வரலாற்று சுவடுகள்


25.10.1931 - குடிஅரசிலிருந்து...

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார் களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயன ளிக்ககூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான் களையும் தங்க ளுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டு மானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமுகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

 


தீண்டாதார் கல்வி

22.11.193 - குடிஅரசிலிருந்து..

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதிகளும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்துகொண்டு வரு கின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக் கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப்பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக்கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அர சாங்கத் தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார் களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்தி ருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங் களில் தீண்டா தார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும்  கவலையுள்ளவர்களும் இல்லை.

ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங்களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

 

13.09.1931. - குடியரசிலிருந்து...

உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப் டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண் டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டி ருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மது விலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்க மென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள் கண்டு கொள்வார்களென்று நம்புகிறோம்.

வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறை யடிப்பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பல வந்தத்தை உபயோ கிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா? ஜாதிக் கட்டுப்பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா?

தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத்திற்கும், பெண்ணடி மைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின் றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும், என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடு மையாலும், பலாத் காரத்தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டு மென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.


19.07.1931 - குடிஅரசிலிருந்து...

கனவான்களே!

திரு.வி.வி. இராமசாமி அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும்.

நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4.5 வருடம் தேவஸ்தான கமிட்டியில் பிரசி டெண்டாகவும், வைஸ்பிரசிடெண்டாக வும், இருந்தேன். தேவஸ்தானச் செல்வங் களைப் பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக்கூடுமானால். அது நல்ல வேலை தான், .அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால் அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜினாமாச் செய் தேன். எனது சகபாடிகள் எனது இராஜினா மாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென் றும் சொன்னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண் டேன். தகுந்த  சகபாடிகள் இருந்தால் அதை  நல்வழிப்படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான். இராம னாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசி டெண்டு திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கின்றார்கள். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங் களையும்  நடத்திக் கொடுப்பதற்குச் சுய மரியாதைக்காரர் அங்கு போவது அவசிய மற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக் கவும், கோவில்களின் பேராலுள்ள செல் வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங் களில் நமக்குச் சம்பந்தம் இல்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய  நட்டம் ஒன்றும் இல்லை. ஆகையால் இந்த வித அபிப்பிராயமுள்ள திரு. இராம சாமியைத் தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்தி ருப்பார்கள். ஏனென்றால் திரு. வி.வி. இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்த தேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர் களின்  விருப்பத்திற்கு இணங்கிய திரு. இராமசாமி தனது கடமைகளைச் செய்வார்  என்பதில் சந்தேகமில்லை.

இது போலவே, கல்வி இலாகாவுக்கும் திரு.கந்தநாடார் பி.ஏ.பி.எல் அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு, இலாப மேயாகும் கல்வி இலாகா பார்ப்பனிய மயமாய் இருக்கின்றது. கல்வி வருணா சிரமக் கல்வியாய்  இருக்கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக்கின்றன.  இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும் படி செய்ய வேண்டியது மிகவும் அவசி யமாகும்.

இன்று இந்தியாவின் இழிநிலை மைக்குக் காரணம் மதமும், கல்வியுமே யாகும். பழைய கால கல்வியைச் சங்கத் தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனி யத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து  விட்டார்கள். புத்தகங் களை அரங்கேற்றுவது என்பதே கட்டுப் பாடாகும் என்பதுதான் அர்த்தம் இப்போ தைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அரங்கேற்றுவது டெக்ஸ்ட் புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது. அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள்  இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டி படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்து வதாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்று விட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம்.

ஆதலால், அத்துறைகளில் சுயமரியா தைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத் தியாயர்களை வகுப்புவாரிப் பிரதிநிதித் துவப்படி நியமிக்க வேண்டும். உபாத்தியாயர் களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதார மாக புத்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் . இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேரிடுவது நன்மையேயாகும். ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

(06.07.1931-ஆம் தேதி விருதுநகர் காஸ்மா பாலிட்டன் கிளப்பில் ஆற்றிய சொற் பொழிவு)

கடலூரில் திருமணம்

20.09.1931 - குடிஅரசிலிருந்து...

திரு.ஈ.வெ. இராமசாமி.

சகோதரர்களே! சகோதரிகளே!! மணமக்களே!!! புதிய முறையான திருமணம் இப்பகுதிக்கு இது புதியது. பூசை மேடு கோவிந்தசாமி திருமணம் முன்நடைபெற்றது. அதன்பின் இன்று இங்குவந்திருக்கிறோம். தலைவர் முனி சிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடை பெறு மென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிருப்தி ஏற்பட்டதாகக் கேள்வி பட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே, மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோட்சம், நரகம், கற்பிக்கப் பட்டுள்ள மக்களுக்கு அதிர்ப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு. பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்குப் பயன் தரும். இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்து கொண்டு வருகின்றன.

சிலவிடங்களில் விளம்பரத்திற்காக சிறிது ஆர்ப் பாட்டத்துடன் சுயமரியாதை இயக்கத்து திருமணம் நடைபெறுகின்றது. நான் கூறுவது சிலருக்கு, வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள் அறிவுப்படி கொள்ளவும், தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை, புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப்படி செய்யுங்கள், திருமணம் என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கைக்கு   அடிகோலும் ஆரம்ப நாளே திருமணம் என்பதாகும், பல சடங்குகளுக்கும் விழாக் களுக்கும் தத்துவார்த்தம் வேறாகயிருக்கலாம். ஆண் பெண் கூடி வாழ இச்சைக்காக, சந்தோஷத்திற்காக ஒன்றுகூடும் ஜதை சேர்தலே திருமணமாகும், திருமணம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் நேரில் சம்மதம்  பெற்று இருவரும் இன்பத்தோடு ஒன்றுபடுதலே எல்லா நாட்டாராலும் கையாளப்படுவதாகும். நம்நாட்டிலோ தாய் தகப்பன்மார்களின் வியாபாரமாக ஜதை சேர்க்கப்பட்டு முடிவு கூறப்படுகிறது.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழ்வது தெய்விகமென்பதாகவும், மறு உலகில் இடம் பெறுதற்கான காரியங்கட்கு இங்குவாழ்வதாகவும், கால வினை, பொருத்தம், முடிச்சு நமது கடமை, தேர்தல், முயற்சி என்ற காரணத்தையும் மறுக்கின்றோம், ஜாதிக் கொவ்வொரு விதமாக பழக்கவழக்கமென்ற காரணத்தால் சடங்கு, பணக்கேடு, நேரக்கேடு, மக்கள் ஊக்கக்கேடு ஆகிய கஷ்டத்தோடுதான் திருமணம் நடத்துகிறோம். மாற்றமடை வதில் நாம் பெரியார்கட்குப் பயந்துப் பழை மையையே குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்கிறோம். ஆண் பெண்ணுரிமையைப் பற்றியோவெனில் ஆண் இச்சைக்கும், வேலைக்கும், ஏவுதலுக்கும் என்றே பெண்கள் சேர்க்கப்படுகிறது. சொத்துரிமை, சம உரிமை பெண்கட்கு வழங்கப்படுவதில்லை.

புதிய முறை என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவும், ஆராயவும் வேண்டுவதுதான் இத்திருமணம் நிகழ்ச்சி யாகும்.

இங்கு நடைபெறும் நடைமுறை நிகழ்ச்சிகள் பெரிதும் பெண்கட்குப் பயமாகத் தோன்றலாம், காரணம்  அடுப் பூதவும், வேலை செய்யவும், அடிமை என்று பழக்கியும் வந்ததோடு கல்வி அறிவு போதாக்குறை தான். செலவுசுருக்கம், நாள் குறை, வேலை குறை, பெண்கள் உரிமை, மணமக்கள் சம்மதம், கடன்படல் பின் கடன்தீர்க்கப் பாடுபடல் ஆனால் இன்று நடக்கும் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு பேர் என்று கேட்கலாம். அது ஓர் சாட்சிக்காகத் தான். ஒரு கடை வைப்பவன் மற்றகடைக்காரர்களை அழைப்பதும், புது பேரேடு போடுவதும், அவர்களது ஒப்பந்தத்தை எடுத்து

ருஜுப்பிக்க பேசுவதும் சாட்சிக்காகத்தான். ஆகவே சாட்சிமுறை அவசியம். நமக்கு ஆதாரம் சாட்சிதான். மகம்மதியர் ஒரு புத்தகத்தில் கையொப்பம், கிறிஸ்துவர்கள் கோவில் முன்பாக ஒப்பம், நாம் அதற்காகவே இங்கு சாட்சியாகவே கூடியிருக் கிறோம். சாட்சி யில்லாததால் சமீபத்தில் ஒரு கலியாணம் தள்ளுபடியாயிற்று. ஆதலால் தான் நாம் கூடி சாட்சியளிக்கின்றோம்.

பெண் அடிமைப்படுத்துதல் ஒப்பந்ததில் சம உரிமையுடன் திட்டம் காணல் வேண்டும், வீணாக பழைய சென்மப்பலன், தலைவிதி என்று கட்டாயப்படுத்தி வருவதால் பெண்கள் இனி கட்டுப்பட்டு வாழாது. நம்மில் ஒருவர் வியாபாரியிடம் முதல் கஷ்டப்பட்டுப் பாடுபட்டு பின் சுதந்திரம் பெற்று தனித்து வியாபாரியாகுவதை பார்க்கிறோம்.

புருஷன் தாசி வீட்டிற்கு போதல், கள் குடித்து அடித்தல் போன்ற காரணத்தால் கஷ்டப்படும் பெண்கட்கு விடுதலை வேண்டுவதாகும். நாங்கள் ஏன் இங்கு வந்தோம்? புரோகிதம் செய்ய வரவில்லை, ஆரம்பத்தில் பலருக்கு விளங்காததால் நாங்கள் வந்து இம்முறையை விளக்கவேண்டுமென்று திருபெருமாள் விரும்பியதற்காக வந்தோம். இன்னும் 10 வருஷங்களில் புருஷன் பெண்ஜாதி தேர்ந் தெடுப்பதுகூட எவருக்கும் தெரியப் போவதில்லை, பிற எல்லா நாட்டு நாகரிகங்களைப் பற்றி மட்டும் நாம் கூற தேவை யில்லை. அவரவர்கள் அறிவுப் படியே அறிவு வளர்ச்சிப்படியே இத்திருமணம் நடைபெறும்.

 

 

 

15.02.1931 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத் திருக்கின்றன.  அவை ஒர் அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக்கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக் கூடியதாகவுமிருப்பதால் அதைப் பற்றி சில குறிப்பிடுகின்றோம்.

இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக்கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம் கொடுக்கின்றன.

பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுறை திருப்பனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளுக்கும், வாக்குறுதி களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் தீர்மானங்களும், தமிழுக்கும், சைவத்திற்கும் மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டுமென்னும் வேண்டுகோள் தீர்மானமும் மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்பந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும்.  அவையாவன,

கோவிலுக்குள் செல்ல எல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும்,

கோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிகச் செலவானதும் சமயக் கொள்கைக்கும்  அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிடவேண்டும்.

சாரதா சட்டத்தை உடனே அமலில் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வழங்க வேண்டும்.

ஜாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம்.

விதவை விவாகம் செய்யப்பட வேண்டும்.

இவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது.  அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்றவையாகும்.

என்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது மத நூலாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ, வேத கட்டளையாகவோ இருந்தாலும்) அதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாகவும் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது.  இது அதாவது பகுத்தறிவையும், (நியாயமாகிய) ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கை கள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத (மறை)க் கட்டளைக்கும் விரோத மானாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானிப்பதிலிருந்து மாறுதல் வேண்டும் என்பவர்களுக்குக் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.  இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிக கவலையில்லை.  ஏனெனில், அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் பொருத்தமானவை களை ஒப்புக்கொள்வதும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளி விடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டு விட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினிடமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராறு இல்லை.  மற்றபடி இனிமேல் அறிவு எது? ஒழுக்கம் எது? நியாயம் எது? என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.  இவைகள் மனிதனுக்கு மனிதன் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறு படத் தோன்றலாம் வேறுபட லாம்.  ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனித சமுக மொத்தத் திற்கும் பொருத்தமானதே ஒழிய, சைவத்திற்கு மாத்திரமோ ஒரு தனிக் கூடத்திற்கு மாத்திரமோ ஏற்படக் கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக்  கருதி அவர் களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், சௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.

முடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமல்லாமல் ஒப்புக் கொள்ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

பல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர்களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை.  அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும்முற்கூறிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த  உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால்,  பண்டிதக் கூட்டத்தார்களில் எவருக்காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால், அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்கும் என்றும் கருதியிருந்ததோடு நாம் எவ்வெத் துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்புகின்றோமோ அத்தனைக்கும் அடிகள் ஆதரவளிப்பார் என்னும் நம்பியும்  இருந்தோம்.  எரிதல் காரணமாய் சிலர் பல காரணங்களால் பல சூழ்ச்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள் எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கிவிடாமல் தன் ஆற்றலையே பிடித்துச் சமாளித்துக் கொண்டார்.  இதற்கு உதாரணம் வேண்டியவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப் புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருப்பாதிரிப்புலியூரில் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம்.  எனவே, இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொதுநிலைக் கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக் கொண்டு  கொண்ட அபிப்பிராயகும்.

மற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விவரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம்.

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

11.10.1931 - குடிஅரசிலிருந்து...

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடி ஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.  ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்  என்று ஆணை பிறப்பித் தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலி ருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல் லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த் தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்தி லேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென் றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார்.

தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி விட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொரு வரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப் பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ் திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னி யாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டா தாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலி யவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தயோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம் பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண் மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

- தந்தை பெரியார்-

03.05.1931 - குடிஅரசிலிருந்து...

ஈரோடு முனிசிபாலிடியானது கொஞ்ச காலத்திற்கு முன் இருந்து வந்த பொறுப்பற்றதும், நாணயமற்றதுமான நிர்வாகத்தின் பயனாய் செல்வங்கள் பாழாகிக் கண்டபடி கண்டவர்களால் ஒழுங்குகளும், பண்டங்களும் கையாளப் பட்டு கடைசியாக கடனில் மூழ்கி சம்பளம் வகையறா பட்டுவாடா செய்யவும் சக்தியற்று இந்த மாகாண பாப்பர் முனிசிபாலிடியிலும் ஒழுக்க ஈனமான முனிசிபாலிடியிலும் முதல் நெம்பராய் இருந்து வந்ததானது மாறி, தற்கால சேர்மென் ஜனாப் கே.எ. ஷேக் தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் நாணயமும் பொறுப்பும் பெற்று செல்வ நிலையிலும் சற்று நன்னிலை அடைந்து, இப்போது நல்ல முனிசிபாலிடிகளில் ஒன்று என்று சொல்லத்தக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  அவரது சொந்த செல்வாக்கினால் ஈரோடு முனிசிபாலிடியால் கல்வி இலாகாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ. 44,000 கவர்ன் மெண்டார் தள்ளிக் கொடுத்து வஜா செய்து கொண்டார்கள். மற்றும் அவரது சொந்த பிரயத்தனத்தினால் ஜில்லா போர்டுக்குக் கொடுப்பட வேண்டிய 2, 3 வருஷ பாக்கி யாகிய சுமார் 25,000 ரூபாயும் ஒரு விதத்தில் தள்ளிக் கொடுத்து ஜில்லா போர்டினால் நிரந்தரமாய் வருஷம் 4000, 5000 ஈரோடு முனிசிபாலிட்டிக்கு லாபம் இருக்கும் படியாய் செய்யப்பட்டாய் விட்டது.

மற்றும் ஈரோடு முனிசிபாலிட்டிக்குத் தாங்குமுடியாத பாரமாகவும் பெருநஷ்டமாகவும் இருந்து வந்த ஹை ஸ்கூல் (அதாவது முன்னிருந்த சேர்மெனால் பாதிரிகள் தாட்சண்ணி யத்தில் சாவை தலையில் போட்டுக் கொண்ட ஒரு உபத்திரவம்) ஆனது. இப்போது கோவை ஜில்லா போர்டாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால் அவ்விஷ யத்தில் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு வருஷம் 7000, 8000 வீதம் மீதி ஏற்படும்படியாக ஆகிவிட்டது.

காண்ட்ராக்டர்கள் தொல்லைகளால் கவுன்சிலர் களுக்குள் அடிக்கடி நிகழும் எதிர்பாராத மனவருத்தங் களும் இனிமேல் நேராமல் இருப்பதற்கு முனிசிபாலிட்டி வேலைகளை டிபார்ட்மெண்டு மூலமாகவே செய்வது என்பதன் மூலம் இனி அவ்விதம் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடாகிவிட்டது.  ஆகையால் பல வழிகளிலும் ஜனாப் ஷேக் தாவூத் சாயபு  அவர்கள் காலத்தில் ஈரோடு முனிசிபாலிடி நல்ல நிலைமை அடையும் வழியில் திரும்பிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் மறுபடியும் அரசாங்கமும்  பொது ஜனங்களில் ஒரு கூட்டமும் முன் நடந்து கொண்டதுபோல் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்ளாமல் யோக்கியமாய் நடந்து கொண்டதால் ஈரோடு முனிசிபாலிடி கோயமுத்தூர் முனிசிபாலிடிக்கு உள்ள நல்ல பெயரில் அரைவாசிப் பெயராவது வாங்கக் கூடும்.  கடைசியாக ஈரோடு முனிசி பாலிடியின் கடன் கஷ்டங்கள் ஒருவாறு தீர்க்கப்பட்டதற்கு அதன் கஷ்டநிலைமை ஒருவாறு நிவர்த்தியானதற்கும் கோவை ஜில்லா  போர்டு பிரசிடெண்டு   திவான் பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி  முதலியார் அவர்களின் உதவி மிகுதியும் போற்றத்தக்கது நன்றி பாராட்டத்தக்கதுமாகும்.  ஈரோடு முனிசிபாலிடியில்  அவரது ஞாபகச் சின்னம் எங்காவது இருப்பதற்கு ஈரோடு பொது ஜனங்களோ, முனிசிபாலிடியாரோ  முயற்சிக்க வேண்டியது  அவர்கள் முக்கிய கடமையாகும்.

கடைசியாக ஒன்று, அதாவது  ஈரோடு மின்சார சக்தி விநியோக விஷயமாய் அந்த நிர்வாக பொறுப்பையும்  உரிமையும் சர்க்காரார் ஈரோடு  முனிசிபாலிடியாருக்குக் கொடுக்காமல்  ஏதோ ஒரு வெள்ளைக்காரக் கம்பெனிக்கு கொடுத்தது மிகவும் அக்கிரமும் அநியாயமுமான காரியமாகும்.  அது மாத்திரமல்லாமல் இந்தப்படி செய்த தற்கு அரசாங்கத்தார் சொல்லும்  காரணம், மிகவும் அநீதியுமானதாகும்.

அதாவது ஈரோடு முனிசிபாலிடியின் நிர்வாகம் ஒழுங்கீனமாகவும், யோக்கியப் பொறுப்பற்று நடந்து  கடன்கார முனிசிபாலிடியாய் இருப்பதால் மின்சார சக்தி நிர்வாக சுதந்திரப் பொறுப்பை அதற்குக் கொடுக்க முடிய வில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒழுங்கீனமாகவும், யோக்கிய பொறுப்பில்லாமலும் யாரோ  நடந்துகொண்ட காரியத்திற்கு ஆகவும் அப்படிப்பட்ட காலத்தில் பொது ஜனங்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் எவ்வளவோ தூரம் சர்க்காரைப் பிரவேசிக்கும்படி கேட்டுக் கொண்ட காலத்திலும் வேண்டுமென்றே அலட்சியமாய் இருந்து விட்டு இப்போது அதே குற்றத்தை ஈரோடு முனிசி பாலிடியார் மீது சுமத்துவதானது சிறிதும்  ஒழுங்கல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மின்சார நிர்வாக சுதந்திரத்தை ஈரோடு முனிசிபாலிடியாருக்கும் கொடுக்காமல் ஒரு வெள்ளைக் கார தனி வியாபாரக் கம்பெனிக்கு கொடுத்ததால் ஈரோடு முனிசிபாலிடிக்கு வருஷம் 1க்கு 20,000க்கு மேலாகவே 30.000 ரூ வரை கூடவரக் கூடிய ஆதாயம் நஷ்டமாகி விட்டது.  யூனிட் 1க்கு0-0-6 வீதம் வாங்கும் மின்சாரத்தை அக்கம்பெனியார்  நமக்கு யூனிட் 1க்கு 5அணாவுக்கு  விற்கப் போகிறார்கள் கோயமுத்தூர் முனிசிபாலிடி விஷ யத்திலும்  சர்க்கார்கள் இப்படித்தான் செய்ய இருந்தார்கள். ஆனால் இந்தச் சேர்மனான திரு.சி.எஸ்.ஆர் அவர்களின் செல்வாக்கால் கோயமுத்தூர் முனிசிபாலிடி சமாளித்துக் கொண்டது.

ஆனால் ஈரோடு முனிசிபாலிடிக்கு அந்தப்படியான செல்வாக்கு இப்போது இல்லையானாலும்  ஈரோடு பொது  ஜனங்கள் தங்கள் ஒற்றுமையையும்  கட்டுப்பாட்டையும்  காட்டி தைரியமாய் எதிர்த்து நின்றால் ஈரோடும் வெற்றி பெறலாம்.  அதாவது ஈரோடு முனிசிபாலிடி மூலமாய் அல்லாமல் வேறு வழியில் வரும் மின்சாரம் எங்களுக்கு வேண்டாம். எனச் சொல்லலாம். நாங்கள் யாரும் தனி வியாபாராகக் கம்பெனியர்களிடம் மின்சாரம்  வாங்கி  உபயோகித்துக் கொள்ள மாட்டடோம் என்று உறுதியாய்  சொல்லிவிட்டால்  போதுமானதாகும். அந்தப்படி செய்தால் ஈரோடு முனிசிபாலிடிக்கு  வருஷத்தில் 20,000 ரூபாய் வருஷம் மீதியாகும்.

Banner
Banner