்பாஷணை
- சித்திரபுத்திரன் -
18.03.1928- குடிஅரசிலிருந்து..

குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன் : நான் கேட்டதில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகி றார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய்விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன் : தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங் களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லுகிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக்கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின்றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங் களய்யா?

மனிதச் சமுகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக் களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து மனிதச் சமுக ஒற்று மையைக் கெடுத்துப் பொது முன்னேற் றத்தையும் சுதந்திரத்தையும் தடுக்கும் படியான மதம் எதுவாயினும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு தான் வந்திருக்கிறது.

- தந்தை பெரியார்


04.03.1928 - குடிஅரசிலிருந்து..

.

தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார் களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்குக் கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லை யென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங் கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம். இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசிய பத்திரிக்கையும் எழுதாமல் சைமனே திரும்பிப்போ எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம் என்கின்றன. சைமனைத் திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்றுப் பிழைப்புக் கும் கூலிக்கும் சைமனைப் பகிஷ்கரிப்பதால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பகிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள்,  அய்யோ பாவம்!

பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடையப் பிரயத் தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லா தவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம் பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை தினம் பெரும் பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது, தெருப்பொறுக்கிக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலையும், சென்ற மாதம் 3-ஆம் தேதி காங்கிரஸ் காலித் தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும். உதாரணமாக, அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26ஆம் தேதி தங்கள் பெண்டு பிள்ளைகளை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் தேசியவீரர்களின் பிரச்சாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப்பெருமையால் அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழ முடியுமோ தெரியவில்லை.

இன்னும் அடி

சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய்ப் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வர வில்லை, இந்தப் பார்ப்பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன்னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்குக் காரணம் வேறு விதமாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்ட தென்கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல.

சைமனுக்கு
பாப்பனர்களின் விருந்து

ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லாப் பார்ப்பனர் களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரச்சாரமும் செய்யப் பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாரு மில்லை. தேசிய வீரர்களும், தேசியப் பத்திரிக்கைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவா விட்டால் அல் லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கிய தையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக் கியத்தனம்!

சைமனுக்கு சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத் தன்றே நமது தேசிய வீரப்புலிகள் சட்ட சபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்து விட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதை வேண் டும். இவர்களை நம்பி எத்தனையோ சோண கிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுய ராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரிய வில்லை.

அதிசய விருந்து

ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான் களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கன வான்கள் அந்தச் சமுகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும் வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றுவரும் ஈரோடு தாலுகா போர்டு பிரசிடெண்டுமான பழைய கோட்டை பட்டக்காரர் ஸ்ரீராவ்பஹதூர் நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் ஆகிய கனவான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண் டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும். இதைப் பின்பற்றியாவது அச்சமுகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன் ஸ்ரீ பட்டக்காரர் அவர்களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்துகின்றோம்.

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து...

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்ப னர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத் திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத் திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்ற தேயல்லாமல் பொது ஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரி கிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்கா ரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப்பிராயம். கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமை யின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படி யானதாகிவிடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பரா யனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை என்னவென்று கேட்கின் றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந் தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரிகளை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டுவிட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட் டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசியாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இன உணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமை யைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின் றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

மதச் சம்பந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

- தந்தை பெரியார்

30.09.1928- குடிஅரசிலிருந்து..

காலஞ்சென்ற தமிழ் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியவர்களின் தேசிய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தால் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று தமிழ்நாடு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது. சென் னை அரசாங்கத்தார் மேற்படி நூல்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று தமிழ்நாடு கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறி முதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்தற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி சிறீசுப்பிரமணிய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டி ருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை தமிழ்நாடு தாக்குவதைப் பார்த்தால் அதைக் கோடாரிக்காம்பு என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

 


 

பிரச்சாரப் பள்ளிக்கூடம்

04.11.1928- குடிஅரசிலிருந்து...

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரசாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31 தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித் திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சவுகரியப்பட வில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதின் பேரில் தள்ளிவைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டிய தாயிற்று.

திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரி வித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

07.10.1928 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ் நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உல கத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள்.

இந்த இயக்கத்தினால்தான் ஒவ் வொரு வரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச் செய்தும் வருகின் றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப் படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம் உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமான தால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின் றவர்கள் இக்காரியத்தைச் செய்ய முடியாத துடன் வேறொருவர் செய்வது என்பதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மை யான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப்பட்ட வர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள் கையாளப்பட்டாலும் அந்த முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள் தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல,

சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு கொண்டு எழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்சகாலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற இரண்டு வருசத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித்திமிரை ஒழிக்க பூனாவில் பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும் சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிமார்களையும் முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித் திமிர் கொண்டவர்களுக்கு வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை என்று தீர் மானித்துக் கொண்டார்கள்.

பள்ளிக் கூடங்களில் பிள்ளைகள் எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர் களும் ஒரே பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண் டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில் உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில இடங்களில் நடந்து வருகின்றார்கள்.

கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்பந்தத்தில், இருந்து பிரித்து விட வேண்டு மென்று பலாத்கார சண்டை போட்டுக் கொண் டார்கள்.

சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கி யர்கள் தங்களுடைய மத ஆரம்ப காலம் முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில் ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது, தலை மயிரைக் கத்த ரிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலை மயிர் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப் போலவே - ஏன் இதைவிட அதிவேகமாகவும் என்று கூட சொல்லும்படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட வேக முள்ளதாய்க் காணப்படுகின்றன. அதாவது,

ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது,

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது,

குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகி தர்கள் முதலியவர்களின் ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது.

பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக்கட்டுப்பாட்டை ஒழித்தும் கலப்பு விவாகம் முதலியவைகளை ஆதரிப்பது,

முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்து தொழிலாளர்களுக்கு உரிமை அளிப்பது,

மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை அளிப் பது.

பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.

இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல்லோருக்கும் சரிசம மாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன் இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும் கொடுத்திருக்கின்றார்.

வெகு சீக்கிரத்தில் இதன் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப் பார்த்த வர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாக இயக்கம் என்றுதான் சொல்லு வார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும் சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்ற வர்களுக்கும் குறையில்லை.

மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத் தைவிட வேகமாக ஆப்கானிஸ் தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததேயாகும். அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தன் சீர்திருத்தக் கட்டளைக்கு விரோதமாய் பேசுகின்ற வர்களை யெல்லாம் மாஜி கவர்னர் உள்பட மௌல்விகள் உள்பட சிறையில் எல்லோ ரையும் அடைக்கின்றார்.

துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத் திற்கும் சம்பந்தமில்லை என்று விளம்பரப் படுத்தி விட்டது.

ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம் கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களையெல்லாம் போலிசார் கைது செய்து வருகின்றார்கள்.

இதே ருஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளை களுக்கு கற்பிக்கக் கூடாது என்று உபாத்தி யாயர்களுக்கு உத்திரவு போட்டது எல் லோருக்கும் ஞாபகம் இருக்க லாம். அது மாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில் களை இடித்ததும் ஞாபக மிருக்கலாம்.

நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள் நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக் காரரும், புரோகிதர்களும், பூசாரிகளும் பொது நலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்றால் நம் நாட்டு வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக் கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.

Banner
Banner