வரலாற்று சுவடுகள்

மலேயா தமிழர்கள்
07.02.1932- குடிஅரசிலிருந்து...

மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றிவரும் திருவாளர் களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் எல்லாம் நமது  இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன.
அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர் களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங் களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர் களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவை களை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார் களென்று நம்புகின்றோம்.

சமஸ்கிருத “சனியன்”
17.01.1932 -  குடிஅரசிலிருந்து...

தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப்பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டி யார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.

உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள்.

ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள்தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமே யாகும்.

இன்று வருணா சிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பற்றப்படுவதே முக்கிய மானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக் கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோத மானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மா பாலிட்டன் கிளப்பில் அங்கத் தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரண மாயிருப்பவை சமஸ்கிருத நூல் களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிராமாணங் களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றன வென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக் கின்றார் களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ் திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறை யாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படு வதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங் கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளா தார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிகிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும்.

பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக்கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பனரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுய மரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனை யைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக் காகக் கொடுக் கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர் மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பலத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.


தந்தை பெரியார் பொன்மொழிகள்

திராவிடர்களுக்கு அரசியலும் பயன் படவில்லை; மதங்களும் பயன்பட வில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தரவில்லை. மனிதன் பகுத் தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம். 

தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடை பெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இதைப் பல அரசியல்வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லு கிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்தியமானதும் ஏற்றதுமானதுமான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட் டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாயமாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக் கிறதா? இருக்கிறவர்கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்க வர்களா? இவை ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10 பேர் களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதி களாக இருக்கத் தகுதி அற்றவர்கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரி யாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத் துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.

இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.

அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இட மில்லாத படியாக நிலைமை ஏற்பட்டு விட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பதுமில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாண யக்கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழு வதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவமாடு கின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக் கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவதுபோல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவ வொட்டாமல் செய்யப் பயனளிக்கும் படியான முயற்சி சர்க்காரால் செய்யப் படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.

இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ள வில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய் யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களி லும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர் களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படுகிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்காகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டிய வர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப்படுத்தப் படவும், புறக் கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர் களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மானவுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சினையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர். சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டையார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன் தாரர்கள் ஆன கோடீஸ்வரர்கள் இல்லையா? மற்றும் நினைத் தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டு வுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொதுநலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.

இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுற மிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில்  நம்மவர்களில் இத் தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.

உதாரணமாக சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்காக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத் தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஒட்டிக் கொண்டிருந்த வர்கள் பார்ப் பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச் சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாண யமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக்காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப் பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண் டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (சிறீனிவாச சாஸ்திரியா) ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனை பேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத் திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட் டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு மரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர் வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல் வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக் கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்ய வில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித் தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந் தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.

காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லா விட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிரஸ் தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீஸ்வரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர் களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட் கிறேன்.

இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழி தன்மையில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக் கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்க லாம். முஸ்லிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிஸ்த வர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில்  யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக் கிறார்களா?

உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன் மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூவென்று காரித் துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீஸ்வரர் முதல், மில் முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர்னர் வைசி ராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும் பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும்பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடு வது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது,  எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள்களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித் திரத்தில் இது தானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர்களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப்பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இனமானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவதற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத்தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப்பிலும், பதவி யிலும் பணம் தேடுவதிலும் செல்லு மேயானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிக மிகப் பொருத்த மானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆசிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிஸ்தவ அனாதை காப்பு இடத்திலேயோ விட்டு விட்டு வாருங்கள். உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற் றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளை களைப் பெற்று விடத்தான் நேரும். எதிரிகளின் அரண் இப்போது  கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித் துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாரா குங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது.

(2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.03.1946

இராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.

அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.

கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.

கதை தோற்றம்

இராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-

தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.

திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.

அவை யாவன:-

திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்ப வர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.

மகப்பேறு யாகம்

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம், அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைத்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின்  இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரி யங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார். இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத் தக்கதாகும். அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரத னுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.

மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கரு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும், மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1943

தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்

07.09.1930- குடிஅரசிலிருந்து...

விருத்தாசலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர்.

இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதி காரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிடமிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மதமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ச மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

ச  மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

ச  தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.

சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை

- சித்திரபுத்திரன் -

07.09.1930- குடிஅரசிலிருந்து...

சுயமரியாதைக்காரன்:- அய்யா இவ்வளவு கஷ்டப் பட்டு இந்தப் பண நெருக்கடியான காலத்தில் கடன் வாங்கிக் கொண்டு இத்தனை அவசரமாய் காசிக்குப் போகின்றீர்களே என்ன காரியம்?

புராண மரியாதைக்காரன்:- ஒரு காரணமும் இல்லை. இந்தப் பாழாய்ப் போன சுயமரியாதை இயக்கம் வந்து பிள்ளைகளையெல்லாம் கெடுத்து விட்டது. அதனால் தான் இவ்வளவு கஷ்டத்துடன் காசிக்குப் போக வேண்டி இருக்கிறது.

சுயமரியாதைக்காரன்:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக் குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?

புராண மரியாதைக்காரன்:- என்ன சம்பந்தம் என்றா கேட்கின்றீர்கள்? நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய் வார்களா? .... எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக் காரர்களால் எவ்வளவு தொல்லை?

சுயமரியாதைக்காரன்:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின் றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?

புராண மரியாதைக்காரன்:-  சொல்லுகிறேன் கேளுங் கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட் டாலும் போடாவிட்டாலும் மோட்சம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்.

சுயமரியாதைக்காரன்:-சரி. அப்படியானால் நீங்கள் மறுபடியும் இங்கு திரும்பி வருவதில்லை போல் தோன்றுகிறதே.

புராண மரியாதைக்காரன்:-  ஆம். இனி இங்கு எனக் கென்ன வேலை? பாடுபட்டு சம்பாதித்தேன். கடவுள் செயலால் ஒன்றும் குறைவில்லை. பிள்ளைகளையும் நன்றாய் செலவு செய்து படிக்க வைத்தேன். அதிர்ஷ்டக் குறைவால் அதுகள் படிக்கவில்லை. கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதுகள் திரியறதைப் பார்த்தால் எனக்கு எள்ளுந் தண்ணீர் கூட இறைக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆதலால் நான் வந்த காரியத்திற்கு நான் போக வேண்டாமா?

சுயமரியாதைக்காரன்:- என்ன காரியமாய் வந்தீர்கள். அதற்கு எங்கு காரியமாய் போகின்றீர்கள்.

புராண மரியாதைக்காரன்:- மனிதன் எதற்காகப் பிறந்தான்? அந்த ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அவன் பாதார விந்தம் போய்ச் சேருவதற்குத் தானே.

சுயமரியாதைக்காரன்:- ஸ்ரீமந் நாராயணன் பாதார விந்தம் தாங்கள் சேருவதற்கும் உங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீர் இறைப்பதற்கும் நீங்கள் கயாவுக்கும் காசிக்கும் போவதற்கும் என்னையா சம்பந்தம்? எனக்கு சற்று விளங்கும்படியாய் சொல்லுங்களே! நானும் தங்கள் கூடவே வந்து விடுகின்றேன்.

புராண மரியாதைக்காரன்:- இதெல்லாம் உங்களுக்கு சுலபத்தில் சொன்னால் புரியாது.

சுயமரியாதைக்காரன்:-  பின்னை எப்படிப் புரியும்?

புராண மரியாதைக்காரன்:- நல்ல குரு கடாட்சம் வேண்டும், பெரியோர்கள் சாவகாசம் வேண்டும். முன்னோர்கள் நூல்களில் பரிட்சை இருக்க வேண்டும், புராணங்களை மரியாதை செய்ய வேண்டும், பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும், எதற்கும் பிராப்த கர்மமும் இதற்கு அனுகூலமாய் இருக்க வேண்டும். பகவான் கிருபையும் வேண்டும்.

சுயமரியாதைக்காரன்:- அப்படியானால் அவைகளில் எனக்கும் ஆசையாய் தான் இருக்கின்றது. இனிமேல் நான் சுயமரியாதைக்காரர்களுடன் சேருவதில்லை. தாங்கள் சொன்னபடியே நடந்து நானும் ஸ்ரீமந் நாராயண னுடைய பாதத்தை அடைய முயற்சிக்கிறேன். தாங்களே எனக்கு நல்ல குருவாயிருந்து கடாட்சம் செய்து மற்ற விஷ யங்களைச் சற்று உபதேசம் செய்யுங்கள். அதாவது பெரியோர்கள் என்று சொன்னீர்களே அவர்களில் ஏதாவது ஒரு நாலைந்து பேர்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள். ஒருவரிடமாவது சாவகாசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். பிறகு முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே அதிலும் முன்னோர்கள் யார்? அவர்களுடைய நூல்கள் எவை? என்பனவற்றைச் சொன்னால் அதையும் அடைய முயற்சிக்கிறேன். பிறகு புராணங்களை மரியாதை செய்ய வேண்டுமென்கிறீர்களே எந்தப் புராணங்கள்? அவைகளின் பெயர்கள் என்ன? எப்படி மரியாதை செய்வது? என்பதையும் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமென்றால் பக்தி காட்ட வேண்டிய விதம் என்ன? சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா? அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா? என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள். அன்றியும் பிராப்தகர்மம் இதற்கு அனு கூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இவ்வளவுக்கும் மீறி பகவான் கிருபை வேண்டுமென்று வேறு சொல்லுகிறீர்கள். அது எப்படி சம்பாதிப்பது ஆகிய காரியங்களைச் சற்று விளக்கித் தாருங்கள். இதோ நானும் கூடவே புறப்படுகிறேன்.

புராண மரியாதைக்காரன்:- சரி, சரி. உம்மைப் பார்த்தால் சரியான சுயமரியாதைக்காரராய்த் தெரிகிறதே! அவர்கள் தான் இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். அவர்களுக்குத் தான் இந்தக் குயுக்தி எல்லாம் தோன்றும்.

சுயமரியாதைக்காரன்:- என்ன அய்யா இவ்வளவு சந்தேகப்பட்டு விட்டீர்கள். தெரியாததினால்தானே நான் தங்களைக் கேட்டேன். தாங்கள் பெரியவர்கள் மோட்சத் திற்குப் போகிறவர்கள் என்று கருதித்தானே தங்களையே குருவாய்க் கேட்கின்றேன். தாங்கள் இப்படிச் சொல்ல லாமா?

புராண மரியாதைக்காரன்:-  வேண்டாமய்யா உம்ம சவகாசமே நமக்கு வேண்டாம். நீர் சரியான சுயமரியாதைக் காரர் என்பது தெரிந்துவிட்டது. உம்ம சங்கார்த்தமே நமக்கு வேண்டாம். நான் உமக்கு குருவாகவும் இல்லை. நம்ம கூட நீர் வரவும் வேண்டாம். போம் போம் இங்கே நில்லாதேயும்.

சுயமரியாதைக்காரன்:- சரி. உங்களுக்கு கோபம் வருவதானால் நான் பேசவில்லை போகிறேன். எனக்குப் பிராப்தகர்மம் உதவி செய்ய வில்லையோ? அல்லது பகவான் கிருபை இல்லையோ தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியாரை குருவாக அடைந்தும் பிரயோஜன மில்லை. ஆனாலும், ஒரே ஒரு சந்தேகம் அதை மாத்திரம் நிவர்த்தி செய்து விடுங்கள்.

புராண மரியாதைக்காரன்:- என்ன சங்கதி?

சுயமரியாதைக்காரன்:- இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படி தங்களுக்கு உதவும்?

புராண மரியாதைக்காரன்:- செத்துப் போய்விட்டால் நல்ல காரியமாச்சுது. உம்மைக் கேட்க வரவில்லை. போ வெளியே புறப்படும் போது சகுனத்தடை மாதிரி வாயில் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள்!

சுயமரியாதைக்காரன்:- சரி. நான் போய் வருகிறேன். நீங்களும் உங்கள் புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் நன்றாயிருக் கின்றன. இனி உங்களைப் போன்ற புராண மரியாதைக்காரர்களே உலகத்தில் இருக்கட்டும். நான் போகின்றேன்.
தந்தை பெரியார் அவர்களுக்கு 15-2-1959 ஞாயிறு காலை சுமார்

10-30 மணியளவில் டெல்லி பகார்கஞ்சில் எம்.எம்.ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பாக சிறப் பானதொரு வரவேற்பு வழங்கப் பட்டது.

பேரன்புமிக்கத் தாய்மார்களே! அம்பேத்கர் பவன் உறுப்பினர்களே! நண்பர்களே!

உங்கள் அனைவரையும் காணு வதிலும், உங்களது பேரன்பை பெறு வதிலும் நான் உள்ளபடியே பெரு மகிழ்ச் சியடைகின்றேன். சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிற என்னைப் பாராட்டு முகத்தான் நீங்கள் அன்புடன் அளித்த நல்வரவேற்பிற்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம் பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட் களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவைகளைப்பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பல மாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதி யாகவும் பலமாகவும் லட்சியங்களைக் கடைப் பிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றி பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை முட்டாளின் உளறல் என்று சொன்னவர்!

இப்படி சில விஷயங்களில் மாத்திரமல்ல. பலவிஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப் பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.

உதாரணமாக, பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி! இப்படி நாம் பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன பலன் ஏற்பட முடியும் வா நாம் இரண்டுபேரும் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன் ரொம்ப சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது ஜாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றேன். இந்து கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது எடுத்துச் சொல்லி மக்களிடையே எடுத்துசொல்லி பிரசாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தை பிரசாரம் செய்து வருகிறேன் என்பதாகச் சொன்னேன்.

என் பிரச்சாரத்தில் ஜாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை ஜாதி, மதம் ஆதாரம் ஒழியவேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிரமாணம் எடுத்துப் படித்தாரோ (இராம னையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவை) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருடகாலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ராமனையும் பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்த பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியதுதான் அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றுகிறது.

புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.

நேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பன நிருபர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார் நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல் லுகிறாயே அதுவும் ஒரு மதம்தானே  என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படி பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் பார்ப்பனர்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார். ஏன் அதில் புத்தர் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.

புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்று மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கி யதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண் டிருக்கிறாயோ அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.

தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக துருவித்துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதேயாகும்.

அது போலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் நீ ஏற்றுக் கொண்டுள்ள தர்மங்களை கொள்கை களை றிக்ஷீவீஸீநீவீஜீறீமீs உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப்பிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது.  உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருதவேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.

ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம்.

நீ உன் தலைவனை மதி!

உனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!

உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.

நீங்களெல்லாம் உங்கள் புத்திக்கு மரியாதை கொடுத்து அது கூறும் கொள்கைகளை ஏற்று புத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உங்களை அறியாமல் உள்ளே புகவிடக் கூடாது.

எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.

நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காக பார்ப்பாறும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும். அதெல்லாவற் றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்துமத பார்ப்பன ஆட்சியாகும்.

உங்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அரசாங்கம் கொடுமைக்கு தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன் வரவேண்டும்.

நம்மிடையே பல ஜாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல ஜாதிகள் கிடையாது: நாம் இரண்டே ஜாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும் சாஸ்திரங்கள்படியும். நாம் இரண்டு பிரிவினர் கள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி ஜாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக, உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே ஜாதிதான்.

இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழிவைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.

ஆசையால் பார்ப்பனர்களுக்கு பதவி அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்பப் போகிறவர் களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.

எனக்கு இப்போது 80 வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும்? எனக்கு இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது!

எங்கள் நாட்டைப் பொறுத்த வரை பார்ப்பனர்கள் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவித செல்வாக்கும் பெறமுடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கி வைத்து விட்டோம். இங்கே அவர்கள் தன்மைபற்றி தக்க ஆதாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர்கள் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்க தயங்கு வார்கள்.

பார்ப்பனர்கள் கொஞ்சப் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம்மீது தப்புப்பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் எங்கள் கட்சியை பார்ப்பானை எதிர்க்கிறகட்சி (கிஸீtவீ ஙிக்ஷீணீலீனீவீஸீ னீஷீஸ்மீனீமீஸீt) என்றே அழைக்கிறார்கள்.

அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறோம்.

எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்கு சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும். (பலத்த கைத்தட்டல்)

எந்தவித சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் ரொம்ப பார்ப்பனர்கள் எங்கள் நாட்டைவிட்டு இங்கு வந்து விட்டார்கள். மேலும் வர வாய்ப்புத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். (கைத்தட்டலும் சிரிப்பு) நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான் நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.

பசி உயிர் போகிறது என்றாலும்கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன பகிஷ்காரத்தை தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.

உங்களுக்கும் சொல்லவேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும் பண வினியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளை யாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.

ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப் பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.

பார்ப்பான் எதை எதைச் செய் கிறானோ அதையெல்லாம் இவன் அவனைப் பார்த்து அதேபோல் இவனும் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பார பெண் வந்தால் அவள் கையில் ஒரு சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்த குழாய்க்கு மேல் ஊற்றி கழுவிவிட்டு பிறகு தான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப்பார்த்து நம்மவன் வீட்டுப்பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி விட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்துவீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் வந்து சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றி கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

முதலாவது பார்ப்பார பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்ற ஜாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே தீட்டுப் பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.

இதைப்பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பொம் பளைகளுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அது போலத்தான் பார்ப்பனரல்லாதாரில் ஜாதி வெறியும் பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர்கள் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும் பார்ப்பானைப் பார்த்து காப்பி அடிப்பதுமே தவிர அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல) கிடையாது. சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான். ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி; பார்ப்பன மதம் பார்ப்பனப் புரா ணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள். இவைகள்தான் நமக்கு எதிரிகளே ஒழிய வேறில்லை. பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

ஆகவே நீங்கள் இவைகளை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறி முடித்தார்கள்.

- விடுதலை 22.09.1959

Banner
Banner