எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடல் எனும் மைதானம்

குடல் என்பது 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் தான் ருசிக்கும். ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக் கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், பெருங்குடல் என எட்டு பகுதி களாகப் பிரிக்கலாம். இவை எல்லாமே கூட்டணி அமைத்துத்தான் செரிமானத்தை சாத்தியமாக்குகின்றன.

இந்தப் பாதையின் உள் மடிப்புகள், உறிஞ்சிகள், வால்வுகள், நரம்புகள் எல்லாவற்றையும் விரித்தோமா னால், அகலத்தில் 100 சதுர மீட்டருக்கும் கூடவே இருக் கும். ஏறக்குறைய ஒரு ரக்பி விளையாட்டு மைதானம் அளவு. இதற்குள் பல்லாயிரம் கோடி பாக்டீரியாக்கள் நம்முடன் குடித்தனம் நடத்துகின்றன. பாக்டீரியா என்ற தும் அது கிருமியாச்சே, உடம்புக்கு ஆபத்தாகிவிடாதா? என்று யோசிக்க வேண்டாம்! இவை நமக்கு நன்மை செய்கிற பாக்டீரியாக்கள்.

இவை இல்லாமல் உணவின் செரிமானப் பயணம் சுகப்படாது!உடலுக்குள் இருக்கும் பெரிய மண்டலம், செரிமான மண்டலம்தான். என்ன தான் அளவில் பெரிதாக இருந்தாலும், இதனால் தனி ஆட்சி செய்ய முடியாது! மூளையுடன் சேர்ந்து கூட் டாட்சிதான் செய்ய முடியும்! கோடிக்கணக்கான நரம்பு செல்களும் அவற்றின் இழைகளும் இணைந்து பிணைந்து குடலுக்கும் மூளைக்கும் பாலம் அமைப்பது இதற்குத் தான். பசித்து சாப்பிடும் எதையும் வயிற்றுக்குள் வாங்கி, அதைச் சக்கையாக வெளியேற்றும் வரை செரிமான வேலை எதுவானாலும் மூளையின் கட்டளையை எதிர்பார்த்தே இருக்கிறது செரிமானப் பாதை!

நாம் விரும்பும் உணவை தூரத்தில் பார்த்தாலே நாக்கில் எச்சில் சுரக்கிறது... இது மூளை இடும் கட்டளை. உணவை வாயில் வைத்ததும், அந்த உணவின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, அது அரைக்க வேண்டிய உணவா, நேரடியாக விழுங்க வேண்டிய உணவா என்று மூளைதான் வாய்க்குச் சொல்கிறது. அரைக்க வேண்டிய உணவென்றால், அதைப் பற்களுக்கு இடையில் ஒதுக்கி, அரைத்துக் கூழாக்கி, தொண்டைக் குழிக்குள் தள்ளுகிறது வாய்.

அதுவே திரவ உணவாக இருந்தால், நேரடியாகவே தொண் டைக்கு அனுப்பிவிடுகிறது.இந்த அற்புதப் பணிக்குத் தலையிலிருந்து தாடை வரை சுமார் 30 தசைகளும் இருபதுக்கும் மேற்பட்ட நரம்புகளும் ஒத்துழைக்கின்றன. உணவு தொண்டையை விட்டு இறங்கிய கொஞ்ச தூரத்தில் - அரை இன்ச் இடைவெளியில் - அந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும்தான் அந்த இரட்டையர்கள். மூச்சுக் குழாய் முன்பக்கமும் உணவுக்குழாய் இதன் பின் பக்கமும் இருக்க, மூச்சும் உணவும் அதனதன் பாதையில் செல்கின்றன.

எதையும் நிதானமாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. அவசர அவசரமாகவோ, பேசிக்கொண்டோ சாப்பிட்டால், சாப்பிடும்போது சிரித்தால் பிரச்னைதான். ஒரே ஒரு உணவுப் பருக்கை தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் நுழைந்து விட்டால் போதும்...

கடுமையாக இருமல் வந்து மூச்சுத் திணறிப் போவோம். இதைத்தான் புரையேறுதல் என்கிறோம். சாப்பிடும்போது பேசக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வதில் இந்த அறிவியலும் உண்டு! அடிக்கடி புரையேறினால் அதற்குப் பேச்சும் சிரிப்பும் காரணமாகாது. உணவுக் குழாய் புற்றுநோய், கோபத்தில் அமிலம் குடித்தது, தொண்டை நரம்பு வாதம் போன்றவை காரணமாக இருக்கலாம்.

நமது உணவுக்குழாய் 25 செ.மீ. நீளமுள்ளது. தினமும் கிலோ கணக்கில் நாம் சாப்பிடும் உணவு எப்படிச் சரியாக உணவுக்குழாய்க்குள் செல்கிறது? இதுவும் மூளை இடும் கட்டளைதான். உணவுக்குழாய் தொடங்கும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. இது எந்த நேரமும் மூடியபடி இருக்கும்; உணவை நாம் விழுங்கும்போது மட்டும் திறந்து வழிவிடும். அப்போது இது மூச்சுக்குழாயை மூடிவிடும். உணவு உள்ளே போனதும் மறுபடியும் உணவுக்குழாயை மூடிக்கொள்ளும்.

இந்த வால்வில் ஏதாவது பிரச்னை என்றாலும் புரையேறும்.உணவுக்குழாயை ஒரு தண்ணீர்க் குழாய் மாதிரி நினைத்துவிட வேண்டாம். நாம் விழுங்கும் உணவு  தொபுகடீர் என்று இரைப்பையில் போய் விழுந்துவிடாது. இது ஒரு தசைக்குழாய்; அலை அலையாகத்தான் இயங்கும். மலைப்பாம்பு உணவை விழுங்கும்போது அலை தோன்றுவதைப் பார்க்க முடியும். அதுமாதிரிதான் தொண்டையிலிருந்து உணவும் அலை அலையாகத் தான் இரைப்பைக்கு வந்து சேரும். இந்த இடத்தில் எச்சிலின் மகிமையைச் சொல்ல வேண்டும். பலரும் நினைக்கிற மாதிரி எச்சில் என்பது எச்சமல்ல, பிடிக்காத வர்களைப் பார்க்கும்போது தூ என்று துப்புவதற்கு!

செரிமானத்துக்கான உணவுப் பயணத்தை  தொடங்கி வைக்கும் முக்கியமானது  எச்சில் எனும் உமிழ்நீர். தினமும் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. இதில் மியூசின் எனும் திரவம் இருக்கிறது. இதுதான் உணவை இளக வைத்து, வாயில் அரைப்பதற்கு இலகு வாக்குகிறது. இதில் உள்ள டயலின் என்சைம், உணவில் உள்ள ஸ்டார்ச் சத்தை மால் டோஸாக மாற்றி இரைப் பைக்கு அனுப்புகிறது; லைசோசைம் என்சைம், பாக்டீ ரியாக்களை அழிக்கிறது.

அடுத்த முறை எச்சிலைத் துப்பும்போது இந்த மகிமைகளைக் கொஞ்சம் நினைத் துப் பாருங்கள். உணவுக்குழாய் இரைப்பையில் இணையும் இடத்திலும் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துதான் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பையில் அமிலமும் பெப்சினும் சுரக்கின்றன என்று ஏற்கனவே சொன்னோம். இரைப்பை தசை மிகவும் வலுவானது. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதைப் பிசைந்து, அமிலத்தோடு கலந்து, சாறாக்கி, சிறு குடலுக்கு அனுப்புகிறது. இந்த இயக்கத்தின்போது உணவிலுள்ள மாவுச்சத்தும் புரதச் சத்தும் செரிமானமாகின்றன.

இப்படி இரைப்பை உணவை அரைப்பதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும்.

