எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உடற்பருமன், வயது அதிகரிப்பது, மூட்டில் அடிபடுதல், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய், எலும்பு வலுவிழப்பு நோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

நாற்பது வயதுக்குமேல் இந்த வலி ஏற்படுவதற்கு அடிப் படைக் காரணம் மூட்டில் ஏற்படுகிற தேய்மானம்தான். உடலில் உள்ள மூட்டுகளிலேயே முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு சற்று வித்தியாசமானது. அசையும் மூட்டுகளில் மிகப் பெரியதும் இதுதான். இங்குள்ள எலும்புகளின் தலைப் பகுதியை சைனோவியல் படலம்  சூழ்ந்துள்ளது. இது சைனோவியல் திரவம் எனும் பசை போன்ற ஒரு திரவத்தைச் சுரக்கிறது. மூட்டில் இது ஒரு மசகுபோல் பணிசெய்கிறது. மூட்டு எலும்புகள் உரசிக் கொள்ளாமல் அசைவதற்கு இது உதவுகிறது.

மேலும், மூட்டுகளைச் சுற்றி மிருதுவான குருத்தெலும்புகள் உள்ளன. பொதுவாக, இவை வழுவழுப்பாக இருக்கும். இதற்குக் காரணம், அவற்றில் கொலாஜென் எனும் புரதப்பொருள் இருப்பதுதான். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜென் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிதாகிவிடும். இதன் விளைவால் மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவதுபோல, வயதாகும் போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மறமறவென்ற சத்தமும் மூட்டுவலியும் ஏற்படுகின்றன.

என்ன சிகிச்சை? உங்கள் மூட்டுகளில் தேய்மானம் உள்ளதா என்பதை

எக்ஸ்-ரே மூலம் தெரிந்துகொள்ளலாம். நோயின் ஆரம்பத்தில் குடும்ப மருத்துவரே சிகிச்சை கொடுத்துவிடுவார். அவர் பரிந்துரை செய்தால் மட்டும் எலும்புநோய் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

ஆரம்பநிலையில் உள்ள மூட்டுவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள், பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் ,  சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடைத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ஆர்த்ராஸ்கோப் மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் செய்யப்படும். இதனால் மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறிவிடும். இதன் பலனால், 6 மாதம் முதல் ஒரு வருடத்துக்கு மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும்.

மூட்டில் தேய்மானம் மிகவும் அதிகமாகிவிட்டால், இந்த சிகிச்சைகள் எல்லாம் திருப்தி தராது. அப்போது செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டியது வரும். இவ்வளவு வளர்ப்பானேன்?

உடற்பயிற்சியும் உணவும்


இப்போது நீங்கள் மேற்கொள்ளும் தோப்புக்கரணத்துக்குப் பதிலாக, நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். தினமும் அரை மணி நேரம் உடலில் சூரியஒளி படும்படி நில்லுங்கள். இதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின்  டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.

மூட்டுவலியைத் தடுக்க உணவு வகைகளும் உதவும். பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள சத்துக்கள் மூட்டுகளில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுவதால், மூட்டுவலி குறையும்.

உடல் எடையை வயதுக்கு ஏற்றபடி பராமரிக்க வேண் டியது கட்டாயம். முழங்கால் மூட்டுக்கு வலுவூட்டும் யோகாச னங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.