பகுத்தறிவு

31.01.1948 - குடிஅரசிலிருந்து...

கடவுள்: (தனது மனைவிகள், பரிவாரங்கள் சகிதம் பரமண்டலத்தில் உள்ள தர்பார் மண்ட பத்தில் வந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் கனைத்துக் கொண்டு) வேண்டும்! இந்த நாதிக ஆணவம் பிடித்த அயோக்கியப் பய்யன் களுக்கு இதுதானா? இன்னும் என்ன செய்யப் போகிறேன் பார்! அதற்குள் ஆகி விட்டதா உங்களுக்கு, உஹூம், உஹூம் என்று ஆத்திர மூச்சு விடுகிறார்.

அம்மன்: (கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருக்கும் மனைவியாகிய பாலகுஜலாம் பாள்) (இளமுலையம்மன்) நாதா! என்ன தாங்களே எதையோ பேசிக்கொண்டு ஆத்திரப்படுகிறீர்களே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! தங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வரவேண்டும்? தாங்கள் தான் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் உள்ள சர்வக்ஞன் ஆயிற்றே! இப்படி ஆத்திரத்துடன் துடிக்கலாமா?

கடவுள்: அதெல்லாம் பாட்டி கதையாகி விட்டது. நீ சொல்லும் நம்முடைய இந்தச் சக்தியை இந்தக் காலத்துப் பய்யன்கள் எவனும் நம்புவதில்லை, ஒப்புக்கொள்ளுவ தில்லை. அதற்கேற்றப் படி நடந்து கொள் வதுதான். அந்தப்பயல்களுக்குப் புத்திவரட் டும் என்று சில காரியம் செய்தேன். அவர்கள் இப்போது ஓடிவருகிறார்கள் நாயோட்டமாய் எனது ஞானதிருஷ்டியால் அவர்கள் வருகிறது தெரிந்தது. அதோ வருகிறார்கள்.  ஆதலால் எனக்கு ஆத்திரம் வந்தது.

அம்மன்: தாங்கள் மகா கருணாநிதியாயிற்றே! மக்கள் மடையர்கள் தானே! அவர் களுக்குத் தங்கள் சக்தியை அறிந்துகொள்ள யோக்கியதை உண்டா? சுவாமி! அவர்கள் மீது உங்களுக்குக் கோபம் வேண்டாம்! கருணை பாலியுங்கள்!

கடவுள்: சீச் சீசீ! பொட்டச்சியே! வாயை மூடு! இந்த விஷயத்தில் நீ ஒன்றுக்கும் குறுக்கே வரக்கூடாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. உன் அளவில் உன் வேலையைப் பார். இது பூலோகம் அல்ல, பெண்கள் சுதந்திரம் கொண்டாடுவதற்கு. இது தெய்வலோகம் என்பது உன் மனதில் இருக்கட்டும்.

அம்மன்: சுவாமி! மன்னிக்க வேண்டும். தெரியாமல் பேசிவிட்டேன். தப்பு, தப்பு. போதும் என்கிறவரையில் தோப்புக்கரணம் போட்டு விடுகிறேன், (என்று சொல்லி உட்கார்ந்து விடுகிறாள்)

மகா ஜனங்கள்: (கூட்டமாக வந்து) சுவாமி பகவானே! கேள்வி கேட்பாடு இல்லையா? சோறு இல்லை! துணி இல்லை! பெண்டு பிள்ளை, வீடுவாசல் சொத்துக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை! அடியும், உதையும், குத்தும், வெட்டும் கொண்ட அதிகாரத்துக்கு மாத்திரம் கணக்கில்லை!!! எங்களால் சகிக்க முடியவில்லையே. பூலோகத்தில் நாங்கள் படும்பாடு கொஞ்சம் கூடத் தங்களுக்குத் தெரியவில்லையா? நாங்கள் இந்தப் பாடு படும்போது நீங்கள் பெண்டு, பிள்ளைகள், பரிவாரங்கள் சகிதம் சுகமாக இருந்து கொண்டு தர்பார் நடத்துகிறீர்களே! இது தானா ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன், சர்வலோக தரண்யன் ஆன தங்களுக்குத் தகுதி. அய்யோ! அய்யோ! எங்கள் நிலைக்குப் பரிகாரம் இல்லையா?

கடவுள்: சீச்சீ! பகுத்தறிவற்ற நாய்களே! வாயை மூடுங்கள். உங்கள் யோக்கியதைக்கு இங்கு வந்து பேசத் துணிந்து விட்டீர்களே! நாதிகப் பயல்களே! ஆணவம் பிடித்த அகங் காரிகளே! உங்கள் வினைப்பயனை நீங்களே அனுபவிக்கிறீர்கள், உங்கள் நினைப்பின் பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் பாருங்கள்! பாருங்கள்! இவ்வளவு தானா? இன்னமும் பாருங்கள் என்ன நடக்கிறதென்று? என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே! அயோக்கிய சிகாமணிகளே!

மகாஜனங்கள்: சுவாமி! தாங்கள் இப்படிப் கோபிக்கலாமா? நாங்கள் ஒரு அபராதமும் செய்யவில்லையே. ஒரு கெட்ட நினைப்பும் நினைக்கவில்லையே! தங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி ஒரு காரியமும் செய்யவில்லையே!

கடவுள்: சீச்சீ! ஆணவம் பிடித்த அறிவிலிகளே! வாயை மூடுங்கள். என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள்.