இரைப்பையிலிருந்து சிறுகுடல் தொடங்கும் பகுதிக்கு முன்சிறுகுடல் என்று பெயர். இதன் நுழைவாயிலில் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துகொண்டு உணவு சிறுகுடலுக்குள் செல்கிறது. பெயர்தான் சிறுகுடலே தவிர, குட்டிப் பாம்பு போல வயிற்றில் சுருண்டு கிடக்கும் இதன் நீளம் 20 அடி. நடுச் சிறுகுடல், பின் சிறுகுடல் என்பன அடுத்த பகுதிகள்.இங்கு பெண்கள் கொசுவம் கட்டுவதுபோல் நிறைய மடிப்புகள் இருக்கின்றன.

இவற்றை விரித்தால் ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவு இருக்கும். சிறுகுடலில் உணவுச்சாறு அணை திறக்கப்பட்ட காவிரி மாதிரி வேகமாகச் சென்றுவிடாமல், சிற்றாறுபோல் நிதானமாகச் சென்றால், செரிமானம் நன்றாக நடக்கும். இதற்கான ஏற்பாடுதான் இந்த மடிப்புகள். இவற்றுடன் விரல்கள் மாதிரி நிறைய புடைப்புகளும் சிறுகுடலில் இருக்கின்றன.

இவற்றுக்கு விரலிகள் என்று பெயர். இவை மொத்தம் 3 கோடி. இவையே உணவுச் சத்தை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன. இந்த விரலிகளுக்கு நடுவில் சிறுகுடல் சுரப்பிகள் உள்ளன. தினமும் சுமார் ஒன்றரை லிட்டர் சிறுகுடல் ஜூஸை இவை சுரக்கின்றன. ஒன்று தெரி யுமா? உடலில் இரைப்பை இல்லாமல்கூட வாழ்ந்து விடலாம், சிறுகுடல் இல்லாமல் வாழமுடியாது.

அப்படிச் சிறுகுடலில் என்னதான் நடக்கிறது? செரி மானத்துக்கு உதவும் பல்வேறு  என்சைம்கள் மாநாடு நடத்துவது இங்குதான். முதலில் இங்குள்ள பாக்டீ ரியாக்கள் உணவுச் சத்துக்களை நொதிக்க வைத்து செரிமானத்துக்குத் தயார் செய்கின்றன. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், பித்தப்பையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பித்தக்குழாய் வழியாக முன்சிறு குடலுக்கு வருகிறது.

கணைய ஜூஸும் சிறுகுடல் ஜூஸும் இங்கு ஒன்றுசேர்கின்றன. சிறுகுடலுக்குள் வந்துவிட்ட உணவுச்சாற்றுடன் இந்தச் சாறுகள் கூடிக் குதூகலிக்கின்றன.

துணியைத் துவைத்துப் பிழியும்போது அழுக்கு பிரிக்கப்படுவதைப்போல உணவு செரிமானமாகும்போது பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்பட்ட சத்துக்கள், கல்லீரலுக்குச் செல்கின்றன. அங்கிருந்து உடலின் தேவைக்கேற்ப சத்துக்களை கல்லீரல் அனுப்பி வைக்கிறது. இப்படிச் சக்கையாக மாற்றப்பட்ட உணவு, ஒரு திரவக்கழிவாக பெருங்குடலுக்குள் நுழைகிறது.சுமார் 5 அடி நீளமுள்ள பெருங்குடலை ஒரு கழிவுத் தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு திரவக்கழிவிலிருந்து தண்ணீ ரையும் தாதுக்களையும் உறிஞ்சி எடுத்துக்கொள்வதால், மீதமுள்ள கழிவு திடக்கழிவாகி, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. அதேவேளை பெருங்குடல் இப்படித் தண்ணீரை உறிஞ்சவில்லை என்றால் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.நாம் சாப்பிடும் உணவு குடலுக்குள் பயணம் செய்து கழிவாக வெளியில் வர சராசரியாக 42 மணி நேரம் ஆகிறது. முதல் நாள் சாப்பிட்ட கீரை மறுநாள் வெளியே வரவில்லையே என்று கவலைப்படு வோர் சங்கம் ஒன்று உண்டு. அவர்களுக்காகத்தான் இந்தப் புள்ளிவிவரம் சொன்னேன்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner