எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.11.1930- குடிஅரசிலிருந்து...

இந்தியர்கள் என்பவர்களுக்குள் பலவித உடுப் பும் சாயலும் இருப்பதைப் பார்க்கின்றோம் . பெண் களிலும் அப்படியே, சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய, பெரிய வேஷ்டி அவசியமாகின்றது. இதைத் தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு துவாலும் அவசியமாகின்றது. இது தவிர பலருக்குத் தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண்களுக்கும் 16 முழப் புடவையும், ரவிக்கையும், பாடி என்னும் உள்சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக்கிறது.  இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்கவேண்டுமானால் அதிகப்பணச் செலவு மாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினுசானால் 100, 200, 300, 400 ரூ கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது. சாதாரணமாக யாராயிருந்தாலும் இடுப்புக்கு 4 முழத்தில் ஒரு வேஷ்டியை கைலிபோல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி அதாவது பிணீறீயீணீக்ஷீனீ என்று சொல்லக் கூடிய ஒரு சட்டையும், சட்டப்பையில் அடங்கக் கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும் படியாக இந்திய உடையை ஏன் மாற்றக்கூடாது என்பதே நமது யோசனை. 

இந்தப்படிதான் இன்று மலையாள நாட்டில் மகமதியர்களும், கிறித்தவர்களும் உடை அணிகிறார்கள். மற்ற இந்துக்களிலும் ஆண்களும் அநேகமாய் 100க்கு 90 பேர் இப்படித்தான் உடை அணிகிறார்கள். மற்றப்படி உடையில் செய்யும் மாறுதல் போலவே தலைமயிர் விஷயத்திலும் ஆண்கள் கிராப்பு செய்து கொண்டும் பெண்கள் வெள்ளைக்காரப் பெண்களைப் போல தலைமயிரைக் கீழ் காது அளவுக்குக் கத்தரித்துக் கொள்ளவும் செய்து விட்டால் அநேகமாக சாயலிலும் எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஆண் பெண்களுக்கும் ஒன்றுபட்ட காட்சி ஏற்பட்டுவிடும். வித்தியாச உணர்ச்சியும் தானாக மாறிவிடும். இப்போது பெண்களுக்குத் தலையில் மயிர் வளர்த்திருப்பதைப் போன்ற அசவுகரியமும், நேரக் கேடும், வீண் செலவும் போல வேறு எதிலுமில்லை என்றே சொல் லலாம். அதனால் அவர்கள் படும் கஷ்டம் நடுநிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.

அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களைப் பலவீனர்களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாகவும் ஆக்கி அவர்களை மெல்லியலார் பலமற்றவர்கள் என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவித்து உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும் போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திரவமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடைமாற்றமாகிவிட்டால் தானா கவே மாறிவிடும். மலாய் நாட்டிலும், பர்மா நாட்டிலும், கண்டி நாட்டிலும் இந்துக்கள், கிறித்தவர்கள், மகமதி யர்கள், பவுத்தர்கள் உள்பட எல்லோரும் ஆண் பெண் அடங்கலும் இம்மாதிரி உடைதான் உடுத்து கிறார்கள். மற்றபடி ஆங்கில உடை உடுத்துவது பலருக்குப் பிடிக்கலாம். ஆனால் அது பெரிதும் குளிர் தேச உடையாதலாலும் உஷ்ண தேசத்திற்குச் சவுகரி யமில்லாததானதினாலும் அன்றியும் எல்லா மக்க ளாலும் சாத்தியப்படக் கூடியதல்லவானதாலும் அதை நாம் பொது மக்களுக்குள் புகுத்துவது சிரமமா னதும் பொருத்தமற்றதுமாகும் என்று கருதுகின்றோம்.

மற்றபடி செல்வவான்களும் சவுகரியமுள்ளவர் களும் அணிவதில் நாம் ஆட்சேபிக்க வரவில்லை. ஏனெனில் அவ்வுடையின் காரணமாக இப்போது எவ்வித ஜாதி மத வகுப்பு வித்தியாசங்கள் ஏற்படுவதற்கில்லாமல் இருப்பது தான். நிற்க, வெறும் ஒரு கால் சட்டை அதாவது சாதாரண செராய் போட்டு குடுத்துணி மாத்திரம் போட்டுக் கொண்டால் என்ன ஆட்சேபம்? என்று சிலர் கேட்கக் கூடும். அந்த உடையும் ஏற்கக்கூடியதானாலும் அது எல்லோருக்கும் அவசரத்திற்கும் சாத்தியப்படாததாகி விடும் என்று பயப்படுகின்றோம். சிலருக்கு அது அசவுகரியமாகவும் இருக்கக்கூடும் என்றும் நினைக் கின்றோம். ஆனால் அந்தப்படி போட்டுக் கொள் வதை நாம் ஆட்சேபிக்க வரவில்லை. ஏனெனில் அதுவும் முன் சொன்னது போல ஜாதி மத வகுப்பு முதலிய பிரிவினைகளைக் காட்ட சாதனமாயில் லாதிருப்பதால்தான்.

ஆகவே நாம் மேல் சொன்ன, அதாவது 4 முழத்தில் ஓரம் இரண்டையும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கு, ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியைப் பொது உடையாக ஆக்கலாம் என்பது நமக்குச் சரியென்று தோன்றினதால் அதை இப்போது எழுதினோம்.