எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குதிகால் வலி எதனால் வருகிறது?

ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிபவர்களுக் குக் குதிகால் வலி வருவதற்கான சாத் தியம், மற்றவர் களைவிடப் பல மடங்கு அதிகம். இதற்கான காரணத் தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால், குதிகால் வலி எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம் பாதத்தில் பிளான்டார் அப்போநீரோசிஸ்  எனும் திசுக்கொத்து குதிகால் எலும்பிலிருந்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும், இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி உண்டாகிறது. இந்தத் தொந்தரவுக்கு பிளான்டார் ஃபேசியைட்டிஸ்  என்பது மருத்துவப் பெயர்.

குதிகால் எலும்பும், தசைநார்களும் உராய்வதைத் தடுக்க பர்சா   எனும் திரவப் பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும், திசுக் கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு கால்கேனியல் ஸ்பர் என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும், பிளாஸ்டிக் செருப்பு களையும் அணிபவர்களுக்கு, குதிகால் வலி வருவதற்கான சாத்தியம் அதிகம். காரணம், வாகனங்களில் ஷாக் அப்சார்பர் வேலை செய்வது போல நம் காலணிகளும் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது.

அடுத்து, ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்துவருகிறது. ஆனால், இதில்தான் ஆபத்தும் உள்ளது. குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள், பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவ தில்லை. இவற்றைக் காலில் அணிந்துகொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து, வீக்கத்துடன் குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து வலிக்கத் தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

குதிகால் வலி ஏற்பட்டவர்கள் தெருவில் மட்டுமல்ல; வீட்டுக் குள்ளும் வெறுங்காலோடு நடக்கக் கூடாது. எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்தே நடக்க வேண்டும். ‘எம்.சி.ஆர்.’  செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக் கூடாது. லூசான ஷூக்களையும் அணியக் கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசைநாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலி ஆரம்பிக்க இவை துணை போகும். ஆகவே, காலணிகள் அணிவதிலும் எச்சரிக்கை தேவை!

மனதுக்கும் தேவை முதல் உதவி

ஒரு விபத்து, ஏதேனும் அசம்பாவிதம் என்றால் உடனடியாக முதல் உதவிகளைச் செய்கிறோம். உயிரைக் காப்பாற்ற உடலுக்குச் செய்யப்படும் இந்த முதல் உதவிகளைப் போலவே மனதுக்கும் முதல் உதவி தேவை என உளவியல் மருத்து வர்கள் கூறுகிறார்கள். நெருக்கமானவர்களின் பிரிவு, வன்முறைகள், விபத்து, இயற்கைப் பேரழிவுகள் போன்று மனிதர்களின் மனதை பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இதனால் தனி மனிதர்கள் மட்டும் இல்லாமல் குடும்பங்கள், சில நேரங்களில் ஒட்டு மொத்த சமுதாயமேகூட பாதிப்புக்குள்ளாகிறது. இதுபோன்ற எதிர்பாராத உளவியல் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களில் ஒரு சிலரே அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் அதி லிருந்து மீள முடியாமல் கடுமையான பாதிப்புக் குள்ளாகிறார்கள்.

இதுபோன்ற தருணங்களில் பாதிப்புக்குள்ளான வர்களுக்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதலில் ஆதரவுக்கரம் தர வேண்டும். சக மனிதர்கள் இதுபோல் மனரீதியாக ஆதரவு அளிப்பதையே உளவியல் முதல் உதவி என்கிறோம்.  உதவி ஒருவருக்குத் தேவை என்பதை எப்படி உணர்ந்து கொள்வது?  கேட்டோம். காரணமில்லாமல் எல்லா வற்றுக்கும் பயப்படுவது, கலகலப்பாக இருக்கக் கூடியவர் திடீரென்று யாருடனும் பழகாமல் தனிமையில் இருப்பது, உடல் சோர்வு, ஆர்வமாக ஈடுபடும் செயல்களில் ஆர்வம் குறைவது, வேலைத்திறன் குறைவது, அதிகப் படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தன்னம்பிக்கை இழத்தல், வேலைக்கோ, கல்லூரிக்கோ செல் வதைத் தவிர்ப்பது, ஆவேசமாகக் கத்துவது போன்றவை ஒருவரிடம் தென்பட்டால் அவர் களுக்கு உளவியல் முதல் உதவி தேவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

தற்கொலை எண்ணம் தூண்டப்படுபவர்களின் நடவடிக்கைகள் சற்று மாறுபட்டவை. எப்பொழு துமே ஒரு பொருளுக்காக சண்டையிடுபவர்கள், திடீரென அதை தியாகம் செய்யும் மனநிலைக்கு வந்திருப்பார்கள். அதை அவளுக்கே கொடுத்து விடுங்கள்... எனக்கு இனிமேல் தேவைப்படாது என்பார்கள். இன்னும் சிலர், கொஞ்ச நாள்கள் தானே... எல்லாவற்றையும் அனுபவித்துவிடுகிறேன் என்று விரக்தியாகப் பேசுவார்கள்.இந்த நடத்தை மாற்றங்களை உடனிருப்பவர்கள் கூர்ந்து கவனித்து அவருக்கு முதலில் ஆதரவு தர வேண்டும். அவர் களை தனிமையில் விடாமல் தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய உறவினர் மட்டுமல்லாது உடன் பயில்பவர்கள், வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அக் கறையோடு இந்த முதல் உதவியைச் செய்யலாம்.

உளவியல் முதல் உதவியை எப்படி செய்வது ?

உளவியல் படித்தவர்கள்தான் முதல் உதவி செய்ய வேண்டுமென்பதில்லை; அது தொழில் முறை ஆலோசனையும் இல்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும் இந்த முதல் உதவியைச் செய்யலாம். யாரை பாதுகாப்பாகவும், வாய்ப் பாகவும் உணர்கிறார்களோ அவர்கள் முதலில் பேச்சு கொடுக்கலாம்.பாதிப்பு நடந்த நேரம், இடம், காரணம் என விளக்கமாகப் பேசக் கூடாது. அது அவசியமும் இல்லை; எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்ற மூல காரணத்தை ஆராய முற்பட வேண்டியதும் இல்லை. பேசுவதற்கேற்ற அமைதியான சூழலைப் பார்த்துப் பேச வேண்டும். கசப்பான அனுபவத்தை கூற வற்புறுத்தாமல், அவர்களாகவே பேச முற்படும் வரை பொறுமை யுடன் கேட்பது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைகளை கிண்டலடிக்காமல், காயப்படுத்தாமல் அவர்களின் தேவைகள், பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு பதில் அளிப்பதும் முக்கியம். "நீ கத்துகிறாய், மற்றவர்களை துன்புறுத்துகிறாய், இப்படியெல்லாம் நடந்து கொள் கிறாய்" என்று குத்திக்காட்டுவதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் அதை ஒப்புக் கொள்வ தில்லை. அதனால், அவர்களைப் பலவந்தப்படுத் தாமல், சாதாரண மருத்துவ சோதனை என்று எடுத்துக்கூறி பொது மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பொது நல மருத்துவருடன் இணைந்து அதன்பிறகு மனநல சிகிச்சையை மேற்கொள்ள வைப்பது ஒரு நல்ல உத்தி.

டென்ஷன், மன அழுத்தம் என்று மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ள இக்கால கட் டத்தில் ஒவ்வொருவருக்குமே அந்தப் பொறுப்பு இருக்கிறது. பொதுநல மருத்துவர்களே ஆரம்ப கட்ட உளவியல் சிகிச்சையை மேற் கொள்ளும் வகையில் அரசு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர் களைக் கொண்டு நடத்தப்படும், அங்கீகரிக்கப் பட்ட மனநல மய்யங்களை அரசு அதிக அளவில் நிறுவுவதும் அவசியம்.

இதயம் காக்க
இப்படியும் ஒரு வழி!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதில்லை என்பது நமக்கும் தெரியும்தான். நம் வேலைமுறையே அப்படி இருக்கும்போது நாம் என்னதான் செய்வது?

அதற்கும் ஒரு வழி இருக்கிறது என்கிறார் கொலம் பியாவின் மிசவுளரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாமி படிலா. நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் காலாட்டிக் கொண்டே இருந்தால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்று டிப்ஸ் தருகிறார் ஜாமி படிலா. இதற்காக 11 பேரை ஓரிடத்தில் 3 மணி நேரம் தொடர்ந்து அமரவைத்து ஆய்வு மேற்கொண்ட பிறகே இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ஆய்வு நடந்தபோது ஒரு நிமிடம் தங்களுடைய ஒரு காலை அங்கும் இங்குமாக அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்லி யிருந்தோம். அதன்பிறகு அந்த காலுக்கு 4 நிமிட ஓய்வு கொடுக்க வேண்டும். இதேபோல மற்றொரு காலிலும் செய்யுமாறு சொல்லப்பட்டது. ஆய்வுக்கு முன்னரும், பின்னரும் அவர்களுடைய கால் நரம்பு செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது முழங்காலின் பின்புறம் மற்றும் கால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்திருந்தது என்கிறார் அவர். இதய அறுவைசிகிச்சை மருத்துவர் சிறீமதி இந்த ஆய்வு பற்றிக் கூறும்போது

"கணிணியில் வேலை பார்ப்பவர்கள், அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், பொழுதுபோக்குக்காக தொலைக் காட்சி பார்ப்பவர்கள், வீடியோ கேம் விளையாடுபவர்கள், அமர்ந்தபடியே நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் உள்ள ரத்த ஓட்டம் தடைபடுவதன் காரணமாக இதயத்தின் தமனி ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதே இதன் காரணம். அதனால் அவ்வப்போது கைகள், கால்களை மடக்கி நீட்டுவது நல்லது. அதிக நேரம் எந்த அசைவுமின்றி அமர்வதைத் தவிர்ப்பதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது இதயத்தைப் பாதுகாக்கும். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாதபட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது போல காலாட்டிக் கொண்டே இருப்பதும் பலன் தரும் என்பதை மறுக்க முடியாது. இதன்மூலம் கால் மற்றும் கால் மூட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதற்காக, காலாட்டினால் மட்டுமே இதயத்தைப் பாதுகாத்துவிடலாம்" என்று சொல்ல முடியாது என்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner