Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

பகுத்தறிவு

நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில்  அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?) இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான்.

நாளை அவன் செல்வனும், கற்றறிவாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.

நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியாவெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர்  உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்?

நாமும் மனிதர்களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற்காகவும் நாம் என்ன செய்கின்றோம், நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா?

அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங்களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவுகின்றது? நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப்பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது; மற்றெங்குமன்று....


அன்பும் நல்லெண்ணமுமடைய உங்கள்

விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன்  குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.

மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும். சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது


(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)

தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறப்படுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள்.

ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள்.

வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள்.

தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி  என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை!    நன்றி: ராணி, 7.3.1982

தகவல்: இடவை. மனோகரன், தஞ்சாவூர்.

(முஸ்லீம், கிருஸ்துவம், இந்துமதம் இவற்றை ஒப்பிட்டு, ஒரு இந்துமதத் தலைவரே விமர்சிக்கிறார் - ஆ-ர்)

ஒற்றுமை இஸ்லாமிய மதத்தை அலங்கரிக்கிறது. கடவுள் சன்னிதானத்தில் முஸ்லீம்களுக்கிடையில் உயர்வு தாழ்வு இல்லை. வெறுப்பு வேற்றுமையில்லை. தனியுரிமை இல்லை. சகோதர பாவனை ஒன்றே உளது எனும் உயர் கொள்கைகளை அவர்கள் செய்கையிற் காட்டுகின்றனர். இவைகளை ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டு மானுடவர்க்கம் அனைத்தையும் ஒரே குடும்பமாகப் பாராட்டுவவர்களாக.

அமைப்பிற் சிறந்தது கிறிஸ்துமதம் ஓர் அதிபதியின் ஆணையின்படி நடக்கும் சேனைக்கும் ஆட்டுக் கூட்டத்துக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அவ்வளவு வித்தியாசம் கிறிஸ்துவர் களுக்கும் ஹிந்துகளுக்கும் இடையில் இப்போது இருக்கிறது. ஆயிரக்கணக்கான பேர் எனினும் அவர்கள் ஆலயங்களுக்குச் செல்லுதலிலும், உள்ளே அமர்ந்திருப் பதிலும், கடவுளை வழுத்துதலிலும், பின்பு வெளியேகுத லிலும் எவ்வளவு அமைதி, எவ்வளவு ரீதி பொலிகின்றது. ஆலயங்களில் கூடுகையில் அவர்கள் கொள்ளும் அடக்கமும், நேர்த்தியுமே உள்ளத்தைக் கவர்வனவாகின்றன. (பக்கம் -449, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 1935)

நம்நாட்டில் ஆலயங்களில் பெரிய உற்சவங்கள் நிகழ்கின்றன. அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடங்களில் கூடுகின்றனர். ஒழுங்காகக் கோவிலுக்குள் போகவும் வெளியே வரவும் அவர்களுக்கு தெரியாது. இருக்குமிடத்தை சுத்தமாக வைத்திருக்கவும் அவர்களுக்கு தெரியாது. (கல்வி, பக்கம் 177)

கடவுள் சாந்நித்தியத்துக்கு வந்திருப்பதாக உணருகிறார்களா? ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு அவர்கள் கோவிலினுள் முந்துகின்றனர். அவர்கள் செயலைப் பார்த்து மெய்ப்பொருளாகிய இறைவன் மெச்சுவாரா? மக்கள் இன்னும் மாண்பு அடையப் பெறவில்லையென்பதற்கு ஆலயத்தினுள் அவர்கள் நடந்து கொள்ளுவதே நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

(நூல்: கல்வி, சுவாமி சித்பவானந்தர், பக்கம் 8)

பிரவின்குமார்

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருக்கும் சிலுவையில் அறையப் பட்டிருந்த யேசு உருவ பொம்மையின் காலில் இருந்து தண்ணீர் சொட்டத் தொடங்கியதும், நூற்றுக்கணக்கானோர் ஓடிச் சென்று, கடவுளின் கண்ணீரான அந்தத் தண்ணீர் தங்கள் இல்லங் களைப் புனிதப்படுத்துவதுடன், தங் களது நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்,  அந்தத் தண்ணீரைப் பாட்டில்களில் பிடித்துக் கொண்டு செல்லத் தொடங்கினர்.

மக்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கியிருந்த அந்த அற்புதம் தொடங்கிய பதினைந்து நாட்கள் கழித்து, புகழ் பெற்ற பகுத்தறிவாளரும், சிந்தனை யாளருமான சனல் எடமருகு அங்கு வந்து சேர்ந்தார்.  தெய்வத்தின் கண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு அரை மணி நேரம்தான் பிடித்தது. பொம்மையின் கீழே நிலத்துக்கு அடியில் இருந்த சாக்கடையில் தண்ணீர் தாராளமாகப் போகமுடியாதபடி அடைப்பு ஏற்பட்டதால், அழுத்தத்தின் காரணமாக அந்த சாக்கடை நீர் மேலே வந்தது என்பதை அவர் கண்டார். கேபில்லரி செயல்பாடு என்னும் இக் கோட்பாட்டை அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கூட அறிந்திருக்கின்றனர்.

இதைக் கண்டுபிடித்ததற்காக சனல் எடமருகு மூன்று ஆண்டுகள் சிறையில் கழிக்க நேரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வக்கீல்களின் அறைகளுக்கும் நீதி மன்ற வளாகங்களுக்கும் இடையே ஓடுவதில் அவர் மேலும் பல ஆண்டுகள் கழிக்க வேண்டும் என்பது வெகு நிச்சயமானது.

தெய்வ அற்புதத்தைத் தோலுரித்துக் காட்ட எடமருகு மும்பை சென்ற போது, மத வெறுப்பினை அவர் தூண்டிவிடுகிறார் என்று அவருக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக, வேகம் வேகமாக விசாரணை தொடங்கப்பட்டது.

உண்மையான துணிவு

அவ்வளவு எளிதாக அச்சமடையச் செய்யப்பட இயன்றவரல்ல சனல் எடமருகு. கடவுள் பக்தி நிறைந்த ஒரு சமூகத்தில், அறியாமையிலும், வறுமையிலும் பாதுகாப்பின்றி வாழும் பாமர மக்களை ஏமாற்றி, சத்யசாயி பாபா மற்றும் அவரைப் போன்ற பல்வேறு கடவுள் மனிதர்கள் செய்து காட்டிய அற்புதச் செயல்களின் போலித்தனத்தை வெளிச்சத்துக் கொண்டு வருவதற்கு உண்மையில் மிகுந்த துணிவு வேண்டும்.  இத்தகைய முயற்சிகளில்  எண்ணற்ற அச்சுறுத் தல்கள் அவருக்கு வந்துள்ளன. ஆனாலும், அரசிடமிருந்து அச்சுறுத்தல் எப்போதுமே அவருக்கு வந்ததில்லை.

அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆய்வு செய்யும் உணர்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை அனைத்துக் குடிமக்களும் அடிப்படைக் கடமை களாகக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால்,  இதனைச் செய்யவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒருவரைத் துன்புறுத்த இந்தியாவின் சட்டங்கள் பயன்படுத் தப்படுகின்றன.

குடியேற்ற நாட்டில் ஆங்கிலேய ஆட்சியாளர் உருவாக்கிய சட்டங்கள்


பல அறிஞர்கள், கலைஞர்களைப் போலவே இந்தியாவின் கடவுள் பற்றிய சட்டங்களினால் எடமருகுவும் பாதிக் கப்பட்ட ஒருவரே. இந்த சட்டங்கள் குடியேற்ற நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மற்ற மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துபவர்களைத் தண்டிக்க உருவாக்கப்பட்டதே இத் தகைய சட்டங்கள்.

எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையோ அல்லதுஒரு பிரிவு மக்களால் புனிதமானது என்று கருதப்படும் எந்த ஒரு பொருளையோ அழிப்பது அல்லது சிதைப்பது அல்லது இழிவு படுத்துவது என்பது குற்றம் என்று இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 295 ஆவது பிரிவு கூறுகிறது. அதன் துணை விதியான 295-ஏ, எந்த ஒரு பிரிவு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி கோபம் கொள்ளச் செய்ய வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறுகிறது.

பிரிவு 153-பி ஒரு படி மேலே போய், பல்வேறுபட்ட மத, இன, மொழி, மக்களிடையேயோ, அல்லது வட்டாரக் குழுக்களிடையேயோ அல்லது ஜாதிகளி டையேயோ, அல்லது சமூகங்களுக் கிடையேயோ நல்லிணக்கம் நிலவுவதற்கு எதிராக மேற்கொள்ளப் படும் எந்த ஒரு செயலும் குற்றமே என்று வரையறுத்துக் கூறுகிறது.

இவ்வாறு பொத்தாம் பொதுவாக எழுதப்பட்டு இருக்கும் இந்த சட்டங் களைப் பார்க்கும்போது, உண்மை யையே தற்காப்பாகக் கொள்ள  இயலாமல் போய்விடுகிறது என்பது பேரச்சத்தைத் தரவல்லது.

நாடு சுதந்திரம் பெற்ற பல பத் தாண்டு காலத்தில் மத நம்பிக்கை களைப் பற்றி கேள்வி கேட்ட பல அறி ஞர்களையும், கலைஞர்களையும் வேட் டையாட இந்த சட்டங்கள் அவ்வப் போது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.  இந்தியக் கலாச்சாரத்தில் ராமாயணக் கதை எண்ணற்ற பல்வேறுபட்ட வடிவங்களில் கூறப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்றை 1993 இல் புதுடில்லியில் சஹமத் என்ற முற்போக்குக் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்து நடத்தியது.

புத்தமத பாரம்பரியத்தில் சீதா ராமனின் சகோதரி என்று கூறப்பட்டுள்ளது என்றும், ஒரு ஜைனமத கதையில், சீதை ராவணின் மகள் என்று கூறப்பட் டுள்ளது என்றும் கண்காட்சிக் குழு வினர் பதிவு செய்திருந்தனர்.  புகழ் பெற்ற வரலாற்றாய்வாளர் ரொமிலா தாபரின் அதிகார பூர்வமான நூல் களைப் பின்பற்றி  வரையப்பட்டவை   இக்கண்காட்சிப் பொருள்கள் என்ற போதிலும், இந்துக்களின் பாரம்பரிய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சஹமத் அமைப்பின் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடவுள் தொடர்பான வழக்குகள் பலவற்றை பஞ்சாப் மாநிலம் சந்தித் துள்ளது.  அகாலி தக்டின் உயர்ந்த பாரம்பரியத்தக்கு எதிராக சவால் விட்ட,  தலித்துகளால் வழிநடத்தப் பட்ட,  பழமையில் நம்பிக்கை அற்றவர் களால்  தொடுக்கப்பட்ட வழக்குகளே இவற்றில் பெரும்பாலானவை. சீக்கிய மத அடையாளச் சின்னங்களை வேண்டுமென்றே மதநிந்தனைக்காகப்  பயன்படுத்தினார் என்று சச்சா சவுதா பிரிவு சீக்கிய அமைப்பின் தலைவர் குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பவர் மீது 2007 ல் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதற்கு முன் 2001 இல் இதே போன்ற குற்றச்சாட்டுகள் பியாரா சிங் பனியாரவாலா என்பவர் மீதும்,  அற்புதக் கதைகள் நிறைந்த பவசாகர் கிரந்த் என்ற மத  நூலை அவர்  வெளியிட்ட பின்னர், கொண்டு வரப்பட்டன.

சீக்கிய, இந்து  மத வெறியர்களைப் போலவே முஸ்லிம் மத வெறியர்களும் கடவுள் பற்றிய அரசின் சட்டங்களில் அதே அளவு ஆர்வம் காட்டினர். இந்தியாவில் தடை செய்யப்படாத, சல்மான் ருஷ்டியின் சாத்தானின் பாடல்கள் என்ற நூலில் இருந்து சில பகுதிகளைப் படித்ததற்காக நான்கு இந்திய எழுத்தாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இஸ்லாமிய புதிய மதத் தீவிரவாதிகள் எங்கும் நிறைந் திருப்பது பற்றிய அச்சமே பெரும்பாலும் கலாச்சார நிகழ்ச்சிகளை வடிவ மைக்கின்றன.

கடவுளைத் தாக்குவதாக அமைந் திருக்கிறது  என்று கூறி 1933 இல் தடை செய்யப்பட்ட அங்காரே என்னும் புரட்சியை ஏற்படுத்திய உருது சிறு நூல்களின் தொகுப்பை  கலீத் ஆல்வி என்ற எழுத்தாளர் மறுவெளி யீடு செய்தார். அந்தத் தொகுப்பில் இருந்த, மிகவும் ஆட்சேபணைக் குரியவை எனக் கருதப்பட்ட பத்திகள் தணிக்கை செய்து நீக்கப்பட்டன.

கற்பனையிலான அரசியல் சீட்டுக் கட்டு ஒன்றில், கபாவின் உருவம் இருப்பது போன்ற ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டு இருந்ததற்காக 2006 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா டுடே இதழ் தடை செய்யப்பட்டது.

இதனிலும் கொடுமையாக, மத நம்பிக்கைகள் மீதும்  கூட பக்தர்களால்  குற்றவியல் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. பூப்பெய்திய பெண்கள் சபரி மலை கோயிலுக்குள் செல்லக் கூடாது என்ற பாரம்பரியமான மதத் தடையை மீறியதற்காக கன்னட நடிகை ஜெயமாலாவை, ஜோதிடர் உன்னிகிருஷ்ணனுடனும், அவரது உதவியாளர் ரகுபதியுடனும், காவல் துறை சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள  நீதி மன்றத்தில் ஆஜராகும்படி கேரள நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.  பக்தர்களை விமர்சனம் செய்வதை பெரும்பாலான நீதிபதிகள் மன்னிக்கக் கூச்சப்படுகின் றனர்;

ஒரு வேளை பொது அமைதிக்குத் தாம் பொறுப்பாக்கப்பட்டு விடு வோமோ என்ற அச்சம் அதன் காரணமாக இருக்கக் கூடும். மண் பிள்ளையார் பொம்மையை உடைக்க முடிவு செய்ததற்காக தீவிர அரசியல் வாதியான ஈ.வெ.ராமசாமிக்கு எதிரான வழக்கை 1958 இல்  உச்சநீதிமன்றம் விசாரித்தது. விநாயகர் சிலை புனிதமான பொருள் அல்ல என்ற கருத்தை பொதுவாக கீழ் நீதிமன்றங்கள் அளித் திருந்தன. ஆனால், பகுத்தறிவுவாதி யாகவோ அல்லது வேறு விதமாகவோ இருப்பவர்களாயினும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளுக்கும் மத நம்பிக்கைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கீழ்நிலை நீதி மன்றங்களை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

மதத்தை இழிவு படுத்தும் அல்லது இழிவு படுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை அளிக்கப்படுவ தில்லை. ஆனால், வேண்டுமென்றே, தீய உள்நோக்கத்துடன் மதத்துக்கு செய்யும்  மோசமான அவமதிப்புக்குதான் தண்டனை அளிக்கப்படுகிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் முன்னதாக 1957 இல் 295 -ஏ பிரிவுக்கு சில வரையறை களை ஏற்படுத்தியது.  ஆனால் மதத்தை அவமதிப்பது என்பது உண்மையில் என்ன என்ற முக்கியமான கேள்விக்கு நீதிமன்றம் விளக்கம் அளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது.

பிரச்சினைக்கு உட்பட்ட நாயக்கரின் ராமாயணத்தைப் பறிமுதல் செய்ய உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம்  மறுபடியும் இந்தப் பிரச் சினையில் இருந்து உறுதியான கருத்தைச் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டது. 1976 இல் அது  கட்டுப் பாடுகளை ஏற்படுத்த வேண்டியதன் தேவையையும், அதன் செயல்பாடுகள் எதன் அடிப்படையில் எழுந்தன என்பதையும் பிரதிபலிக்கும் கடமையை நிருவாகத்தின் மனதில் சட்டம் நிலைநாட்டுகிறது. இதனைப் பற்றி கூறக்கூடியது இவ்வளவுதான் என்று மட்டுமே நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அது மட்டுமல்ல. இந்து துறவி பசவேஸ்வரா பற்றிய விருது பெற்ற தர்மகாரணா என்ற பி.வி. நாரா யண்ணாவின் மறுவெளியீட்டு  நூலைத் தடை செய்ய கருநாடக அரசு மேற்கொண்ட முடிவை 1998 இல்  உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மத நம்பிக்கை மீது தீவிர தாக்குதல் நடத்தும் ஆர்.எல்.பாசினியின் இஸ்லாம்  என்ற நூலைத் தடை செய்ய மகாராட்டிர மாநில அரசுக்கு  2007 இல் மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குறைந்தது 1924 ஆம் ஆண்டு முதல், ஆர்ய சமாஜ் தொண்டர் மஹாஷே ராஜ்பால் வெளியிட்ட பிரசுரம்  கடவுள் சட்டங்கள் பலவற்றை அரசு இயற்று வதற்கு வழிவகுத்த போதிலிருந்து,  இந்தியா இத்தகைய பிரச்சினைகளை சந்தித்தே வருகிறது.  வண்ணமயமான தூதர்  என்று பொருள் படும்  ரங்கீலா ராசூல் என்னும்   உருது மொழி நூல் வெளிப்படையாக இஸ்லாமுக்கு எதிரான பேச்சும், எழுத்தும் கொண் டது. கீழ் நீதிமன்றங்கள் ராஜ்பாலுக்கு சிறைத் தண்டனை அளித்தன.