மகாஜனங்கள்: சுவாமி கோபிக்கலாகாது. நாங்கள் மட ஜென்மங்கள். தாங்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நாங்கள், தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் மன்னித்தருள வேண்டும். தாங்கள் கோபிப் பதின் காரணமும், ஆத்திரப்படுவதன் காரண மும் எங்களுக்குப் புரியவில்லை. சத்தியமாய் தங்கள் மீது ஆணையாய், அம்மன் மீது ஆணையாய்ச் சொல்லுகிறோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கடாட்சித்தருள வேண்டும்.

கடவுள் : கடாட்சமா கடாட்சம், இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: பூலோகத்தில் இருக்கிறோம்.

கடவுள்: பூலோகத்தில் யாருடைய ராஜ்யத்தில் இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: சுவாமி நாங்கள் சுயராஜ்யத்தில் இருக்கிறோம்.

கடவுள்: (அம்மனைப் பார்த்து) கேட்டா யாடி! இந்தப் பசங்கள் சொல்லுவதை, எவ்வளவு அகங்காரமாக, ஆணவமாகப் பேசுகிறார்கள், பார்த்தாயா?

அம்மன்: அவர்கள் என்ன பேசுகிறார்கள், தாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு கிறார்கள். அதில் ஆணவமோ, அகங்காரமோ ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே!

கடவுள்: தெரியவில்லையா? நீயும் அவர்களோடு சேர்ந்தவளாகி விட்டாய்.

அம்மன்: நாதா! தாங்கள் இப்படி ஆத்திரப்பட்டுக் கோபித்துக் கொள்ளாதீர்கள். தாங்கள் பொறுமை ரூபி, கருணை ரூபி, அப்படி இருக்க இப்படிச் சொல்லலாமா?

தொடரும்...

16.11.1930 - குடிஅரசிலிருந்து..

வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ?

விடை:- அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக் குமென்றுதான். என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற் பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போராதா?

 


கடவுள் இருந்தால்

09.11.1930- குடிஅரசிலிருந்து...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப் புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதை பார்க்கின்றோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

16.11.1930- குடிஅரசிலிருந்து...

வினா:- நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட  கிடைப்ப தில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை:- நமது மதமும் ஜாதியும்

வினா : - நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90பேருக்கு மேலாகத் தற்குறியாயிருக்கிறோம்

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள்.  இதன் காரணம் என்ன?

விடை : - மதமும் ஜாதியும்.

வினா:- நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பாராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?

விடை: வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப் பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பாராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

வினா : - எந்த விதமான விபசாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்?

விடை :- வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

வினா:- கிருத்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: - ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

வினா:- மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

விடை : - ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா:- உண்மையான கற்பு எது?

விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

வினா: - போலி கற்பு என்றால் எது?

விடை:- ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத் திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக் கற்பு.

வினா : - மதம் என்றால் என்ன?

விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.

வினா:- நாட்டுக் கோட்டையார் சமுகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை:- பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: - தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப் படுகின்றது.

விடை:- பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா:- பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

விடை:-  அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா:- மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா:- பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- தலைமயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா:- எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.

விடை:- ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா:- பெரிய மூடன் யார்?

விடை:- தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா:- ஒழுக்கம் என்பது என்ன?

விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா:- சமயக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப் பாடு என்றால் என்ன?

விடை:- மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக்கட்டுப் பாடாய் இருக்கின்றது.

வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை:- கடவுள் எங்கு மறைந்து போவாரோ, என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா:- இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

விடை:- இந்தியர்கள் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாத, எழுத்து வாசனை கூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா:- ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை:- தடி எடுத்தவன் தண்டக்கார னென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா:- இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும். வினா: - இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை:-  இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாதிகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: - இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபடமுடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள் களுமேயாகும்.

வினா:- கிறித்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும்.அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்.

விடை:-  கிறித்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கை களும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர் களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ் வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை:-  மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பனர்கள்) எல்லோரையும் விட முன்னேறி யிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும், இழி வான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டி யவர்களாவார்கள்.

வினா:- ஆண் விபசாரர்கள் வீபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:-  அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்துவிடும்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது?

விடை:- அவர்கள் அனுமந்ததேவரை பூஜிக்கிறார்கள். படுக்கைவீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

விடை:- கடவுள் இருக்கிறார். போறாக் குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

16.11.1930 - குடிஅரசிலிருந்து..

இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.

பெய்சிங் (சீனா) 100000

கெய்ரோ 40000

காஷான் 40000

லிபன்   50000

மொராக்கோ   12000

தென் அமெரிக்கா   50000

அலப்போ 20000

தென் இத்தாலி  14000

மென்சோடா  12000

பெரு எக்வாடா 25000

கராகாடோ 37000

ஜப்பான்   30000

இந்தியா   20000

பிரான்ஸ்கோ, சிசிலி     77000

மத்திய இத்தாலி    30000

கான்சு சினா 300000

ஜப்பான்    220000

சில்லரையாக பல இடங்களில்    100000

ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர் களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள். நிற்க.

03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...

மூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத் தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப்பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங் களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங்களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணுவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றன. ஆனால் அவைகளை உட் கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தி னாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களை யெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வரு கிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகை யால் இனியேனும் இதுபோன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்ச ரிக்கை செய்கிறோம்.

தந்தைபெரியார் பொன்மொழிகள்

உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்?

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

 

 

 

 

 

 

 

 

 

Banner
Banner