மருத்துவம்

இக்காலக் குழந்தைகள் சுத்தத் தில் எப்படி இருக்கிறார்கள்? சுகா தாரம் என்றால் என்ன? - ஒரு கிராமத்துப் பள்ளி மாணவர்களிடம் கேட்ட கேள்வி இது. சுற்றுப்புறத்தை நல்லா வைத்துக் கொள்ள வேண் டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், உடம்பில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள என்றும், தினமும் குளிக்கணும் என்றும், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள். ஆனால், பின்பற்றுவதில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

நேரமாகிவிட்டது என்றோ, இல்லையென்றால் நேரமில்லை என்றோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, பேருக்குக் கொஞ்சம் தண்ணீரை உடம்பின் மேல் ஊற்றிவிட்டு, இதோ வந்துவிட்டேன் என்ற நிலையில் கடமைக்குத்தான் பலரது குளியலும் இருக்கிறது. வாரத்துக்கு எத்தனை நாள் அழுக்கு தேய்த்து ஒழுங்காகக் குளிக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். அக்குள் போன்ற மறைவான பகுதிகளில் நன்றாகத் தேய்த்துக் குளிக்கிறோமா? அது அவசியம். அத்துடன் குளித்த பிறகு ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும். ஆடை அணிவதிலும் அலங்கரிப்பதிலும் நமக்கு இருக்கும் ஈடுபாடு, சுயசுத்தத்தைப் பேணுவதில் இருக்கிறதா? இக்காலக் குழந்தைகளுக்குச் சுத்தம் பற்றி முறையாக வழிகாட்டு கிறோமோ! சுயசுத்தம் என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்கிறார்கள். தலையில் தொடங்கிக் கால்வரை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினாலே போதும். தலையை அடிக்கடி அலசித் தூய்மையாக வைத்திருப்பது மிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையை அலச வேண்டும். தினமும் காலை யிலும் இரவிலும் பல் துலக்குவதும், அழுக்கு தேய்த்துக் குளிப்பதும் அவசியம். செருப்பில்லாமல் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. இவை எல்லாமே நமக்குத் தெரிந்தவைதான். ஒன்றும் புதிதல்ல. ஆனால், இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பது தான் கேள்வி.

சரியாகக் கை கழுவுகிறோமா?

சாப்பிட வாங்க என்று அம்மா அழைத்தவுடன், குழந்தைகள் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வாளியிலோ அல்லது வாஷ்பேசினிலோ கையை நனைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோரும் கை கழுவுவதில்லை, குழந்தைகளும் கை கழுவுவதில்லை. சாப்பிடும் முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டியது மிக மிக அவசியம்.

விளையாடிவிட்டு வந்த பிறகும், மலம் கழித்துவிட்டு வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக, நிதானமாகத் தேய்த்துக் கைகளைக் கழுவ வேண்டும். அவசரம் காட்டக்கூடாது. கைவிரல் நகங்களை வாரத்தில் ஒருநாள் வெட்டிவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.    சுத்தம் கண்டிப்பாக நோய்க்கு இடம் தராது, சுகம் தரும்; நிச்சயமாக ஆரோக்கியமான உடலையும் தரும்.

குடல் எனும் மைதானம்

குடல் என்பது 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் தான் ருசிக்கும். ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக் கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், பெருங்குடல் என எட்டு பகுதி களாகப் பிரிக்கலாம். இவை எல்லாமே கூட்டணி அமைத்துத்தான் செரிமானத்தை சாத்தியமாக்குகின்றன.

இந்தப் பாதையின் உள் மடிப்புகள், உறிஞ்சிகள், வால்வுகள், நரம்புகள் எல்லாவற்றையும் விரித்தோமா னால், அகலத்தில் 100 சதுர மீட்டருக்கும் கூடவே இருக் கும். ஏறக்குறைய ஒரு ரக்பி விளையாட்டு மைதானம் அளவு. இதற்குள் பல்லாயிரம் கோடி பாக்டீரியாக்கள் நம்முடன் குடித்தனம் நடத்துகின்றன. பாக்டீரியா என்ற தும் அது கிருமியாச்சே, உடம்புக்கு ஆபத்தாகிவிடாதா? என்று யோசிக்க வேண்டாம்! இவை நமக்கு நன்மை செய்கிற பாக்டீரியாக்கள்.

இவை இல்லாமல் உணவின் செரிமானப் பயணம் சுகப்படாது!உடலுக்குள் இருக்கும் பெரிய மண்டலம், செரிமான மண்டலம்தான். என்ன தான் அளவில் பெரிதாக இருந்தாலும், இதனால் தனி ஆட்சி செய்ய முடியாது! மூளையுடன் சேர்ந்து கூட் டாட்சிதான் செய்ய முடியும்! கோடிக்கணக்கான நரம்பு செல்களும் அவற்றின் இழைகளும் இணைந்து பிணைந்து குடலுக்கும் மூளைக்கும் பாலம் அமைப்பது இதற்குத் தான். பசித்து சாப்பிடும் எதையும் வயிற்றுக்குள் வாங்கி, அதைச் சக்கையாக வெளியேற்றும் வரை செரிமான வேலை எதுவானாலும் மூளையின் கட்டளையை எதிர்பார்த்தே இருக்கிறது செரிமானப் பாதை!

நாம் விரும்பும் உணவை தூரத்தில் பார்த்தாலே நாக்கில் எச்சில் சுரக்கிறது... இது மூளை இடும் கட்டளை. உணவை வாயில் வைத்ததும், அந்த உணவின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, அது அரைக்க வேண்டிய உணவா, நேரடியாக விழுங்க வேண்டிய உணவா என்று மூளைதான் வாய்க்குச் சொல்கிறது. அரைக்க வேண்டிய உணவென்றால், அதைப் பற்களுக்கு இடையில் ஒதுக்கி, அரைத்துக் கூழாக்கி, தொண்டைக் குழிக்குள் தள்ளுகிறது வாய்.

அதுவே திரவ உணவாக இருந்தால், நேரடியாகவே தொண் டைக்கு அனுப்பிவிடுகிறது.இந்த அற்புதப் பணிக்குத் தலையிலிருந்து தாடை வரை சுமார் 30 தசைகளும் இருபதுக்கும் மேற்பட்ட நரம்புகளும் ஒத்துழைக்கின்றன. உணவு தொண்டையை விட்டு இறங்கிய கொஞ்ச தூரத்தில் - அரை இன்ச் இடைவெளியில் - அந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும்தான் அந்த இரட்டையர்கள். மூச்சுக் குழாய் முன்பக்கமும் உணவுக்குழாய் இதன் பின் பக்கமும் இருக்க, மூச்சும் உணவும் அதனதன் பாதையில் செல்கின்றன.

எதையும் நிதானமாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. அவசர அவசரமாகவோ, பேசிக்கொண்டோ சாப்பிட்டால், சாப்பிடும்போது சிரித்தால் பிரச்னைதான். ஒரே ஒரு உணவுப் பருக்கை தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் நுழைந்து விட்டால் போதும்...

கடுமையாக இருமல் வந்து மூச்சுத் திணறிப் போவோம். இதைத்தான் புரையேறுதல் என்கிறோம். சாப்பிடும்போது பேசக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வதில் இந்த அறிவியலும் உண்டு! அடிக்கடி புரையேறினால் அதற்குப் பேச்சும் சிரிப்பும் காரணமாகாது. உணவுக் குழாய் புற்றுநோய், கோபத்தில் அமிலம் குடித்தது, தொண்டை நரம்பு வாதம் போன்றவை காரணமாக இருக்கலாம்.

நமது உணவுக்குழாய் 25 செ.மீ. நீளமுள்ளது. தினமும் கிலோ கணக்கில் நாம் சாப்பிடும் உணவு எப்படிச் சரியாக உணவுக்குழாய்க்குள் செல்கிறது? இதுவும் மூளை இடும் கட்டளைதான். உணவுக்குழாய் தொடங்கும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. இது எந்த நேரமும் மூடியபடி இருக்கும்; உணவை நாம் விழுங்கும்போது மட்டும் திறந்து வழிவிடும். அப்போது இது மூச்சுக்குழாயை மூடிவிடும். உணவு உள்ளே போனதும் மறுபடியும் உணவுக்குழாயை மூடிக்கொள்ளும்.

இந்த வால்வில் ஏதாவது பிரச்னை என்றாலும் புரையேறும்.உணவுக்குழாயை ஒரு தண்ணீர்க் குழாய் மாதிரி நினைத்துவிட வேண்டாம். நாம் விழுங்கும் உணவு  தொபுகடீர் என்று இரைப்பையில் போய் விழுந்துவிடாது. இது ஒரு தசைக்குழாய்; அலை அலையாகத்தான் இயங்கும். மலைப்பாம்பு உணவை விழுங்கும்போது அலை தோன்றுவதைப் பார்க்க முடியும். அதுமாதிரிதான் தொண்டையிலிருந்து உணவும் அலை அலையாகத் தான் இரைப்பைக்கு வந்து சேரும். இந்த இடத்தில் எச்சிலின் மகிமையைச் சொல்ல வேண்டும். பலரும் நினைக்கிற மாதிரி எச்சில் என்பது எச்சமல்ல, பிடிக்காத வர்களைப் பார்க்கும்போது தூ என்று துப்புவதற்கு!

செரிமானத்துக்கான உணவுப் பயணத்தை  தொடங்கி வைக்கும் முக்கியமானது  எச்சில் எனும் உமிழ்நீர். தினமும் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. இதில் மியூசின் எனும் திரவம் இருக்கிறது. இதுதான் உணவை இளக வைத்து, வாயில் அரைப்பதற்கு இலகு வாக்குகிறது. இதில் உள்ள டயலின் என்சைம், உணவில் உள்ள ஸ்டார்ச் சத்தை மால் டோஸாக மாற்றி இரைப் பைக்கு அனுப்புகிறது; லைசோசைம் என்சைம், பாக்டீ ரியாக்களை அழிக்கிறது.

அடுத்த முறை எச்சிலைத் துப்பும்போது இந்த மகிமைகளைக் கொஞ்சம் நினைத் துப் பாருங்கள். உணவுக்குழாய் இரைப்பையில் இணையும் இடத்திலும் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துதான் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பையில் அமிலமும் பெப்சினும் சுரக்கின்றன என்று ஏற்கனவே சொன்னோம். இரைப்பை தசை மிகவும் வலுவானது. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதைப் பிசைந்து, அமிலத்தோடு கலந்து, சாறாக்கி, சிறு குடலுக்கு அனுப்புகிறது. இந்த இயக்கத்தின்போது உணவிலுள்ள மாவுச்சத்தும் புரதச் சத்தும் செரிமானமாகின்றன.

இப்படி இரைப்பை உணவை அரைப்பதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும்.

இரைப்பையிலிருந்து சிறுகுடல் தொடங்கும் பகுதிக்கு முன்சிறுகுடல் என்று பெயர். இதன் நுழைவாயிலில் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துகொண்டு உணவு சிறுகுடலுக்குள் செல்கிறது. பெயர்தான் சிறுகுடலே தவிர, குட்டிப் பாம்பு போல வயிற்றில் சுருண்டு கிடக்கும் இதன் நீளம் 20 அடி. நடுச் சிறுகுடல், பின் சிறுகுடல் என்பன அடுத்த பகுதிகள்.இங்கு பெண்கள் கொசுவம் கட்டுவதுபோல் நிறைய மடிப்புகள் இருக்கின்றன.

இவற்றை விரித்தால் ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவு இருக்கும். சிறுகுடலில் உணவுச்சாறு அணை திறக்கப்பட்ட காவிரி மாதிரி வேகமாகச் சென்றுவிடாமல், சிற்றாறுபோல் நிதானமாகச் சென்றால், செரிமானம் நன்றாக நடக்கும். இதற்கான ஏற்பாடுதான் இந்த மடிப்புகள். இவற்றுடன் விரல்கள் மாதிரி நிறைய புடைப்புகளும் சிறுகுடலில் இருக்கின்றன.

இவற்றுக்கு விரலிகள் என்று பெயர். இவை மொத்தம் 3 கோடி. இவையே உணவுச் சத்தை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன. இந்த விரலிகளுக்கு நடுவில் சிறுகுடல் சுரப்பிகள் உள்ளன. தினமும் சுமார் ஒன்றரை லிட்டர் சிறுகுடல் ஜூஸை இவை சுரக்கின்றன. ஒன்று தெரி யுமா? உடலில் இரைப்பை இல்லாமல்கூட வாழ்ந்து விடலாம், சிறுகுடல் இல்லாமல் வாழமுடியாது.

அப்படிச் சிறுகுடலில் என்னதான் நடக்கிறது? செரி மானத்துக்கு உதவும் பல்வேறு  என்சைம்கள் மாநாடு நடத்துவது இங்குதான். முதலில் இங்குள்ள பாக்டீ ரியாக்கள் உணவுச் சத்துக்களை நொதிக்க வைத்து செரிமானத்துக்குத் தயார் செய்கின்றன. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், பித்தப்பையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பித்தக்குழாய் வழியாக முன்சிறு குடலுக்கு வருகிறது.

கணைய ஜூஸும் சிறுகுடல் ஜூஸும் இங்கு ஒன்றுசேர்கின்றன. சிறுகுடலுக்குள் வந்துவிட்ட உணவுச்சாற்றுடன் இந்தச் சாறுகள் கூடிக் குதூகலிக்கின்றன.

துணியைத் துவைத்துப் பிழியும்போது அழுக்கு பிரிக்கப்படுவதைப்போல உணவு செரிமானமாகும்போது பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்பட்ட சத்துக்கள், கல்லீரலுக்குச் செல்கின்றன. அங்கிருந்து உடலின் தேவைக்கேற்ப சத்துக்களை கல்லீரல் அனுப்பி வைக்கிறது. இப்படிச் சக்கையாக மாற்றப்பட்ட உணவு, ஒரு திரவக்கழிவாக பெருங்குடலுக்குள் நுழைகிறது.சுமார் 5 அடி நீளமுள்ள பெருங்குடலை ஒரு கழிவுத் தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு திரவக்கழிவிலிருந்து தண்ணீ ரையும் தாதுக்களையும் உறிஞ்சி எடுத்துக்கொள்வதால், மீதமுள்ள கழிவு திடக்கழிவாகி, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. அதேவேளை பெருங்குடல் இப்படித் தண்ணீரை உறிஞ்சவில்லை என்றால் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.நாம் சாப்பிடும் உணவு குடலுக்குள் பயணம் செய்து கழிவாக வெளியில் வர சராசரியாக 42 மணி நேரம் ஆகிறது. முதல் நாள் சாப்பிட்ட கீரை மறுநாள் வெளியே வரவில்லையே என்று கவலைப்படு வோர் சங்கம் ஒன்று உண்டு. அவர்களுக்காகத்தான் இந்தப் புள்ளிவிவரம் சொன்னேன்!

அயோடின் அவசியம்

நம்மில் பெரும்பாலானோர் அயோடின் என்றால், அது ஒரு வகையான உப்பு என நினைக் கின்றனர். அவ்வாறு நினைப் பது முற்றிலும் தவறு. ஏனென் றால், அயோடின் என்பது ஒரு வகையான ஊட்டச்சத்து ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும்.

குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது.

இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது.இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 2.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.

அதாவது, 18 கோடியே 7 லட்சம் மக்கள் அயோடின் கிடைக்காத தைராய்டு குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். இதனை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு உண்டாக்கும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் ஒன்றாக இணைந்து, அக்டோபர் 21ம் தேதியை அயோடின் சத்து குறைபாடு தினமாக கடைப்பிடித்து வரு கின்றன.

பெரிய பெரிய நதிகள், ஆறுகள் எந்த இடத்தில் காணப்படு கின்றவோ, அப்பகுதியில் உள்ள மணல் பகுதிகள் மற்ற பகுதிகளுக்கு நீரில் அடித்து வரப்பட்டுச் செல்லும். நமது நாட்டில், மத்திய இந்தியாவில், கங்கை, யமுனை பிரம்மபுத்திரா எனப் பல வற்றாத ஜீவ நதிகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.எனவே, இப் பகுதிகளில், இயற்கையாக கிடைக்க வேண்டிய அயோடின் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.

எனவே, மத்திய இந்தியாவில் அமைந்துள்ள ஹரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் டெல்லி ஆகிய மாநிலங்களில் அயோடின் சத்துக் குறைபாடு அதிக அளவில் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. சென்னையில், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பின் அளவு குறைவாக உள்ளது. இதற்கு பிரம்மபுத்திரா, கங்கை போன்ற நதிகள் இங்கு இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.

பொதுவாக, உப்பில் குறைவான அளவு அயோடின் சேர்த்து சாப்பிட்டு வரலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அயோடினை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதன் அளவு வயது அடிப்படையில் வேறுபடும்.பிறந்தது முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 0.07 மில்லி கிராமில் இருந்து 0.38 மில்லி கிராம் வரை அயோடின் தேவை. ஒரு நாளில், 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 0.1 மில்லி கிராமில் இருந்து 0.14 மில்லி கிராம் வரை அயோடின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண், பெண் என இருவரும் தினமும் 0.11 மில்லி கிராம் முதல் 0.12 மில்லி கிராம் உணவுடன் சாப்பிட்டு வருவது அவசியம்.தாய்மை அடைந்த பெண்களுக்கு அயோடின் குறைபாடு பிரசவம் முடியும்வரை இருக்கும். அயோடின் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு காணப்படும். அது மட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்வதும் பாதிக்கப்படும்.

முதியவர்களுக்கும் இப்பாதிப்பு வரலாம்.நம்முடைய உணவில் உப்பு சேர்வதன் மூலம் அயோடின் குறைபாடு மற்றும் அதனால் ஏற்படும் காது கேளாமை, தைராய்டு சுரப்பி பாதித்தல் போன்றவற்றை சரி செய்யலாம். அதனால்தான் அயோடின் கலந்த உப்பு என்று விளம்பரம் செய்கிறார்கள். இதுதவிர, காலிஃபிளவர், பச்சைக் காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாகவும் இப்பாதிப்புகளைக் குணப்படுத்தலாம்.

காது குடைய பட்ஸ் பயன்படுத்தலாமா?

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது எனக்குக் காது சரியாகக் கேட்ப தில்லை. `பட்ஸ் கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது. இப்படி அடிக்கடி காதை குடைவது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இது தவறு என்கிறாள் என் தோழி. இது சரியா? உங்கள் தோழி சொல்வது சரிதான்.

காதுக்குள் குரும்பி இருக்கும்போது, அதில் தண்ணீர் இறங்கிவிட்டால் குரும்பி உப்பிவிடும். இது காது சவ்வை அடைத்துக்கொள்ளும். இதனால் காது சரியாகக் கேட்காது. குரும்பியை அகற்றிவிட்டால் காது அடைப்பு சரியாகிவிடும். குரும்பியை `பட்ஸ் கொண்டு அகற்றுவதைவிட மருத்துவர் உதவியுடன் அகற்றுவதுதான் சரி.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர்- பின், தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகி விடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்குத் தள்ளி விடுவதுதான் நடக்கும்.

அப்போது செவிப்பறை பாதிக்கப் படும். தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ் பட்டு கிழித்து விட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸைக் கொண்டு காது குடை வதைத் தவிர்ப்பதே நல்லது.

காது குரும்பியை அகற்ற

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் செருமினஸ் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியைச் சுரந்து, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதிக் காதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயைக் காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் குரும்பி ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

அந்நியப் பொருள் நுழைந்துவிட்டால்?

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது.

காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையைச் சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக் குள் ஊற்றக் கூடாது. அப்படிச் செய்தால், காது கடுமையாகப் பாதிக்கப்படும்.

காதில் சீழ் வடிந்தால்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம் தான். இதன் தொடக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். அந்த நிலையிலாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள் மூக்கின் பின்பக்கத்தில் இருக்கும் ஈஸ்டாக்கியன் குழல்' வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு  அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக்கொண்டு வெளிக்காது வழி யாகச் சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். பட்ஸைப் பயன்படுத்திச் சுயமாகக் காதைத் துப்புரவு செய்து கொண்டு காலம் கடத்தினால், அறுவை சிகிச்சையில் கொண்டு போய் விட்டுவிடும். எச்சரிக்கை அவசியம்.

உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால் தப்பா?

ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உப்பு அதிகம் உள்ள உணவைச் சாப்பிட்டால், அது தப்பு என்று கூறு கிறார்கள். இது உண்மையா? உண்மைதான்.

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி 20 கிராம்வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இது மிகப் பெரிய தப்புதான். எப்படி எனப் பார்ப்போம்:

சமையல் உப்பு என்பது 40 சதவீதம் சோடியத்தாலும் 60 சதவீதம் குளோரைடாலும் ஆனது. நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும்.

சிறுநீரகமும் ரத்த அழுத்தமும்

உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத் துக்கு அதிகப் பங்கு உண்டு. ரெனின்-ஆஞ்சியோடென்சின் - ஆல்டோஸ்டீரான் அமைப்பு என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. இதில் ரெனின், ஆஞ் சியோடென்சினைச் சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது.

இந்த இரண்டும் உடலில் ரத்தக் குழாய்களைச் சுருங்கி விரியச் செய்கின்றன. இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும்; அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கிவிடும். இப்படிச் சுருங்கிப் போன ரத்தக் குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலில் அதிகமானால், அதிலுள்ள சோடியம் ரெனின், ஆஞ்சியோ டென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும்.

இதனால் ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும் போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்குக் கொண்டுவந்துவிடும். இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் பல வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவேதான் உப்பு அதிகம் சாப்பிட்டால் தப்பு.

வேண்டவே வேண்டாம்

உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், புளித்த மோர், பாலாடைக்கட்டி, சேவு, சீவல், சாக்லேட், முந்திரிப் பருப்பு போன்ற நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

இரைப்பைப் புண்ணுக்குத் தரப்படும் சில அமில எதிர்ப்பு திரவ மருந்துகளில் () சோடியம் உள்ளது. இவற்றை மருத்துவர் சொல்லாமல் நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது. அப்படி உட்கொண்டால், சோடியம் அதிகரித்து ரத்த அழுத்தமும் அதிகரித்துவிடும்.

எதிரிக்கு எதிரி நண்பன்

நமக்கு சோடியம் தேவைதான். ஆனால், நமக்குத் தேவையான சோடியம் இயற்கைக் காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடும். தனியாக உப்பு எனும் பெயரில் சோடியம் தேவையில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல் வதைப் போல், சோடியம் ரத்தஅழுத்தத்தை அதிகப்படுத்து கிறது என்றால் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதனால் இந்தச் சத்துகள் உள்ள உணவை அதிகப்படுத்திக் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். தினமும் பால் குடிக்கலாம். இதில் கால்சியம் உள்ளது.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப் பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர், மீன் உணவு ஆகியவற்றில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Banner
Banner