எழுத்துரு அளவு Larger Font Smaller Font24.08.1930-  குடிஅரசிலிருந்து...

மனிதனை மனிதன் தொடக் கூடாது. பார்க்கக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்ப தானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன் . அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற் கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆண வத்தை அனுபவிக்கின்றா னேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின் றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக் களுக்கே சுயமரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டிருப் பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப்பட் டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவ தில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படு வதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தபடித் தன்னை இழிவு படுத்துவதற்கு  அஸ்திவாரமாகவும், ஆபதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப் பட்டவர்களை எந்த கணக்கில் சேர்ப் பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வள வோ அபிலாசை களையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன் தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுப் படுத்தப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலை யே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவையும், கொடு மையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இலாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம். அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர் களாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் மதக் கொள்கையேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத் துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்தசுத்தமாய் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப் பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தைகளையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவை சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கிறது. ஆகவே மதக் கொள் கைகளின் உயர்வு, தாழ்வுகளை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதி வைத்துக்  கொண்டதிலிருந்து அறி கின்றதா?

இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக்களால் மதிக்கப்படு கின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக் களில் 100க்கு 90பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப் படுபவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கி யதை உள்ள மக்கள் பெரிய விஷயங்களில் ஆசைப் படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத்தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு வேசிக்கு இருக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும், சுகமும் கூட நமது பெண் தெய்வங்களுக்கு  இல்லை. சொத்தில்லை; படிப்பு இல்லை. விவாக சுதந்திரமில்லை, விதவை ஆகி விட்டால் மறுமணமில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரிய வில்லை.

உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர்களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டு மிராண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ் லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன. இந்துக் கோயில் களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக் கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறு தல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோட்சம் தேடிக் கொள்ள நாம் யாத்தி ரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும் என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அது தான் யோக்கிய மான பணக்காரனின் லட்சிய மாகும். இந்த குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக் காரனுக்குச் சமானமானவனே யாவான்.

தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க் கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைபடுத்த முயற்சி செய்யவேண்டும். தாங்கள் அனு பவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப் படுகின்ற மக்கள் யாவரும்  அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறவேண்டும் என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனிதனுக்கும் தலையாய தாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களே யாவார்கள். ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப்பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக்குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner