எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(8.7.1934-இல் கும்பகோணத்தில் பேசியதன் சுருக்கம்)

09.09.1934- பகுத்தறிவிலிருந்து...
தோழர்களே!

இந்தத் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜன சமுக அமைப்பின் அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டக் கூடிய எந்த அமைப்பும், ஜன சமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதல்ல.

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சமஅந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மக்கள் சுகமாக வாழ முடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான்;  மற்றொருவன் சுகத்தை அனுபவிக்க பாத்தியதை உடையவன் தான் என்னும் சோம்பேறி எண்ணம் மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது.

இந்த எண்ணமே மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும், அது வீணாகாது. ஜனங்களின் மனோபாவமும், வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய வேறொரு முறையாலும் நன்மை உண்டாகாது என்பது திண்ணம். தற்போதிருக்கும் நிலை மையில் சுயராஜ்ஜியம் வந்தால் குருட்டு நம்பிக்கையும் வைதிகமும் தான் வலுக்கும்.

தற்போது சுயராஜ்ஜியம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏழைகள் நிலைமை அங்கே எப்படி இருக்கிறது?  அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடைய தாகத்தான் இருக்கிறது. அங்கே லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள்.

அமெரிக்கா உலகில் செல்வத்திற்கே இருப்பிடமா யிருந்தும் அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள். ஜெர்மனியின் நிலைமை இன்று எவ்விதமாக இருக்கிற தென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை யுடைய தென்று சொல்லும் இங்கிலாந்து சுயராஜ்ஜிய தேச மேயாகும்.  உலகத்தில் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுகைக்குட் பட்டிருக்கின்றன. ஆனால் அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. சுயராஜ்ஜியமுள்ள ஒவ்வொரு தேசமும், இப்படித்தான் இருக்கிறது. சுயராஜ்ஜியமோ அன்னிய ராஜ்யமோ, குடிஅரசோ, முடிஅரசோ எந்தவிதமான முறையிலும் மக்கள் சுகம் பெற முடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகிறது.

ஆகையால் ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்ஜியம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவ தில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும், பொது உடைமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட ராஜாங்க அமைப்பொன்றே மக்கள் சுக வாழ்க்கைக்குரிய வழி யாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கக் கூடாதென்று கேட்கிறேன். உலகத்தில் பலவகையில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமுமில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

இன்னும் பல வழிகளில் மரணமடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசித்து சிலரோ பலரோ, உயிரைத் தியாகம் செய்வது கூட பெரிய காரியமாகுமாவென்று கேட்கிறேன். மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசங்கள் காண்பிக்கப்படவேண்டும்?  அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக் கொண்டு ஒரு கணமாவது வாழ முடியாது. பலாத்காரம் கூடாது. இம் முறைகளை மாற்ற பலாத்காரம் ஒரு பொழுதும் வெற்றி யடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறந்துவிடும்.

ஆகையால் ஜனங்களுடைய மனத்தை மாற்றப்பாடுபட வேண்டியதுதான் முறையே யொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்.

இந்த தேசத்தில் முன்னேற்றமுள்ளவர்களென்று, பிற் போக்கானவர்கள் மற்றொன்றாக இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படி விரிக்கபட்டா லொழிய மக்கள் அபிவிருத் தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தாலொழிய மற்றெந்த ராஜீய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.

பார்ப்பன பத்திரிகைகளும் சர்.சண்முகமும்
30.09.1934 பகுத்தறிவிலிருந்து...

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்வி களையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன.

சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்த னமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன. இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தி யும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பன ரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம் என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனிதனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமூகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்
04.11.1934 - பகுத்தறிவிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாத தல்ல.

ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மை யாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.

எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என் பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner