மருத்துவம்

அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு  Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் தடுக்க என்ன வழி என்ற நம் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ப்ரித்திகா சாரி.

வலிப்பு நோய் யாருக்கு வருகிறது?

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. மூளையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கைகள், கால்களில் அடுத்தடுத்து காரணமில்லாமல் உதறல் ஏற்படுவதை வலிப்பு நோய் (Epilepsy)  என்கிறோம். நமது உடலில் உள்ள நரம்பு செல்களே உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே செல்லும் மின் அதிர்வுகளில் தடை ஏற்படும் போதுதான் இதுபோல் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் வலிப்பு நோய் 10 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது, மூளை வளரும் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்த மூளை உடையவர்களுக்கு இந்த நோய் அதிக அளவு ஏற்படுகிறது.

வலிப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

10 பேரில் ஒருவருக்கு தூக்கமின்மை, கடுமையான வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக நாள்கள் பட்டினியோடு இருப்பது மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது என சில தூண்டுதல்களால் வலிப்பு வருகிறது. சிலருக்கு என்ன காரணத் தால் வலிப்பு வந்ததென்று கண்டுபிடிக்க முடியாமலும் போகும்.ஆனால், பொதுவாக வலிப்பு வருவதற்கு என்று சில காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப மாறுபடும். குழந்தை பிறக்கும்போது தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். வைட்டமின்  B6, கால்சியம், குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் குறைவதாலும் வரலாம். மூளைக்காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. இதில் 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அதிக காய்ச்சலால் ஏற்படும் வலிப்பினை   Febrile Seizure என்கிறோம்.இந்த காரணங்கள் தவிர நரம்பு மண்ட லத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் நச்சுத்தன்மை (காரீயம், பூச்சிமருந்துகள், சாராயம்) உடலுக்குள் செல்லும்போதும் வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி ஏற்படுவது, ரத்த ஓட்ட பாதிப்பு, மூளை வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மரபணு தன்மை போன்ற காரணங்களாலும் வலிப்பு ஏற்படுகிறது.

இதில் வகைகள் ஏதேனும் உண்டா?

மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் மற்றும் அறிகுறி களின் அடிப்படையில் வலிப்பு நோய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது. மூளையின் மொத்தப்பகுதியும் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் அந்த வலிப்பு எதிரொலிக்கும். இதற்கு   Generalized Seizure என்று பெயர். இதற்குள் உட்பிரிவாக 5 வகைகள் உள்ளன.நினைவாற்றல் தவறுதல், கை, கால்களில் விறைப்புத்தன்மை மற்றும் உடல் உதறுதல், வாயில் நுரைதள்ளுதல், சில சமயம் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளோடு வருவதை   Tonic clonic generalized seizure  என்கிறோம். இந்த அறிகுறிகளோடு கை, கால் வெட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு   Tonic Seizure என்று பெயர். உடல் திடீரென நிலைகுலைந்து போதல், தற்காலிக மறதி மற்றும் ஞாபகமின்மை போன்ற அறி குறிகளோடு  இருப்பதை A Tonic Seizure என்கிறோம். தலை மற்றும் உடலின் மேல்பாகத்தில் திடீரென தொய்வு ஏற்பட்டு கீழே கவிழ்ந்து விடுவதை   Myoclonic Seizure  என்கிறோம். சில நொடிகள் உணர் வில்லாமல் போவது மற்றும் கண்சிமிட்டுவது போன்ற அறிகுறி களோடு இருப்பதை   Absence seizure என்கிறோம். இதேபோல் மூளையில் குறிப்பிட்ட பாகத்தில் ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய வலிப்பிற்கு  Partial Seizure   என்று பெயர். இந்த பிரிவில் 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் உடலிலுள்ள முகம், கை, கால் போன்ற ஏதாவது ஒன்றில் ஒரே பக்கத்தில் வெட்டுதல் Simple partial Seizure  ஏற்படுகிறது. நினைவாற்றல் மாறாமல், உடலின் ஒரு பாகத்தில் கை, கால்களில் வெட்டுதல் ஏற்படுவதை    என்கிறோம். நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டு, நினைவு தவறுதல், மனக்குழப்பம் மற்றும் பிதற்றுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பதை  Complex partial Seizure என்கிறோம். இந்த வகையினர் சில சமயம் சுயநினைவில்லாமல் அங்கும் இங்குமாக நடப்பது, ஆடைகளைக் கழற்ற முயற்சிப்பது, வாய், முகபாவனைகளில் மாற்றம் ஏற்படுவது, இதைத் தொடர்ந்து குழப்பமான முகத்தோற்றத்தோடும் இருப்பார்கள்.  இதனால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வலிப்புக்கான சிகிச்சைகள் என்ன?

வலிப்பு நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை வலிப்பு என்பதை மருத்துவர் முதலில் கண்டறிய வேண் டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே,  ECG பரிசோதனைகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் மற்றும் வீடியோ டெலிமெட்ரி பரிசோதனைகள் மூலமாக வலிப்பு நோயின் தன்மைகளை கண்டறியலாம்.வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர் சரியான மருந்தை சரியான அளவில் கொடுக்கும்போது பலருக்கு வலிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

அப்படி வலிப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதபோது மூளை அறுவைச் சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) மருத்துவ முறை அவர்களுக்கு பரிசீலிக்கப்படு கிறது. 70 சதவிகிதம் வலிப்பு உள்ளவர்களுக்கு 3 முதல் 5 வருடங்கள் வரை மருந்துகள் சாப்பிட்ட பின்பு வலிப்பு வராமல் இருந்தால் மருந்துகளை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது.பெரும்பாலும் வலிப்பு நோயின் பாதிப்புகளை மருத்துவர்களால் நேரில் பார்க்க முடிவ தில்லை. அப்படி பாதிப்பின் அறிகுறிகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் தகவலானது, நோய் பாதிப்பின் தன்மைகளை அறிந்து, மருத்துவர் சரியான சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். அதற்கு வலிப்பின் அறிகுறிகள் பற்றிய சரியான தகவல்களை ஒவ்வொரு வரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வலிப்பு வருகிறபோது செய்ய வேண்டிய முதலுதவிகளை தெரிந்து கொள் வதும் அவசியம். வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?   வலிப்பு நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் பயம் கொள்ளவோ, பதற்றப்படவோ கூடாது. அவரை சுற்றியுள்ள சூழ்நிலையை அமைதியாக்க வேண்டும். வலிப்பு வந்தவர்களை கீழே விழாதவாறு பிடித்து தரையில் அமர்த்த வேண்டும். வலிப்பு வந்தவரின் தலையின் கீழ் மென்மை யான துணி அல்லது தலையணையை தலையில் அடிபடாமல் இருக்குமாறு வைக்க வேண்டும். உடலில் அடிபடாமல் இருக்க அருகிலுள்ள பொருட்கள் மற்றும் அவரது கையில் உள்ள கூர்மையான பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. உடல் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் இருக்கமாக இருந்தால், தளர்வு படுத்த வேண்டும். சுவாசம் சீராக இருக்க ஒரு பக்கமாக உடலும், தலையும் இருக்கும்படி திருப்பி வைக்க வேண்டும். இதனால் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் மூச்சுக்குழலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது. வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை, அருகிலிருந்து கவனித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். முக்கால்வாசி வலிப்புகள் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் அதுவாகவே அடங்கிவிடும். அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

வலிப்பு வந்தால் செய்யக் கூடாதவை என்ன?

வலிப்பின் போது ஏற்படும் கை, கால் வெட்டுதலை அடக்கிப் பிடிக்கக் கூடாது. கையில் சாவி கொடுப்பது, மூக்கில் செருப்பைக் காட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. வாயிலிருந்து வெளிவரும் நுரை மூச்சுக்குழலுக்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும் வரை எந்த விதமான ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. வலிப்பின்போது மருந்து, மாத்திரை மற்றும் தண்ணீர் கொடுக்கக் கூடாது. வாயில் எந்த பொருளையும் திணிக்கக் கூடாது. ஆபத்தான சூழ்நிலை தவிர மற்ற சூழ்நிலைகளில் வலிப்பு முழுவதும் நிற்கும் வரை வலிப்பு வந்தவர்களை அந்த இடத்தைவிட்டு மாற்ற முயற்சிக்கக் கூடாது.

வலிப்பு நோயைத் தடுக்க செய்ய வேண்டியது என்னென்ன?

வலிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை அறிந்து, அதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலிப்புக்கு கொடுக்கப்படும் மருந்து களால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல், தூங்கிக்கொண்டே இருத்தல், நிலையாக நிற்க இயலாமை, கை, கால் நடுக்கம், மாறுபட்ட செயல்பாடுகள், வயிற்று எரிச்சல், தோல் தடிப்புகள், எடை கூடுதல், வாய் உலர்ந்துபோதல், கண்பார்வை கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.வலிப்பு சிலருக்கு தூங்கும் போதும், விழித் திருக்கும் போதும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் சிலருக்கு வலிப்பு ஏற்பட காரணமாகிறது. இதனால் சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது அவசியம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் இடம் காற்றோட்டமாக, வெளிச்சமின்றி, மிதமான தட்ப வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான உணவு வகைகளை சாப்பிடுவதோடு, சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.உணவில் காய்கறிகள், பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, படிப்பது மற்றும் பிறரைப் போன்று வேலைகள் செய்வதை மருத்துவரின் ஆலோசனையுடன், சில கட்டுப்பாடுகளோடு செய்யலாம். வலிப்பு நேய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மற்றவர்களைப் போன்று, எல்லோருடனும் இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்!

ஆஸ்துமாவுக்கு இன்ஹேலரைத் தொடரலாமா?

பனிக்காலம் தொடங்கிவிட்டால் ஆஸ் துமா உள்ளவர்களுக்குச் சோதனைக் காலம் தான். அதீதக் குளிர்ச்சி நம் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகிறது. இதன் விளை வால் மூச்சுக்குழல் தசைகள் சுருங்கி விடு கின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள்  மிக அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதே வேளையில் மூச்சுக்குழலின் உள்சவ்வு வீங்கி விடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற் கெனவே சுருங்கிப்போன மூச்சுப் பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டா கிறது. முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதில் தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் ஏற் படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது விசில் (வீசிங்) போன்ற சத்தம் கேட்கிறது.

சிகிச்சை?

இன்றைய மருத்துவ முன்னேற் றத்தில் ஆஸ்துமாவுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வா மையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்பு களைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப் பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. மருத்து வரின் ஆலோசனைப்படி அவற்றைப் பின் பற்றினால் ஆஸ்துமா அவதி குறையும். இவற் றில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இன் ஹேலர் ஒரு வரப்பிரசாதம்.

இவர்களுக்கு மூச்சுக்குழல்களை விரிவு படுத்த மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன் படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்து பலன் கிடைப்பதற்கு நேரம் ஆகும். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. குறிப்பாகச் சொல்வ தென்றால் சால்பூட்டமால் எனும் ஆஸ்துமா மருந்தின் அளவு அதிகமாகிவிட்டால், கை விரல்கள் நடுங்குவதை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலரைப் பயன்படுத்தும் போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக் குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்தி விடும். இதனால் மூச்சுத்திணறல் உடனடி யாகக் கட்டுப்படும். இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப் படுகிறது.

உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அதிகப் பக்கவிளைவுகள் இல்லை. இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி னால்கூட ஆபத்து இல்லை. இன்ஹேல ருக்குப் பதிலாக மாத்திரை, மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதுதான் பல பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது.

இன்ஹேலரைப் பயன்படுத்துவது எப்படி?

· இன்ஹேலரைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாகக் குலுக்க வேண்டும். அப் போதுதான் மருந்து சரியான விகிதத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றடையும்.

· இன்ஹேலரை இழுக்கும் முன்பு, மூச்சை நன்றாக வெளியே விட்டுவிட வேண் டும். பிறகு மருந்தை உள்ளிழுத்து, பத்து விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக மூச்சை வெளிவிடவும். இப்படிச் செய்தால், நுரையீரலில் மருந்து அதிக நேரம் தங்கி முழுவதுமாகப் பலன் கொடுக்கும்.

· மூச்சை உள்ளிழுப்பதும் இன்ஹேலர் மருந்தை உள்ளிழுப்பதும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து வாய்க்குள்ளேயே தங்கிவிடும்.

· இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு வாயைக் கொப்பளிக்க வேண்டியது முக்கியம்.

· குழந்தைகளுக்கு இன்ஹேலரைப் பயன்படுத்தத் தெரியாது. ஆகையால், இன் ஹேலருடன் ஸ்பேசர் கருவியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

· உட்கார்ந்தபடி இன்ஹேலரைப் பயன் படுத்துவதுதான் சரியான முறை. படுத்தபடி, சாய்ந்தபடி பயன்படுத்தினால் மருந்தின் அளவு சரியான அளவில் சென்றடையாது.

· இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு அதை மூடிவைக்க மறந்துவிடக் கூடாது.

· இன்ஹேலரைப்  பயன்படுத்தும்போது வாய்ப்புண் வரலாம். 'ரோட்டா கேப்பில் இருக்கும் மருந்து வாயில் தங்கிவிடுவதுதான் இதற்குக் காரணம். மருந்தை உறிஞ்சியதும், வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் வாய்ப்புண் வராது. அப்படியும் வருகிறது என்றால், மீட்டர் டோஸ் இன்ஹேலரை அதற்கென உள்ள கண்ணாடிக் குடுவைக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால், மருந்து வாயில் தங்குவது குறையும். வாய்ப்புண் ஆபத்து தவிர்க்கப்படும்.

·  மருத்துவரின் யோசனை இல்லாமல் சுயமாக இன்ஹேலரை மாற்றக் கூடாது.

· இன்ஹேலர்களில் ஒரு மருந்து உள் ளவை, பல மருந்துகள் கலந்தவை எனப் பல விதம் உண்டு. இவற்றை மருத்துவரின் ஆலோ சனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.


முந்திரி, ஆரோக்கிய மந்திரி

முந்திரிப் பருப்பு சுவையாக இருந்தாலும், அதன் விலை சற்றே மிரட்டும். அளவாகச் சாப்பிட்டால் முந்திரி உள்ளிட்ட பருப்புகள் உடலுக்குப் பல ஆக்கபூர்வமான பலன்களை நம் உடலுக்குத் தரக்கூடியவை. அந்தப் பலன்களில் சில:
தினசரி சிறிதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

முந்திரிப் பருப்பில் தாமிர சத்து இருப்பதால், இதன் மூலம் அடர்த்தியான, கறுப்புக் கூந்தல் வளரும். முந்திரிப் பருப்பில் மக்னீசியமும் இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.

ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி), பான்டோதெனிக் அமிலம் (வைட்டமின் பி5) உள்ளிட்ட வைட்டமின்களை முந்திரிப் பருப்பு கொண்டுள்ளது.

தினசரி முந்திரிப் பருப்பை உட்கொண்டால், சிறுநீரகக் கற்களில் 25 சதவீதம் மட்டுப்படும்.

மாரடைப்பைத் தடுக்குமா மாத்திரை?

மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது பரம்பரை வழியிலும் வருகிறது என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்திருக்குமானால், அவர் களுடைய வாரிசுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து மாரடைப்பு வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இது பொதுவான கருத்து.

உங்கள் அப்பாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக் கும் மாரடைப்பு வரும் என்று முடிவு செய்யக் கூடாது. பொதுவாக, ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகக் கொலஸ்ட்ரால், புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத சோம்பல் வாழ்க்கை, பரம்பரை ஆகிய காரணிகள் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இவற்றில் ஏதாவது இரண்டு காரணிகள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக இதய நிபுணரிடம் சென்று, இதய நோய் தொடர்பான முழு உடல் பரிசோதனையைச் செய்து கொள் ளுங்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வரு வதற்கான வாய்ப்பு தெரிந்தால், டாக்டர் ஆலோ சனைப்படி ஸ்டாடின் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாரடைப்புக் காரணமாகும் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை ஸ்டாடின் மாத்திரை 35 சதவீதம் மட்டுமே குறைக்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் ரத்தத்தில் அதிகரிக்கிறது.

கல்லீரல்    எனும் என்சைமின் துணையோடு சுயமாகக் கொலஸ்ட்ராலைத் தயாரித்து ரத்தத்துக்கு அனுப்புவது ஒரு வழி. நாம் சாப்பிடும் உணவிலி ருந்து ரத்தத்துக்கு நேரடியாகக் கொலஸ்ட்ரால் கிடைப்பது மற்றொரு வழி. ஸ்டாடின் மாத்திரை    எனும் என்சைமைச் செயலிழக்கச் செய்வதால், கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது;

ரத்தக் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதே நேரம், உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே, ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரை மட்டுமே போதாது. ஸ்டாடின் மாத்திரையோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை.

கட்டுப்பாடு அவசியம்

எல்.டி.எல். கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிக்கும் செரிவுற்ற கொழுப்பு உணவுகளான பாமாயில், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பால் பொருட்கள், இறைச்சி, தேங்காய் எண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத்துக்கு ஆபத்து தருகிற டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கும் நொறுக்கு தீனிகளை நெருங்கக் கூடாது. துரித உணவையும் மென்பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவைச் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டு சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்.டி.எல். கொலஸ்ட் ராலை அதிகரிக்கச் செய்து மாரடைப்பைத் தடுக்கும்.

இவை தவிர, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுப் படுத்த வேண்டும். நீரிழிவு நோயை நெருங்கவிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மன அழுத்தம் ஆகாது. இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.


ஒற்றைத் தலைவலியில் இருந்து தப்ப...

ஒற்றைத் தலைவலி உண்டாகும்போது ஒரு டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

லவங்கப்பட்டையைப் பொடி செய்து நீரில் குழைத்து சிறிது தலையில் தேய்த்துவிடுங்கள். காய்ந்ததும் துடைத்தால் மூக்கடைப்பு விலகும், தலைவலி மறையும்.

திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் மற்றும் உப்பு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து அரைத்துச் சிறு உருண்டையாகச் செய்து காய வையுங்கள். அதன்பின், தலைவலி வரும்போது ஒரு உருண்டையை நீரில் கரைத்து நெற்றியில் பற்று இடுங்கள்.

வெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். தொடர்ந்து 3 நாட்கள் இப்படிச் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி வராது.

இருமல் மருந்துகளைக் கடைகளில் சுயமாக வாங்கிக் குடிக்கும் பழக்கம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது சரியா?
இது சரியில்லை.

இருமல் என்பது நம் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்து வதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடு. இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் எனப் பலவும் இருமலைத் தூண்டலாம். மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள்வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம்.

தடுமம், தொண்டைப் புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, சிஓபிடி , புற்றுநோய் ஆகியவை இருமலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயம் செயலிழக்கும்போது நுரையீரலில் நீர் கோத்து இருமல் வருவதுண்டு. ஒவ்வாமையும், புகைபிடித்தலும் இருமலை வரவேற்பவை. சுவாசப் பாதைக்குத் தொடர்பில்லாத அல்சர், நெஞ்செரிச்சல், குடல்புழு காரணமாகவும் இருமல் வரலாம். உணவு புரை யேறினால்கூட இருமல் வரும்.

இப்படியான காரணங்களைக் கொண்டு, இருமலைப் பல வகைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் என்பன முக்கியமான வகைகள்.

எந்த இருமலுக்கு என்ன மருந்து?

இருமலானது சுவாசப் பாதையில் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தும், சளி அல்லது நீர் கோத்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தும், வீசிங் இருப்பதைப் பொறுத்தும் இருமலின் சத்தம் வேறுபடும். அதை வைத்தே நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக, ஸ்டெதாஸ்கோப்பைக் கொண்டு பாதிக்கப் பட்டவரின் மார்பை முறையாகப் பரிசோதிக்கும்போது, இருமலுக்குக் காரணமும் வகையும் தெரிந்துவிடும். அதற்கேற்பத்தான் அவர் இருமல் மருந்தை எழுதிக் கொடுப்பார்.

உதாரணமாகச் சளி இருமல் என்றால் சளியைக் குறைக்க மருந்து, ஆஸ்துமா என்றால் மூச்சுக் குழாயை விரிக்கிற மருந்து, ஒவ்வாமை என்றால், அதைக் கட்டுப் படுத்தும் மருந்தைத் தருவது, இதயச் செயலிழப்பு காரணம் என்றால் சிறுநீரைப் பிரிக்கும் மருந்து கொடுப்பது எனக் காரணத்தைக் களையும்போதுதான் நோய் குணமாகும்.

சரியான காரணத்தைக் களைய

எந்த வகை இருமல், என்ன காரணம் எனத் தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்தால், இருமலுக்கான அடிப்படைக் காரணத்தைக் களைய முடியாது. அதனால் இருமல் குறையாது. வீண் செலவுதான் ஏற்படும். மருத்துவரிடம் போவதைத் தள்ளிப்போடுவதால், நோய் அதிகப்படவும் வாய்ப்பிருக்கிறது.

இருமல் மருந்துகளில் சளியை வெளியேற்றும் மருந் துகள், வீசிங் பிரச்னையைக் குறைக்கும் மருந்துகள், மூளையில் இருமல் மையத்தைக் கட்டுப்படுத்தி இருமலை மட்டுப்படுத்தும் மருந்துகள், தூக்கம் வரச்செய்யும் மருந்துகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றைச் சுயமாக வாங்கி உட்கொள்ளும்போது, அவற்றின் அளவு அதிகமாகி ஆரோக்கியம் கெடலாம்.

உதாரணமாக, ஆஸ்துமாவுக்குத் தரப்படும் ஒருவகை மருந்து அளவுக்கு மீறினால் விரல் நடுக்கத்தைக் கொடுக்கும்; நெஞ்சு படபடக்கும். தூக்கம் தரும் இருமல் மருந்துகளுக்குப் பல பேர் அடிமையாவதும் உண்டு. வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரத்தை இயக்குபவர்கள், இரவு நேரப் பணியாளர்கள் இம்மாதிரியான இருமல் மருந்துக்கு அடிமையாகி, விபத்துகளைச் சந்திக்கின்றனர்.

வித்தியாச மருத்துவம்

சாதாரண இருமலுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கை மூலிகை மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்க்கலாம். இருமல் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தால் அல்லது இருமலுடன் காய்ச்சல், சளி, உடல் மெலிவது, குரல் மாறுவது போன்ற துணை அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரைச் சந்திக்க வேண்டியது அவசியம்.

இருமல் மருந்தைக் குடிக்காமலும் ஒரு வகை இருமல் குணமாகும். எப்படியென்றால், மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் சில மாத்திரைகளாலும் இருமல் வரும். அதை மாற்றினால், அளவை குறைத்தாலும் இருமல் மட்டுப்படும்.

இக்காலக் குழந்தைகள் சுத்தத் தில் எப்படி இருக்கிறார்கள்? சுகா தாரம் என்றால் என்ன? - ஒரு கிராமத்துப் பள்ளி மாணவர்களிடம் கேட்ட கேள்வி இது. சுற்றுப்புறத்தை நல்லா வைத்துக் கொள்ள வேண் டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், உடம்பில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள என்றும், தினமும் குளிக்கணும் என்றும், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள். ஆனால், பின்பற்றுவதில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

நேரமாகிவிட்டது என்றோ, இல்லையென்றால் நேரமில்லை என்றோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, பேருக்குக் கொஞ்சம் தண்ணீரை உடம்பின் மேல் ஊற்றிவிட்டு, இதோ வந்துவிட்டேன் என்ற நிலையில் கடமைக்குத்தான் பலரது குளியலும் இருக்கிறது. வாரத்துக்கு எத்தனை நாள் அழுக்கு தேய்த்து ஒழுங்காகக் குளிக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். அக்குள் போன்ற மறைவான பகுதிகளில் நன்றாகத் தேய்த்துக் குளிக்கிறோமா? அது அவசியம். அத்துடன் குளித்த பிறகு ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும். ஆடை அணிவதிலும் அலங்கரிப்பதிலும் நமக்கு இருக்கும் ஈடுபாடு, சுயசுத்தத்தைப் பேணுவதில் இருக்கிறதா? இக்காலக் குழந்தைகளுக்குச் சுத்தம் பற்றி முறையாக வழிகாட்டு கிறோமோ! சுயசுத்தம் என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்கிறார்கள். தலையில் தொடங்கிக் கால்வரை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினாலே போதும். தலையை அடிக்கடி அலசித் தூய்மையாக வைத்திருப்பது மிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையை அலச வேண்டும். தினமும் காலை யிலும் இரவிலும் பல் துலக்குவதும், அழுக்கு தேய்த்துக் குளிப்பதும் அவசியம். செருப்பில்லாமல் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. இவை எல்லாமே நமக்குத் தெரிந்தவைதான். ஒன்றும் புதிதல்ல. ஆனால், இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பது தான் கேள்வி.

சரியாகக் கை கழுவுகிறோமா?

சாப்பிட வாங்க என்று அம்மா அழைத்தவுடன், குழந்தைகள் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வாளியிலோ அல்லது வாஷ்பேசினிலோ கையை நனைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோரும் கை கழுவுவதில்லை, குழந்தைகளும் கை கழுவுவதில்லை. சாப்பிடும் முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டியது மிக மிக அவசியம்.

விளையாடிவிட்டு வந்த பிறகும், மலம் கழித்துவிட்டு வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக, நிதானமாகத் தேய்த்துக் கைகளைக் கழுவ வேண்டும். அவசரம் காட்டக்கூடாது. கைவிரல் நகங்களை வாரத்தில் ஒருநாள் வெட்டிவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.    சுத்தம் கண்டிப்பாக நோய்க்கு இடம் தராது, சுகம் தரும்; நிச்சயமாக ஆரோக்கியமான உடலையும் தரும்.

Banner
Banner