மருத்துவம்


நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத் தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம்  தலை கீழாக மாறிவிட்டன.

அவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

இரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சினை களும் உண்டாகிறது.

இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்து விட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.

மேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடை யைக் குறைக்க முடியாது.

இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற் றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதி கரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.

அதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.  இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய் வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.

மேலும், செரிமானம் மெது வாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும் போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கி விடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

உடலில் மண்ணீரலுக்கு என்ன வேலை?

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதா கிருஷ்ணன். மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அந்த வேலைகள் தடையின்றி நடந்தால்தான் உடலை உயிருடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் மண்ணீரலும் தன் பங்குக்கு சிறப்பான பணிகளைச் செய்கிறது.

மண்ணீரல் அடிவயிற்றின் இடது மேல் திசையில் அமைந்துள்ள உறுப்பாகும். சுமார் 7 சென்டிமீட்டர் வரை  இருக்கும். பிறந்து 5 வயது வரை ரத்த உற்பத்தி பணியை தீவிரமாக பார்க்கிறது. இதனால் குழந்தைகளை வயிற்றில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இயங்குதல் தன்மையை ஊக்குவிக் கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.

ரத்தத்தின் மூலமாக வருகிற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.கல்லீரல், இரைப்பை பித்தப்பை, சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மண்ணீரல் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதி அடிபட்டாலும் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும். மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி யாக அதனை அகற்றிவிடுவார்கள்.

இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. மண்ணீரல் பார்த்த பணியை கல்லீரல் பார்க்கத் தொடங்கிவிடும். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் எடை அதிகரிக்கும், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாகும், வாந்தி ஏற்படும். கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம் போன்ற உணவுகள் மண்ணீரலுக்கேற்ற உணவுகள் ஆகும் என்கிறார்.

அஜீரணக் கோளாறைப் போக்கும் மாங்காய்

மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண் டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலை களை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது.

மாங்காயை பயன்படுத்தி ஜீரண கோளாறுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, புதினா, வெல்லம். செய்முறை: மாங்காய் துண்டுகளுடன், இஞ்சி, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் சேர்த்து நீர்விடவும். இதனுடன் வெல்லம், ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர செரிமான கோளாறு சரியாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாங்காய் புளிப்பு சுவை உடையது. பசியை தூண்டக் கூடியது. குறைவாக சாப்பிடும்போது வயிற்று வலியை சரிசெய்யும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும்.  உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புத மருந் தாகிறது. ருசியை தரக்கூடியது. இளம்தாய்மார்கள் மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.

மாவிலையை பயன்படுத்தி தொண்டை வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாவிலை, இஞ்சி, பனங்கற்கண்டு.

செய்முறை: 6 மாவிலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர தொண்டைக்கட்டு, வலி, இருமல் விலகிப்போகும். வாய்ப்புண், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆறும். மாவிலை நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது. மாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற் கண்டு.செய்முறை: மாம்பருப்பை நசுக்கி, பனங்கற் கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுப்போக்கு சரியாகும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உணவுடன் மாங்காய் சேரும்போது அதிக சுவை ஏற்படும். மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். முக்கனிகளில் முதன்மைபெறும் மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம்.

தெரியுமா உங்களுக்கு?

தினமும் பீட்ரூட் சாறு அருந்தினால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றிவிடும்.

தினமும் ஒரு வகை கீரை உணவில் சேர்த்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

தினமும் ஆப்ரிகாட், ஆப்பிள், ஆளிவிதை, ப்ளம்ஸ் சாப்பிட்டால் கேன்சர் நோய் கிட்டே வராது.

தினமும் எலுமிச்சை பழச் சாறை பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது.

மாதுளம்பழம் மெனோபாஸால் பெண்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் பிரச்சினையை சீராக்க வல்லது.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.

தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும்

கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்


மஞ்சள் காமாலை என்பது நோயல்ல; அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறி என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் நாராயணசாமி கூறினார்.

மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான கலந்துரை யாடல் நிகழ்ச்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வருகிறது. இதில், கல்லீரல் மருத்துவத் துறையின் சார்பில் திங்கள்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் டாக்டர் நாராயணசாமி பேசியதாவது:

உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலானது நாள்தோறும் பல்வேறு பணிகளைச் செய்கிறது. உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றலை ரத்தக் குழாய்கள் மூலம் அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்பி அவற்றுக்கு உயிரூட்டுகிறது. மஞ்சள் காமாலை என்பது நோயல்ல; அது கல்லீரல் பாதிப்பைத் தெரிவிக்கும் ஓர் அறிகுறியாகும்.

மேலும் கல்லீரல் பாதிப்புக்கென்று குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் கிடையாது. பசியின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட சாதாரண அறிகுறிகளே தோன்றும். இதன் முக்கிய அறிகுறி மஞ்சள் காமாலைதான். கல்லீரலைப் பாதுகாக்க சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டியதும் அவசியம்.

கல்லீரலைப் பரிசோதனை செய்யும் சிறப்பு ஸ்கேன் கருவி தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 2012 -ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நிறுவப்பட்டது. அதன் மூலம் இதுவரை 5,000 நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ‘ஹெபடைடிஸ் பி’ பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள் வதற்கான தடுப்பூசி இம்மருத்துவமனையில் ஒவ்வொரு சனிக்கிழ மையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை போடப்படுகிறது. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா?  

இன்றைய சூழலில் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை எப்போதும் டென்ஷனாகவே இருப்பதால் மனச் சோர்வு அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மருத்துவ பத்திரிகை ஒன்றில்  வெளியான இந்த ஆய்வு முடிவில் திராட்சையில் இயற்கையாகவே உள்ள கலவைகள் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் என்னும் அமிலம் ஆகிய இரண்டும் மனச் சோர்வு சிகிச்சைக்கான ஒரு சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுகிறது. இப்போதிருக்கும் வழக்கமான மனச் சோர்வுக்கான சிகிச்சை முறையில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்காலிக தீர்வுகூட கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்

அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை சோற்றுக் கற்றாழை. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, எந்த காலத்திலும் கிடைக்க கூடியது. கற்றாழை குளிர்ச்சியை தரும் தன்மை உடையது.

பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்கவல்லது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. நோய்களை விரட்டுகிறது. குறிப்பாக, தீ காயங்களை குணப்படுத்து வதில் முதன்மையாக விளங்குகிறது. செல்களை புதுப்பிக்கும் தன்மை உடையது.

சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, தயிர், உப்பு, பெருங் காயம், கொத்தமல்லி.

செய்முறை: சோற்றுக் கற்றாழையின் தோலை சீவி சதை பகுதியை நன்றாக கழுவி ஒரு துண்டு எடுக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் தயிர், சிறிது உப்பு, பெருங் காயப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் குளிர்ச்சி பெறும். சோற்றுகற்றாழை அற்புதமான மருந்தாகிறது. உச்சி முதல் பாதம் வரை பயன்படுத்தும் மருந்துகளில் சோற்றுக்கற்றாழை கலந்திருக்கிறது. தீ காயங்களை ஆற்றுவதுடன் அற்புதமான உணவாகி நன்மை ஏற்படுகிறது.

கோடை வெயிலில் வெளியே சென்று வருவதால் நமக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. சோர்வு உண்டாகிறது. காரமான உணவு உட்கொள்ளும்போது அல்சர் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. கொத்தமல்லி சிறுநீர் தாரை யில் ஏற்படும் எரிச்சலை போக்கும். பெருங்காயம் வாயுவை வெளியேற்றுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. இந்த பானம் உடல் சூட்டை தணிக்கிறது. குடல் நோய்களை போக்குகிறது. சோற்றுக்கற்றா ழையை இரண்டாக பிளந்து சதை பகுதியை தோலில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், தோலுக்கு குளிர்ந்த தன்மை ஏற்படும். இது, தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. வியர்குருவை போக்குகிறது. தோலை புற ஊதா கதிர்கள் தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. கருமை நிறம் சரியாகிறது.

வெயிலால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். உடலில் நீர் இழப்பு காரணமாக சோர்வு, மயக்கம் ஏற்படும். இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை 100 மில்லி அளவுக்கு குடித்துவர உடல் புத்துணர்வு பெறும். முற்றாத வழுக்கையாக இருக்கும் இளநீரை வாங்கி பயன் படுத்துவது நல்லது. இளநீரில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வற்றால் உடல் சோர்வு நீங்கும். உடல் பலம் பெறுகிறது. இழந்துபோன நீர்ச்சத்தை மீட்கிறது. இது வெயிலுக்கு அற்புதமான பானமாக விளங்குகிறது. வெயிலினால் தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மாசிக்காய் தோல் நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. மாசிக்காய் சூரணத்துடன் வெண்ணெய் சேர்த்து கலந்து பூசுவதால் சுருக்கங்கள் விலகிப்போகும்.

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி

பல்வேறு நன்மைகளை கொண்ட தர் பூசணி நீர்ச்சத்தை அதிகம் உள்ளடக்கியது. நாவறட்சி, தாகம், உடல் உஷ்ணத்தை போக்கக்கூடியது. நோய் நீக்கியாக விளங் கும் தர்பூசணி, புற்றுநோய் வராமல் தடுக் கிறது.

வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இதில், வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்பார்வை குறைபாடு களை களைகிறது. பார்வையை பலப் படுத்துகிறது. சிறுநீரகத்தை சீர் செய்கிறது. சிறுநீரை பெருக்கி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. எலும்பு களுக்கு பலம் தருகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. தர்பூசணியை பயன்படுத்தி ரத்த அழுத்த குறைபாடினால் உண்டாகும் தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தர்பூசணி பழச்சாறுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சமன்படும். தலைசுற்றல், மயக்கம் சரியாகும். தர் பூசணியை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தர்பூசணியின் வெள்ளை பகுதியை துண்டுகளாக்கி 2 ஸ்பூன் அள வுக்கு எடுத்து இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு நசுக்கிய தர்பூசணி விதை, சிறிது பனங்கற் கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. தர்பூசணியின் வெண் தசை பகுதியில் அதிகளவு சத்து உள்ளது. இதை சுரைக்காய் போன்று கூட்டு வைத்து சாப்பிடலாம். தர்பூசணி விதை உடலுக்கு பலம் கொடுக்கும். கிருமிகளை அழிக்க கூடிய தன்மை கொண்டது.

தர்பூசணியை கொண்டு வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் அதிகப்படி யான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அரிசி மாவு, பாசி பயறு மாவுடன் தர்பூசணி பழச்சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழு வினால் எண்ணெய் சுரப்பு கட்டுப்படும். குளிர்ச்சி தரும் மேல்பூச்சாக தர்பூசணி விளங்குகிறது. இது, தோலுக்கு புத்து ணர்வை கொடுக்கிறது. இதனால் தோற்றப் பொலிவு ஏற்படும். உடல் எரிச்சலை தணிக்கும் தன்மை கொண்ட தர்பூசணி குடல் புண்களை ஆற்றும். தோலுக்கு பலம், மென்மை, பள பளப்பை தரக் கூடியது. இதை அடிக்கடி சாப்பிட்டுவர தலைமுடி நன்றாக வளரும். பார்வை கூர்மை பெறும். கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்க கூடியதாக விளங் கும் தர்பூசணியை அடிக்கடி சாப்பிட்டுவர நன்மை ஏற்படும். உடல் வெப்பத்தை தணிக்கும் இன்னொரு வழியாக பழைய சோற்றில் தயிர் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர உள் உறுப்புகளின் எரிச்சல் சரியாகும். இது உடலுக்கு பலமளிக்கும் அற்புதமான உணவாக விளங்குகிறது.


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணம் என்ன?

வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

சின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.

எப்படிப் பரவுகிறது?

நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சிகிச்சை உண்டு!

பொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. அம்மனின் கோபமே அம்மை நோய்’ என்றும், அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்‘ என்றும் அஞ்சி, பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.

கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது. சின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும்.

உணவுமுறை முக்கியம்!

அம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. இவர்களுக்கான உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம். பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.

வாழ்நாளை அதிகரிக்கும் வாழை இலை

வாழை இலை உணவு மிகச்சிறந்த வழி. விஞ்ஞானப்பூர்வமாக பார்த்தோமேயானால், வாழை இலையின் மேல் உள்ள பச்சையம்  உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நன்கு பசியைத் தூண்டுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு உணவுதானே பிரதானம். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதற்கு இது ஒன்றே சிறந்த சான்று. சூடான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படும்போது, அதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உண வோடு கலந்து நம் உடலுக்குள் சென்று சேர்கிறது. பரிமாறப்படும் உணவில் ஏதேனும் கிருமிகள் இருப்பினும், அதை அழிக்கும் திறன் வாழை இலைக்கு உண்டு.

வாழை இலையில் உள்ள குளோரோபில் அல்ஸர் மற்றும் சரும நோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளால்
புற்றுநோய் அபாயம்!

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்று நோய்க் கும் தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேக்குகள், தொழிற்சாலை களில் தயாரிக்கப்படும் ரொட் டிகள் போன்றவற்றை, அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப் படுத்தியுள்ளனர்.

ஒரு லட்சத்து அய்ந்தாயிரம் பேரிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட் கொண்ட வர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள், பன்கள், மொறுமொறு நொறுக்குத் தீனிகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள், சோடா மற்றும் குளிர்பானங்கள், இறைச்சி உருண்டைகள், உடனடி நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள், குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவை எல்லாம், அதிகம் பதப்படுத்தப் பட்ட உணவுகள் பட்டியலில் வருகின்றன.

இந்த ஆய்வு முடிவுகள் அச்சத்தைத் தந்தாலும், ஆரோக்கியமான உணவுமுறையால் புற்றுநோயை கூடியமட்டும் தவிர்க்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

புகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக, பதப் படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது உள்ளது. இது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

பாரிசில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை அய்ந்து ஆண்டு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பிட்ட பெண்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10 சதவீதம் அதிகரித்தது என்றும், அப்போது கண் டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சராசரியாக 18 சதவீத மக்கள் உட்கொண்ட உணவுகள் அதிக அளவு பதப்படுத்தப்பட்டிருந்தன. அவர்களில் சராசரியாக, ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் பேரில் 79 பேருக்கு புற்றுநோய் வந்தது.

உட்கொள்ளும் உணவுகளில் அதிகம் பதப் படுத்தப்பட்ட உணவுகளை 10 சதவீதம் அதிகரித்தால், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் ஒன்பது கூடியது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.

அதேநேரம், இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறியுள்ள இங்கி லாந்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் லிண்டா பால்ட், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த ஆய்வு முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என் கிறார்.

நார்விச்சில் உள்ள குவாட்ரம் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த அயான் ஜான்சன், இந்த ஆய்வுகள் சில வலுவற்ற தொடர்புகளையே முன்வைக்கின்றன என்று சொல்கிறார். அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதற்கான வரையறை தெளிவாக இல்லை என்பது அவர் கருத்து. எது எப்படியிருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருப்பதே நல்லது!

உணவைத் தடுக்கும் புற்றுநோய்

நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதில் வரும் புற்றுநோய்களில் உணவுக் குழாய்ப் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது.

புகைபிடித்தல், புகையிலை போடுதல், பான்மசாலா பயன்பாடு ஆகியவை உணவுக் குழாய்ப் புற்றுநோய் உருவாக முக்கியக் கார ணங்கள்.

மேலும், உணவுக் குழாயின் அடிப் பகுதியில் பிறவிச் சுருக்கம், இரைப்பை ஏற்றம், ரத்தசோகை, டைலோசிஸ்,  அக்கலேசியா கார்டியா  போன்ற பரம்பரை நோய்களும் மரபணுக் கோளாறுகளும் இந்தப் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். புற்றுநோய்  வருவதற்குப் பரம்பரை முக்கியக் காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

தவிர, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் - தாதுச்சத்துக் குறைவு ஆகியவையும் இந்த நோய் உருவாவதைத் தூண்டுகின்றன.

நெஞ்செரிச்சல் நோய் பல ஆண்டுகளுக்குத் தொடருமானால் அது பேரட்ஸ் உணவுக் குழாயாக மாறி, இந்தப் புற்றுநோய்க்குப் பாதை அமைக்கும்.

காபி - தேநீரை அதிகச் சூடாகக் குடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவை அடிக்கடி சாப்பிடுவது, காய்கறி, கீரை, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் இந்த நோயை வரவேற்கும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் புளித்த ஏப்பம், பசி குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப் பைப் புண்ணிலும் காணப்படும் என்பதால், இந்த நோயாளிகள் இரைப்பைப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும். பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் புற்றுநோய் உள்ள விவரம் தெரியவரும்.

ஈஸோபேஜியல் கேஸ்ட்ரோ டியோடினோஸ் கோப்பி  மூலம் உணவுக் குழாயில் உள்ள புற்று நோயைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்தப் பரிசோதனையின்போதே புற்றுள்ள பகுதியிலிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துத் திசு ஆய்வு  செய்து, நோயை உறுதிசெய்ய முடியும்.

என்ன சிகிச்சை?

உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கு அதன் தன்மை, வகை, பரவியுள்ள நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் உள்ள உணவுக் குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்துவது எளிது.

1. அறுவை சிகிச்சை:

உணவுக் குழாயில் புற்று பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, பெருங்குடல் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து உணவுக் குழலுக்கு மாற்றாகப் பொருத்திவிடுவது ஒரு வழி. இந்தச் சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையில் மட்டுமே செய்ய முடியும். புற்று முற்றிய நிலையில் இதை மேற்கொள்ள இயலாது.

2. கதிர்வீச்சு சிகிச்சை :

அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமையில் உள்ள நோயாளிகளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டியைக் கரைக்க முடியும்.

3. மருத்துவ சிகிச்சை:

ரத்தம், நிணநீர் மூலம் உடலின் மற்ற இடங்களில் இது பரவியிருந்தால் மருத்துவ சிகிச்சை தரப்படும்.

4. ஸ்டென்ட் சிகிச்சை:

உணவுக்குழாய் முழுவதுமே அடைத்து விட்டால், ஸ்டென்ட் எனப்படும் செயற்கைக் குழாயை அந்த இடத்தில் பொருத்திக்கொள்ள, சாப்பிடும் சிரமம் குறையும்.
வைட்டமின்களும் - அதன் பயன்களும்

1. வைட்டமின் ஏ:  பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

2. வைட்டமின் பி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத் தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

3. வைட்டமின் சி:  ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.

4. வைட்டமின் டி: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.  காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.

5. வைட்டமின் ஈ:

நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.

6. வைட்டமின் கே:

நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.

7. போலிக் அமிலம்:

நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.

8. கால்சியம்:

நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.

9. இரும்புச்சத்து:

நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.மாணவர்களுக்கு தேர்வு பதற்றம் குறைக்கும் உணவுகள்

மார்ச் மாதம் வந்தாலே பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைத்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்வது அறிவிக்கப் படாத நோயாகி வருகிறது. தேர்வுக் காலத்தில் இரவு முழுவதும் கண் விழித்துப் படிக்க நேரிடும். உணவையும் சரிவர எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அல்லது தவறான உணவுப் பழக்கத்தால் பசியின்மையுடன் இருப்பார்கள். தேர்வுக் காலத்தில் குறிப்பிட்ட சில உணவு வகைகளை உட்கொண்டால், பதற்றமின்றி இருக்கலாம். ஞாபகச் சக்தியுடனும் திகழலாம். அதற்கு உதவும் முக்கிய உணவு வகைகள்:

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. பதற்றத்தைக் குறைக்க ஆப்பிள் உதவும். இதில் மிகுதியாக உள்ள அசிடைல்கோலின், அறி வாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.

பருப்புகள்

வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை உணவு வகைகளில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை சீராகச் சாப்பிட்டால் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும். பதற்றத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட்டில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்புச் சத்து நிறைவாக உள்ளது. இதற்கு அழற்சியை எதிர்க்கும் தன்மை இருக்கிறது. பதற்றத்திலிருந்து விடு படவும் இது உதவுகிறது.

தயிர்: தேர்வுக் காலத்தில் தயிர் சாப்பிடு வதை நிறுத்திவிடாதீர்கள். இதில் கால்சியம் சத்தும் நல்ல பாக்டீரியாவும் அதிகம் உண்டு. தேர்வு நேரத்தில் செரிமானப் பிரச்சினைகள் வராமலும் வாயுத் தொந்தரவு இல்லாமலும் இது தடுக்கும். தயிரில் லேக்டோபாசிலஸ் மிகுதியாக இருப்பதால், உடலை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

முட்டை: தேர்வு நேரத்தில் தினமும் முட்டையை அவித்துச் சாப்பிடுங்கள். முட் டையில் வைட்டமின் - பி12 நிறைந்திருக்கிறது. இது உடனடி சக்தி கிடைக்க உதவுகிறது. அறி வாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் புரதச் சத்தும் நிறைந்திருப் பதால், நோய் எதிர்ப்பு ஆற்றலை சீராக வைக்க உதவுகிறது.

கீரை வகைகள்

கீரைகளில் வைட்டமின் கே, பி6, பி12 நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி சக்தி தரும் தன்மை கீரைகளுக்கு உண்டு. கீரை சாப்பிட்டால் ஞாபகச் சக்தியும் அதிகரிக்கும். எனவே தேர்வு நேரத்தில் கீரை சாப்பிட வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

எலும்பு சூப்: என்னதான் தேர்வாக இருந்தாலும், சீரான தூக்கமும் அவசியம். தேர்வு நேரத்தில் எலும்பு சூப்பைக் குடித்தால், பதற்றத்தைத் தவிர்த்து சீரான தூக்கத்தைத் தரும். எனவே, எலும்பு சூப்பை மறந்து விடாதீர்கள்.

சால்மன் (காலா) மீன்: இந்த மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்திருக்கிறது. இது ஞாபகச் சக்தியை மேம்படுத்த உதவுவதோடு பதற்றத் தையும் தணிக்க உதவு கிறது. வாரம் 2 முறை இந்த மீனை உட்கொண்டால், இயற்கையாகவே ஒமேகா 3 சக்தி நமக்குக் கிடைத்துவிடும்.


தூக்கம் மனிதர்களுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டு வந்தி ருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச் சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக் காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கை யறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது.
என்னதான் அதி நவீன அய்போனைப் பார்த்துக்கொண்டே படுத்துக்கொண்டிருந் தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்மு டைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதி கரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார் மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

உடல் பருமனுக்குத் தூக்கமின் மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர் விளைவுகளும் ஏற்படுகின்றன.

தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட் டால் பல விபத்துகள் ஏற் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான்  தேவையின்றி கவலைப்படவும் தொடங்கு கிறோம். ஏனென் றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில் லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக் கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலை யால் குடிப்பதைப் போன்றதுதான்

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப் பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால்  எதிர்மறை யாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும்,   நாள டைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்து விடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்பேசிகளுக்கும் தடை போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை.

இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும்.

தெரிந்து கொள்ளுங்கள்!- உடல் எடை குறைக்கும் காய்கறிச் சாறு

நமது தலைமுடியின் வலு எவ்வளவு?

அலுமினியத்தின் பலத்தை ஒரு முடியின் இழை கொண்டிருக்கிறது.

உடல் எடை குறைப்புக்குக் காய்கறி சாறு பருகுவது உதவுமா?

காய்கறி ஜூஸ் அருந்தாதவர்களைவிட தினசரி காய்கறி ஜூஸ் பருகுபவர்களுக்கு எடை குறைவதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப் பிருக்கிறது.

பாலில் அதிகத் தாதுச் சத்துக்கள் இருக் கின்றனவா?

பாலில் அதிகம் தாதுச்சத்து இல்லை என்பதே உண்மை. உடலை வலுவூட்டும் மாங்கனீஸ், குரோமியம், செலினியம், மக்னீசியம் ஆகியவை காய்கறிகளிலும் பழங்களிலுமே நிறைந்துள்ளன. கால்சியமும் மக்னீசியமும் உடலில் 2:1 பங்கு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால், பாலில் 10: 1 பங்காக உள்ளது.
கால்சியம் சத்துக்காக பாலையே அதிகம் நம்பியிருப்பது மக்னீசியம் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

பக்கவாதத்திலிருந்து மீண்டு வரலாம்!

முதுமையில் பலரையும் அதிகம் முடக்கிப் போடும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கை, கால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை. தசைப் பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். பெரும்பாலோர் அவற்றுக்கு வழி செய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதிசெய்யாமலும் பாதிக்கப்பட்ட வரைத் தனிமையில் விட்டு விடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடுசெய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். தோள், முழங்கை, மணிக் கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாகத் தசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவரை வீட்டுக்கே வரச் சொல்லி, பயிற்சி பெறலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றைச் செய்ய முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்தி ருக்கும் போது, உடல் ஒரு திசையில் இழுப்பது போன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப் பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற் றையும் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் வாக்கர் கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

படுக்கைப் புண்களைத் தடுக்க

பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலி தான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கைவரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்கள் தலை யணைக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கையைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தண்ணீர்ப் படுக்கை  நல்லது.

சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும் உட்காரும் போதும் மற்றவர் உதவியுடன் செய்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருக்கும். இவற்றுக்கும் தனிப் பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண் டைத் தசைகள் வலிமை பெறப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற் கேற்ப உணவைத் தேர்வுசெய்ய வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவு வகைகளைச் சிறிதளவில் அடிக்கடி சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை எழாது.

பேச்சு - மொழிப் பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். உங்கள் பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார்.  விழுங்குவதில் சிரமம் ஏற்படும் காரணத்தால் முழு தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், மசிக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ், அவரை, பச்சைத் தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவு வகைககள். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல்  தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடவேண்டும். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத் தலாம்.

Banner
Banner