வரலாற்று சுவடுகள்


01.04.1928- குடிஅரசிலிருந்து...

இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் சென்னை பிரதிநிதிகளான அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்ட சபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்து கிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும்போது இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதனதர்மி களின் பிரதிநிதியாகவே, தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசும் போது அதற்குப் பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரன் சரண்முன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோ தாவை எதிர்ப்பதன் இரகசியம் எனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச் சாரியார் போன்ற வர்களே காரணம் என்றும், இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையா யிருக்கு மானால் அதை ஒழித்து விடுவதே மேல் என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக் கின்றார் என்று கூறினாராம்.

இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது தமிழ்நாடு பத்திரி கையோ அல்லது ஒரு ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் முன்ஷி ஈஸ்வரசரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது ஈஸ்வரசரணர் பிரச்சாரம் என்றோ தலையங்கம் கிளம்பி யிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீ ஈஸ்வர சரணர் நல்லகாலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியர் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

சர் பாத்ரோ ஆச்சாரியார்

சென்னை சட்டசபையில், பாலிய விவா கத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மா ளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில்

சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம்போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்ப வைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல் கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான் மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு.

ஆனால் சமுக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கி யமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். சர்பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர் உண்மையில் அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராய மிருக்குமா னால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும், யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பன ரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும்படியாக வேண்டிக்கொள்ளு கிறோம்.

ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரியாரைவிட ஸ்ரீவரத ராஜூலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக்கும் படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம். தமிழ்நாடு பத்திரிகையின் புரட்டு

தமிழ்நாடு பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியி ருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப்பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல் லுவதும் இல்லை.

ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் சர்க்கார் 23.03.1928இல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதிக ஜஸ்டிஸ் பத்திரிகை இந்த இரண்டு வருஷமாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கைகளைப் பற்றி வெளிப் படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.

இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலு வின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின், கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம்.

வேடிக்கை சம்பாஷணை
- சித்திரபுத்திரன் -
18.03.1928- குடிஅரசிலிருந்து..

குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன் : நான் கேட்டதில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகி றார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய்விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன் : தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங் களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லுகிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக்கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின்றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங் களய்யா?

மனிதச் சமுகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக் களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து மனிதச் சமுக ஒற்று மையைக் கெடுத்துப் பொது முன்னேற் றத்தையும் சுதந்திரத்தையும் தடுக்கும் படியான மதம் எதுவாயினும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு தான் வந்திருக்கிறது.

- தந்தை பெரியார்


04.03.1928 - குடிஅரசிலிருந்து..

.

தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார் களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்குக் கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லை யென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங் கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம். இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசிய பத்திரிக்கையும் எழுதாமல் சைமனே திரும்பிப்போ எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம் என்கின்றன. சைமனைத் திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்றுப் பிழைப்புக் கும் கூலிக்கும் சைமனைப் பகிஷ்கரிப்பதால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பகிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள்,  அய்யோ பாவம்!

பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடையப் பிரயத் தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லா தவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம் பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை தினம் பெரும் பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது, தெருப்பொறுக்கிக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலையும், சென்ற மாதம் 3-ஆம் தேதி காங்கிரஸ் காலித் தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும். உதாரணமாக, அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26ஆம் தேதி தங்கள் பெண்டு பிள்ளைகளை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் தேசியவீரர்களின் பிரச்சாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப்பெருமையால் அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழ முடியுமோ தெரியவில்லை.

இன்னும் அடி

சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய்ப் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வர வில்லை, இந்தப் பார்ப்பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன்னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்குக் காரணம் வேறு விதமாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்ட தென்கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல.

சைமனுக்கு
பாப்பனர்களின் விருந்து

ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லாப் பார்ப்பனர் களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரச்சாரமும் செய்யப் பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாரு மில்லை. தேசிய வீரர்களும், தேசியப் பத்திரிக்கைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவா விட்டால் அல் லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கிய தையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக் கியத்தனம்!

சைமனுக்கு சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத் தன்றே நமது தேசிய வீரப்புலிகள் சட்ட சபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்து விட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதை வேண் டும். இவர்களை நம்பி எத்தனையோ சோண கிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுய ராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரிய வில்லை.

அதிசய விருந்து

ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான் களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கன வான்கள் அந்தச் சமுகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும் வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றுவரும் ஈரோடு தாலுகா போர்டு பிரசிடெண்டுமான பழைய கோட்டை பட்டக்காரர் ஸ்ரீராவ்பஹதூர் நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் ஆகிய கனவான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண் டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும். இதைப் பின்பற்றியாவது அச்சமுகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன் ஸ்ரீ பட்டக்காரர் அவர்களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்துகின்றோம்.

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து...

டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்ப னர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத் திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத் திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்ற தேயல்லாமல் பொது ஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.

இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரி கிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்கா ரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப்பிராயம். கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமை யின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படி யானதாகிவிடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பரா யனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை என்னவென்று கேட்கின் றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.

உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந் தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரிகளை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டுவிட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட் டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசியாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இன உணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமை யைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின் றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

மதச் சம்பந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

- தந்தை பெரியார்

30.09.1928- குடிஅரசிலிருந்து..

காலஞ்சென்ற தமிழ் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியவர்களின் தேசிய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தால் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று தமிழ்நாடு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது. சென் னை அரசாங்கத்தார் மேற்படி நூல்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று தமிழ்நாடு கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறி முதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்தற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி சிறீசுப்பிரமணிய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டி ருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை தமிழ்நாடு தாக்குவதைப் பார்த்தால் அதைக் கோடாரிக்காம்பு என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

 


 

பிரச்சாரப் பள்ளிக்கூடம்

04.11.1928- குடிஅரசிலிருந்து...

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரசாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31 தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித் திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சவுகரியப்பட வில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதின் பேரில் தள்ளிவைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டிய தாயிற்று.

திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரி வித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

07.10.1928 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ் நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உல கத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள்.

இந்த இயக்கத்தினால்தான் ஒவ் வொரு வரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச் செய்தும் வருகின் றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப் படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம் உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமான தால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின் றவர்கள் இக்காரியத்தைச் செய்ய முடியாத துடன் வேறொருவர் செய்வது என்பதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மை யான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப்பட்ட வர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள் கையாளப்பட்டாலும் அந்த முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள் தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல,

சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு கொண்டு எழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்சகாலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற இரண்டு வருசத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித்திமிரை ஒழிக்க பூனாவில் பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும் சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிமார்களையும் முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித் திமிர் கொண்டவர்களுக்கு வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை என்று தீர் மானித்துக் கொண்டார்கள்.

பள்ளிக் கூடங்களில் பிள்ளைகள் எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர் களும் ஒரே பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண் டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில் உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில இடங்களில் நடந்து வருகின்றார்கள்.

கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்பந்தத்தில், இருந்து பிரித்து விட வேண்டு மென்று பலாத்கார சண்டை போட்டுக் கொண் டார்கள்.

சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கி யர்கள் தங்களுடைய மத ஆரம்ப காலம் முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில் ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது, தலை மயிரைக் கத்த ரிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலை மயிர் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப் போலவே - ஏன் இதைவிட அதிவேகமாகவும் என்று கூட சொல்லும்படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட வேக முள்ளதாய்க் காணப்படுகின்றன. அதாவது,

ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது,

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது,

குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகி தர்கள் முதலியவர்களின் ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது.

பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக்கட்டுப்பாட்டை ஒழித்தும் கலப்பு விவாகம் முதலியவைகளை ஆதரிப்பது,

முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்து தொழிலாளர்களுக்கு உரிமை அளிப்பது,

மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை அளிப் பது.

பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.

இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல்லோருக்கும் சரிசம மாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன் இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும் கொடுத்திருக்கின்றார்.

வெகு சீக்கிரத்தில் இதன் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப் பார்த்த வர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாக இயக்கம் என்றுதான் சொல்லு வார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும் சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்ற வர்களுக்கும் குறையில்லை.

மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத் தைவிட வேகமாக ஆப்கானிஸ் தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததேயாகும். அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தன் சீர்திருத்தக் கட்டளைக்கு விரோதமாய் பேசுகின்ற வர்களை யெல்லாம் மாஜி கவர்னர் உள்பட மௌல்விகள் உள்பட சிறையில் எல்லோ ரையும் அடைக்கின்றார்.

துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத் திற்கும் சம்பந்தமில்லை என்று விளம்பரப் படுத்தி விட்டது.

ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம் கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களையெல்லாம் போலிசார் கைது செய்து வருகின்றார்கள்.

இதே ருஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளை களுக்கு கற்பிக்கக் கூடாது என்று உபாத்தி யாயர்களுக்கு உத்திரவு போட்டது எல் லோருக்கும் ஞாபகம் இருக்க லாம். அது மாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில் களை இடித்ததும் ஞாபக மிருக்கலாம்.

நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள் நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக் காரரும், புரோகிதர்களும், பூசாரிகளும் பொது நலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்றால் நம் நாட்டு வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக் கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.


சிறீவரதராஜுலு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :-ஜஸ்டிஸ் கட்சியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்... ஜஸ்டிஸ் கட்சியின் ராஜிய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங் களாகப் பாடுபட்டு வருகிறார்.

நாயக்கர் பிரச்சாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது...

கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?

பிராமணர்களை தேசியக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...

என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார்.

இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப் பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்ப னர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமையானது இதை யெல்லாம் எழுதச் செய்கின்றது.

ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக் கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவை களை நாம் எழுதுகிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக்கின்றது என்பதை முதலில் காட்டி, பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பாரா னால் அது ஆண்மையும் யோக்கியமும் பொருந்தின காரியமாயிருக்கும்.

ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இல்லாதிருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கு ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது ஸ்ரீ வரதராஜுலு போன்றார் பார்ப்பன வால்களாயிருந்து கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள்உளவாயிருப்பதால் தமிழ் மக்களுக்கு சுயமரி யாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.

12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் நயவஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீ நாயுடு வேலை செய்தது என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற் காகவா தனது சுயநலத்துக்காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காகப் பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியையாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லாதிருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை பூதக் கண்ணாடி கொண் டாவது காணமுடியுமா என்று கேட்கின்றோம்.

நாயக்கர் பிரச்சாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். போன தேர்தலில் ஸ்ரீ வரதராஜுலுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள்.
தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

ஸ்ரீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர் இராஜினாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும் படி செய்ததும் பொது ஜனங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரச்சாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக்கட்டையாயிருக்கின்றது என்று சொல் வது தேசியம் என்றால் என்ன? அதற்காக யார் எந்தவிதமான பிரச்சாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றி குடிஅரசு சுமார் ஒரு நூறு, இருநூறு தடவை ஸ்ரீ வரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசிய வீரர்களைக் கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை ஸ்ரீ வரதராஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது தேசியத்திற்கு வியாக் யானம் சொன்னவர்கள் அல்ல. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசியத்திற்கு முட்டுக்கட்டை என்பது ஏமாற்றுப் பிரச்சாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.

ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத்துரோகம் செய்தது என்பது  இதைப் பற்றி இதே மாதிரி பார்ப்பனர்களும் ஸ்ரீ வரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக்கிறோம். அதற்குச் சமாதானம் சொல் லாமல் மறுபடியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண் ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.

ஸ்ரீ கிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக்கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி., சர் கிருஷ் ணசாமி, சர். ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீ வெங்கட்ட ராம சாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேசபக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அப்படிக்கில்லாமல் தேசத் துரோகம் என்று எழுதுவது வயிற்றுப் பிழைப்புக் காகச் செய்யும் இனத்துரோகமேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

பிராமணர்களை விலக்க முடியாது என்பது ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப் பனர்கள் சேர்க்காவிட்டாலும் ஸ்ரீ வரதராஜுலுவின் ஆயுள் வரை வரதராஜுலு பார்ப்பனர்களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம்.

எனவே ஸ்ரீ வரதராஜுலுவின் இவ்வாக்கியங் களிலிருந்து அவர் எவ்வளவு தூரம் தனது சமுகத்தாரின் கேடுக்குத் தயாராயிருக்கிறார் என்பது முதலியவை களை விளக்கவே இதை எழுதுகிறோமேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரச்சாரத்தில் ஏதாவது விளைந்து விடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவரவில்லை என்பதையும் தெரிவிக்கின்றோம்.

பெரிய அக்கிரமம்

25.03.1928- குடிஅரசிலிருந்து...

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர் களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய் யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டன வாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி.ராஜ கோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார்களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என் பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவை களுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதி நாராயண செட்டியா ராகவாவது வெகு சீக் கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர் களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண் டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமை யாகும்.

தர்மத்தின் நிலை
08.04.1928- குடிஅரசிலிருந்து..

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ் தரான ஸ்ரீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத் தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லா தாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யா ணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங் கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகி விட்டதை யும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர் களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெ னில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தா ருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண் டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக் கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற் பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண் ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பன ரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.

01.09.1929 - குடிஅரசிலிருந்து...

சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை (டிபன் பாக்ஸ்)த் தொட்டுவிட்டான், உடனே பார்ப்பனரல் லாதார் தருமத் திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின் டெண்டெண்டிடம் போய் முறையிட்டான்.

அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பிவிட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை. தன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம் மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பி விட்டது.

ஆகையால் அப்பார்ப்பன சூப்பரின்டெண் டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள சித்தாந்தம் ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு பாலசுப்ரமண்யம் அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம். நம் பார்ப்பன முதலியாராகிய திரு.பாலசுப்பிர மணியத்திற்கு பெரும் சீற்றம் உண்டாய்விட்டது. அவருடைய பெருத்த கொழுத்த உடம்பு துடித்தது. கொண்டுவா பார்ப்பன மாணவனின் சாப்பாட்டுப் பேழையைத் தொட்ட பார்ப்பன ரல்லாத மாணவனை என்றார்.

பழைய காலத்து அயோத்தி ராமன் காட்டில் தவம் செய்த சூத்திரனை எவ்வாறு கொன்றானோ, அவ்வாறே சித்தாந்தப் பார்ப்பன முதலியாரும் பார்ப்பன மாணவன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனைக் கடிந்து வெருட்டி ஆறு அடி அடித்தாராம். பாவம் ஏழைப் பார்ப்பனரல்லாத மாணவன் என்ன செய்வான்? அடி பொறுத்துக் கொண்டான்; கோர்ட்டிற்குச் சென்று சித்தாந்த ஆசிரியர் மேல் கிரிமினல் வழக்குத் தொடுக்கலாமென்றாலோ, வயிற்று சாப்பாட்டில் இடி விழுந்துவிடும், கையிலோ பணம் இல்லை, ஆகையால் சித்தாந்த ஆசிரியர் தப்பித்துக் கொண்டார். இல்லாமல் போனால் ஒரு கை பார்த்து விடலாம்.

சித்தாந்த ஆசிரியர் பி.ஏ.பி.எல். படித்திருந் தும், தமிழில் பெரிய புலவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தும் என்ன பயன்? சிறிதாவது சுயமரியாதையாவது, உணர்ச்சியாவது அன்றி பகுத்தறிவாவது இருந்தால் இவ்வண்ணம் செய்வாரா? ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் பார்ப்பான் சாப்பாட்டுப் பேழையைத் தொட்டால் என்ன தீட்டு வந்து விட்டது? இதை ஆய்ந்து நோக்கினாரா? சித்தாந்த ஆசிரியர் சரியான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால் அப்பார்ப்ப னரல்லாத மாணவனுக்கு நேர்ந்த அவமானம் தனக்கும் தன் வகுப் பாருக்கும் நேர்ந்ததென்று கருத வேண்டாமா? இத்தகைய சுயமரியாதை யற்ற அறிவுகெட்ட பார்ப்பனரல்லா பாலசுப்பிர மணியங்கள் இருந்தால் ஏன் பார்ப்பனர்கள் வருணாச்சிரமக் கொழுப்பு பிடித்தாட மாட்டார்கள்? என்று தான் இவருக்கு சுயமரி யாதை உணர்ச்சி உண்டாகுமோ? அன்றுதான் இவரை நாம் அசல் பார்ப்பனரல்லாதார் என்று கருதுவோம்.

இனி மணலி விடுதியில் மட்டுமல்ல. எங்கும் பார்ப்ப னரல்லாத மாணவர்கள் இவ்வாறுதான் துன்புறுகின்றார்கள். இவர்கட்கு எப்பொழுதுதான் விடுதலை பிறக்குமோ? நம் சுயமரியாதை அரசாங்கம் வந்தால் விடுதலை! விடுதலை!! என்று திராவிடன் 28. 8. 29 வெளியீட்டிற் கூறப் பட்டுள்ளது.

பார்ப்பனனின் சோற்றைத் தீண்டிய பார்ப்பன ரல்லாத மாணவர் இந்நாகரிக காலத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சட்டதுரந்தாரர் திருவிலாப் பாலசுப்பிரமணியத்தின் கசையடிக் கிலக்காயினார்.

இவரது சித்தாந்தமும், சட்டப்பயிற்சியும், ஒரு மாணவரை இச்செயல் பொருட்டுக் கசைகொண் டடிக்கும்

முடிவைப் பற்றியதெனில், அந்தோ, இவரது சைவ சித்தாந்தத்திற்கு நாம் மிகவும் இரங்குகின்றோம். மாட்டு மலத்தை உண்டு, மாட்டுச் சிறுநீர் பருகி, மாட்டு மலத்தைச் சாம்ப ராக்கி அங்கம் முழுதும் பூசி, கொட்டையணிந்து, லிங்கத்திற்குப் பூசை புரியும் இச்சித்தாந்த ஆசிரியரிடம், வயிற்றுக்குச் சோறின்றி இவ் விடுதியில் அபயம் புகுந்த ஒரு மாணவர் மீது, கருணையினையும், நீதியினையும் நாம் எதிர்பார்ப்பது மிகவும் மடமையே. பூணூல் தரித்த பார்ப்பனனிலும், பூணூல் தரியா இப்பார்ப்பனனை நாம் கல்லென்போமா, மரமென்போமா, இரும்பென்போமா, அல்லது காடு வாழ் விலங்கென்போமா? என்னென்போம்? மதவெறிகொண்ட சித்தாந்திகளிடம் நாம் கருணையை எதிர்பார்க்கவில்லை. ஆயின் சட்டம் பயின்ற ஓர் மனிதரிடம், ஆண்பிள்ளை யினிடம், நற்குடும்பத்தில் உதித்தாரிடம் நடுநிலை மையை எதிர்பார்க்கின்றோம். நடுநிலைமையற்று, ஆண் தன்மையற்று தன் பயிற்சியெல்லாம் இரண்டு எழுத்துக்கள் என்னும் முடிவிற்கே ஒப்படைத்துவிட்டதன் பயனாய், பரவிய எண்ணம் அற்று, பார்ப்பனியத்தையும், அத னைப் பாதுகாக்கக் கசை அடியையும் கைக் கொண்ட, சித்தாந்தம் ஆசிரியர் இனியேனும் தம் மூளையில் சிறிது அறிவும், மனதில் கருணையும் பிறக்குமாறு இவர் தன் வழிபடு கடவுளாகிய லிங்கத்தை வணங்கித் துதிப்பாராக. பார்ப்பன ரல்லாத ஒரு மாணவர் கசையடியேற்ற ஒரு கொடுமையை ஏனைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் கண்டும் வாளாவிருந்திருக் கின்றனர். பொறுமை கடலினும் பெரிதென்பர். ஆயினும் சுயமரியாதை இவ்வண்டத்தினும் பெரிது; சித்தாந்தத்திலும் பன்மடங்கு பெரிது; இவ்வாசிரியர் அறிவிலும் ஒழுக்கத்திலும் ஓராயிரம் மடங்கு பெரிது என்பதை நாம் நம் வகுப்பு மாணவர்கட்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம்.இக்கொடுமையை எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும், நாம் அமைதியை இழப்போம் என்றஞ்சு வதனால், இதைப் பற்றி விரித்துரை வரையாது விடுக்கின் றோம். பார்ப்பனரல்லாதார் இத்தகைய செயல் களைக் கண்டும், கேட்டும் எத்துணை நாட்கள் தாம் சும்மாவிருக்கப் போகின்றனர் என்று கேட்கின்றோம். (ப-ர்.)

சுயராஜ்யக் கட்சி செத்தது,
அது நீடூழி வாழ்க!
27.05.1934- புரட்சியிலிருந்து...

சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேரில்லை யென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த தீட்டு வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு காங்கிரசே சட்டசபை களுக்குப் போட்டிபோட வேண்டும்.
ஆனால் சுயராஜ்யக் கட்சியின் பிரமுகர் களே சட்டசபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண் டார்கள்.

இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப் போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேட்சகர்களாகத் தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.  

சட்டமறுப்பு இயக்கம்
20.07.1930 - குடிஅரசிலிருந்து...

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

றைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது.

ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும் படியாகி விட்டது.

மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணி யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக் கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள்  (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.

ஜாதிக்கென்று தொழில் செய்வதால் தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.

Banner
Banner