மருத்துவம்

காலை நேரம் நம் கையில் இருக்கிறதா?

யாருடைய ஒத்துழைப்பும் இன்றித் தினமும் அதி காலையில் உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்துகொண்டிருந்த மனித உடலின் உட்கடிகாரம் இன்றைக்குப் பழுதடைந்து கிடக்கிறது. அன்றைய டைம்-பீஸ் தொடங்கி இன்றைய செல்பேசி அலாரம்வரை சூரிய உதயத்துக்கு முன் மனிதர் களை எழுப்பச் சப்தத்துடன் முயற்சித்துத் தோற்றுப் போகின்றன. கடைசியில் அலாரங்கள் மவுனித்து விடுகின்றன!

அதிகாலையிலேயே விழித்து நலமுடன் வாழ்ந்துவந்த நம் முன்னோரின் பழக்கத்தைக் கைவிட்டு, பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்துக் கொடுத்து விட்டோம். அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய் களைப் போக்கும் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது.

இரவை பகலாக மாற்றி பின்னர் அதிகாலையில் உறக் கத்தைத் தழுவத் துடிக்கும் இன்றைய நவீன சமுதாயத்துக்கு ஆரம்பத்தில் இது சற்றே கடினமாக இருந்தாலும், பழகி விட்டால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.  ஆராய்ச்சி முடிவு சொல்லும் உண்மை

அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண் ணங்கள், எளிதாகத் திருப்தியடையும் மனப்பான்மை, வாழ்வின் மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதி காலையில் எழுந்து படித்த குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிடுகிறது. இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்களுக்கு சோர்வுற்ற மனநிலை எனும் மனநோய் வருவதற்கான சாத்தியம், அதிகாலையில் துயில் எழுபவர் களைவிட மூன்று மடங்கு அதிகம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுவதால், நம் அன்றாட பணிகளைக் கவனிக்கக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். உடற்பயிற்சிகள் செய்யத் தகுந்த காலமாகக் காலை வேளை அமைவதால், உடல் உறுப்புகளும் உற்சாகம் பெறும்.  யோகப் பயிற்சிகள் செய்ய அதிகாலை வேளையே சிறந்தது. மேலும் உடலுக்குச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் உண் டாகும்.

தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் விழிக்கும் முறையைப் பின்பற்றிவந்தால், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். அதிகாலையில் எழுவதற்கு, இரவு ஒன்பது முதல் பத்து மணிக்குள் உறங்கச் செல்வதும் அவசியம்.

கதிரவன் உதித்த பின் எழுவதால் உடலுக்கு அசதியும், சோம்பலும், மயக்கமும் ஏற்படும். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் பகலுறக்கமும் உண்டாகும். எனவே, நம் மரபணுக்களில் பதிந்திருக்கும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மீட்டெடுத்து உற்சாகமான சமூகத்தை உருவாக்குவோம்!

காலை கண் விழித்தால் கிடைக்கும் பலன்கள்

· நள்ளிரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணிக்கு உறங்கிவிட்டு, அதிகாலையில் கண்விழிக்க முயற்சி செய் தால் கண் எரிச்சல், தலைபாரம், சுறுசுறுப்பின்மை போன் றவை உண்டாகும். வயதைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேர இரவு உறக்கத்துக்குப் பிறகு, அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

· தினமும் அதிகாலையில் எழுந்து மலம், சலம் கழிக்கும் பழக்கத்தை முறைப்படுத்திக்கொண்டால், அபான வாயு வின் செயல்பாடு சீரடைந்து உடல் உபாதைகள் வராமல் தடுக்கப்படும்.

· காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி, பீனிசம் (சைனசைடிஸ்) போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

· அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், தேவையான அளவுக்கு இளம் வெயிலை உடல் கிரகித்துக்கொள்ளும்.

· குழந்தைகளுக்குத் தொடக்கம் முதலே விடியற் காலையில் எழும் பழக்கத்தைப் பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பிற்காலத் திலும் மேம்படும்.

· நினைவாற்றலை அதிகரிக்க மருந்துகளைத் தேடி அலைவதற்குப் பதிலாகத் தினசரி அதிகாலையில் கண் விழித்தால் போதும். மூளை அணுக்கள் சுறுசுறுப்படையும், நினைவுத் திறன் அதிகரிக்கும்.

