வரலாற்று சுவடுகள்


(17.2.1929 குடிஅரசிலிருந்து)
தீண்டாமை விலக்கு தீர்மானம்

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் “மனித வாழ்கையின் நன்மை களை உத்தேசித்தும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் தேச முன்னேற்றத்தைப் பொருத்தும் நம்நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க பொது ஜனங்களிடை இடைவிடாத பிரச்சாரம் செய்து அவர்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டும்“ என்னும் தீர்மானத்தைப் பிரேரேபித்துப் பேச சிறீமான் கெத்தா ரெங்கய்யா நாயுடு தெலுங்கில் தீர்மானத்தை ஆமோ தித்துப் பேசினார். பிறகு ஏகமனதாய் நிறைவேறியது.

சமத்துவமான நகரவாசி உரிமை

அடுத்தப்படியாக சரேந்திரநாத் ஆரியா அவர்கள் தீண்டாமை என்னும் காரணத்தால் யாருக்கும் நகரவாசிகளின் பொதுவான உரிமைகள் மறுக்கப்படக் கூடாதென்று இம் மாநாடு அபிப்பிராயப்படுவதுடன் இந்நாட்டு மக்களுள் சகல வகுப்பாரும்  ரஸ்தாக்கள், ஆபிஸ்கள், குளங்கள், கிணறுகள், ஆஸ்பத்திரிகள், சத்திரங்கள் முதலான பொது ஸ்தாபனங் களில் தாராளமாய் விடப்பட்டு உபயோகித்துக் கொள்ளும் உரிமையளிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க சிறீமான் எர்னஸ்ட்ராக் அவர்கள் அத்தீர்மானத்தின் கடைசியில் “செல்வச் சிக்கன விஷயங்களில் வயது, ஆண், பெண், என்ற வித்தியாசமின்றி சமமான வேலைக்குச் சமமான கூலி கொடுக்கப்பட வேண்டும்“ என்பதையும் சேர்க்க வேண்டுமென்ற திருத்தப் பிரேரணையொன்று கொண்டுவந்து திருத்தம் சிறீமான் ஆரியா அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு முடிவில் திருத்தப்பட்டபடியே ஏகமனதாக நிறைவேறியது.

வந்தனத் தீர்மானம்

பிறகு “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கலா சாலை முதலியவற்றிலும் பரீட்சைகளிலும் சேர்த்துக் கொள் ளப்படுவதன் சம்பந்தமாக பல சாதககங்கள் செய்ப்பட்டிருப் பதன் சம்பந்தமாகச் சர்க்காருக்கு மாநாடு தன் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானம் சிறீமான் டி.ராமச்சந்திரன் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் ராமாஞ்சலு நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமன தாக நிறைவேற்றப்பட்டது.

ஆலயப்பிரவேச உரிமை

பின்னர் சிறீமான் என்.தண்டபாணிப்பிள்ளை “தீண்டப் படாதார் என்பவர்களும் இந்துக்களாதலால் எந்த இந்து ஆலயத்திற்குள்ளும் சென்று கடவுளை வழிபடுவதில் தடுக்கப் படக் கூடாதென்றும் இம்மாநாடு வற்புறுத்துவதுடன், இந்து ஆலயங்களனைத்திலும் தீண்டாதாருக்கு ஆலயப் பிரவேச உரிமையளிக்கும் விஷயத்தில் உடனே தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று மதஸ்தாபனங்களின் நிர்வாகி களை இம்மாநாடு வற்புறுத்துகின்றது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க ராஜகோபால், வி.ஜி.வாசுதேவ பிள்ளை ஆகிய வர்கள் தீர்மானத்தை ஆதரிக்க ஏகமனதாக நிறைவேறியது.

ஆக்ஷேபிக்கத் தக்க விளம்பரங்கள்

பின்னர் சிறீமான் கோலப்பன் அவர்களால் “காப்பி ஹோட்டல்கள், க்ஷவரக் கடைகள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய வற்றில் தீண்டாதாருக்கு இடமில்லையென்று கேவலப் படுத்தும் விளம்பரங்கள் போடப்படுவதைக் குறித்து இம்மாநாடு வருந்துவதுடன், அத்தகைய விடங்களிலெல்லாம் அவர்களை தாராளமாக விடப்படவேண்டுமென்று

வற்புறுத்துவதுடன், தீண்டாத வகுப்பினரின் நண்பர்களென்று சொல்லிக் கொள்பவர்கள் அத்தகைய ஆக்ஷேபிக்கத்தக்க விளம்பரங்களுள்ள விடங்களுக்கு செல்லாமல் நின்று விடவேண்டு மென்றும் கேட்டுக்கொள்ளுகின்றது” என்ற தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு குப்புசாமி பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.

கிறிஸ்தவ ஆலயத்திலும் தீண்டாமை

அடுத்தபடியாக ரெவ்ரெண்ட் பிட்மன் அவர்கள் “சில கிறிஸ்தவ (சர்ச்சுகள்) ஆலயங்களிலும் தீண்டாமை என்னும் வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருவதற்காகவும், தீண்டப்படா தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களை ஆலயங்களில் மற்றவர் களுடன் சமமாக அனுமதிக்காது தனிப்படுத்தி  வைப்பதுடன் ஆலயச் சடங்குகள்  சிலவற்றில் பேதாபேதங்காட்டி வருவதற் காகவும் இம்மாநாடு வருந்துவதுடன், இத்தகைய வித்தியாசங் களையும் தடைகளையும் ஒழித்துவிடும்படி ஆலய நிர்வாகி களைக் கேட்டுக் கொள்ளுகின்றது” என்னும் தீர்மானத்தை பிரேரேபிக்க சிறீமான் எஸ்.எம்.ஏ.சமத் தீர்மானத்தை ஆமோ தித்துப் பேச தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மோட்டார் பஸ் தடைகள்

பின்னர் “சில பஸ் சொந்தகாரர்கள் தீண்டாதாரை மோட்டார்காரில் ஏற்றிக்கொள்ள மறுத்து வண்டிச்சட்ட விதிக்கு விரோதமாய் நடந்து கொள்வதைக் குறித்து இம்மாநாடு அதிகாரிகளுக்கு கவனமூட்டுவதுடன், அவ்வாறு மீறி நடப்பவர்களைக் கடுமையாகத் தண்டித்து அத் தொல்லையை ஒழிக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்னும் தீர்மானம் முடிவில் சிறீமான் நடேசமுதலியாரால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் பாலகுரு சிவத்தால் ஆமோதித்துப் பேசப்பட்டபின் ஏகமனதாக நிறைவேறியது.

இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்
எதற்காகத் தெரியுமா?

02.12.1934 - பகுத்தறிவிலிருந்து....

நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது கஷ்டப்பட்டு இரண்டு அல்லது ஒரு சந்தாதாரரையாவது சேர்த்து 8

அணாவாவது அட்வான்ஸ் வாங்கி விலாசத்துடன் நமக்கு அனுப்பிக் கொடுங்கள்.
ஏன்?

பகுத்தறிவு ஒரு தனிமனிதனுடைய சுயநலத்துக்கோ ஒரு தனி வகுப்பாருடைய நன்மைக்கோ நடைபெறுவதல்ல.

ஆனால் இன்று ஆதிக்கத்திலிருக்கும் வகுப்பாருடைய விஷமமும் சூழ்ச்சியும் நிறைந்த எவ்வளவோ எதிர்ப்பு களையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பின்தள்ளப்பட்ட மக்களுக்காகவும் நடை பெறுகின்ற பத்திரிகை. இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை  நிறுத்தப்பட்டு விட்டதாலும், 2, 3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்தரவு செய்யப்பட்டதாலும், பத்திரிகை விஷயமாய் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும், தண்டனை களும் விதிக்கப்பட்டதாலும், கேசுகளை எதிர்வழக் காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்களேற் பட்டதோடு பத்திரிகை சந்தா எண்ணிக்கையும் குறையத் தலைப்பட்டுவிட்டது. ஏஜண்டுகள் பெரும்பாலோர் அதாவது இயக்கத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் - இயக்கத்தில் உள்ளவர்களால் - இயக்க நன்மைக்காகப் பாடுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எங்கெங்கு ஏஜண்டாயிருந் தார்களோ அவர்களது பாக்கி கள் 100க்கு 90 ரூபாய்வீதம் வசூலாகாமல் போய் விட்டதுடன் கண்டித்து கேட்கப் பட்டதனால் அவர்களது விரோதத் துக்கும், ஆளாக நேரிட்டுவிட்டது. மற்ற பொது ஏஜண்டு களும் சிலர் ஒழுங்காய் நடந்து கொள்ளாததால் எலக்ஷ னுக்குப் பிறகு பத்திரிகை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆதலால் பகுத்தறிவுக்கு தோழர் களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒவ் வொருவரும் தயவு செய்து இரண்டு சந்தாதாரர்களை யாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவர்களாகி விட்டார்கள்.

bஆசிரியர்கள் மகாநாடு பிள்ளைகளைப் பற்றிய கவலை இல்லை

(23.12.1934 - பகுத்தறிவிலிருந்து)

எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகாநாடுகள் கூட்டப் படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வவான்களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுமாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப்பட்டினிகளாய் இருந்து தற்குறிகளாகி 100-க்கு 92பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது இருந்ததாகவோ, இதற்காக ஒரு மகா நாடாவது கூட்டப்பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய சுவாமிகளாவது கவலைப்பட்ட தாகவோ தெரியவேயில்லை.

இந்தக் காலம் செல்வவான்கள் காலமானதால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் செலவிட வேண்டிய வர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக்கின்றது. இதற்காக யார் என்ன செய்யக்கூடும்? எல்லாம் பகவான் செயல் அல்லவா?

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், மக்களுக்கு இருக்க வேண்டிய மானம், அவமானமற்ற தன்மை, கண்ணியம், நேர்மை முதலிய சாதாரணக் குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால் இந்தச் சுதந்திரம் உள்ளவரை மக்களில் நேர்மையுள்ள யோக் கியன் இருக்க மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தச் சுதந்திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள், நாணயமற்ற வர்கள், மக்களை ஏமாற்றி -வஞ்சித்துப் பழக்கப்பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்ற காலிகள் முதலியவர்களது முயற்சியினால், தந்திரத்தினால் என்றால், இதில் யோக்கியம், நேர்மை, உண்மை எப்படி இருக்க முடியும்?

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.

தலைவரவர்களே, தோழர்களே,

சிறை சென்ற தலைவர்களை பாராட்டுவதற்கு ஆக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் தலைவர்களை பாராட்டிப் பேசினவர்கள் அவ்வளவு பேரும் அரசியலில் காங்கிரஸ்காரர் செய்த கொடுமையை எடுத்துச் சொல்லியும், அவர்கள் ஒழிந்து விட்டதற்கு மகிழ்ச்சி அடைந்தும், இனி பார்ப்பனர் ஆட்சி தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெகு உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசினார்கள். அவர்களது உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன். ஆனாலும் இன்றுள்ள நிலையில் பார்ப்பனர்களை அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விரட்டி விட முடியுமா? ஒரு சமயம் முடிந்து விட்டாலும் அதனாலேயே பார்ப்பனிய எல்லாக் கொடுமைகளில் இருந்து நாம் விடுதலை அடைய முடிந்து விடுமா?

பார்ப்பனியக் கொடுமை

உதாரணம் சொல்லுகிறேன். பார்ப்பன ஆதிக்கம் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி இந்த 30 மாத காலத்தில் செய்த கொடுமை அளவற்றது என்று நீங்களே இப்பொழுது எடுத்துக் காட்டினீர்கள். நமது கல்வியை அழிக்கக் குழி வெட்டி விட்டது. உத்தியோகத்திலுள்ள பார்ப்பனரல்லாதார்களை ஒழிக்கப் பல சூழ்ச்சிகள் செய்தது. பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்கில் உத்தி யோகம் கொடுக்க 10 புதுவரிகளைப் போட்டு பணம் திரட்டிக் கொண்டது. அதற்காகப் பல கொடுமைகள் செய்து, பல இலாகாக்களைச் சிருஷ்டித்து, உத்தி யோகங்களைச் சிருஷ்டித்துக் கொடுத்திருக்கிறது. இதற்காக நமது பேரால் 6 கோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு இருக்கிறது. நம்மவர்களை - நான் உட்பட 1300 பேர்கள் - சிறையில் தள்ளிக் கொடுமை செய்தது. மற்றும் பல அட்டூழியங்கள் நடத்திற்று.

இந்த விஷயம் நம் நாட்டிலுள்ள ஆண், பெண், கூன், குருடு, மொண்டி, முடம் வரை எல்லோரும்தான் அறிந் திருக்கின்றனர். அதனால் துன்பமும் அடைகின்றனர். கிராமம் சந்து பொந்து எங்கும் இதே பேச்சாய் இருக்கிறது. இதை யாராலாவது மறுக்க முடியுமா? மறுப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சமா தானம் சொல்லுகின்றேன். அதாவது, இம்மாதிரி பொது ஜனங்கள் பேசி ஆத்திரம் கொண்டிருப்பதால்தான் மந்திரிகள் செல்லுமிடங்களில், அதுவும் முதல் மந்திரி யும், முஸ்லிம் மந்திரியும் செல்லுமிடங்களில்கூட என்றாவது எங்காவது கறுப்புக் கொடி, போலீஸ் பந்தோ பஸ்து இல்லாமல் செல்ல முடியாமலும், 144 போட்டு எதிர்ப்புகளை அடக்கி போலீஸ் படை வைத்து ஊர் ஜனங்களை மிரட்டியும் அல்லாமல் எங்கும் மந்திரிகள் நடமாட முடியாமலும் இருந்து வருகிறது. இதுவே போது மானதாகும்.

இப்படியெல்லாம் இருந்து சமீப காலத்தில் நடந்த 5 ஜில்லாபோர்டு தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத் திற்கே பெருமிதமான வெற்றி ஏற்பட்டிருக்கிறது. தோழர் ஆச்சரியார் வைஸ்ராய், கவர்னர் ஆகியவர்களிடம் தனது வகுப்பாருக்கும், தனது ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆதரவும் செல்வாக்கும் இருப்பதாகச் சொல்லி இந்தத் தேர்தலையே உதாரணமாகக் காட்டியதோடு, சட்ட சபையிலும் ஆணவமாகப் பேசி இவ்வளவு மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கையில் நாங்கள் எப்படி இந்தப் பதவிகளை விட்டுப் போவது என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்லுவது?  அவர்கள் தேர்தலில் செய்த சூழ்ச்சிகளும் நாணயக் குறைவான காரியங்களுமே காட்டப்பட்டால் போதுமானதாகி விடுமா? இனியும் அந்தச் சூழ்ச்சிகளும், நாணயக் குறைவுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது?

இனி மேல்?

ஆகவே, இனி பார்ப்பன ஆதிக்க ஆட்சியின் கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் மாத்திரமே பொது மக்களிடம் சொல்லிக் கொண்டிருந் தால் போதாது. பல தடவை எடுத்துச் சொன்ன பிறகும்தான் இந்தப் பலன் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், இனியும் தோழர்கள் ஆச்சாரியாரையும், சத்தியமூர்த்தியாரையும் பற்றிய குறையையும், அவரது ஆட்சி கொடுமை யையும் மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு பயனும் ஏற்படாது. ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் அரசியலில் இல்லாத காலத்தில் நாம் என்ன நல்ல யோக்கியதையில் இருந்து விட்டோம்? இவர்கள் போய் விட்டால், இவர்களது ஆட்சியை ஒழித்து இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டால் இனி வேறு ஆச்சாரியும், சத்திய மூர்த்தியும், சிறீநிவாச சாஸ்திரியும் வர மாட் டார்களா அல்லது உற்பத்தி ஆக மாட்டார்களா என்று கேட்கிறேன்.

ஆகவே, இனி நாம் ஏதாவது பயன்படத்தக்க வேலை செய்ய வேண்டுமானால் ஆச்சாரிகளும், சாஸ்திரிகளும் விரட்டப்படுவது மாத்திரம் பயன்படாது. சிறிதும் பயன்படாது. இனி மேலும் ஆச்சாரியார், சாஸ்திரிகள் உற்பத்தி ஆகாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உற்பத்தி ஆவதற்கு நாம் தான் உரம் போட்டு, தண்ணீர் விட்டுக் காப்பாற்றிக் கொடுக்கிறோம். வெள் ளாமை செய்து பயிர் வளர்த்துக் கொடுத்து விட்டு விளைந்த விளைவால் நாம் துன்பப்படுகிறோமே என்று சொல்லுவது முட்டாள்தனமா இல்லையா என்று கேட்கின்றேன்.

அஸ்திவாரத்தில் கை வைக்க வேண்டும்

ஆதலால், அஸ்திவாரத்தில் அடி வேரைப் பறித்து வெந்நீர் ஊற்றி, அந்தப் பயிர் முளையிலேயே கருகிப் போகும்படி செய்யவேண்டும், அனாவசியமாகப் பார்ப்பனர்மீது குறை சொல்லி வருத்தப்படுவதில் பய னில்லை. அவர்கள்மீது  ஒரு தப்பிதமும் இல்லை. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி நமக்கு இல்லாத தப்பிதத்தைத் திருத்திக்கொள்ள வேண் டும். நம்மைப் பார்ப்பனிய பிளேக்கும், உளமாந்தையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ள நமக்குச் சக்தி இல்லை.  நோய்க்கு இடம் கொடுத்துவிட்டு நோய் வந்த பிறகு மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில் நம் வாழ்நாள் பூரா வையும் கழித்துக் கொண்டிருப்பதைவிட நோயினால் செத்துப் போவதே மேல் என்பேன்.

ஆகையால், நோயே ஏற்படுவதற்கு வகை இல் லாமல் செய்ய வேண்டும் இனி அதுவும் நமது வேலை யாய் இருக்க வேண்டும்.

ஆரிய மதம் காரணம்

இன்று இப்பார்ப்பன விஷநோய் நம் நாட்டில் பெருகியதற்கும், நம் மக்கள் அதற்கு பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல. நாம்தான் நம்முடைய அறிவீனம் என்னும் அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும். தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரியனைத் தமிழன், என்று தன் னுடைய நாட்டான் தோழன் என்று  கருதினானோ அன்றே தமிழனுக்கு உள மாந்தையும், பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும், வீரமும், அறிவும், ஆற்றலும் அடி யோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண் பெண் அடங்கலும் அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும் படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட் டன. அந்த ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின. அந்த - அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட ஆரிய மதமும், அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்களையும், டாக்டர் ராஜன்களையும், சத்தியமூர்த்திகளையும், வரதாச்சாரி ஆலாசியம் என்கின்றவர்களுமான நோய்ப் பூச்சிகளையும், நோய்களையும் உற்பத்தியையும் செய்து வருகின்றன.

தமிழன் ஆரிய மதத்தைவிட்டு வெளியே வந்தாலொழிய தமிழன் வேறு, ஆரியன் வேறு; தமிழன் மதம், கடவுள், கலைகள், வேறு; ஆரியன் மதம், கடவுள், கலை, சாஸ்திரங்கள் வேறு என்ற உணர்ச்சி வந்து உண்மை அறிந்தாலொழிய இந்த பார்ப்பனிய உளமாந்தை, பிளேக் நோய்களிலி ருந்து தப்ப முடியாது; அந்நோய்ப் பூச்சிகளையும் அழிக்க முடியாது. ஆச்சாரி யாரும், சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப்பென்று குதித் தார்கள் அவர்கள் என்ன ராமன் கிருஷ்ணன் போல் ராட்சதர்களை (தமிழர்களை) அழிக்க அவ தாரமெ டுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன்மார்களுக்கு நாம் திதி, திவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்ரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த்தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும், அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங்கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.

தமிழனுக்கு மானம் வேண்டும்

தமிழனுக்கு இந்த இடத்தில் தெளிவும் மானமும் ரோஷமும் ஏற்பட்டாலல்லவா இவ்விஷ நோயிலிருந்து இனியாவது தப்ப முடியும்? வீணாக பார்ப்பனத் தோழர் களை குறை சொல்லுவதில் பயன் என்ன என்றே மறுபடியும் கேட்கிறேன்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  கட்சி ஏற்படுத் துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்தாபனத்தைப் பலப்படுத்துங்கள். இந்த அஸ்திவார வேலையையும் செய்யாமல் தமிழன் ஒரு நாளும் மானமுள்ள மனிதத் தன்மையுள்ள தமிழனாக வாழ முடியாது என்பது எனது பலமான உறுதி.

ஆத்திரமுண்டு - ஆனால்?

தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் உள்ள அனேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அனேகர் இருக் கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத்தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் பார்ப்பான் காலைக் கழுவின நீரை உட்கொண்டால்தான் மோட்சம் உண்டு; அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித் தலை பட்டால்தான் ஜன்மசாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட்சியை சென்னையில் அதிகமாகக் காணலாம்.

சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன். என்பதற்கு ஆகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப் படையாய்ச் சொல்லி விடுகிறார்கள் என்று பாராட்டி யதற்கு ஆகவும் என்மீது கோபித்துக் கொண்ட சென்னைத் தமிழர்களும் - பார்ப்பனரல்லாத தலைவர் களும், பலர் தங்கள் வீட்டில் இன்றைக்கும் பார்ப்பான் வந் தால்தான் வீடு புனிதமாகுமென்றும் அவன் காலில் தங்கள் தலைமுட்டினால்தான் தங்கள் பெற்றோர்கள் மோட்சமடைவார்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற அநேக முட்டாள்களைப் பார்க்கிறேன்.

நாம் இங்கு கிளர்ச்சி செய்து ஒரு ஆச்சாரியையும், ஒரு சாஸ்திரியையும், ஒரு அய்யரையும் ஒழிப்பதானால் நமது மக்களில் ஏழை முட்டாள்களும், பணக்கார மடையர்கள் கற்றறிந்த மூடர்களும் ஆயிரக்கணக்கான ஆச்சாரியும், அய்யரும், சாஸ்திரியும் உண்டாகச் சடங்குகள் மூலம் நன்றாய் உழுது, தட்சணை அரிசி பருப்பு சாமக்கிரியைகள் மூலம் நல்ல எருப் போட்டு அவர்கள் கடவுள்களையும், பண்டிகைகளையும் கொண் டாடுவதன் மூலம் நல்ல மணியான விதை விதைத்து ஜாதிகள் மூலம் பயிர்களைக் காப்பாற்றி ஆச்சாரி, சாஸ்திரி அய்யர் அய்யங்கார் என்ற நல்ல அறுவடை உண்டாகி குதிர் நிரப்பும் படி செய்து விடுகிறார்கள். இந்த மடஜனங்களைக் கொண்ட தமிழர் சமுகம் என்றுதான் மானமடையும் - என்று தான் மனிதத் தன்மை அடைந்த மனிதனாக  வாழ முடியும் என்பதை தயவு செய்து சற்று சிந்தித்துப் பாருங்கள்; வீணாகப் பார்ப்பனர்கள்மீது குறை கூறாதீர்கள். அவர்களைத் துவேஷிக்காரர்கள். அவர்களால் நாமடையும் கொடுமைக்கு அஸ்திவாரம் இன்னது என்று கண்டுபிடித்து அதை அடியோடு அழிக்க முயற்சி செய்யுங்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல்லுகிறேன் ஒழிய வேறில்லை. இதை 15 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறேனே ஒழிய, இன்று மாத்திரம் அல்ல. நம் ஈன நிலைக்கு உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இன்னும் சிறிது நாளில் தீபாவளி என்னும் ஆரியப் பண்டிகை வருகிறது. அத்தீபாவளிக் கும் கலப்பில்லாத தமிழனுக்குப் பிறந்த தமிழனுக்கும்  என்ன சம்பந்தம்? தமிழர் சமயத்திலோ தமிழர் கலை களிலோ சங்க இலக்கியங்களிலோ தமிழன் தீபாவளி கொண்டாடியதாக ஆதாரமிருக்கிறதா? கொண்டாடுவ தற்குத் தேவை இருக்கிறதா?

தமிழன் சாஸ்திரமும், கடவுளும்

பாரதமும், ராமாயணமும், கந்த புராணமும், இவைகளில் வரும் கதைகளும் கடவுள்களும் மற்றும் அவை சம்பந்தமான பண்டிகை விரதங்களும் தமிழ னுக்குச் சம்பந்தப்பட்டவையா? இவை தமிழனுடைய கலைகளா? தமிழர் சமய சாஸ்திரங்களா? என்று கலை யுணர்ந்த சகல வல்லப பண்டிதர்களைக் கேட்கிறேன்.

ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணியனும், கணபதியும், அவர்கள் அப்பன்களாகிய - லட்சுமி புருஷனான மகா விஷ்ணுவும், பார்வதி புருஷனான பரமசிவனும் தமிழர்களுடைய கடவுள்களா என்று கேட்கிறேன்.

தமிழர்களுடைய கடவுளானது முஸ்லிம்களுடைய கடவுள் போலவும், கிறிஸ்தவர்களுடைய கடவுள் போலவும் உருவம் குணம் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டும் தோற்றம் ஆகியவை இல்லாதது என்றல்லவா தமிழர் கலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். வேண்டுமானால் அப்படிப்பட்ட கடவுளையல்லவா தமிழ் மக்கள் தொழவேண்டும்.  பிரார்த்திக்க வேண்டும்.

மனித உருவம், அதுவும் பார்ப்பன உருவம் 2 பெண்டாட்டி பல பெண்டாட்டி, மற்றும் வைப்பாட்டி, தாசி, தனக்குப் பிறந்த குழந்தைகள், தாசிக்குப்பிறந்த குழந்தைகள், விபசாரத்தில் பிறந்த குழந்தைகள் அவை களும் கடவுளாகவும்; தினமும் கட்டிலில் அம்மனுடன் படுத்து உறங்கும் கடவுளும், அதற்காக சீனா கற்கண்டும், சாரப்பருப்பு பாதாம் பருப்பு சத்துக் கலந்த சுண்டின பாலையும் தன் கட் டிலடியில் வைத்துவிட்டுப் போகும் படி குருக்களுக்குச் சொல்லும் கடவுளும் ஒரு மணி நேரம் பொறுத்து அதே குருக்கள் வந்து அதை எடுத்து குடிக்கப் பார்த்திருக்கும் கடவுளும் தமிழனுடைய கடவுளாகுமா என்று கேட்கிறேன்.

ராமனும் கிருஷ்ணனும், கந்தனும் பட்சி மீதும் மிருகம்மீதும் சவாரி செய்து கொண்டிருக்கும் கற்பனை உருவங்களும், மற்றொருவனும் தமிழனுக்கு எப்பொழுது எப்படி கடவுளானார்கள் என்றும், நமக்கு உருவ முள்ள பெண்டு பிள்ளை உள்ள கடவுள்கள் எப்படி வந்தன. எப்பொழுது வந்தன? இம்மாதிரி கடவுள் வைக்கப்பட்டிருக்கும் கோவில் களுக்கு நல்ல ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏன் போக வேண்டும் என்றும் நான் முட்டாள்களைக் கேட்கவில்லை. பட்டை நாமமும் சூட்டுக்கோல் விபூதியும் அணிந்து வெட்கமில்லாமல் வெளி யில் தலை காட்டித் திரியும் சமயப் பண்டிதர்களைக் கேட்கிறேன். இக் கூட்டத்தால் அல்லவா தமிழ் மக்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக பாவிக்கப்பட்டான். இதை ஒழியுங்கள் முதலில். பின்னால் தானாகவே தமிழனுக்கு மானம் முளைக்கும் என்கிறேன். இதனால் நான் சமயத் துரோகியா, கடவுள் துரோகியா என்று கேட்கின்றேன். நான் சொல்வதெல்லாம் சமயத்துறையில் இந்துமுஸ்லிம் என்ற பிரிவு இருப்பது போல ஆரியன் தமிழன் என்று பிரிவு இருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறேன்.

தீபாவளியும் நரகாசூரனும்

நரகாசூரன் என்பவன் யார்? அவன் செத்ததால் யாருக்கு லாபம் ஏற்பட்டது? யாருக்கு லாபம் ஏற்பட் டது? யாருக்குக் கேடு ஏற்பட்டது? அதற்கு ஆக தமிழன் ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு ஆக பார்ப் பானுக்கு சங்கல்பத்திற்கும் தட்சணைக்கும் தமிழன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்க்கும்படி தமிழர்களை வேண்டிக் கொள்வதற்கு ஆகவே இவைகளைப்  பேசுகிறேன். எங்காவது ஒரு பார்ப்பான் மதுரை வீரனையோ, காத்தவராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ, மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க்கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும், பண்டிகைகளையும், சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.

மானமுள்ள தமிழர்கள் இனி தங்கள் வீட்டில் ராமன் சீதை, கிருஷ்ணன், ருக்மணி, ரங்கநாதன், கந்தன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியன், பார்வதி, பரமசிவன் முதலிய உருவப் படங்கள் தொங்கவிடக் கூடாது என்றும், அக்கதைகளையும் புஸ்தகங்களையும் தங்கள் கலைகளாக சமய ஆதாரங்களாக கொள்ளக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.

பார்ப்பன ஆதிக்க ஆட்சி தற்காலமாக ஒழிந்து விட்டது. இனி பெரிதும் நமக்கு இந்த வேலையும் இருக்க வேண்டும். பார்ப்பன ஆட்சி வந்தால் அப்புறம் மறுபடியும் பார்த்துக் கொள்ளலாம். அதற்குள் நாம் உண்மைத் தமிழர்களாகி ஆரிய சம்பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆரியர் வேறு - தமிழர் வேறு என்பதை உணர்ந்து தமிழ்நாடு தமிழருக்கு ஆக்கும் சுய மரியாதைப் பாதையில் நடப்போமாக.

(03-11-1939 அன்று ஈரோடு தியாகராயர் கட்டடத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு பாராட்டு கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 12.11.1939

9.11.1930- குடிஅரசிலிருந்து...

இந்தியர்கள் என்பவர்களுக்குள் பலவித உடுப் பும் சாயலும் இருப்பதைப் பார்க்கின்றோம் . பெண் களிலும் அப்படியே, சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய, பெரிய வேஷ்டி அவசியமாகின்றது. இதைத் தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு துவாலும் அவசியமாகின்றது. இது தவிர பலருக்குத் தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண்களுக்கும் 16 முழப் புடவையும், ரவிக்கையும், பாடி என்னும் உள்சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக்கிறது.  இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்கவேண்டுமானால் அதிகப்பணச் செலவு மாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினுசானால் 100, 200, 300, 400 ரூ கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது. சாதாரணமாக யாராயிருந்தாலும் இடுப்புக்கு 4 முழத்தில் ஒரு வேஷ்டியை கைலிபோல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி அதாவது பிணீறீயீணீக்ஷீனீ என்று சொல்லக் கூடிய ஒரு சட்டையும், சட்டப்பையில் அடங்கக் கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும் படியாக இந்திய உடையை ஏன் மாற்றக்கூடாது என்பதே நமது யோசனை. 

இந்தப்படிதான் இன்று மலையாள நாட்டில் மகமதியர்களும், கிறித்தவர்களும் உடை அணிகிறார்கள். மற்ற இந்துக்களிலும் ஆண்களும் அநேகமாய் 100க்கு 90 பேர் இப்படித்தான் உடை அணிகிறார்கள். மற்றப்படி உடையில் செய்யும் மாறுதல் போலவே தலைமயிர் விஷயத்திலும் ஆண்கள் கிராப்பு செய்து கொண்டும் பெண்கள் வெள்ளைக்காரப் பெண்களைப் போல தலைமயிரைக் கீழ் காது அளவுக்குக் கத்தரித்துக் கொள்ளவும் செய்து விட்டால் அநேகமாக சாயலிலும் எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஆண் பெண்களுக்கும் ஒன்றுபட்ட காட்சி ஏற்பட்டுவிடும். வித்தியாச உணர்ச்சியும் தானாக மாறிவிடும். இப்போது பெண்களுக்குத் தலையில் மயிர் வளர்த்திருப்பதைப் போன்ற அசவுகரியமும், நேரக் கேடும், வீண் செலவும் போல வேறு எதிலுமில்லை என்றே சொல் லலாம். அதனால் அவர்கள் படும் கஷ்டம் நடுநிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.

அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களைப் பலவீனர்களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாகவும் ஆக்கி அவர்களை மெல்லியலார் பலமற்றவர்கள் என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவித்து உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும் போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திரவமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடைமாற்றமாகிவிட்டால் தானா கவே மாறிவிடும். மலாய் நாட்டிலும், பர்மா நாட்டிலும், கண்டி நாட்டிலும் இந்துக்கள், கிறித்தவர்கள், மகமதி யர்கள், பவுத்தர்கள் உள்பட எல்லோரும் ஆண் பெண் அடங்கலும் இம்மாதிரி உடைதான் உடுத்து கிறார்கள். மற்றபடி ஆங்கில உடை உடுத்துவது பலருக்குப் பிடிக்கலாம். ஆனால் அது பெரிதும் குளிர் தேச உடையாதலாலும் உஷ்ண தேசத்திற்குச் சவுகரி யமில்லாததானதினாலும் அன்றியும் எல்லா மக்க ளாலும் சாத்தியப்படக் கூடியதல்லவானதாலும் அதை நாம் பொது மக்களுக்குள் புகுத்துவது சிரமமா னதும் பொருத்தமற்றதுமாகும் என்று கருதுகின்றோம்.

மற்றபடி செல்வவான்களும் சவுகரியமுள்ளவர் களும் அணிவதில் நாம் ஆட்சேபிக்க வரவில்லை. ஏனெனில் அவ்வுடையின் காரணமாக இப்போது எவ்வித ஜாதி மத வகுப்பு வித்தியாசங்கள் ஏற்படுவதற்கில்லாமல் இருப்பது தான். நிற்க, வெறும் ஒரு கால் சட்டை அதாவது சாதாரண செராய் போட்டு குடுத்துணி மாத்திரம் போட்டுக் கொண்டால் என்ன ஆட்சேபம்? என்று சிலர் கேட்கக் கூடும். அந்த உடையும் ஏற்கக்கூடியதானாலும் அது எல்லோருக்கும் அவசரத்திற்கும் சாத்தியப்படாததாகி விடும் என்று பயப்படுகின்றோம். சிலருக்கு அது அசவுகரியமாகவும் இருக்கக்கூடும் என்றும் நினைக் கின்றோம். ஆனால் அந்தப்படி போட்டுக் கொள் வதை நாம் ஆட்சேபிக்க வரவில்லை. ஏனெனில் அதுவும் முன் சொன்னது போல ஜாதி மத வகுப்பு முதலிய பிரிவினைகளைக் காட்ட சாதனமாயில் லாதிருப்பதால்தான்.

ஆகவே நாம் மேல் சொன்ன, அதாவது 4 முழத்தில் ஓரம் இரண்டையும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கு, ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியைப் பொது உடையாக ஆக்கலாம் என்பது நமக்குச் சரியென்று தோன்றினதால் அதை இப்போது எழுதினோம்.

26.10.1930 -குடிஅரசிலிருந்து...

விபசாரி மகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. ஆனால் எந்த சமயத்தில் ஆண்கள் கோபித் துக் கொள்ளுகின்றார்களென்றால் தங்கள் மனைவிகள் வைப்பாட்டிகள், குத்தகை தாசிகள் விபசாரம் செய்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும், அவமான மேற்பட்டு விட்டதாக பதறு கிறார்கள்.

மற்றும் தங்கள் பெண்களைத் தங்களு டைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுய நலத்திற்காக விபசாரத்திற்கு விட இணங்கு கிறான் என்றோ பெண்ணை அடக்க முடி யாமல் ஊர்மேல் விட்டு விட்டான் என்றோ சொல்லுகின்றபோது அதிகமாய்க் கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.

ஆகவே இந்த அனுபவங்களையும் கொண்டு மேலே காட்டியபடி அதாவது விபசாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய வஸ்து  என்றும் கருதியிருக்கின்றார்கள் - என்பது இன்னும் தெளிவாய் விளங்கும்.

நிற்க, அது அதாவது விபசாரம் என்னும் வார்த்தையை வழக்கத்தில் ஏன் பெண்களை மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன் படுத்தப்பட வில்லை? யென்று கவனிப் போமானால் அதிலிருந்து மற்றொரு உண் மையும் புலப்படும். அதென்ன வென்றால் விபசாரம் என்று சொல்லப்படுவது சுபாவத்தில் உண்மைக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும்.

எது போலென்றால் எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறை யும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகு மென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண் களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும், சாதாரண மாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த் தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததே யாகும்.

ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த் தையும் சிறிதும் பொருத்தமற்றதே யாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப் பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தை யின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண் களுக்கும் பெண் களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வள வையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோத மாகவும் விபசாரத்திற்கு அநுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப் பற்று, நடப்புப் பற்று, பிறப்புப்பற்று என் பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசை களையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு, பரிசுத்தமான உண்மையைக் காணு வானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூழ்ச்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும்.

தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிரவேசம், என்னும் பேரில் காங்கிரசு செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில் களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவ ரையும் செல்லவிடக் கூடாதென்றும், சொல்லி யும் எழுதியும் வந்தது யாவரும் அறிந்ததாகும். மற்றும் கோவில்களைக் கள்ளர் குகையென்று கிறிஸ்துவும், கோவில்கள் இடித்து நொறுக்கித் தள்ளப்பட வேண்டியது என்று முகம்மதுவும், கோவில்கள் விபசாரிகள் விடுதி என்று காந்தி யும் சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததா கும்.

தோழர் காந்தியார் கோவில்களை விபசார விடுதி என்று ஒரு சமயத்தில் சொல்லியிருந் தாலும், இப்பொழுது இரண்டொரு வருஷ காலமாய் அவ்விபசார விடுதிக்கு ஆள் பிடித்து விடும் வேலையை விரயமாய் செய்து வந்த துடன் அதற்காகப் பத்து லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி வந்ததும் யாவரும் அறிந்ததாகும்.

தீண்டப்படாதாருக்கு அரசாங்கத்தார் அரசியலிலும், உத்தியோகத்திலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்த பிறகு அதை ஒழிக்கக் கருதிய காந்தியார், தீண்டாதா ருக்கு நல்ல பிள்ளையாகக் கருதி அவர்களுக் குக் கோவில் பிரவேசம் ஏற்பாடு செய்து கொடுப்பதாய் வாக்கு கொடுத்ததாய் வாக்கு கொடுத்து அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று சட்டசபை சங்கத்தினர்க ளுக்கு உபதேசம் செய்து ஒரு மசோதாவும் கொண்டுவரக் கருதிச் செய்து அதை மற்ற மெம்பர்கள் ஆதரிக்க வேண்டு மென்றும் செய்வதாகவும் சொல்லி, அந்தப்படி ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதும் யாவரும் அறிந்ததாகும்!

அம்மசோதா பொதுஜன அபிப்பிராயத் துக்கு  சர்க்காரால் அனுப்பப்பட்ட சமயத்தில் காங்கிரசு தலைவர்கள் பண்டித மாளவியா முதற்கொண்டு ஞிக்ஷீ.ராஜன், சத்தியமூர்த்தி இறுதியாக உள்ளவர்கள் அம்மசோதா இந்து மதத்துக்கு விரோதம் என்று சிலரும், அதன் கருத்து ஒப்புக்கொள்ளப்படுவதாய் இருந்தா லும் சட்டம் செய்யக்கூடாது என்று சிலரும் அபிப்பிராயங்கள் கொடுத்து பிரச்சாரமும் செய்து வந்ததல்லாமல் கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை காந்தியாரையும் ஒப்பச் செய்து அம் மசோதாவின் தலையில் ஒரு அடி அடித்து அதை கசகச வென்று நசுக்கித் தள்ளி விட்டார்கள். அவ்வறிக்கை சாரம் என்ன வென்றால் :-

தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசு எவ்வித அபிப்பிராயம் கொண்டிருந்த போதி லும் ஆலயப்பிரவேச விஷயத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். 1. இந்துக் களல்லாதார் கலந்து ஓட்டு பெற்று மசோதா நிறைவேறுவதைக் காந்திஜியும், காங்கிரசுக் காரரும் விரும்பவில்லை.

2. மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்பந்தமான பழக்க வழக்கங்களையோ, சடங்கு களையோ தொடக் கூடாது.

3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு இப்போது எவ்வித அபிப்பிராயமும் கொடுக் கக் கூடாது. இதைப் பற்றி நன்றாய் தீர்க்காலோ சனை செய்ய வேண்டி யிருக்கிறது என்பதாகும்.

இதைக் கண்ட பின்பும் மாளவியா எதிர் கட்சி ஆரம்பித்ததைப் பார்த்த பிறகும் தோழர் கள் சத்தியமூர்த்தி, ஞிக்ஷீ.ராஜன் முதலியோர்கள் சட்டம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பின்பும், சர்க்கார் இம் மசோதா விஷ யத்தில் அலட்சியம் காட்ட ஆரம்பித்ததும், பொது ஜன அபிப்பிராயம் சாதகமாயில்லை என்று சொல்ல வேண்டியிருந்ததும், கடைசி யாக இதை இந்து சமுகம் ஆதரிக்காததால் சர்க்கார் எதிர்க்க வேண்டியவர்களாகி விட் டார்கள் என்று சொன்னதும், ராஜபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தீண்டப்படாதாருக்கு மத விஷயங்களில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொன்னதும் ஆன காரியங்கள் அதிசயமான விஷயமாகாது. காங்கிரசுத் தலைவர்கள் கருப்பு (திருட்டு) பாஷையில் பேசினார்கள். சர்க்காரும் ராஜ்பகதூரும் வெள்ளையான பாஷையில் பேசினார்கள் என்பதை விட இதில் பிரமாத வித்தியாச மெதுவும் இல்லை.

கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியா ரின் சமாதானமானது, குதிரை கீழே தள்ளினது மல்லாமல் புதைக்கக் குழியும் பறித்தது என் பது போல் இந்த அறிக்கை காந்தியாரின் சம் மதம் பெற்றதாகும் என்றும் சொல்லிவிட்டார். இதிலிருந்து காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை தீண்டாதார் விஷயத்தில் சமுக சீர் திருத்த விஷயத்தில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிரா யம் என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள நல்லதொரு சமயம் ஏற்பட்டது என்று தான் கருத வேண்டும்.

எனவே இனியாவது தீண்டப்படாதவர் களாகவும் தீண்டப்படா தவர்களாய்க் கருதப் படுபவர்களாகவும், தீண்டப்படாதார் என்று ஆதாரங்களிலும் சர்க்கார் தீர்ப்புகளிலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறவர்களாகவும், இருந்து வரும் மக்களுக்கு புத்தி வருமா?  அல்லது இன்னமும் காங்கிரசு காங்கிரசு காந்தி காந்தி என்று கட்டி அழுது ஈன ஜாதிக்காரர்கள் என்று உலகோர் கருதவும் கல் மேலெழுதவும் அனுகூலமாய் நடந்து கொள்வதையே கரும மாய் கருதுவார்களா? என்பதே நமது கேள்வி.

- பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

'புரட்சி' ஆசிரியர் மீது வழக்கு

புரட்சியில் பிரசுரமான ஒரு வியாசத்திற்காக அதன் ஆசிரியர் மீது மன்னார்குடியில் தொடரப் பட்டிருந்த ஒரு மானநஷ்ட வழக்கில் எதிரிக்கு அரஸ்ட் வாரண்டு அனுப்பட்ட தற்குக் காரணம் முதலில் சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதன் படி ஆஜராகாததினால் வாரண்டு அனுப்பப்பட்டதாக வும் மன்னார்குடி கோர்ட்டில் விபரம் தெரிய வந்ததாம். ஆசிரியருக்கு அந்தப்படி எவ்வித சம்மனும் வரவில்லை. ஆசிரியர் ஈரோட்டிலேயே இருந்திருக்கிறார்.
ஆதலால் சம்மன் எப்போது? யார் மூலமாய் அனுப்பப்பட்ட தென்றும், அது என்ன காரணத் தினால் சார்வு செய்யப்படவில்லை என்றும் சம்மன் மீது என்ன எழுதி திருப்பி அனுப்பப் பட்டதென்றும் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் விசாரித்து நீதி செலுத்தத்தக்க நடவடிக்கை எடுத் துக் கொள்ளுவார்களா? வழக்கு குறிப்பிட்டபடி 4ஆம் தேதி தோழர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர் கள் மன்னார்குடிக்குச் சென்றிருந்தார். விசாரணை 12ஆம் தேதிக்கு வாய்தா போடப்பட்டு விட்டது.

புரட்சி - துணைத்தலையங்கம் - 10.06.1934

எதிர் பாருங்கள்!  எதிர் பாருங்கள்!!


காங்கிரசு சுயராஜ்ஜியக் கட்சிக்காரர்கள் முன் ஒரு காலத்தில் இந்திய சட்டசபையில் செல்வாக் காய் இருந்தபோது அங்கு நடந்துகொண்ட மாதிரியும், அவர்கள் சட்டசபை அங்கத்தினர் பதவியை உபயோகித்துப் பணம் சம்பாதித்த மாதிரியும், தலைவர்கள் என்பவர்கள் சிலர் அந்தப் பணத்தில் பெரும்பாகம் தங்கள் சொந்தத் திற்கு சுவாஹா செய்து கொண்ட கதைகளும் பகுத் தறிவில் வரும் நாளை எதிர்பாருங்கள். மற்றும் இன்றைய காங்கிரசு அபேட்சகர்களில் சிலரின் யோக்கி யதையையும் அவர்களின் வாழ்க்கையை யும் யாருடைய செலவில் அவர்கள் அபேட்சகராய் இருக்கிறார்கள் என்பதும் வெளியாகலாம்.
ஏனெனில் காங்கிரசு கட்சி தவிர மற்ற கட்சி கள் கழுதைக்குச் சமானம் என்றும் காங்கிரசின் பேரால் கழுதை நின்றாலும் அதற்குத்தான் ஓட்டுச் செய்ய வேண்டு மென்றும், சுயமரியாதை கட்சி சர்க்கார் அடிமை கட்சி என்றும் தேசத் துரோகக் கட்சி என்றும் சொல்லுவதற்குப் பதில் சொல்லு முகத்தான் அவை வெளியாகும்.

- பகுத்தறிவு - பெட்டிச்செய்தி - 26.08.1934

மாளவியா


பழங்காங்கிரசுவாதி என்று சொல்லப்படும் பண்டித மாள வியா அவர்கள் காங்கிரசின் ஜாதிமத வகுப்பு சம்பந்தமாய், சம சந்தர்ப்பம் வழங்கும் கொள்கை யில் அதிருப்தி கொண்டு, அதன் நிருவாகத்தில் இருந்து விலகி தேர்தலில் காங்கிரசுடன் போட்டி போடவும், ஒவ்வொரு தொகுதி யிலும் காங்கிரசு அபேட்சகருக்கு எதிர் ஆளை நிறுத்தி எதிர்ப் பிரச்சாரம் செய்யவும் தீர்மானித்து எதிர் கட்சி அமைத்துவிட்டார். இதற்கு காங்கிரசு சர்வாதிகாரியாய் இருந்த தோழர் ஆனேயும், சம் மதித்து பண்டிதருடன் சேர்ந்து காங்கிரசை எதிர்த்து வருகிறார்.

இதை பார்த்த எந்த பார்ப்பன ரும், பார்ப்பனரல்லாத கூலி பக்தரும், மாளவியாவைத் தேசத் துரோகி என்றும், காங்கிரசு துரோகி என்றும் கூறவும் இல்லை. இனி யும் தேசபக்தர் என்றேதான் அவர்கள் அழைக்கப்படுகிறார் கள். ஆகவே தேசபக்தர் என்றால் யார் என்பதும் தேசத் துரோகி என்றால் யார் என்பதும் இதிலி ருந்தே தெரிந்து கொள்ளலாம்.

பார்ப்பன அடிமைகளுக்கும், பார்ப்பனரல்லாத கூலி பிரச்சார கர்களுக்கும், பத்திராதிபர்களுக் கும், எலும்புத்துண்டு போடுகின் றவர்களுக்குந்தான் தேசபக்தர் கள் காங்கிரசுவாதிகள், தேசாபி மானிகள் ஆகிவிடுவார்கள். மற்ற வர்கள் தேசத்துரோகி, காங்கிர எதிரி ஆகிவிடுவார்கள் என்பது தான் அரசியல் அகராதி, அர்த்தம் போலும்.

- பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

Banner
Banner