என்றாலும், லாகூர் உயர்நீதிமன்றத்தில், சட்டப்படியான தண்டனைகள் அளிக்க பொது மக்களின் கோபம் என்பதை அடிப் படையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  தேவதூதர் மீதான தாக்குதல் களை முஸ்லிம்கள் விரும்புவதில்லை என் பதையே சட்ட அனுமதிக்கான அளவு கோலாக எடுத்துக் கொண்டால்,  அப்போது தேவதூதரின் வாழ்க்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, அவரது பண்பு, நடத்தை பற்றி ஒரு தீவிரமான வரலாற்றாசிரியர் அளிக்கும் தீர்ப்பும் இந்த விளக்கத்தின் கீழேயே வரும் என்று நீதிபதி தலிப் சிங் தனது தீர்ப்பில் வாதம் போன்று கூறியுள்ளார்.

1927 இல் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்ட மன்றம் ரங்கிலா ரசூல் பிரச்சினை விவகாரத்தைப் பற்றி விவாதித்த போது,  நீதிபதி சிங்கின் கருத்தை சிலர் ஆதரித்து ஏற்றனர். மதவெறி என்பது ஒரு வடிவமான மனநோய் போன்றது என்று கூறிய எம்.ஆர்.ஜெயகர், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் மற்ற மக்களிடமிருந்து பிரித்து தனியே வைக்கப்பட வேண்டும் என்று ஆலோ சனை கூறினார். 

என்றாலும் இந்த அறிவார்ந்த ஆலோசனை எல்லோ ராலும் ஏற்றுக் கொள்ள இயலும் ஒரு மனதான முடிவு அல்ல. ரங்கிலா ரசூல் போன்ற நூல்களை எழுதியதற்கும், வெளியிட்டதற்கும் குறிப்பாக தண்டிக்கும் கடவுள் சட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

பாகிஸ்தானில் நாள்தோறும் பெருகி வரும் கடவுள் நிந்தனை சட்டங்களைக் காணும்போது, மாறுபட்ட மதக் கருத்துக்களைக் கொண்டவர்களைத் துன்புறுத்தவும், கொல்லவும் கடவுள் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதற்காக இந்தியர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம். என்றாலும், எடமருகுவின் வழக்கு நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்தியிருக்கக் கூடும்.

நாட்டிற்கு மேற்கே நிலவும் மத வெறியைத் தவிர்க்க இந்தியர்கள் விரும்பினால், தங்களுக்கு மிகவும் பிரியமானவற்றை அது மதமாக இருந்தாலும் சரி, தலைவராக இருந் தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி, விமர்சிக்கும், தாக்கிப் பேசும் உரிமையை இந்தியர்கள் கட்டாயமாக ஒப்பி ஏற்றுக் கொள்ளத்தான் வேண் டும்.

864 ஆம் ஆண்டில் பெரும் மருத்து வராக இருந்த, அபுபக்கர் முகமது இபின் ஜக்கிரியா எல் ராஜி எழுதுகிறார்: தேவதூதர்களின் அற்புதங்கள் எல்லாம் நம் மீது திணிக்கப்பட்ட கற்பனைகள் அல்லது பக்தி புராணக் கதை எல் லையைச் சார்ந்ததேயாகும்.

மதங்களின் போதனைகள் ஒரு உண்மைக்கு முரண்பட்டதாக இருப்பவையாகும். இதற்கான சான்றே மதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று முரண்படுகின்றன என்பதுதான். தங்கள் மதத் தலைவர் களை நம்புவதற்கு வழி வகுத்ததே, பாரம்பரியமும், சோம்பேறித்தனமான பழக்க வழக்கங்களுமேயாகும்.  மனித இனத்தை பெரிதும் அழித்த போர் களுக்கு ஒரே காரணமாக இருந்தவை மதங்கள்தான். 

தத்துவ விசார ணைக்கும், அறிவியல் ஆய்வுக்கும் பகையானவை, எதிரானவை அவை.  புனித நூல்கள் என்று கூறப்படுபவை யெல்லாம் எந்த வித மதிப்பும் அற்ற நூல்களேயாகும்.

காலிஃப் அபு அல் காசிம் அபுட் அல்லா அவர்களின் ஆதரவில் பாக் தாத் மருத்துவமனையின் இயக்குநராக இருந்து, ஒரு வளமான கல்வியறிவு மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்த இவர், தனது மாணவர்கள் சூழ ரேயில் இருந்த அவர் வீட்டில் அமைதியாக உயிர் நீத்தார்.  நவீன இந்தியாவில் ஒரு வேளை அவர் வாழ்ந்திருந்தால், அவரது சிந்தனைகள் இன்பமோ மகிழ்ச்சியோ அற்ற ஒரு முடிவுக்குதான் அவரை அழைத்துச் சென்றிருக்கும்.


(நன்றி: தி ஹிந்து 7.5.2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்)

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்