எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.11.1934- பகுத்தறிவிலிருந்து...

இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டது. தேர்தலில் அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எப்பொழுதும் பலம் குறைவு என்பதையும் எதிர்க்கட்சியில் இருப் பவர்களுக்குப் பலம் அதிகம் என்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் தேர்தல் வந்தால் எதிரிகளை விட அதிகாரத் தில் இருப்பவர்கள் இரண்டு பங்கு பலமுடை யவர்களாக இருக்கக் கணக்குப் போட்டுக் கொண்டால் தான் தேர்தலில் முகம் கொடுக்க முடியும்.

இன்றைய ஜஸ்டிஸ் கட்சியார் தங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கே முடியாத நிலையில் இருக்கிறார்கள். மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு சமயம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றாலும் அடுத்த மந்திரி பதவியும் தங்களுக்கே வரும் என்றால்தான் ஒற்றுமை என்று காட்டிக்கொள்வார்களே தவிர மற்றபடி ஒருவரை ஒருவர் கவிழ்க்கவே தபஞ் செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல வேண்டிஇருக்கிறதற்கு வருந்துகிறோம்.

வெளியில் ஒவ்வொரு ஜில்லா, தாலுகாக் களில் உள்ள ஜில்லா போர்டு பிரசிடெண்டு சேர்மன் முதலியவர்கள் அடுத்த தடவையும் பிரசிடெண்டு சேர்மென் ஆவதற்கு யாருடைய தயவு வேண்டுமோ அவருடைய கட்சிதானே தவிர மற்றபடி இன்று அவர்களுக்கு அதாவது பிரசிடெண்டுகள் சேர்மென்கள் என்பவர் களுக்கு எந்தக் கட்சியும் இல்லை எவ்வித அபிமானமும், கொள்கையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

மற்றபடி சட்டசபை மெம்பர்கள் யோக்கிய தையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி எப்படி ஜெயிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். தோழர் சுப்பராயன் அவர் களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அவர்களுடைய கொள்கை எல்லாம் சுப்பராயன் அவர்களுக்கு, தானே எப்படியாவது மறுபடியும் மந்திரியாக வேண்டுமென்பதும், சுப்பராயன் அவர்களைப் பின்பற்றுவோர்களுக்கு அதனால் தாங்கள் ஏதாவது பயன் அடைய வேண்டும் என்பதுமேயாகும். அது போலவே தோழர் முனிசாமி நாயுடு அவர்களுக்கும் ஒரு கட்சி இருக்கிறது. அவர்களது கொள்கையும் மேல் குறிப்பிட்டது போலதான். இதை நாம் இன்று குற்றமாகச் சொல்ல வில்லை. ஏனெனில் காங்கிரசின் யோக்கியதையும் அப்படியே, சுதந் திரக் கட்சியின் யோக்கியதையும் அப்படியே, ஜஸ்டிஸ் கட்சி யோக்கியதையும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே மந்திரியாவதற்கும் ஒருவரை மந்திரியாக்கி வைத்து அதனால் ஏதாவது உதவி மற்றவர்கள் பெறுவதற்கும் என்பதாக இன்று அரசியல் உலகத்தில் கட்சிகள் இருப்பது இன்றைய முறையில் குற்றம் என்று நாம் சொல்ல வரவில்லை.

தோழர் சுப்பராயன் மந்திரி சபையைக் கவிழ்த்ததற்குப் பார்ப்பனர்கள் அஸ்திவாரமாக இருந்தார்கள் என்றாலும் பார்ப்பனரல்லா தார்கள் அதற்கு உதவியாய் இருந்து அவரை ஒழித்தது அக்கிரமமேயாகும். அவர் மந்திரி சபை செய்த காரியங்களில் 10இல் ஒரு பாகம் கூட இன்று வந்த மந்திரிகள் சாதித்து விட முடியவில்லை. அதை ஒழித்த தோழர் முனி சாமி நாயுடு மந்திரிசபை சிரிப்புக்கு இடமாய் இருந்தது. அதாவது அவர் காலத்தில்தான் மந்திரிகள் தங்கள் உபயோகத்துக்காக எதை யும் செய்வார்கள் என்று சொல்லக்கூடிய வர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பிறகு ஏற்பட்ட மந்திரிசபையும் உங்களுக்குள் கரையான் அறிக்கின்ற மாதிரியாகவே கட்சிக் கட்டுப்பாடு இருந்து வந்தாலும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இல்லாதிருந்தால் என்ன கதி ஆகி இருக்குமென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம்.

அடுத்த தேர்தலில் பொப்பிலி ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டச் சொன்னாலும் கட்டுப வர்கள் கிடைப்பது அரிதாகத்தான் காணப் படுகிறது. ஏனெனில் அவ்வளவு பயம் ஏற்பட்டு விட்டது. அப்படியானால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

இந்த நிலையில் ஒரு கட்சியை வைத்தி ருப்பது என்பது அக்கட்சிக்கு மிகவும் அபாயகரமான காரியமாகும்.

ஆதலால் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இந்தச் சமயத்தில் துணிவாக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அதென்னவென்றால் முதலில் கட்சியை உருப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோழர்கள் சுப்பராயனையும், முனிசாமி நாயுடு அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஆக்கிக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் கவலை இல்லாமல் இருப்பது புத்திசாலித் தனமாகாது.

அடுத்த சீர்திருத்தத்தில் 7, 8 மந்திரி தானங்கள் வரப் போகின்றன. ஆளுக்கொரு மந்திரி எடுத்துக் கொண்டு தொலையட்டும் என்று தைரியமாய் இடம் கொடுக்க வேண்டும். சம்பளத்தில் பகுதியை கட்சி பண்டுக்கு உபயோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சீர்திருத்த மந்திரி சம்பளங்களையும் ஒரு அளவுக்காவது குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இவைகளைச் செய்ய முன்வராமல் அதைவிட்டு விட்டு தனி அறைக்குள் இருந்து கொண்டு பொறுப்பற்ற ஆட்களுடனும், எப்படியாவது தன் காரியம் ஆனால் போதும் என்று வாழ்கின்ற ஆட்களுடன் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டு தைரியமாய் இருந்தால் அடியோடு நசுங்கிப் போக வேண்டிவரும் என்று இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.

பின்னால் வரப்போகும் சென்னை சட்ட சபைத் தேர்தல் முடிவைப் பற்றி நாம் எழுத நேரிடும்போது இந்த வியாசத்தை எடுத்துப் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல் லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையே ஒழிய வேறில்லை.

எனவே அடுத்தமாத முதல் வாரத்தில் ஒரு மீட்டிங் போட்டு வேலைத் திட்டங்களைப் பற்றி ஒரு முடிவு செய்துக் கொண்டு தோழர்கள் சுப்பராயன், முனிசாமி நாயுடு ஆகியவர் களையும் கலந்து ஏதாவது ஒரு கட்டுப்பாடு உண்டாக்கிக் கொள்ள வேண்டியது மிக அவ சியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய சட்டசபைத் தேர்தல் தோற்றுப் போனது நமக்கு ஒரு பெரும் வெற்றி அளிக்கக் கூடியதாய் முடிய வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டியது அறிஞர் கடமையாகும்.

வேலையில்லாத் திண்டாட்டம்
09.09.1934- பகுத்தறிவிலிருந்து...

செல்வம் பொழியும் அமெரிக்கர் தேசத்தில் இன்று கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பெருத்த கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கக் குடிஅரசுத் தலைவர் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்ப தற்காக ஒரு காரியம் செய்து வருகிறார். அதாவது தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைத்து அதிக தொழிலாளிகளுக்கு வேலை ஏற்படும்படி செய்து வருகிறார். எப்படியெனில் ஒரு தொழில் சாலையில் ஒரு தொழிலாளி வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்ததை இப்போது மாற்றி வாரம் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 36 மணி நேரம் வேலை செய்தால்போதும் என்றும், பழைய கூலியே கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டு விட்டார். அதன் பயனாக ஒரு மாகாணத்தில் பருத்தி இயந்திரத் தொழில் இலாகாவில் மாத்திரம் 10000 பதினாயிரம் பேருக்கு புதிதாக வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுபோல் இன்னும் அநேக இலா காவில் ஏற்பாடு செய்வதன்மூலம் பல லட்சக்கணக் கான பேர்களுக்கு வேலை ஏற்பட்டு விடுமாம்.

ஆனால், நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க கதர் திட்டம் போடப் பட்டு பொதுஜனங்கள் பணத்தைக் கோடிக்கணக்காக வசூலித்து பாழாக்கப் படுகிறது. இதுவரை வசூலித்த சுமார் 2 கோடி ரூபாய்களைக் கொண்டு குறைந்த அளவு சுமார் 50 மில்லுகளாவது கட்டப்பட்டிருக்கு மானால் அதைக்கொண்டு ஒரு லட்சம் பேருக்கு நிரந்தர வேலை கொடுத்து இருக்கலாம் என்பதோடு அவற்றின் லாபத்தால் வருஷம் 2 மில்கள் கட்டப் பட்டு அதிலும்,  வருஷா வருஷம் 2000, 3000 பேருக்கு வேலை கொடுத்துக்கொண்டே வந்திருக் கலாம்.

இதனால் வேலை இல்லாப் பஞ்சம் நீங்குவதோடு 12 மணி நேரம் நூல் நூற்றால் 12 தம்பிடி வரும்படி வரக்கூடிய கேவலத்தன்மை நீக்கிக் குறைந்த அளவு மாதம் 1-க்கு 10 ரூபாய்க்கு குறையாத வரும்படியும், தொழிலாளிகள் அடைந்து வரலாம். இந்தப்படி செய்தால் பணக்கார முதலாளிகளினுடையவும், பார்ப்பனர்களிடையவும் ஆதரவு - தோழர் காந்தியாருக்கோ காங்கிரசுக்கோ இல்லாமல் போய்விடும். ஆதலால் காந்தியும், காங்கிரசும் உள்ளவரை வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கி விடும் என்று எண்ணுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்துகொள்ளுவது போல வே முடியும்.

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்
04.11.1934- பகுத்தறிவிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுய மரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாத தல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக் கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வரு கிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன் னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற் பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப் படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner