வரலாற்று சுவடுகள்


தந்தை பெரியார் மே 22, 23,  ஆகிய இரு நாட்கள் (சனி, ஞாயிறு) சிதம்பரத்தில் கலந்து கொண்ட மாநாடுகள் வெற்றி விழா மாநாடுகள் என்றே கூறலாம்.

ஆச்சாரியார் ஆட்சியையும், புதிய வர்ணாசிரமத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டிய தனிப் பெருந்தலைவர் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மாநாடும், தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய - பொருளாதார கல்வி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் போர்குரல் எழுப்பி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொண்டு வ.வீராசாமி அவர்கள் தலைமையில் திராவிட விவசாய தொழிலாளர் மாநாடும் நடைபெற்றன. இம்மாநாட் டில்  உரையாற்றிய தந்தை பெரியார் தமது உரையின் தொடக்கத்தில், முதலாவது இந்த மாநாடு அய்ந்து வருடத்திற்கு அசைக்க முடியாதபடி இருந்த ஆச் சாரியாரின் ஆட்சி ஒழிந்த சந்தர்ப்பத்தில் நடை பெறுகிறது. இரண்டாவது ஒரு தமிழரது மந்திரிசபை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது என்று எடுத்துக் கூறி, கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத மாதிரி இப்போது தான் தமிழர் மந்திரி சபை ஏற்பட் டுள்ளது. இதற்கு முன் இருந்த அமைச்சர்களெல்லாம் பார்ப்பனர்களாகத்தான் இருந்தார்கள் என்று கூறியவர் - காமராசரைப் பச்சைத் தமிழர் என முதன் முதலாக அழைத்தும் தமிழ்நாட்டில் ஒரு பச்சைத் தமிழனுடைய மந்திரி சபை ஏற்பட்டிருப்பது நமக்கு ஒரு பெருமை. அடுத்து காமராசர் அமைச்சரவை பார்ப்பானே இல்லாத அமைச்சரவை என்று சுட்டிக் காட்டினார். (ஆர்.வெங்கட்ராமன் பின்னர் சேர்க்கப் பட்டார்).

என்னைப் பொறுத்த வரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன் என்றும் விளக்கம் அளித்தார். தொடக்கத்தில் இராஜாஜி ஆட்சிக்கு வந்தபோது தந்தை பெரியார் ஆதரித் ததை அன்றும் இன்றும் ஏதோ ஒரு பெருங்குறையைக் கண்டுபிடித்தது போல் சிலர் பேசுவர், எழுதுவர். அதற்கும் விளக்கம் கிடைத்தது. தேர்தலில் கம்யூ னிஸ்டுகளை ஆதரித்தேன். நாம் படாத பாடுபட்டு கஷ்டப்பட்டு உழைத்து வெற்றி தேடித் தந்தோம். அவர்கள் வெற்றி கிடைத்ததும் நம்மைப் பற்றி எந்த விதமான கவலையும்படாமல் ஆந்திரப் பார்ப்பனர் பிரகாசத்திடம் போய்க் கெஞ்சினார்கள். இது கூடாது என்று நான் எண்ணினேன். இந்தச் சமயத்தில் எழுதினேன். தைரியமாக. கம்யூனிஸ்ட் மூலம் பிரகாசம் வருவதைவிட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆச்சாரியார் வருவது நல்லது என்றேன். ஆச்சாரியாருக்கு என் ஆதரவு முழுவதும் கிடைக்கு மென்றேன். மற்றவர்கள் திட்டும் பொழுது கூட அவரை நான் ஆதரித்தேன். அவர் லஞ்சத் துக்கு வழிவிடமாட்டார் என்றேன். இந்த எம்.எல்.ஏ.க்களை வாலாட்ட விடமாட்டார் என்றேன். உடனே அவரும் கண்ட்ரோலை எடுத்தார். அதனால்தான் எது இல்லை என்றாலும் நாட்டிலே பொது ஒழுக்கம் குறைந்து வந்ததாவது நிறுத்தப்பட வசதியாயிற்று என்று புகழ்ந்தேன். அதனால்தான் அவருக்கு நம் பேரில் சந்தோஷம் ஏற்பட்டது. அவரும் நம் பத்திரிகையைப் பார்த்துத்தான் தஞ்சை ஜில்லா விவசாயச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம்முடைய சேலம் மாநாட்டுத் தீர்மானத்தை அப்படியே எடுத்து நெசவாளருக்கு நன்மைகள் செய்தார். இதைப் பார்த்து இந்த ஜீவானந்தமும் இந்த இராமமூர்த்தியும் கூட இந்த நாட்டை இராஜ கோபாலாச்சாரியார் ஆளவில்லை; இந்த ஈரோட்டு இராமசாமிதான் ஆளுகிறார் என்றார்கள்!
சட்டசபைக்கோ  பதவிக்கோ செல்லாத  நாம்  யார்  நல்லது செய்தாலும், பாராட்டுவது போல் இதையெல்லாம் பாராட்டினோம். கல்வித் திட்ட எதிர்ப்பின் வலிமை புரியாமல் எடுத்துச் சொன்ன வர்களெல்லோருமே இராமசாமி நாயக்கரின் ஆள் என்று கருதி ஆணவமாக இருந்ததால் ஆச்சாரியார் இன்று நானே வருந்தும்படி வெளியேறி விட்டார்.

எதையும் பட்டவர்த்தனமாகப் பேசும் பெரியார் அன்று சிதம்பரத்தில் பேசியது இன்று வரை பொருந்துகிறது என்பதற்கு அவர் பேச்சில் ஒரு துளி.

‘விடுதலை', 25.5.1954

பெரியார் வருகை தந்த பலன்

மலாயப் பயணத்தின்போது மலாயாத் தமிழரை அரிக்கும் மற்றொரு தீய வழக்கமான குடியை ஒழிக்குமாறு பெரியார் சென்றவிட மெல்லாம் இடித்துக் கூறினார்.
மலாயா இந்தியரின் தலையாய பிரச்சினை ஒன்றில் பெரியார் செலுத்திய நாட்டமும் தந்த அறிவுரையும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத் தின. மனமாற்றம் பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. பலகாலமாக மலாயாவில் வாழ்ந்தும், மலா யாவை வளப்படுத்த உழைப்பை நல்கியும் இந்த நாட்டு பிரஜைகளாகப் பகிர்ந்து கொள்ள உங்களில் பலர் முன் வரவில்லையே என்று வருந்தினார். மலாயா நாட்டில் சொந்தம் கொண்டாட, தமிழருக்குரிய உரிமையைப் பெற, சீனர்களுக்கு இணையாக வாழ மலாயா நாட்டுக் குடியுரிமை பெறுவதே வழி. இங்கே குடியும் குடித்தனமுமாக நிரந்தரமாக நிலைப் பதே அறிவுடைமை என்று பெரியார் சந்தேகத் திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இந்தியாவுக்குத் திரும்ப வர வேண்டும் என்ற ஆசையையே அழித்து விடுங்கள் என்று சொன்னார்.
திக்குதெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த தமிழர் பலருக்கு இதுதான் வழி என்று திட்டமாகச் சுட்டிக் காட்டினார் பெரியார். இதுதான் வழியென்று தெரிந்தும் மதில்மேல் பூனையாக அமர்ந்திருந்த பலரைத் தங்கள் வழியைத் தீர்மானிக்கச் செய்தது பெரியாரின் பேச்சு. தொண்டு செய்யுந்திறனும், தலைமை ஏற்கும் தகுதியுமிருந்தும் தயங்கி ஒதுங்கி நின்றோரை அந்தத் தள்ளாத கிழவனின் உதாரணம் சிந்திக்க வைத்திருக்கிறது. தொண்டு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
- வை. திருநாவுக்கரசு
(வை.திருநாவுக்கரசு அவர்கள் விடுதலை துணை ஆசிரியராக இருந்து, தந்தை பெரியார் அறிமுக உரை - பரிந்துரை தந்து, சிங்கப்பூர் தமிழ் முரசு துணை ஆசிரியராகவும், பிறகு பல பெரிய பொறுப்புகளை சிங்கப்பூர் அரசியல் பெற்று ஆற்றி ஓய்வுபெற்று, மீண்டும் சிங்கப்பூர் தமிழ் முரசு ஆசிரியராக தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் மறைவுக்குப் பின் இவர் சிங்கப்பூர் தமிழ் முரசினை நிலைநாட்ட உதவினார்,)

புத்தர் விழாவும்- தந்தை பெரியாரும்!தந்தை பெரியார் 1954இல் தான் தமிழ் நாட்டிலேயே புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு என்று ஈரோட்டில் மாநாடு கூட்டினார்! அதன் வேகம் இந்தியா முழுவதும் பரவி இந்திய அரசினரே பல லட்சக்கணக்கில் செலவு செய்து புத்தர் விழாவை இந்தியா முழுமையும் கொண் டாடும் படிச் செய்தனர். தந்தை பெரியார் விரும் பியவாரே  புத்தர் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக ஆக்கியது. இன்றும் புத்த பூர்ணிமா என மய்ய அரசு விடுமுறை விடுகிறது.

தந்தை பெரியார் புத்தரின் கருத்துக்களை வலியுறுத்தி வந்தது அறிவோம். அதன் தொடர்ச்சியாக பெரியார் வேண்டுகோள் ஒன்று புத்தர் விழா 1956 மே 24, 25, 26, 27 தேதிகளில் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளும் அறிவிப்பு வெளியானது. 24.05.1956ஆம் தேதி சேலம் நகரில் புத்தரின் 2500ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா
மாநாடு மற்றும் கூட்டம் சிறப்புறக் கொண் டாடப்பட்டது.

வடசென்னையில் புத்தர் விழா

சென்னையில் தந்தை பெரியார், புத்தர் பிறந்த 2500 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை நான்கு நாள்கள் விழாவாக 24.06.1956 முதல் 27.06.1056 வரை மிக சிறப்பான கொண்டாட் டமாகக் கொண்டாடினார். அதற்கு முன்னும் பின்னும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமி ழகத்தின் பல பகுதிகளிலும் புத்தரை நினைவுக் கூரச் செய்த பெருமை தந்தை பெரியாருக்கு உரியதாகும். எடுத்துக்காட்டாக 05.06.1956 சுப் பையா தலைமையில் தந்தை பெரியார் புத்தர் பிறந்த நாள் தட்சிண பிரதேசம் ஆகிய தலைப்புகளில் மதுரை, சந்தைப்பேட்டையில் பேசியது குறிப்பிடலாம். 23.05.1956ஆம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் நகர திராவிடர் கழக சார்பில் புத்தர் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நகர திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா முன்மொழிய தி.பொ.வேதாசலம் விழாவிற்குத் தலைமை வகித்தார். அப்போது தந்தை பெரியார் கலந்துகொண்டு புத்தர் விழா கொண்டாடும் இன்றியமையாமை குறித்தும் புத்தர் நெறியை விளக்கியும் சொற்பொழி வாற்றினார்.

25.5.1956ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பெரியார்  சுயமரியாதைப் பிரச்சார சங்கத்தின் சார்பில் வடசென்னை இராயபுரம் காவல் நிலையத்துக்கு அருகில் மாபெரும் புத்தர் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.எஸ்.கேசவன் முன்மொழிந்ததை எம்.கே.டி. சுப்பிரமண்யம் வழிமொழிந்ததற்கிணங்க டி.வி. சுந்தரமூர்த்தி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

தலைவர் முன்னுரைக்குப்பின் எஸ். குருசாமி பி.ஏ., புத்தருடைய கொள்கைகளைப் போற்றி விளக்கினார். பின்னர் பெரியாருக்கு வட சென்னை பெரியார் சுயமரியாதை சங்கத்தின் சார்பில் மாலைக்குப் பதில் ரூபாய் ஒன்றும் கீழை இறால், வேல் வெள்ளைச்சாமி பகுத்தறிவு படிப்பகத்தின் சார்பில் கருப்புத்துண்டு ஒன்றும் அன்பளிப்பாக அளித்தனர்.

*  நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது பெரிய தலைவர் தாரவார்ட் மாதவன் நாயர் ஆவார்.

* கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப் பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன் நாயரின் மகனாகப் பிறந்தார்.

* எல்லாப் பாடங்களிலும், எல்லாத் தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறிய நாயர், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று  விறிசிவி என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான்சிலும் பயின்று  ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் வி.ஞி.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.

* சென்னை திரும்பி  "Anti Septic" என்ற சென்னை ராஜதானியின் முதல் மருத்துவ இதழை நடத்தினார்.  "விணீபீக்ஷீணீs ஷிtணீஸீபீணீக்ஷீபீ" என்ற ஆங்கில நாளேட்டிற்கும் ஆசிரி யராக இருந்தார்.

* பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல் 1916 ஆவது ஆண்டு வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் காலத்தில்   Madras Medical Registration Act எனும் சட்டத்தைக் கொண்டு வந்து மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.

* ஆறரை அடி உயரமும், கம்பீரத் தோற்றமும் கொண்ட  டாக்டர் நாயரின் பொது வாழ்வில் சந்தேகம் இல்லாமலும், சுயமரியாதையோடும் பணியாற்றினார். 1908ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்ற அன்றைய மாநகரத் தந்தை தியாக ராயர் தீர்மானத்தை எதிர்த்த நாயர் அப்படி செய்தால் மிகுந்த வருமான இழப்பும், தவறான முன்னுதாரண மாகவும் ஆகிவிடும் என்றார். சிலர் இதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும், பதவி விலக வேண்டும் என்றும் எழுதியும், பேசியும் வந்ததை அறிந்த டாக்டர் நாயர் நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர் களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை என்று கூறி பதவி விலகினார்.

* காங்கிரசில் இருந்த  டாக்டர் நாயர் 1915இல் டில்லி இம்பீரியல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் அவரை நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.

* அப்போது  டாக்டர் நடேசன், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோர் டாக்டர் நாயரைச் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேரவற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர்.

* டாக்டர் அன்னிபெசன்ட் பற்றியும், அவரின் நோக்கம் பற்றியும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் "Madam Besant"
என்ற நூலை எழுதி Higgin Bothams  நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோப முற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

*  10-11-1917 அன்று மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்த போது  டாக்டர் நாயர், நடேசனார், சர். பிட்டி தியாகராயர் ஆகியோரைச் சந்தித்து Non Brahmin Reservation பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட் அம்மையாரும்இருந்தார்கள்.

* டாக்டர்  நாயர் இது பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர்  எந்தப் பொதுக் கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக் கட்சியினரும் நெருக்கடி தந்ததை முறியடித்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

* சுயராஜ்யம் பெறுவதே நம் லட்சியம் என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக  ஆட்சியில் பங்கு பெற்று சரிசமாக வாழ்வதே உண்மை யான சுயராஜ்ஜியம் என்று தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர்  டாக்டர் நாயர்.

* ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப் பில்லாமல் நீதிக்கட்சி வேரூன்ற முடியாது என்ற நாயர் 7-10-1917இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால் சென்னை வாழ் தாழ்த்தப்பட்ட இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" புத்தகத்தில் ஆய்வாளர்
க.திருநாவுக்கரசு இந்த உரையினை முழுவதுமாகப் பதிவு செய்துள்ளார்.

* 1910இல் அயோத்திதாசர் நாயரின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார் எம்.சி. ராஜா குறை கூறாத ஒரே நீதிக் கட்சித் தலைவர் நம் நாயரே.
* நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தளமிட்டது.

* காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக் கட்சியை ஆதரித்து வந்ததற்காக  டாக்டர் நாயரை திரு.வி.க. தன் தேசபக்தனில் திட்டித்தீர்த்தார். "தேசிய கவி" பாரதியும் நாயரை சகட்டுமேனிக்கு விமர்சித்து அவரை வகுப்பு வாதி என்றார். இதன் மூலம் நாயரின் இயக்கப்பற்று வெளிப்படும்.

* 1918இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக விளக்கினார்.

* 1919இல் மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக் கொள்கையை வலியுறுத்த லண்டன்  நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உரையாற்றச் சென்றார். 18-07-1919 அன்று அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் (17-07-1919)  டாக்டர் நாயர் முடிவெய்தினார்.   நிஷீறீபீமீக்ஷீs நிக்ஷீமீமீஸீ  என்ற இடத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
* தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம்கூட எழாமல் படிப்பு, பொது வாழ்வு என்று திறந்த புத்தகமாய் வாழ்ந்தார் டாக்டர் நாயர்.

* பல்வேறு இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும்  டாக்டர் நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதே அவரது கொள்கை உறுதியைப் பறைசாற்றும்.

* டாக்டர்  நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை சமூகத்திலும், அரசியலிலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.
வாழ்க டாக்டர் டி.எம். நாயர்.

10-11-1929- குடிஅரசிலிருந்து..

திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டு பண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற் கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திரக் கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடான தாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடைய முடியாமல், பெர்க்கன் ஷெட் பிரபுவின் இழிதகையான பழிச்சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கின்றது.

ஏனெனில், நம்முடைய பிரச்சாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது தேசியம் என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டுள்ளது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந் திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ் காரம், இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் அய்யமில்லை.

எப்போது வெள்ளையர்கள் நம்மை விட அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோமோ, அப்போதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர் அக்கிளர்ச்சி ஓய்ந்து விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்ததேயொழிய, சுதந்திரத்தாகம் தைல தாரையைப் போல் நம்மக்களின் மனத்தில் நிலவவே இல்லை. இதுதான் நமது இந்தியாவின் பரிதாபிக்கத்தக்க நிலைமை. இதை மாற்ற நினைத்தாலும் நினைவளவில் ஏற்படும் சுதந்திரக் கனவு கூட நிலவரமாய் இருக்காது என்பதும் உண்மை.

இதற்குக் காரணம், நம்மக்களின் அறியாமையே என்று கூற வேண்டும். அறிவு உதயமாய் உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற மேனாட்டு மக்கள் கையில் சிக்குண்டிருக்கும் நாம், அவர்களிடமிருந்து நமது நாட்டை அடைய நமக்குத் தலைமையாக வேண்டியது அறிவுடைமையே தவிர சுதந்திரத்தாகமன்று, அறிவுடைய மக்கட்குச் சுதந்திர தாகம் ஏற்பட்டிருப்பின் அத்தாகம் நிலவரமாக ஒரே முறையாக ஓங்கிப் படர்ந்து செழித்து சுதந்திரக் கனி உதவியிருக்கும் என்பதில் அய்யமில்லை. அறிவில்லாத மக்கள் கையில் உள்ள சுதந்திரத் தாகம், பேடி ஒருவன் மணந்த பெண்ணையே ஒக்கும்: இதனாற் பயனில்லை. அதனாற்றான் தாதாபாய் நவுரோஜி காலத்தில் துவக்கப்பட்ட நமது சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஏமாற்றுப் பேச்சுக்கும் இலக்காயிற்றே தவிர, ஒரு சிறிய துறையிலும் வெற்றி அளிக்கவில்லை.

இச்சுதந்திர தாகம் பழைய மூட வைதிக சகாப்தத்தின் இறுதியில் எழுந்தது. ஆனால், இப்பழைய சகாப்தம் அழிந்துவிட்டது என்றே சொல்லலாம். இனிமேல்தான் இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு வெற்றி ஏற்படும் காலம் அணுகிவிட்டது. இப்போதுதான் மக்கள் மனதில் பண்டைய மூடப்பழக்க வழக்கங்களும், உயர்வு தாழ்வுக் கற்பனைகளும் தகர்க்கப் படுதல் அவசியமென்றும், பகுத்தறிவுக்கு முரணாக மதம் வந்து எதிர் நின்றாலும், முதலில் அந்த மதத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்ப்பதும் என்றும் தோன்றி விட்டது.

இதன் அறிகுறியாய் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயர்கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பம்பாய் மாகாணத்தில் புரோகித எதிர்ப்பு இயக்கம் என்னும் பெயர் கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பஞ்சாப் மாகாணத்தில் யுக்தி வாத சங்கம் என்னும் ஒரு அறிவு இயக்கமும் தோன்றி இப்போது அந்தந்த மாகாணங்களில் இவ்வியக்கக் கொள்கைகள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. வங்காளத்திலும் முல்லாக்கள் எதிர்ப்புச் சங்கம் என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வியக்கத் தலைவர்களெல்லாம் பழுத்த தேசிய அமிதவாதிகளாய் இருப்பதும் மிகவும் குறிப்பிடற்பாலது. உதாரணமாக நமது சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் தேசிய உணர்ச்சியும் அவர்கள் தேசியத்திற்கு ஆற்றி வந்த தொண்டும் இம்மாகாணம் அறியும் - பார்ப்ப னரறியாவிடினும் இதேபோல் பம்பாயில் புதிதாகத் தோன்றி இருக்கும், புரோகித எதிர்ப்புச் சங்கத்துத் தலைவராக, திரு.நாரிமன் அவர்களே இருந்து வருகின்றார். மற்றும் திரு.டயர்சி, அம்பேத்கர் முதலான முதிர்ந்த அறிவாளிகளும் இச்சங்கத்தில் சார்பு கொண்டிருப்பதும் கவனித்தற் பாலது. எனவே, இப்போது இந்தியா முழுவதும் அறிவு இயக்கங்கள் தோன்றி வருவதும், இவ்வியக்கங்கள் தேச பக்தி உடைய பெரியார் களையே தலைவர்களாகக் கொண்டிருப்பதும், இவ்வியக்கங்கள் தீவிரமிக்க மன எழுச்சி படைத்த இளைஞர்களைக் கவர்ந்தீர்ப்பதுவும், இந்தியாவில் உதயமாயிருக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் அறிகுறிகளாகவே தோன்றுகின்றன. இச்சகாப்தத்தில் நமது மக்களின் சுதந்திரக் கோரிக்கை ஈடேறும் என்பதை நாம் மீண்டும் எடுத்துக்கூற வேண்டுமோ?

ஆனால், பழைய மூட மதி புதிதாகத் தோன்றிய அறிவு இயக்கத்தைப் பார்த்து, நான் நெடுநாளாக, பன்நூற்றாண்டுகளாக கடவுள், மதம், புரோகிதம், சடங்கு, கலை இவைகளின் பேரால் இவ்விந்தியாவில் வளர்ந்து வந்தேனே; நீ தோன்றியதும்; என்விருத்தாப்பிய திசையில் என்னை மக்கள் கைவிட்டுவிட்டனரே. நான் இறந்துதான் போவேன்; பழைமை பொருட்டு, கிழவன் என்று என்மீது மனமிரங்கி என்னைக் காப்பாற்ற மாட்டாயா? என்கின்றது. நமது அறிவியக்கம் கிழப்பிணமே! நீ இது வரையில் இழைத்த கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் அறிகுறி இவ்விந்தியாவின் அடிமைத் தன்மைதான்; அதை நினைக்கும் தோறும் உன்னை ஏன் இன்றே கழுத்தை முறித்துக் கொன்று விடக்கூடாது என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த சமயத்தில் உன்னைக் காப்பாற்றுவதாவது. செயற்கை மரணம் நேரிடுவதற்கு முன்பாக நீயாகவே தற்கொலை செய்து கொள் என்கின்றது. இந்நிலையில் பண்டைய சகாப்தத்தின் பிரதிநிதிகளாய் காசி கிருஷ்ணமாச்சாரி, எம்.கே,ஆச்சாரி, சத்தியமூர்த்தி, சேஷ அய்யங்கார், சங்கராச்சாரிகள் முதலானவர்களின் கதி என்னாகும் என்பதையும், உண்மைத் தேசியமும் இத்தேசியத்திற்கு உண்மை வெற்றியும் யாரால் ஏற்படக்கூடும் என்பதையும் நம்மக்களே உணர்ந்து கொள்ளக்கடவர்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்ற வர்கள் என்ன சொல்லு வார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப் பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

- தந்தை பெரியார்1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக்கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

2. கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத்தையும் அதிலுள்ள வத்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும்தான் இச்சையால், புத்தியால் செய்துகொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக்கொண்டு திரிபவன் அயோக்கியன்.

3. எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

18.05.1930- குடிஅரசிலிருந்து...

1. ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப் பட்டதாகும்.

2. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

3. வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

4. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.

5 நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள்போல் வேஷம் போட்டுக்கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக் காரன்தான் என்னிடம் மூடப்பழக்கவழக்கம் கிடையாது, புராணங் களெல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு புராண பிரசாரத்தையே செய்பவர்களாகிறார்கள்.
ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகுஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்.

Banner
Banner