அஜீரண பிரச்சினையை போக்கும் ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.

தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அருமையான உணவாகப் பயன்படுகிறது.  அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும் ஆற்றல் இந்த ஆரஞ்சுப் பழச்சாறுக்கு உண்டு. அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும்போது ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் உடன் பேதி நின்று நல்ல குணம் கிடைக்கும். இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் தூங்கச் செல்லும்முன் நூறு மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.

வணிகப் பண்டங்களில் இருந்து விலகி நிற்க...

பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் அன்றாட காலை உணவு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தனிப்பயிற்சி, வீட்டுப்பாடம் என வேலைகள் அனைத்தை யும் முடித்த பின்னர்த் தங்களைத் தளர்த்திக்கொள்வதையும் ஒரு வேலையாகவே அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது, செல்பேசி, கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது என மீண்டும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிக் கிட்டத்தட்ட நள்ளிரவில்தான் படுக்கவே செல்கிறார்கள்.

நள்ளிரவில் தூங்கச் செல்லும் குழந்தைகளைக் காலையில் பள்ளிக்கு அனுப்புவதற்கு, இரக்கமில்லாமல் அடித்து எழுப்ப நேர்கிறது. குளியல், காலைக்கடன் கழிப்பது போன்றவற்றை அரைகுறையாகவே முடித்த நிலையில் பிளஸ் டூ பையனுக்கும்கூட அம்மாவே ஊட்டினாலும் அந்த உணவு அரைத் திடப்பொருளாகத்தான் வயிற்றுக்குள் இறங்குமே தவிர, உணவாக இரைப்பையைச் சென்ற டையாது.

குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர் அவர்களது முக்கியப் பருவமான பள்ளி வயதில் உடல் நலனில் கண்டிப்பான அக்கறையைக் காட்ட வேண்டும்.

மதிய உணவு முழு ஆற்றல் தருமா?

காலை 7 முதல் 9 மணியளவில் சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப் பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாகப் பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த அம்சங்களைத் தெளிவாக உணர வேண்டும்.

பல லட்சங்கள் நுழைவுக் கட்டண மாகவும், பதினாயிரங்களை மாதாந்திரக் கட்டணமாகவும் கல்விக்குச் செலுத் தினாலும் சர்வதேசப் பள்ளிகள் உட்படப் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவு உடனடியாகச் சமைத்து வழங்கப்படுவதில்லை. அதற்கு நம் அரசுப் பள்ளிகளே தேவலாம். சத்துணவு என்ற பெயரில் ஓரளவு ஒப்புக்கொள்ளும் உணவை வழங்குகின்றன.

இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். இதை அவர்கள் அக்கறை யாகவே செய்தாலும், அது அராஜகமான ஒன்றாகவே தோன்றுகிறது. குழந்தைகள் அனைவரும் ஒரே உணவைக் கொண்டுவந்தால் எப்படித் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.  உணவில் சத்துக் கணக்கை விட மன நிறைவுக்குத்தான் முதலிடம் என்பதை உணரும் பக்குவத்தை நம் தனியார் பள்ளிகள் ஒருபோதும் அடைந்து விட முடியாது.

தீவிரக் கட்டுப்பாடு அவசியமா?

ஒவ்வொரு நாளும் விதவிதமான காய்கறிகளை உண்ண வேண்டும் என்று நிர்பந்திக்கின்றன சில பள்ளிகள். சதை பிடித்து வளர்கிற பருவத்தில் குழந்தைகள் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை வெறுப்பது இயல்புதான்.

பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப் படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமான வையல்ல. காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லித் தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் காய்கறிகளைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது.

ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் எரிமச் சத்து (கார்போஹைட்ரேட்) உணவையும், உடல் கட்டுமானத் துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற் கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த் தமாகத் தேர்வு செய்வதில்லை. அப்படித் தேவையும் இல்லை.

துரித உணவுக்கு மாற்று?

அப்படியானால் பளபளப்பான காகிதங்களில் சுற்றிவரும் சக்கைப் பண்டங்களையே குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வி எழுகிறது. சரியல்லதான். `ஜங்க் ஃபுட் எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை என்பதுடன், குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடுகின்றன. வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளையும் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.

குழந்தைகளை எப்படித் தமது தயாரிப்புக்கு அடிமை யாக்குவது என்று பரிசோதனைக்கூடத்தில் தலையைக் கசக்கிக் கொண்டிருப்பவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சமூகம் நம்பிக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வணிக நொறுவைப் பண்டங்களில் இருந்து நம் குழந் தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று நம் பெற்றோர்கள், வணிக நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் சிரத்தையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது. இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவைப் பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால் வணிகப் பண்டங்களை நிச்சயமாக அவர்கள் விரும்ப மாட்டார்கள்.


காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?
ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் அய்ரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர் இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண்ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ஏ: பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது வைட்டமின் ஏ. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும். 40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ஏ சத்து கிடைக்காத தாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று இருந்தால், வைட்டமின் ஏ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்: வைட்டமின் ஏ சத்துப் பற்றாக் குறைக்கான அறி குறிகள் தெரிந்தவுடன் வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்து விடலாம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் அய்ந்து வயதுவரை வைட்டமின் ஏ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப் பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது.

மருத்துவ சிகிச்சையோடு பிசியோதெரபியும் அவசியம்

தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும் என்கிறார் நரம்பியல் இயன்முறை மருத்துவர் மணிவேல். பிஸியோதெரபியில் இருக்கும் வகைகள், அவை எப்போது தேவைப்படும் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.

பிஸியோதெரபி சிகிச்சையில் நோயாளி ஒருவரின் மீட்பு நிலையைச் சார்ந்து இயக்கப் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. இதில் Active, Passive
மற்றும்   Active, Passive என்ற 3 முக்கிய நிலைகளில் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. ஆக்டிவ் தெரபி என்பது நோயாளிகளை தானாகவே செய்ய வைக்கும் பயிற்சியாகும்.

நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட நரம்போ, தசையோ பிடித்துக் கொள்ளும்போது அதை தளர வைப்பதற்காக சில பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றை தாங்களாகவே செய்து அப்பகுதியை செயல்பட வைக்கும் முறைதான் ஆக்டிவ் பிசியோதெரபி. அதாவது மூளை இடும் கட்டளைகளை ஏற்று உடலின் பகுதிகள் தானாக இயங்கும் முறை.

பாஸிவ் என்பது செயலற்ற நிலையைக் குறிக்கும். மூளையின் கட்டளைகளைப் பெற முடியாமலும், தானாக இயங்காமலும் உடல் செயலற்று இருக்கும் நிலையில் உள்ள நோயாளிக்குக் கொடுக்கப்படும் தெரபி இது. இந்த பாஸிவ் தெரபி நிபுணரின் உதவியோடு செய்யப்படும். ஆக்டிவ் அஸிஸ்டிவ் என்ற மூன்றாவது வகையில் பயிற்சியாளரின் மேற்பார்வையுடன்  நோயாளிகள் செய்வார்கள்.

சில நேரங்களில் கை, கால், தோள்பட்டை மூட்டு இணைப்புகள் இறுக்கமாக இருக்கும். அசைக்க நினைத் தாலும் குறிப்பிட்ட அளவுக்குமேல் அசைக்க முடியாது. இந்நிலையில், திசுக்கள் மற்றும் மூட்டுகளைத் தளர்த்த வெப்பமூட்டும் நடைமுறையை பயன்படுத்தி, உறுப்பு களை அசையவைத்து அவற்றின் இயக்கத்தை மேம் படுத்துவோம் என்றவரிடம், இன்னும் கொஞ்சம் விளக்க மாகச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

பாஸிவ் என்ற இயக்கமற்ற நிலையிலிருந்து மாறி, நோயாளிகளின் இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் நலிவுற்ற தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் கொடுக்கப் படும்.

நீண்ட நாட்கள் அசையாமல் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தசை மற்றும் மூட்டுகள் மிகவும் நலிவடைந்திருக்கும். நோயாளிகளின் நிலை மையை கருத்தில் கொண்டு, பிற்காலத்தில் தசைகளிலோ, எலும்பு இணைப்புகளிலோ காயங்கள் ஏற்படாத வண்ணம் படிப்படியாக வலுப்படுத்தும் பயிற்சிகளை கொடுப்போம்.
செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு முதுகு மற்றும் மார்பு தசைகள் இறுக்கமாகும். அப் பகுதிகளில் லேசாக தட்டுவதன்() மூலம் தசைகளை தளர்வடையச் செய்வோம். நுரையீரல் செயலற்று இருக்கும் நோயாளிக்கு மார்பை கைகளால் தட்டி சிகிச்சை கொடுப்போம்.

தீவிரமான சிகிச்சைதேவைப்படும் நிலையில் எலக்ட் ரானிக் கருவிகள், மற்ற கருவிகளின் உதவியோடு மார்புப் பகுதிகளில் அதிர்வுகள் கொடுத்து தசைகளை தளர் வடையச் செய்வோம். எலக்ட்ரானிக் அதிர்வுகளால் தசை களின் இறுக்கம் குறையும் போது லேசாக இருமல் வரும்.

இதனால் நுரையீரலில் இறுக்கம் குறைந்து இயல்பான சுவாசம் ஏற்படும். இயல்பு நிலை திரும்பியவுடன் படிப்படி யாக பயிற்சிகளை குறைத்து வருவோம்.
வெளிநாடுகளில் நுரையீரல் பாதிப்புக்கு ஆன்ட்டி  பயாட்டிக் மருந்துகள் கொடுப்பதைத் தவிர்த்து, பிரதான மாக பிஸியோதெரபி பயிற்சிகளையே மேற்கொள் கிறார்கள். நம் நாட்டில்தான் அதிகமான அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.

இதனால் உடல் மருந்துகளுக்கு பழக்கப்பட்டு ஆன்டிபயாடிக் எதிர்ப்புநிலை  உருவாகி விடுகிறது. அதாவது, அதற்குப் பிறகு கொடுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலன் தராமல் மேலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். அதனால், பிசியோதெரபி பயிற்சிகளைப் போதுமான அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் இஞ்சி...

நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமாரிடம் கேட்டோம்.

பசியின்மை, வாந்தி உணர்வு, வயிறு உப்புசம், மூச்சுத்திணறல், பெருவயிறு(வயிறு வீக்கம்) முடக்குவாதம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை உஷ்ண தன்மை கொண்ட இஞ்சி குணப்படுத்தும் சக்தி உடையது. பெரு வயிறு பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, வயிற்றின் மேல் பகுதியில் இஞ்சியை அரைத்து தடவி வரலாம். மேலும், சுவை உணர்வு, பாலுணர்வு ஆகியவற்றையும் இஞ்சி அதிகப்படுத்தும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சியை லேகியம் மற்றும் சூரணமாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இஞ்சியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்துக்கு ஆர்த்ரக்க ரசாயனம்( என்பது இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர்) எனவும், சூரணத்துக்குத் திரிகடுக சூரணம் எனவும் பெயர்.

இஞ்சியைக் காய வைத்து, சுக்காக மாற்றி சவுபாக்கிய லேகியம் தயாரிக்கிறோம். ஆர்த்ரக்க ரசாயனத்தில் இஞ்சியுடன் வெல்லம், லவங்கப் பட்டை, பச்சிலை(மூலிகை) குருவேர், கோரைக்கிழங்கு, தணியா, தேன் மற்றும் நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இஞ்சியை முக்கிய பொருளாக வைத்து தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் கார சுவை கொண்டவை. ஆகவே, இஞ்சி, சுக்கு போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. முக்கியமாக, அல்சரால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாப்பிட வேண்டும்.


என் உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன. அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லை. வலி இல்லாத கட்டிகள் என்றால் புற்றுநோயாக இருக் கும் என்பது உண்மையா?

உடலில் வளரும் கட்டிகளில் புற்று நோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம் பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு.

சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார்க்கட்டி, நீர்க்கட்டி, திசுக்கட்டி  எனப் பலவிதம் உண்டு. உங்களுக்குள்ள கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருப்பவை பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகளே!
எந்தக் கட்டி?

கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக் கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம்.

கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்று வரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப் பட்டுள்ளது.

இது பெரும்பாலும் நடுத்தர வயதின ரையும் ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதா ரணக் கட்டிகளே! இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத் துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச் சைகளும் தேவையில்லை.

சிகிச்சை தேவையா?

கட்டி உள்ள பகுதியில் வலி உண் டாகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக் கிறது, நோய்த்தொற்று ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம். சாதா ரணக் கட்டியை ஒருமுறை அகற்றி விட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் அந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது.

கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா? எனப் பரிசோதித் துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இயற்கையி லேயே நம் உடலில் நோய் தடுப்பு ஆற் றல் இருக்கிறது. தற் போதைய சூழலில் நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். நோயின் தன்மையை பொறுத்தும், வயதைப் பொறுத்தும் பல்வேறு தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்கிறார் பொது நல மருத்துவர் தேவராஜன்.நோய் தடுப்பு மருந்துகள் பற்றியும் எப்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தொடர்ந்து விளக்கு கிறார்.

நோய் தடுப்பு மருந்துகள் எப்படி செயல்படுகிறது?

நோய் வராமல் நம்மை காக்க நோய்க்கு காரணமான கிருமிகளை உடலில் இருந்து எடுத்து, உயிரோடோ அதன் வீரிய சக்தி குறைந்த நிலையிலோ அல்லது உயிரற்ற நிலையிலோ அந்த கிருமியை வைத்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அந்த மருந்தை ஒருவர் உடம்பில் செலுத்துவதன் மூலம் நோயை உண்டுபண்ணக்கூடிய கிருமி களுக்கு எதிராக அந்த மருந்து செயல் படுகிறது. இதனால் நோய் பரவுவதைத் தடுத்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தடுப்பூசிகள் எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்?

தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.  இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் தடுப் பூசிகள் பற்றி ஓர் அட்டவணையைப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றில் போலியோ சொட்டு மருந்துகள், பி.சி.ஜி, ஹெப்-1, மீஸல்ஸ் சொட்டு மருந்துகள் (அம்மை),  தடுப்பூசி என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதை பொது வான அட்டவணையாகக் கொடுப்பதை விட, உங்கள் குழந்தைகள் நல மருத் துவரின் வழிகாட்டுதலின்படி, உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப அட்ட வணையைப் பெற்றுக் கொண்டு அதைப் பின்பற்றுவதே சரியானது.

பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

ஒவ்வொரு தடுப்பு மருந்தையும் சரியான கால இடைவெளியில் குழந்தை நல மருத்துவரை அணுகி போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத் தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்தால் அதை மருத்து வரிடம் தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் உண்டு.கர்ப்பிணி பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் மற்றும் உடல் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்ப வர்கள் எல்லா தடுப்பூசிகளையும் போட் டுக்கொள்ள முடியாது. அவர்கள் மருத்து வரை அணுகி அவர்களின் ஆலோ சனையின் படியே ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் தாய் சேய் நல மருத்துவரை அணுகி தங் களுக்கான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த வுடன் ஓர் அட்டையில் பதிவு செய்து அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தடுப்பு ஊசியையும் மருத் துவர் ஆலோசனையின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காமல் விட்டால் நோய் தடுப்பு வீரியம் குறைந்து விடும்.


கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங் கள்சாப்பிட்டு வந்தால் தேவை யில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து. வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது.

சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான தேர்வு. பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர் களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிற வர்களும் கொய்யாவோடு நட்புறவு வைத்து கொள்வது நல்லது.

உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டை யிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட  கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.

 

காமாலையைத் தடுக்க வழிகளும், தடுப்பூசிகளும்

மது அருந்தக் கூடாது.

சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவைச் சாப்பிடவும்.

கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள் ளவும்.

மலம் கழித்த பிறகு கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுங்கள்.

ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளுக்கான தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவும்.

ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்.

வயதுக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்கவும்.

டாக்டர் சொல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.

காமாலைக்கான தடுப்பூசிகள்

ஹெபடைடிஸ் - ஏ தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை, ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணை போட வேண்டும். குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், இப்போது ஒரு தவணையும் ஆறு மாதங்கள் கழித்து ஒரு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசியை குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, 1 மாதத்திலிருந்து 1 மாதத்துக்குள் இரண்டாம் தவணை, 6 மாதம் முடிந்ததும் மூன்றாம் தவணை இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இதைப் போடாதவர்கள், முதல் ஊசியை இப்போது போட்டுக்கொண்டு, ஒரு மாதம் கழித்து ஒருமுறையும், ஆறு மாதங்கள் கழித்து மறு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

Banner
Banner