எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27-07-1930 - குடிஅரசிலிருந்து...

தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் சென்று சுயமரி யாதைக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்பு ணர்ச்சியை உண்டாக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையினை மனதில் பதியும்படி எடுத்துரைத்தார். அதன் விளைவாக சிங்கப்பூர் தமிழர்கள் பெரியாரின் கொள்கை களை உள்ளடக்கி தமிழர் சீர்த்திருத்த சங்கம் ஏற்படுத்தினர். அச்சங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பற்றிய செய்தியினை குடிஅரசு இதழ் வெளியிட்டது. அது வருமாறு:

21-04-1930இல் சிங்கப்பூரில் கூடிய தமிழ் மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் இவ்வூரில் சீர்திருத்தக் கொள்கையோடு ஒரு தமிழர் சீர்திருத்தச் சங்கம் ஒரு சுயமரியாதைச் சங்கம் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்வதைப் பற்றி யோசிப்பதற்காக 13-07-1930ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-30 மணிக்கு இவ்வூர் பிரபல வர்த்தகரும், தனவந்தருமான உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் தலைமையில் இந்தியச் சங்க கட்டிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடந்தது. இவ்வூர் பிரபல வியாபாரிகளும், தலைவர்களுமாக சுமார் 150 பேர்களுக்கு மேல் விஜயம் செய்திருந்தனர். தலைவர் உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் சங்கத்தின் நோக்கங்களையும், அவசியத்தையும் குறித்து முகவுரையாக கூறியதாவது:-

அன்பார்ந்த சகோதரர்களே!

அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த நீங்கள் எல்லாம் கூடியிருக்கும் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கும்படி பிறப்பித்த கட்டளைக்கு நான் மனப்பூர்த்தியாய் நன்றி செலுத்திக் கொள்ளுகிறேன். இன்று கூடியிருக்கும் இக்கூட்டத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி நான் அதிகமாக விவரித்துக் கூறவேண்டியதில்லையெனக் கருதுகிறேன். அதாவது சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இச்சங்கத் திடலில் கூடிய சிங்கை தமிழ் மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் தமிழ் மக்களாகிய நமக்கு இவ்வூரில் சீர்திருத்தக் கொள்கையோடு ஒரு சங்கம் நிறுவ வேண்டியதைப் பற்றி யோசனை செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கெனவே இக்கூட்டம் கூடியிருக் கிறோம். மேல்சொன்ன ஏப்ரல் மாதக் கூட்டத்தில் என்னையும், திருவாளர்கள். பா. கோவிந்தசாமி செட்டியார், கோ. இராமலிங்கத்தேவர், அ. சி. சுப்பையா, சா. கோபால் ஆகியவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து மேற்படி சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் எடுத்துக் கொள்ளும்படி தீர்மானிக்கப்பட்டது - அதன்படி நாங்களும் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்பதை உங்களுக்கு முன்னதாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இவ்வூரில் நம் தமிழ் மக்களால் நிறுவப்பெற்ற பல சங்கங்கள் கொஞ்ச காலத்திலேயே மூடிவிடப்பட்டருக் கின்றனவென்பது நீங்கள் ஒவ்வொருவரும் நேரில் அறிந்த விஷயமாகும். இப்படி ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் இச்சங்கங் களெல்லாம் போதிய ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்டு சங்க வாடகைகூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதேயாகும். 4, 5 மாதங்களுக்கு சேர்ந்தாற்போல வாடகை தங்கியிருந்தும் சங்கத்திலிருந்து பணம் கொடுக்க சக்தியின்றியும், பொது ஜனங்களிடம் பணம் வசூலித்து வாடகை கட்டிய சங்கங் களும் பல உண்டு. இதிலிருந்து வாடகைக் கட்டிடங்களில் ஆரம்பிக்கப்படும் சங்கங்களுக்கு எப்பொழுதும் ஆபத்து இருந்துகொண்டு தானிருக்குமென்பது விளங்குகிறது. ஆகவே, நாம் எல்லோருமிருந்து ஆரம்பிக்கப்படும் சங்கம் இவ்விதமான சங்கடங் களுக்கு ஆளாகாமலும் பிறர் பார்த்து பரிகாசம் செய்யாத வண்ணமும் இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகுமென்பதை நான் உங்கள் யாவர்க்கும் தெரிவித்துக் கொள்ள வேண்டியதில்லையென நினைக்கிறேன். தமிழன், கூலிக்காரன் இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நமது சகோதரர்களாகிய இலங்கையரும் வட இந்தியரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த இலங்கையரும், வட இந்தியரும் முற்பட்டு செய்யும் எந்த காரியத்திற்கும் தென்னிந்தியர்களாகிய நம்மால் மற்ற எல்லோரையும்விட அதிகமாகப் பணம் கொடுக்கப்படுகின்றது - இதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அதிகமான தொகை கொடுத்தாலும் நம்மை தமிழன், கூலிக்காரன், என்ன தெரியும் என இழிவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறார்கள். இவர்களெல்லாம் இவ்விதம் நம்மை இழிவுபடுத்திக் கூறுவதற்குக் காரணம் நாம் பொது விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமலும், அதிகமாய் ஈடுபட்டு வேலைகள் செய்யாமல் இருப்பதுமேயாகும். இனியும் நாம் இவ்விதமே இருந்துகொண்டே இருப்போமேயானால் நமது சுயமரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டவர்களாக மாட்டோமென்பதல்லாமல், அறிவு உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு நியாயமாய் உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய ஸ்தானத்தை நாம் என்றும் அடைய முடியாது. ஆகையினால் நாம் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான பொது விஷயங்களில் பிறரின் தூண்டுதலும் வற்புறுத்தலுமின்றி முன்னணியில் வந்து நின்று இயன்ற அளவு தொண்டாற்ற வேண்டியது மிகவும் அவசியமென்பதை ஒவ்வொரு வருக்கும் நான் வணக்கமாய் விண்ணப்பித்துக் கொள்ளுவதுடன் நீங்களும் பொது ஜனத் தொண்டில் உங்கள் பங்கைச் செய்ய முற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சமுதாயச் சீர்திருத்தத் துறையில் நாம் செய்யவேண்டிய தொண்டுகள் பல உண்டென்பது நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்த விஷயமாகும். இத்துறையில் இது காலை நமது தாய்நாட்டில் வேலை செய்துவரும் சுயமரியாதை இயக்கத் தையும், அதன் உயரிய கொள்கைகளையும் நோக்கங் களையும் நீங்கள் யாவரும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தாய்நாட்டில் நம் மக்கள் ஈடுபட்டுக் கையாளும் அவ்வளவு மூடவழக்க பழக்கங்களும் இந்நாட்டில் கைக் கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களிடையில் சீர்திருத்தக் கொள்கைகள் பரப்ப வேண்டுமானால் இடையறாதப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். பிரசாரம் செய்வதற்கு ஓர் சங்கம் அவசியமிருத்தல் வேண்டும். அச்சங்கத்தை நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டியதே இக்கூட்டத்தின் முக்கிய கடமையும் காரியமுமாகும். இவ்வூரில் ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்கள் மூடிவிடப் பட்டதின் காரணங்களை நான் முன்பே தெரிவித்துவிட்டேன். எனவே, நாம் நிறுவப்போகும் சங்கத்திற்கென ஓர் இடம் சொந்தமாயிருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். இவ் விஷயத்தைப் பற்றி நாங்கள் பலதடவை கலந்து ஆலோசித்து இச்சங்கத்திற்கென நானும் உயர்திரு பா. கோவிந்தசாமி செட்டியார் அவர்களும் சேர்ந்து ஓர் கட்டி டத்தை வாங்கிக் கொடுத்து விடுவதென தீர்மானித்தி ருக்கிறோம். உயர்திரு. கோவிந்தசாமி செட்டியார் அவர்கள் சீர்திருத்த இயக்கத்தில் கொண்டுள்ள பற்றுதலுக்கும் ஊக்கத் திற்கும் தயாள குணத்திற்கும் நான் மனமார்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக் கிறேன். கட்டிடத்தைக் கூடிய சீக்கிரம் வாங்கி  முடித்துவிடுகிறோம். சங்கத்தையும் அடுத்த மாதம் அதாவது ஆவணி மாதம் பத்துப் பன்னிரண்டு தேதிக்குள் நிறுவிவிட வேண்டுமென விரும்புகிறேன்.

நிற்க, நாம் ஆரம்பிக்கப் போகும் சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் சிலவற்றை உங்கட்குச் சொல்ல விரும்புகிறேன்.

1.            மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம தருமத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

2.            பெண்களுக்கு உரிமை அளித்தல்.

3.            அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

4.            சிக்கன முறையைக் கைக்கொள்ளுதல்.

5.            அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல் ஆகியவைகளே குறிப்பிடத்தக்கன. இவையாவும் நீங்கள் ஒவ்வொருவரும் மனப்பூர்த்தியாய் விரும்பும் சீர்திருத்தங்களே யாகுமாதலால் இச்சங்கம் நிறுவுவதற்கான யோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ள விஷயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்படி உங்கள் யாவர்களையும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறேன் என் பேசிமுடித்தார்.

முகவுரை முடிந்ததும் நிறுவப்போகும் சங்கத்திற்கு பெயரிடுவதை பற்றி பல நண்பர்கள் பேசியபிறகு தமிழர் சீர்திருத்த சங்கம் என்று பெயரிடுவதாய் தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner