எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

24.05.1931 - குடிஅரசிலிருந்து....

இப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப் படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள்.

இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.

பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர் களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.

ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன்  செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம்.  பார்ப்பனரல்லாத சமுகம் ஒரு மனிதன் தன்னை  ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள்  தனது சொந்த உத்தி யோக  நலத்திற்கு ஆத்திரப்படுவது அல்லாமல் அந்தச் சமுக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது.  படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோலவே தான் சமுக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக் கின்றது.

இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை.  யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத் தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்து வத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய் வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடை யாது.   ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப்புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னை, தான் நடத்துவதான் அவன் நினைப்ப தில்லை. தனது காரியத்துக்கு, தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன், தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளை யையும், கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.

இந்து-முஸ்லீம்

19.04.1931 - குடிஅரசிலிருந்து...

இந்தியாவில் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லிம்  ஒற்றுமை அவசியமென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20, 30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும்  பாடுபடுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார்.

இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கும் தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையான காரியம் என்றும் தீண்டாமை  ஒழியா விட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல்லப் பட்டது.

ஆனால் இப்போது அந்தப் பிரச்சினை வெகுசுலபத்தில் தீர்ந்துபோய்விட்டது. அதாவது சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்துபோகும் என்று அவரா லேயே சொல்லப்பட்டாய் விட்டது.

ஏனெனில், சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது  என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனையாதலால் மதத்தில் தீண் டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது  மதவிரோதம் என்று ஒரு உத்தரவு போட்டுவிட்டால் தீண்டாமை விஷயம்  ஒரே பேச்சில்  தானாகவே முடிந்துவிடும்  என்று எண்ணியிருக்கலாம், ஆகையால் இப்போது தீண்டாமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

அன்றியும், திரு. காந்தியின் சுயராஜ்யம் இப்போது தீண்டாமை ஒழியாமலே வரவும் போகின்றது. ஏனெனில், தீண்டாதார் எனப்படுபவர்களில் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வர இணங்கமாட்டோம் என்று சொல்வதற்கு  அறிவும் வீரமுமுள்ள ஆசாமிகள்  இல்லை. ஆதலால் மதநடுநிலைமை சுயராஜ்யமாய் தாண்டவமாடுகின்றது.

ஆனால், இந்து முஸ்லிம்  விஷயம் அப்படியில்லை. ஏனெனில் லக்னோ ஒப்பந்தத்திற்கு பிறகும்,  வகுப்புவாரி   தனித்தொகுதி பிரதிநிதித்துவத்திற்கு பிறகும் அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒருவாறு மனிதத்தன்மை  ஏற்பட்டு விட்டது. அவர்களைச் சுலபமாய் இனி யாரும் ஏய்த்துவிட முடியாது.

இந்து முஸ்லிம் ஒற்றுமை எவ்வாறு வாயளவு பேசினாலும் காரியத்தில் இந்துக்கள் எப்படி ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முஸ்லிம்களை ஏமாற்றப்பார்க் கின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் களும், முஸ்லிம் இந்து ஒற்றுமையை வாயளவில் எவ்வளவு  பேசினாலும்  காரியத்தில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வரும் தன்மையை அடைந்து விட்டார்கள்.

இந்தத் தன்மையையுடைய இருவரையும் நாம் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனெனில், இரு கூட்டத்தாரும்  தங்களின் இரு மதத்தின் உண்மையான தன்மைப்படியே இருவரும் நடந்து கொள்கின்றார்கள். ஆகையால் மேற்படி இருமதத்தின் பிரதானமும் தளர்த்தப்படும்  வரை இந்தியா மாத்திரமல்லாமல் இவர்களையுடைய எந்த தேசமும் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். சுலபத்தில் ஒற்றுமையைக் காண முடியாது.

உதாரணமாக, கொஞ்ச காலத்திற்கு முன்பு காலஞ்சென்ற  லாலா லஜபதிராய் அவர்கள் மகமதியரல்லாதாரை  கொல்லவேண்டும் என்கிற வசனம்  குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை  சாத்தியப்படாது என்று சுயராஜ்யாவில் எழுதியிருந்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். மற்றும் இன்னும், அதுபோலவே இஸ்லாம் மதத்தை விர்த்தி செய்ய கத்தி, ஈட்டி, பலாத்காரம் ஆகியவைகளை உபயோகித்து யுத்தம் செய்யலாம் என்கிற  தாத்பரியங் களும் அதில் இருந்து வருவதும் யாவரும் அறிந்ததே,

அதுபோலவே ஆரியரல்லாதவர்களெல்லாம் மிலேச்சர்கள், ஆரியரல்லாதவர்கள்  பாஷை மிலேச்சபாஷை, ஆரியரல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும், அவர்கள் அழிக்கப்படவேண்டும் அவர்கள் பூமிக்கு பாரம் என்று  இந்துக்கள்  வேதத்தில்  இருந்து வருவதும்  சைவனல்லாதவன் கழுவேற்றப்பட்டதாய் புராணங்களில் இருந்துவருவதும்  வேதம் என்பது என்ன, புராணம் என்பது என்ன என்பதையும், இந்து தர்மம்  என்பது என்ன என்பதையும்  அறிந்தவர்கள் எல்லாம் நன்றாய்த் தெரிந் திருப்பார்கள்.

இஸ்லாம் தர்மத்தில் இஸ்லாம் அல்லாதவன் காபர் அதாவது நாஸ்திகன், அழிக்கத் தகுந்தவன் என்று இருப்பதும் இந்து அகராதியில் மகமதியன் என்றால் ராட்சதன், அசுரன், என்றும் மிலேச்சன் என்றும் இருப்பதும்  யாவரும் அறிந்ததேயாகும், அன்றியும் இவைகளை இருதிறத்தாரும் அறிந்திருந்தும் இந்த விஷயங்களில் எவ்வித மாறுதலும் செய்யாமலும்  அது மாத்திரமல்லாமல் எவ்வித மாறுதலும்  செய்யக்கூடாது என்கிற நிபந்தனையை சுயராஜ்ய திட்டத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைத்துக்கொண்டு இந்து முஸ்லிம் ஒற்றுமை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டால் அக்கூப்பாடுகள் வேஷக் கூப்பாடா அல்லது ஏய்ப்புக் கூப்பாடா? அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா? என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய்க் கோருகின்றோம்.

நாம் இந்தப்படி எழுதுவது சில தேசியப் பிழைப்புக்காரர்களுக்கு பிடிக்காதது போல் காணப்படலாம். அவர்கள் இருகூட்டத்தாரிடையும் துவேஷ முண்டாக்கவும், வகுப்புக் கலவரமுண்டாக்கவும் பிரச்சாரம் செய்வதாக நம்மைப்பற்றி விஷம பிரச்சாரமும் செய்யலாம். ஆனாலும், அதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாம் எழுதுவது உண்மையா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றுதான் கவலைப்படு கின்றோம்.

இம்மாதிரியான இரண்டு  மதத்தையும்தான் இரு கூட்டத்தார்களும் வளர்க்க வேண்டுமென்றும், இரு மதத் தாரும் அவரவர்கள் மதத்திற்குக்  கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஏக தலைவரான திரு.காந்தியவர்கள் கூறுகின்றார்கள். இது இந்துக்களிலும் முஸ்லிம்களிலும் உள்ள மத பக்திக்காரர்களைத் திருப்திப் படுத்தி திரு.காந்தியை மகாத்மா என்று ஒப்புக் கொள்ளவும் உதவும். ஆனால், இது இரு சமுகத்தினுடையவும் ஒற்று மைக்கு சாத்தியப்படக்கூடியதா என்று யோசித்துப் பார்க் கும்படி  பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இரு சமுகத்திலுள்ள வாலிபர்களும் ஒன்றுகூடி இரு மதங்களி லுமுள்ள வேஷத்தையும், துவேஷத்தையும் ஒன்றுக்கொன்று அடிப்படையாயுள்ள  மாறுபாட்டையும் ஒழிக்க முன்வந்து துவேஷ மும், வேஷமும், மாறுபாடும் கற்பிக்கும் பாகம் எதிலிருந்தாலும், அவை யார் சொன்னதாக இருந்தாலும் தைரியமாய் எடுத் தெறிந்துவிட்டு ஒற்றுமைக் கான திட்டங்களைப் புகுத்தி இருவரும் தங்களை மனிதத் தன்மை  மதக்காரர்கள்  (கொள்கைக்காரர்கள்) என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டால் இந்தியா மாத்திரமல்லாமல், இந்து  முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் உலகமெல்லாம் உலகத்திலுள்ள சமுகமெல்லாம்,  இந்தக் கொள்கையின் கீழ் அன்புத் தன்மையோடு சகோதர வாஞ்சையோடு ஆட்சி புரியப்படலாம். அதில்லாமல் அவரவர்கள் மதத் தைப் பலப்படுத்திக் கொண்டு அவைகளுக்குச்  சிறிதும்  பங்கமோ மாறுபாடோ இல்லாமல் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்பது  சிறிதும்  பயன் படாததாகும்.  அந்தப்படி ஏதாவது ஒருசமயம் ஒற்றுமை ஏற்பட்டு விட்ட தாக யாராவது சொல்லுவதானாலும் சிலருடைய  தனிப்பட்ட நன்மைக்கு உதவுமேயல்லாமல் இந்திய மக்களின் பொது நன்மைக்குச் சிறிதும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner