எழுத்துரு அளவு Larger Font Smaller Font

02.09.1934 - பகுத்தறிவு - கட்டுரையிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர் களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டு மிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக் கிறார்கள்.

நம்முடைய தேசத்து தேசியத்தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள்.

இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வ கேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.ஏ., எதுகிரியம்மாள் ஆகியவர்களாவார்கள். இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி இருக் கிறார்கள். சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்கமில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரிய வன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
-தந்தை பெரியார்

சேலம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு நிறைவேற்றிய சில முக்கிய தீர்மானங்கள்

சேலம், ஜன. 20- சேலத்தில் சென்ற 17.1.1943 அன்று நடைபெற்ற சேலம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேறின. 5ஆவது தீர்மானத்தை பிரரேபித்த பெரியார் சுமார் 1.30 மணி நேரம் மிக விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.

இன்று புத்தகங்களை கொளுத்த வேண்டிய தில்லை என்று பிரதிநிதிகளை வேண்டிக் கொண்டார். பிரதிநிதிகளுக்கு இது சிறிதும் இஷ்டமில்லை என்றாலும் பெரியாரின் தாட்சண்ணியத்திற்கு ஒப்புக் கொண்டு கொஞ்சம் பேர்களே ஓட் செய்தார்கள். பெரும்பான் மையோர் நடுநிலைமை வகித்தார்கள்.

1. இப்போது நடந்துவரும் உலகயுத்தம் பிரிட்டி ஷாருக்கு வெற்றிகரமாய் முடிந்ததும் இந்திய அரசாங் கத்தில் இருந்து திராவிட நாட்டை தனியாகப் பிரித்து திராவிட மக்களுக்கு பொருளாதாரத்திலும் சமுதாயத் திலும் சரிசம உரிமை உண்டாகும்படியான சீர்திருத் தங்களை வழங்க வேண்டும் என்று இம்மாநாடு பிரிட் டிஷ் பார்லிமெண்டுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறது.

2. நம் நாட்டு மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு காட்டும் குறிப்புகள் கொண்டதும் ஒரு குலத் துக்கு ஒரு நீதி கொண்டதுமான மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், நீதி நூல் முதலாகிய எவையும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என் றும் அவற்றை ஒழிக்க ஒவ் வொரு தமிழ் மகனும் பாடுபடவேண்டும் என்றும் இதுவே எதிர்கால முக்கிய வேலைத் திட்டமாய் இருக்க வேண்டு மென்றும் இம் மாநாடு  தீர்மானிக்கிறது. இந்த தீர்மா னத்தை கொண்டு வந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.

3. இந்து மதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் அடிப்படையாய் கொண்ட இந்து லா மாற்றப்பட வேண்டுமென்றும் அதற்கு ஆக கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்றும் இம்மாநாடு தீர் மானிக்கிறது

4. இந்திய ரயில்வே நிலையம் சாலைகளில் உணவருந்த பிராமணர்கள் - பிராமணரல் லாதார்கள் என்று இடம் பிரித்து வைத்திருந்த பேதங்களை ஒழிப்பதற்கு சுயமரியாதை இயக்கம் எடுத்துக் கொண்ட கிளர்ச்சியை மதித்து அப்பேதத்தை ஒழிக்க சென்னை சர்க்கார் தலைவர் மேன்மை தாங்கிய கவர்னர் எடுத்துக்கொண்ட முயற்சியை பாராட்டி அவருக்கு இம்மாநாடு நன்றி செலுத்துகிறது.

5. சர்க்கார் லைசென்சு பெற்ற பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உண்ணவும் சிற்றுண்டி அருந்தவும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று இடம் பிரித்து திராவிடர்களை இழிவுபடுத்தும் கொடுமை முறையை ஒழிக்க வேண்டியது யோக்கியமான அரசாங்கத்தின் கடமை என்றும், ஓட்டல் சிற்றுண்டி சாலைக்கு லைசென்சு கொடுக்கும் சட்டத்தை சர்க்கார் உடனே திருத்த வேண்டும் என்றும் இம்மாநாடு சர்க்காரை கேட்டுக் கொள்ளுகிறது.

6. ஓட்டல்களில் உள்ள இடவித்தியாசங்கள் ஒழிக்கப்பட ஏதாவது கிளர்ச்சிசெய்ய வேண் டியது மிகவும் அவசியமான காரியம் என்று இம்மாநாடு கருதுவதுடன் உடனே துவக்கும்படி தலைவர் பெரியாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

7. திராவிட மக்கள் ஒன்றுபட ஜாதிப்பட்டம் சமயக் குறி முதலிய பேதங்கள் ஒழிக்கப்பட வேண் டியது அவசியம் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்ளுகிறது.

8. புராண சம்பந்தமான கதைகள் கொண்ட சினிமாப் படங்களை திராவிட மக்கள் பகிஷ் கரிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை கேட்டுக் கொள் ளுகிறது.

9. (புராண ஒழிப்பு நாள்) தமிழர்களுக்கு இழிவு தரும் ஆரியப் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய வைகளை ஒழிக்க புராண ஒழிப்பு நாள் என்று ஒரு நாள் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் ஏற் படுத்தி மக்களைப் பின்பற்றும்படி செய்ய வேண்டு மென்று இயக்கத் தலைவர் களை கேட்டுக் கொள்கிறது.

10. மூடநம்பிக்கைகள் மதப்பிடிவாத உணர்ச்சிகள் உள்ள புத்தகங்களை பாடபுத்தக மாக பள்ளிக் கூடங்களில் வைக்கக் கூடாது என்றும் பண்டிதர்கள் பிரசங்கிக்கக் கூடாது என்றும் முறையே பள்ளி தலைமை ஆசிரியர் களையும் பண்டிதர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

11. திராவிடர்கள் தங்கள் வீட்டு நன்மை, தீமை முதலிய காரியங்களுக்கும் கோயில் பூசை அர்ச்சனை முதலிய காரியங்களுக்கும் பார்ப்பனர்களைக் கொண்டு செய்விப்பது என்பதை அடியோடு நிறுத்தி விட்டு அவசி யமானால் தங்கள் இனத்தவரில் ஒரு வரைக் கொண்டு நடத்திக் கொள்ள வேண்டுமென்று 12 வருடத்துக்கு முன் தீர்மானித்ததை மக்கள் ஓர் அள வுக்கு அமுலுக்குக் கொண்டு வந்திருப்பதைப் பாராட்டுகிறதுடன் இனியும் அப்படியே அவை களை அடியோடு ஒழிக்க வேண்டு மென்று இம்மாநாடு கேட்:டுக் கொள்ளுகிறது.

திரு. படேலின் வைதீகம்

20.12.1931 குடிஅரசிலிருந்து...


திப்பாரா ஜில்லா மாஜிஸ்திரேட்டை இரண்டு மாணவிகள் அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற கொடுஞ் செயலைக்கண்டிக்கும் பொருட்டு பம்பாயில் பெண்களின் கண்டனக்கூட்டம் ஒன்று கூடிற்று. அதில் காங்கிரஸ் தலைவர் திரு. வல்லபாய் படேல் அவர்கள் பேசும் போது கீழ்க்கண்டவாறு கூறினார்.

இது மிகவும் கொடிய குற்றம். இந்தியப் பெண்களின் பரம்பரை வழக்கத்திற்குத் தகுந்த செய்கையாகாது. இந்தியப்பெண்கள் சமூகத் திற்கே இது ஒரு நீங்காத பழியாகும். அவர்களுடைய புகழுக்கே கேடு விளைக்கின்றது.

உயிர்களை அழிக்கக்கூடிய கருவிகளைப் பெண்கள் கையில் எடுப்பதே தகாத காரியம். உயிரை உற்பத்தி செய்வதும் காப்பாற்று வதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையேயன்றி, கொல்லும்படி கட்டளையிடப்படவில்லை என்பது திரு. படேல் அவர்களின் பேச்சு. இதிலுள்ள அபிப்பிராயங்களில் கொலை செய்யும் அக்கிரமத் தன்மையைக் கண்டிக்கும் சொற்கள் முழுவதையும்  நாம் பாராட்டு கிறோம்.

இவ்வாறு கொலை செய்த-வெறி பிடித்த பெண்களின் கொடுந் தன்மையை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம்.
ஆனால் உயிரை உற்பத்தி செய்வதும் அதைக் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை என்று கூறிய பழய வைதீக அபிப்பி ராயத்தை நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். பெண்கள் பிள்ளை பெற்று வளர்க்கக்கூடிய வெறும் யந்திரங்கள் அல்லர்.

அவ்வாறு யந்திரங்களாக வைக்கப்பட்டிருப்பதும் தவறு; ஆண் மக்களின் சுய நலம்; இந்து மதத்தின் ஆபாச வழக்கமாகும். பெண்கள் ஆண்களைப்போலவே சகல உரிமைகளையும் பெறத்தகுதி யுடையவர்கள் என்பது திரு. படேல் அவர்களின் பரந்த அறிவுக்குத் தோன்றாமல் போனதைக்கண்டு ஆச்சரியப்படுகின்றோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும்.  மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை

*  இந்த நாட்டில் இருப்பது போல் ஜாதிக் கொடுமை உலகில் வேறு எங்கும் காண முடியாது. காரணம் ஜாதியை அழிய ஒட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner