எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


16.09.1934 - பகுத்தறிவிலிருந்து...

தோழர்களே!

சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். நாடகம் என்பது ஒரு விஷயத்தைத் தத்ரூபமாக நடித்துக்காட்டுவது என்பதோடு, அது பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படு வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை, மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப் பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.

தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மையாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கும் விளங்க வேண்டும். அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலட்சேப சபை போலவும், விகட சபை போலவும் நகைகள், உடுப்புகள், காட்சி சாலைகள் போலவும், விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுகளை அடுக்கி பேசும் பேச்சு வாத சபை போலவும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகங் களுக்கு நடிப்புகளில் மிக விசேஷ சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்தமற்றது என்பது நமது அபிப் பிராயம்.

உதாரணமாக நெருப்பு பிடித்து விட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளறுபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா?  அல்லது தாளம், சுருதி, ராகம் முதலியவைகளைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவற்றுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய்க் கருதப்படமுடியுமா?

மேல் நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்ராமாக்களில், பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த் தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்ராமா என்று சொல்ல மாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடக அபிமான மும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவை களைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படு கின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும், சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது. ஜாதி வித்தியாசம் தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கியிருக்கிறது. அதுபோலவே நந்தன் கதையிலும், ஆள்நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையைப்படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப் படுகிறதும் விளங்கும். இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.

இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம், சுயமரியாதை ஆகியவை விளங்கின தோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ்மாறுதலாகவும், கடின வார்த்தை யாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப் பம் ஏற்பட்டு அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக் காது. ஆரிய புராணங்களில் ஆரியர் களால்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராட்சதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோ கிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க. இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதி தாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராசன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்குச் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன். நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், என்.எ. ஆனந்தம், அழகப்பா முதலியவர் களுக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன். இந்தப் புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித்ததற் கும், நாடக பாத்திரங்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் என் நன்றி செலுத்துகிறேன்.

(இரணியன் நாடகத்தில் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

லார்ட் வில்லிங்டனின் வீர முழக்கம்:

ஜோசியம் பலித்ததாம்!

02.09.1934- பகுத்தறிவிலிருந்து...

லார்டு வில்லிங்டன் பிரபு இந்திய சட்டசபையில் பேசும் போது சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் தங்களுடைய பயனற்ற தடை வேலைகளைச் சீக்கிரத்தில் கைவிட்டு விடுவார்கள் என்று முன்னமே ஜோசியம் சொன்னதாகவும் கொஞ்ச நாளைக்கு முன் உயிருக்கு மன்றாடிக் கொண்டி ருந்த சட்டமறுப்பு இயக்கம் செத்துப்போய் விட்டதென்றும் இதைப் பல காங்கிரசு தலைவர்கள் கூட அப்போதே சொன்னார்கள் என்றும், இனி அது எந்தக் காலத்திலும் தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இப்போது காங்கிரசு ஸ்தாபனங்களின் மீதுள்ள தடையை நீக்கிவிட்டோம் என்றும், சட்டமறுப்பு இயக்கம் அடியோடு செத்துப் போய்விட்டதென்று தான் நம்புவதாகவும், இது விஷயமாய்தான் கையாண்ட முறைகள் எல்லாம்வெற்றி யளித்து விட்டதென்றும், அவை வெற்றியளித்தற்குக் காரணம் பொது ஜனங்களும் நல்ல புத்தி வந்து சட்ட மறுப்பை கைவிட்டதே காரணமென்றும் சொல்லி கடைசி யாக இந்த அளவுக்கு வில்லிங்டன் பிரபு தனது ஜோசியம் பலித்துவிட்டது என்றும் மகிழ்கின்றார்.

ஆனால் இந்த ஜோசியம் வில்லிங்டன் பிரபு மாத்திரம் கூறவில்லை என்பதோடு, சுய அறிவுள்ள மக்கள் 100க்கு 99 பேர் வில்லிங்டன் பிரபுவின் பெயர் இந்திய வைசியராய் பதவிக்கு அடிபடுவதற்கு முன்பே சொன்ன ஜோசியமே தவிர வேறில்லை என்று சொல்லுகிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தில் அவர் ஜோசியம் பலித்து விட்டதாகச் சொல்ல முடியாது. என்னவென்றால் மறுபடியும் சட்ட மறுப்பு தலையெடுக்காது என்பது. தேர்தல் முடிந்து காங்கிரசுகாரர்களும் பார்ப்பனர்களும் அதிகாரத்துக்கும் பதவிக்கும் வராமல் போக நேருமானால் அடுத்த தேர்தலுக் குள்ளாக மறுபடியும் செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள ஏதாவது ஒருவழி கண்டுபிடித்துதான் தீருவார்கள்.

அப்போது அவர்கள் கைவசம் வசூலித்த பணமும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்படும் வாலிபர்களும் மிகுந்திருப்பார்களானால் மறுபடியும் ஒரு மூச்சு கிளம்பி ஊசிப்பட்டாசுக் கட்டுடன் வெடிப்பது போல் சடபுடவென்று வெடித்து அடங்கி அதன் பயனாய்ச் சிலருக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அப்புறம் தான் அடங்கு வார்கள். இது பொது ஜனங்களிடத்தில் உண்மையான செல்வாக்கு பெற யோக்கியதை இல்லாத கூட்டத்தார்களுக்கு ஏற்பட்ட தர்மமேயாகும். ஆதலால் அதை வில்லிங்டன் பிரபு அடக்கிவிட்டதாக நினைப்பது போலிக் கலவரமேயாகும். வில்லிங்டன் பிரபுவின் வைசி ராய் ஆயுள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும்.

ஆதலால் அவர் எப்போதும் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட்டேன் என்று சொல்லுவது ஆயுளை கணித்துப் பார்க்காமல் பேசிய பேச்சென்றே கருதுகின்றோம். ஏனெனில் இதற்குமுன் இருந்த வைசிராய் பிரபுக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் பேசிப் போய் இருக்கிறார்கள். சட்டமறுப்பு இந்த 14 வருஷமாய் இருந்து கொண்டேதான் வருகிறது.

ஆதலால் வைசிராய் பிரபுக்குச் சட்டமறுப்பு அடியோடு இந்தியாவை விட்டு மறைந்து போகவேண்டும் என்கின்ற எண்ணம் உண்மையில் இருக்குமானால், மக்களின் வேலை இல்லாத கஷ்டத்தையும் தரித்திரத்தையும் நீக்க வழி கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை வருவது போலும், வருஷத்துக்கொரு முறை ஜனவரி மாதம் வருவது போலும், எலக்ஷன்கள் தோறும் சீர்திருத்தங்கள் தோறும் சட்டமறுப்பு வந்து கொண்டுதான் இருக்கும். சட்ட மறுப்பு மறைந்து போனதாக சொல்லுவதும் திங்கட்கிழமை விடிந்த உடன் ஞாயிற்றுக் கிழமை மறைந்தது போலவும் பிப்ரவரி பிறந்த உடன் ஜனவரி மறைந்ததாகவும் நினைப்பது போல்தான் முடியும்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறுவதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா நல்வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர்களின் மொழி தமிழர் அல்லாதவர்களுடைய மொழிகளைவிடச் சிறந்த மொழியாகும். தமிழர்களின் இயற்கை அறிவுத் திறன் தமிழரல்லாத மற்ற மக்கள் பல்லோரையும் விட வளர்ச்சிக் கேற்ற நல்ல அறிவுத் திறன் ஆகும். ஆனால், உலகில் தமிழன் கீழ் மகனாகவும் அறி வாராய்ச்சி அற்ற மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டி யாகவும் இருந்து வருகின்றான்.

* தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு, தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ் ஜாதி மக்களாக்கிய ஆரியர் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்.

* சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner