எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவியல் துளிகள்

** ரோபோவுக்கு ஆக்டோபஸ் கரம்: ஜெர்மனியில் தொழிற்சாலை களுக்கான ரோபோக்களை தயாரிக்கும், ‘பெஸ்டோ’ நிறுவனம், கடலில் வாழும் ஆக்டோபஸ் தந்த உந்துதலில் ஒரு ரோபோ கரத்தை தயாரித்துள்ளது. தொழிற்சாலைகளில் பொருட்களை எடுத்து வைக்க, ஆக்டோபஸ் கை போலவே வடிவமைக்கப்பட்ட, ‘ஆக்டோபஸ் க்ரிப்பர்’ என்ற அமைப்பு உதவும். பொருட்களை மென்மையாக, அதே சமயம் நழுவ விடாமலும் ஆக்டோபஸ் க்ரிப்பர் பிடித்து எடுத்து வைக்கிறது!

** மனச்சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை சிகிச்சையை தருவது? வெறும் உளவியல் ஆலோசனை மட்டும் போதுமா, இல்லை, ‘ஆன்டி டிப்ரசன்ட்’ மாத்திரைகள் போன்றவற்றைத் தரும் உளவியல் மருத்துவ சிகிச்சை தரவேண்டுமா? இதைத் தீர்மானிக்க நோயாளியின் மூளையை, எப்.எம்.ஆர்.அய்., ஸ்கேன் மூலம் சோதித்து, அவரது மூளையின் செயல்பாட்டை அறிந்து அதன்படி தீர்மானிக்கலாம் என, எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவு, ‘அமெரிக்கன் ஜர்னல் ஆப் சைக்கியாட்ரி’யில் வெளிவந்துள்ளது.

** ரத்த கொடையை மட்டுமே நம்பியிராமல், ஆய்வகத்திலேயே சுத்த மான ரத்தத்தை உற்பத்தி செய்ய ஆய்வுகள் நடக் கின்றன. அதில் ஒன்று, பிரிட்டனை சேர்ந்த பிரிஸ் டல் பல்கலைக்கழகமும், பிரிட்டன் அரசு அமைப் பான, என்.எச்.எஸ்., ரத்தம் மற்றும் உறுப்பு மாற்று அமைப்பும் செய்து வரும் ஆய்வு. இந்த அமைப்புகள் அண்மையில், ‘ஸ்டெம் செல்’களை கடுமையாக வேலை வாங்குவதன் மூலம் அதிக அளவில் ரத்தத்தை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கண்டறிந்துள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், அரிய ரத்த வகைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

** மின்சார கார், தானோட்டி கார், பல பயன் ராக்கெட், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடுவது என்று பல சாதனைகளை படைத்து வருபவர் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். இவர், ‘செயற்கை நுண்ணறிவு’ கணினிகள், மனிதர்களின் அறிவுத் திறனை விஞ்சினால் ஆபத்து என்றும் எச்சரித்து வருகிறார். எச்சரித்ததோடு நிற்கவில்லை. அண்மையில், மனித மூளைத் திறனை பன்மடங்கு அதிகரிக்க, மூளையோடு வைத்து தைக்கும் சிலிக்கன் சில்லுகளை வடிவமைக்கும் நிறுவனமான, ‘நியூராலிங்க்‘கில் பல கோடிகளை முதலீடு செய்திருக்கிறார் மஸ்க்.

ஏற்கனவே வலிப்பு நோய், உடல் பருமன் போன்ற குறைபாடுகளை போக்க சிலிக்கன் சில்லுகளை மூளையில் பதித்து மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கடல் நீரை குடிநீராக்கும் கிராபீன்  வடிகட்டி!

கடல் நீரை, எளிதில் குடிநீராக மாற்றும் புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார், பிரிட்டனை சேர்ந்த மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ராகுல் நாயர். ‘கிராபீன்’ எனப்படும் நேனோ தொழில்நுட்பத்துறையின் விந்தைப் பொருள் வகையான கிராபீன் ஆக்சைடை வைத்து ராகுலின் ஆய்வுக் குழு உருவாக்கிய சவ்வு, கடல் நீரில் உள்ள உப்புப் படிகங்களை முற்றிலும் வடிகட்டி, குடிக்க உகந்த நீரைத் தருகிறது.ஏற்கனவே பல குடிநீர் ஆராய்ச்சியாளர்கள், பலவித சவ்வுகளை வடிகட்டிகளாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அந்த வடிகட்டிகளால் பெரிய துகள்களை நீரிலிருந்து பிரிக்க முடிந்தாலும், நுணுக்கமான உப்பு படிகங்களை வடிகட்ட முடியாமல் இருந்தது.நீர் மூலக்கூறுகளை வெளியே விடுத்து உப்பு மூலக்கூறுகளை தடுத்து நிறுத்துமளவுக்கு துளைகள் உள்ள சவ்வை உருவாக்குவது தான் பெரிய சவால்.ராகுல் அணியினரின் கிராபீன் ஆக்சைடு வடிகட்டியில் உள்ள துளைகள் கூட, நீர் பட்டதும் சற்றே பெரிதாக ஆகின. இதை தடுக்க, ‘எபோக்சி’ பிசின் படலங்களை அந்த சவ்வின் இரு புறமும் பொருத்தியதால், கிராபீன் மூலக்கூறுகள் பெரிதாவதை தடுக்க முடிந்தது என்று, ‘நேச்சர் நேனோ டெக்னாலஜி’ இதழில் எழுதிய கட்டுரையில் ராகுல் விளக்கியிருக்கிறார்.

தற்போது ஆய்வுக்கூடத்தில் வேறு பல வடிகட்டும் சவ்வுகளுடன் தங்கள் கண்டுபிடிப்பை ஒப்பிடும் சோதனைகளில் ராகுல் அணி ஈடுபட்டு வருகிறது.

இது சந்தைக்கு வந்தால், கடல் நீரை செலவின்றி குடிநீராக்க எவராலும் முடியும்!

 


கிரையோ மில்:’ மறுசுழற்சியில் மைல்கல்!

கடாசப்படும் பழைய மின்னணு குப்பையை எப்படி கையாளுகின்றனர்...நகர எல்லையில் அப்படியே மலை போல குவித்து வைத்தல்; எரித்து உருக்குதல்; வேதிப் பொருட்களால் சிதைத்தல். இவை எல்லாமே, சுற்றுச்சூழலுக்கு பல வகைகளில் ஊறு விளைவிக்கின்றன.

இதற்கு மாற்று இல்லையா? பெங்களூரை சேர்ந்த இந்திய அறிவியல் நிலையமும், அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகமும் இணைந்து செய்த ஆய்வால் உருவான ஒரு புதிய முறை, மின் குப்பை பிரச்னையை சமாளிக்க உதவக் கூடும். ‘மின்னணு குப்பையை பிரித்து, மிகக் குறைந்த தட்ப வெப்பத்தில் உறையவைத்து, நொறுக்கி, ‘நேனோ பொடி’களாக ஆக்குவது சுற்றுச் சூழலுக்குள் நச்சுத் தன்மையை வெளியிடாமல் மறுசுழற்சி செய்ய உதவும்‘ என்கிறார், ரைஸ் அய்.அய்.எஸ்.சி.,யை சேர்ந்தவரும், இந்த கூட்டு ஆய்வின் தலைவருமான சந்திரசேகர் திவாரி.ஐ.நா., சபை மேற்கொண்ட ஆய்வின் படி, உலக அளவில், 2014ல் மட்டும் கொட்டப்பட்ட, 4.20 லட்சம் டன் மின்னணு குப்பையில், ஆறில் ஒரு பகுதி மட்டுமே முறைப்படி மறுபயன் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.இதில், மதிப்பு மிக்க இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் அலுமினியம் போன்றவை வீணாகின்றது. பல ரக உலோகங்களை சேர்த்து எரிக்கும்போது, அவை பயன்படுத்த முடியாத கலவைக் கட்டிகளாக ஆகிவிடும்.

மேலும் பாதரசம், காட்மியம், குரோமியம் போன்ற நச்சு உலோகங்களும் கசியவிடப்படும். ஆனால், ரைஸ்- அய்.அய்.எஸ்.சி., உருவாக்கிய,’கிரையோ மில்’ என்ற கருவியில், எந்த மின்னணு குப்பையும் எரிக்கப்படு வதில்லை. மாறாக, உலோகங்கள், ஆக்சைடுகள், பாலிமர்கள் என எல்லா பொருட்களுமே திரவ நைட்ரஜன் மூலம், -119 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கப்படுகின்றன.

இந்த நிலையில் எல்லா பொருட்களும் கலந்துவிடாமல் பிரிந்தே இருக்கும். ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு கிரையோ மில் அவசியம்; அவசரம்!

 


பாதுகாப்புடன் பராமரித்திட

பொடி வடிவில் தடுப்பு மருந்து

உயிர் காக்கும் தடுப்பூசிகளை குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் வைத்திருக்காவிட்டால், அவை வீரியமிழந்துவிடும். ஆப்ரிக்கா போன்ற மின் வசதி, குளிர் பதன வசதி குறைந்த நாடுகளில், கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களுக்கு இது பெரிய சவால்.

இந்த பிரச்சினைக்கு புனேயிலுள்ள, ‘சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியா’ ஒரு புது தீர்வை கண்டறிந்துள்ளது. வயிற்றுப் போக்கை உண்டாக்கி, கவனிக்கா விட்டால் மரணத்தையே கூட ஏற்படுத்தும் ‘ரோட்டா வைர’சுக்கு எதிரான, பி.ஆர்.வி.- பி.வி., என்ற தடுப்பு மருந்தை, திரவ நிலையிலிருந்து உலர்ந்த பொடியாக மாற்றி வெற்றி கண்டுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.அதி குளிர்ச்சியுள்ள திரவ நைட்ரஜனில், பி.ஆர்.வி.-பி.வி., தடுப்பு மருந்துள்ள கலனை குளிர்வித்து, பிறகு அதிலுள்ள நீரை வெற் றிடத்தால் உறிஞ்சிய பிறகு, அது உலர்ந்து பொடியாகி விடுகிறது.  இதை மருத்துவ பணியாளர்கள் எங்கும் எடுத்துச் செல்லலாம். உலக சுகாதார நிறுவனத்தின் மூலம், 2014ல் நைஜர் நாட்டில், 3,500 குழந்தைகளுக்கு இந்த முறையில் மூன்று தடவை தரப்பட்ட போது ரோட்டா வைரஸ் நோய் கணிசமாக தணிந்தது.எதிர் காலத்தில் பிற தடுப்பூசி மருந்துகளுக்கும் இந்த முறை யை பின்பற்ற முடியுமா என ஆய்வுகள் தொடர்கின்றன.


உங்களுக்கு தெரியுமா?

சிறுநீரகம் செய்யும் பணிகள்

* உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கு கிறது.

* ரெனின், ஆஞ்சியோடென் சின் எனும் ஹார்மோன்களைச் சுரந்து ரத்த அழுத்தத்தை ஏறவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

* உடம்பின் அமிலம், கார அளவுகளை சரிவிகிதத்தில் வைத்துக்கொள்கிறது.

* எரித்ரோபயாட்டின் என்ற ஹார்மோனைச் சுரந்து ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

* கால்சிட்ரியால் ஹார்மோனைச் சுரந்து எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.

* புராஸ்டோகிளான்டின் ஹார்மோனைச் சுரந்து மூச்சுக்குழாய், ரத்தக்குழாய், குடல் திசுக்கள் போன்ற வற்றின் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner