எங்கள் மகள், மகன், இணையேற்பு விழாக்களிலும், என்னுடைய 75, 80 அகவை நிறைவு விழாக்களிலும் வாழ்த்துரை வழங்கி சிறப்பு சேர்த்த பெரும் இதயத்தை எங்கள் நெஞ்சம் நன்றியுடன் நினைத்து மகிழத் தானே செய்யும்?
தந்தை பெரியாரின் அறிவுக்கேணியின் தெளிந்த நீரைத் தமிழின நன்செய் நிலத்தில் பாய்ச்சி வேளாண்மை செய்யும் குடியான வன்தானே தமிழரின் தலைவர்? அந்த விளைநிலத்து நற்கரும்புக் கட்டுகள்தான் கட்டுப்பாடான கருப்புச்சட்டைக்காரர்கள்.
தந்தை பெரியார், திராவிட இயக்கத் தொடர் ஓட்ட முதல் ஓட்டக்காரராகக் கொடுத்த ‘பேட்டனை’ப் (Baton) பெற்ற அன்னை மணியம்மையாரிடமிருந்து பெற்ற இலக்கை நோக்கி, மூச்சு வாங்க, திட்டங்களும், அறிக்கைகளும், போராட்டங் களுமான வியர்வை கொட்ட 85ஆவது சுற்றை முடித்து ஓடிக் கொண்டிருப்பவர்தான் தமிழர் தலைவர். அவரை ஊக்கப்படுத்த, ‘விடுதலை’ மலரைத் தூவி, சுயமரியாதை, சுயமரியாதை என்று முழங்கி பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கைத்தட்டி உற்சாகப் படுத்துவோம்.
இயக்கத்தவர்களின் நெஞ்சத்துடிப்பில் எழும் ஓசை தமிழர் தலைவரின், கோட் பாட்டையும், இலக்கையும், பண்பு நலன்களையும், வினைத்திட்பத்தையும், பரப்புரை செய்வதை செவிமடுத்து பூரிப் படைகின்றனர் இயக்கத்தவர்கள்.
அத்தகைய வெளிவரும் ஒலியாவது: பெரியார் உலகமயமாகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும். வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்கு அழிவு வரக்கூடாது. நீட் தேர்வுக்குத் தமிழகம் வேட்டு வைக்க வேண்டும். “பெரியார் உலகம்” பெரும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். மாநில சுயாட்சித் தன்மை களவு போகக்கூடாது. எவரிடத்தும் தொண்டறம் எண்ணம் தோன்ற வேண்டும். பெற் றோரைப் பிள்ளைகள் முதுமை காலத்தில் பேண வேண்டும். இயக்கத்தின் கல்வி நிறுவனங்களும், நாகம்மையார் குழந் தைகள் இல்லமும் மேலும் புகழ்சேர்க்க வேண்டும். இயக்க வெளியீடுகள் வீடு தோறும் சென்று குவிய வேண்டும்.
இயக்கத்தவர் தமிழர் தலைவரிடத்துக் காணும், நடுநிலை, அஞ்சாமை, அடக்கம், கடுஞ்சொல் கூறாமை, சோர்வில்லாமை, மறதி, மடமை இல்லாமை, ஒப்புரவு பேணு தல், புத்தகப் பைத்தியம் போன்ற சான் றோர்க்கணிகலனாக அமைந்த பண்பு நலன்களை நெஞ்சில் நிறுத்தி அவரின் தொண்டு அய்யாவின் அடிச்சுவட்டில் நீண்டு பீடுநடைபோட வேண்டும் என்று இயக்கத்தவர் இதயம் வாழ்த்துகிறது.