பகுத்தறிவு


ஞானம் - மெய்ஞானம் என்றிடில் கடவுளைப் பற்றிய அறிவு என்றும், மோட்சம் அடைவதற் கான வழிகளை அறிதல் என்றும் கூறுவர் மதத்தினர்.

அதாவது, உலக நல்வாழ்வுக்கல்லாததும், இல்லாத ஒன்றிற்கான அறிவு பெறுதல் என்பர்.

இல்லாததைப்பற்றி அறிந்து கொள்வதால் நற்பயன் பயக்குமோ? பலனுக்காகாத கற்பனை கனவு போன்றில்லையா இக்கூற்று? மெய்ஞானம் - பலன் பயக்கும் உண்மையறிவு எது என்று திருத்தக்கத் தேவர் சிந்தாமணியில் விளக்குகிறார்;

‘மெய்வழி தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகையின்றித் தேறல் காட்சி
அய்ம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரை தேயாதொழுகுதல்
ஒழுக்கம் மூன்றாம்’

நல்லது கெட்டதைப் பகுத்தறியும் உண்மை வழியைக் கண்டறிதலே ஞானம் (உண்மை - நல்லறிவு).

பொருள்களின் உண்மையை பொய் வகையில்லாத வகையில் கண்டறிதலே நற்காட்சி. அதாவது, ஒரு பொருளை நல்லதா கெட்டதா என்று தெளிந்து அறிதலே அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் காட்சிப் பிரமாண மாகும். தகாத வழிகளில் வாழ்த்தும் உடலின் அய்ம்பொறி களையும் (பட்டினியால் தவத்தால்) வாட்டி, வாழ்க்கைச் சக்தியான உயிரைச் சிறுகச் சிறுக நலிவிக்காமல், உயிரையும் அவ்வழி உடலையும் பேணி வாழ்தலே நல்லொழுக்க மாகும். அதாவது, தகாத முறைகளை விடுத்து, நல்ல முறைகளில் சம்பாதித்து வாழ்தலே நல்லொழுக்கம் (நற்சீலம்)ஆகும்.

கடவுள் என்பதன் அருளைப் பெற என்று கூறிக் கொண்டு தவம் செய்தலையும், உண்ணா விரதமிருப்பதையும், கண்டிக்கிறார்.

இவை பயனற்றவை. உயிரையும் உடலையும் சிறுகச் சிறுக நலிவித்து விரைவில் சாவைத் தேடிக் கொள்ளும் இயற்கை முரண் செயல் இவை என்பதே இதன் தெளி பொருள்.

ஊன் வாட, உயிர் வாட மெய்க் காவலிட்டு தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம் என்று திருமங்கையாழ்வாரும் தெளிவாக அறிவுறுத்தியி ருக்கிறார்.

மெய்ஞானம் (நல்லறிவு, பகுத்தறிவு), நற் காட்சி (நல்ல பொருள்களைக் கண்டறிதல்), நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே மக்கள் நல்வாழ்வு - இன்ப சுகவாழ்வு எய்துவதற்கு முக்கிய மூன்று பண்புகள். இவற்றை புத்தர் முத்திரையம் என்றும், சமணர் ரத்தினத்திரையும் என்றும் கூறுவர்.

இந்தப் பகுத்தறிவு மெய்ஞானத்தை நன் ஞானம், மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மன மெய்ஞானம், கேவல ஞானம் என்று அய்ந்தாக விரித்துக் கூறுவர்.

அதாவது, பொதுப்படையான நல்லறிவு (பகுத்தறிவு) புத்தியைக் கொண்டு, நல்லது கெட்டதைத் தெளிந்தறியும் ஆக்கம் அறிவு - தெளிந்த மதிநுட்பம் ஒரு பொருளோ, விஷய மோ பொருந்துமா, பொருந்தாதா என்று கண்ட றியும் அறிவுத் தொல்லைகளை - கெடுதிகளைக் கண்டறியும் அறிவு - மனதால் உண்மையைக் கண்டறியும் சிந்தனை அறிவு (சிந்தனைச் சக்தி) இழித்தன்மையைக் கண்டறியும் அறிவு என்பவனவாம். இதன் ரத்தினச் சுருக்கக் கருப் பொருள்; பகுத் தறிவு பெறு என்ற தந்தை பெரியார் அவர்களின் நல்லுரை யேயாகும் - பகுத்தறிவே நல்வாழ்வளிக்கும் என்பதாகும்.
- விசித்திர சித்தன்

பால்ய விவாகம்!
1-4-1928 -குடிஅரசிலிருந்து...

குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டி ருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார் கள்?
தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி, அதை ராத்திரி அறுத்தாய் விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியலையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.

குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!
குழந்தை: அவன் போனால் போகட் டுமே! வேறு யாரையாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும்  என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன்

ஊ! ஊ!! ஊ!!!
பழக்கத்தால்
பாழாகும் பெண்கள்
1.3.1936, ‘குடிஅரசிலிருந்து...

மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர் களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள்.

இதனால் தான் அவர்களுடைய வயது காலங்களில் அழுவதும் பேயாடக் கூடியதாகவும் இருக்கிறதேயொழிய, இறந்து போய்விட்டதன் துக்கத்தினால் அழக்கூடியதாகவும் பேய்கள் பிடித்து ஆடக் கூடியதாகவும் இருக்கிறதென்று சொல்ல முடியாது.

சைவரும் - வைணவரும்!

வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட் சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?

வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவர்: என்ன சந்தேகம்?

வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ் துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!
-சித்திரபுத்திரன்

மதங்கள் எல்லாம்
செத்துப் போனவைகளே!

‘இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன.

செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்த துடன், அதைப் பெருக்கிக் கொண்டே வரு கிறது.

உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப் படி  நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை.

உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா? முதலாவதாக, வேஷத் திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை.

மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப் படுவது இல்லை.

இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தங்கள் ‘மதங்களைக் காப்பாற்ற வேண்டும்,’ ‘மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டி ருக்கிறார்கள்.

மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர்.

இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.
- தந்தை பெரியார்

வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலிகட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது.

விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்துகிறார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல்

அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளா விட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியச அனுபவத்திற்கும் தோன்று வதை நம்பாமல் எவனோ ஒருவன்  எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம்  அவர்கள் மதமும், கடவுளும் ஆகும்.

வினா: கிருஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மதவிஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையில் அவர்கள் (பாப்பார்கள்) எல்லோரையும்

விட முன்னேறியிருக்க முடிந்தது. மதவிஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள்.  ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடையவேண்டி யவர்களாவார்கள்.

வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத் திற்குப் போக நேர்ந்து விட்டால்  அங்கு போய் தங்கள் வியபாசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதிபூசுபவரும் பயப்பட வேண்டியத்தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவரம் பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலை கூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

வினா: சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது  தான் சாதி சமயக்கட்டுபாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை: கடவுள் எங்கு மறைந்து போவாறோ, என்று பயந்து அவரைக்க காக்க பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

விடை: இந்தியார் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை: தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா: இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவை களுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.

பார்ப்பனத்திகள் வெளியிலிருந்து வந்தவர்களா?
9.11.1930, குடிஅரசிலிருந்து...

ஜாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப் பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறுநாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் முகத்தில் தோன்றிய பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியா ரென்றும் அதன் கீழ்ப்பாகமாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களை விட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்றும் பாதங்களில் தோன்றிய சூத்திரர் இவர்கள் எல்லோரையும் விட கீழானவர் என்றும் கூறல் சரியா? ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளை களிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத்தாழ்ந்த ருசியையுமுடையதாயிருக்கின்றதோ அவ்வாறில் லாமல் எல்லாம் ஒரே விதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத் தானேயிருக்க வேண்டும். கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவை வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்தி ருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டா வதில்லை.

அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப் பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டா காமலிருக்க வேண்டுமே? அவ்வாறின்மையால் மனிதர்களனைவரும் ஒரே ஜாதி யென்பது விளங்க வில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றி னான் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்க மில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத் திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக் காட்டாக வியாசமுனி மீன்வாணிச்சியினின்றும், கவுசிக முனி சூத்ரச்சியினின்றும், விசுவாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பராசரமுனியும் பிறந்தததாக காணக்கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பனர்களாக ஏன் அவர்களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக் கின்றனர்? இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை. சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக்  கணக்குப்படி 100க்கு ஒருவர் பிராமணராயும், மீதி 99 பேரும் சூத்திரரா யுமிருக்கின்றார்களே. பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் சத்திரியரும், வைசியரும் கிடையாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடைய வர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்பனர்கள் மற்றைய ஜாதியார் களைவிட இத்துணை குறைவாகவும் சூத்திரர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணந்தானென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினை களுண் டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்தமாட்டே னென மறுத்தலும் ஏதற்கு? பிரம்மதேவன் முகத்திலும், புஜத்திலும், தொடையிலும், பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற் கென்றும், ஆண்குறி எதற்கென்றும் கேள்விப்பிறக் கின்றது. எனவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக்கதைகளுண்டு பண் ணியவர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம்.

எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி  மூன்று வித மாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய்  இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய் கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ  பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப் பது? இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல் லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக் குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
-  தந்தை பெரியார்


மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள்.

இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது.

அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர். இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள்.

மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர் பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள், பக்கம் 73, 74)

எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக்  கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார்.

“இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா?  வழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்து வதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா?

பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா?”

(மதமும் மூட நம்பிக்கையும் - பக்கம் 23)

கடவுள் அவசியம்
09.11.1930 -  குடிஅரசிலிருந்து...

1. அறிவும், ஆராய்ச்சியும் மன உறுதியும் அற்றவர்க்கே, கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும்.

2. சோம்பேறிகளுக்கும், ஊரார் பிழைப்பில் உண்டு களித்திருப்பவர்க்கும் கடவுள் மிக மிக அவசியமாகும்.

பகுத்தறிவு வினாக்கள்


* உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

*  நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

*  குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

* எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

*  எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

*  ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

*  அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

*  அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

*  முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

*  ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

*  மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

*  நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

*  எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

* அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

*  அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

*  பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

* சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

சிந்திக்காதவர்களுக்கும் சேர்த்துத்தான்...!

நமது இழிவுக்குக் கடவுள்தான் காரணமென்றால் அவைகளை உடைத் தெறியுங்கள்; மதமென்றால் அதை ஒழியுங்கள்; மனுதர்மம், கீதை, புராணம் என்றால் பொசுக் குங்கள்; அரசியல்தான் காரணம் என்றால் அறிவுறுத்தத் துணிவு கொள்ள வேண்டாமா?
- தந்தை பெரியார்

நாட்டிலே மக்கள் உணவற்று உடையற்று இருக்க, இடமற்று நிற்கதியாய் உலவுகின்றனர். ஆனால், நம் சாமிகளுக்கோ, ஆயிரமாயிரம் வேலி நிலங்கள் பட்டு, பஞ்சணை பீதாம்பரங்கள், பொன், வெள்ளி, குதிரை, யானை, சவாரிகள், தேவையா?
வெட்டாமல், குத்தாமல் ‘விதைக்காமல்’ அறுக்காமல் குனியாமல், நிமிராமல் ஒரு சமுதாயம் மட்டும் இன்று நேற்றல்ல, மூதாதையர் காலந்தொட்டு எப்படியோ வாழ்ந்து வருகிறதே அது எப்படி?
- பேரறிஞர் அண்ணா

வஞ்சகர், வந்தவர், தமிழால் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின், தமிழையே பழித்தார்!
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம் இந்நாள், அவரஞ்சி விழித்தார்!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்


1929 -குடி அரசிலிருந்து...

தென் திருவிதாங்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய சிவசேத்திரமாகக் கருதப் படுவது சுசீந்திரமாகும். இங்கு கோயில் கொண்டிருக்கும் சுவாமியின் பெயர் தானு மாலயன் (மும்மூர்த்திகளும் ஓர் காலத்தில் ஒன்று சேர்ந்து ஒரே மூர்த்தியாய் அமைந்தது) என்று ஸ்தல புராணங்கூறுகின்றது. ஊரின் பெயரை நோக்கினால் இந்திரன் சுசி அடைந்த புரமென விளங்குகின்றது. ஓர் காலத்தில் இந்திரன் செய்த அடாத காரியத்திற்காக அவனது உடம்பு முற்றும் ஆயிரம் யோனிகள் தோன்றிவிட்டன வென்றும், பின்னர் பன் னூறாண்டுகள் தவஞ்செய்ததின் பலனாய் அவ்யோனிகள் கண்களாய் மாறின வென்றும் பண்டைப் புராணங்கள் கூறுகின்றன. சாபத்தை நீக்குவதற்காக இந்திரன் தவஞ்செய்த வனிடம் சுசீந்திர (புர) மென்றும் தனது வெள்ளை யானை அய்ராவதத்தை ஏன் அது மகேந்திரகிரியிலிருந்து தன்கோடு கொம்பு களால்  பூமியைக் கீறிக்கொண்டேவர அவ்வழியாகப் புறப்பட்ட நதியே கோட்டாறு எனப் பெற்றதென்றும் இதனால் இது மிக பழமையான நதியாகையால் பழையாறு என்று இப்பொழுது வழங்கப்படுகிறதென்றும் சுசீந்திரத்திற்கு சுமார் இரண்டு மைலுக்கு வடமேற்காயிருக்கும் ஊருக்கு கோட்டாறு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது என்று அப்புராணங்கள் கூறுகின்றன.

மேற்சொன்னபடி புறப்பட்ட ஆறு, இந்திரன் யாகம் முதலிய இயற்றிய விடத்தில் வந்து நின்றது என்றும் இவ் விடத்திலேயே இப்பொழுது பொற்றாமரைத்தடாகம் அமைந் திருக்கிறதென்றும் இவ்விடத்தில் பல யாகம் செய்து தூய்மை அடைந்தான் என்றும் இத்தகைய புண்ணிய ஸ்தலத்தை எவ்விதக் குற்றஞ்செய்தவர் தரிசித்தாலும் தூய்மையடை வரென்பதும் மும்மூர்த்திகளை  ஒரே சம யத்தில் ஒரே வடிவில் தரிசிக்கிற பலனும் கிட்டும் என்பதும் இப்பக்கத்து மக்களின் நம்பிக்கை.

இவ்விடத்தில் வசிப்பவர்கள் யார்யாரெ னின் பெருஞ் செல்வத்தையுடைய இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலங்கழிப்பவரே.

இவ்வூரிலிருந்து சிறிது தூரத்திற்கப் பாலிருக்கும் கக்காடு என்ற சேரியிலுள்ள சாம்போர் முதலிய தீண்டா திருக் குலத்தினரின் வண்டி முதலியவை ஆற்றிலிறங்கியே போக வேண்டுமாயின் அதற்கு உயர்குலத்தாருடைய அனுமதி வேண்டும். இன்றேல் வண்டியைக் கொண்டு போக முடியாது. கோயிலைச் சுற்றியுள்ள அக்கிராகாரத்தினரும் அவருக்கு அடுத்தபடியாயுள்ள வேளாளரும் சுசீந்திரம் சத்தியாக் கிரகத்தின் போது தீண்டாக் குலத்தி னருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்ட விஷயம் யாருமறிந்த தொன்றாகும். பொதுப் பணத்தைக் கொண்டு போடப்பட்டி ருக்கிற வருடந் தோறும் செப்பனிடப்படுகிற சுசீந்திரப் பாதைகளில் ஒரு குலத்தார் செல்லலாகாது எனத் தடுக்கப்பட்டு வந்ததை யொட்டியே சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவதாக இத்தகைய புண்ணிய ஷேத்திரத்தின் புராணப்படி பார்த்தாலும் அங்கு ஜாதி வித்தியாசமில்லை யென்பதும், இந்திரனைப் போன்ற பெரும் பாவங்களைச் செய்தவரும் அங்குள்ள கடவுளை வணங்கித் தூய்மை பெறலாமென்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது. எனவே சிறிதும் குற்றமின்றி, தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதிக்காது தடுப்பது பெரும் அறியா மையும், ஆண வமுமாகும்.

உற்றுநோக்கின் இங்கோர் உண்மைப் புலப்படும். அதாவது எந்தப் போராட்டத்திலும், கோடாரிக்காம்புகளாய்ப் பிறந்தி ருக்கும் பிராமணரல்லாதாரே தம் இனத்தவரைத் தாழ்த்துவ தற்குத் துணைபுரிகிறார்களென்பது, கடந்த சுசீந்திரம் சத்தியாக் கிரகத்திலும் யார் யார் முன்வந்தார்கள் பார்ப்பனர் யாரேனும் உண்டா? இல்லவே இல்லை எனலாம் சோற்றுத் தடியர்களான பார்ப்பனரல்லாதாரே, அதாவது பார்ப்பனர், தூண்டி விட்டுப் பின் நிற்பதே பார்ப்பனர் வேலை ஏதாவது குரோ தத்தைக் கிளப்பிவிட்டால் பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் தலைவிரித்தாடும். நம் இனத்தவரை துன்புறுத்துகின்றோமே எனச் சிறிதும் நினைக்கமாட்டார்கள்.

கோவில்  சோற்றுக்கு வழியில்லாமற் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கதிகம், சுசீந்தரம் கோவிலைப் பற்றிய வருவாயே அங்குள்ள பார்ப்பனருக்கும் பிற உயர்ந்த இனத்தவர்க்கும்.

எனவே தாழ்த்தப்பட்டவரை அனுமதித்து விட்டால், தம்பிழைப்புக் கெட்டுப்போய்விடும் என்ற பயம் ஒரு புறம் இதற்காக எதிர் சக்தியாகிரகஞ்செய்தனரேயன்றி வேறல்ல. வேறு காரணமுமில்லை. தாழ்த்தப்பட்டவர் வீதிகளில் வராத தால் வண்டிக்கூலி விறகு வெட்டுக்கூலி முதலிய பலவும் அவர்கட்கே பார்ப்பனருக்கு கோவிலினின்றும் பொருள் ஏராளமாக கிடைப்பதால், எவ்வளவு கொடுத் தாலும் அதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

எனவே பார்ப்பனீயத்தின் ஆட்சிக்குத் தோள் கொடுப் பவர் பிராமணரல்லாத கோடரிக் காம்புகளேயாகும். பிராமணரல்லா தார் யாவரும் ஒரு முகப்பட்டு நின்றால் தாழ்த் தப்பட்டவருடைய உரிமைகள் விரைவில் பாதுகாக்கப்படும். இந்திரனைத் தூய்மை படுத்திய தானுமாலய மூர்த்திக்கு இவர்களு டைய மாசற்றநெஞ்சைத் தூய்மைப்படுத்த மனம் வரவில்லைபோலும். திருவாங்கூர் அரசாங்கத்தார் தேவஸ் தான விஷயத்தில் செய்திருக்கும் சில சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு போற்றற் குரியனவாகும். தேவஸ்தான இலாகாவை ஏற்படுத்தியதிலிருந்து கோவில் காரியங்களெல்லாம் சிறிது கவனமாகப் பார்க்கப்படுகின்றன. பெருச்சாளிகளுடைய மனம் போல் நடக்கத்தடை ஏற்பட்டுவிட்டது.

இன்னுஞ்சிறிது முற்போக்கைக் கொண்டு கோவிலுட் சென்று கும்பிடவும் தெருவீதிவழி செல்லவும் மனிதராய்ப் பிறந்த எவருக்கும் உரிமையுண்டென உண்மையை நிலை நிறுத்தினால் மிகவும் நலமெனக் கூறுகிறோம். மிருகபலியை நிறுத்திய கவர்மெண்டார் மனித உரிமைகளின் பலியையும் நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும். ஒரு குலத்திற் கொருநீதி வழங்கல் நியாயமன்று. யாவரையும் அனுமதிப்ப தால் சுவாமி ஓடிவிட மாட்டார்! அதனால் யாதொருவிதக் கெடுதியும் நேரிடாது நன்மையே உண்டாகும்.

பார்ப்பனீயம் ஒழிக! சமத்துவம் ஓங்குக! மூடத்தனம் மூழ்குக!

அந்நிய நாடுகளைப் பாருங்கள்!
27.12.1931, குடி அரசிலிருந்து..

நமது மக்களுக்கு தன்னம்பிக்கை சிறிதும் உண்டாகாதபடி “ஆண்டவன்” என்பவனை நம்புவ தானாலும், பிரார்த்தனைகளை நடத்துவதாலுமே காரியங்களை முடிக்கலா மென்னும் மூடத்தனத்தைப் பரவச் செய்கின்றனர்.

எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவை உண் டாக்காமல், “மதக்கட்டளை”, “கடவுள் மொழி”, “பெரியோர் சொல்”, “மகாத்மா வாசகம்“ என்று சொல்லி அவற்றைச் சரியோ, தப்போ அப்படியே நம்பும்படியான மனப்பான் மையை உண்டாக்கு கின்றனர். காலத்திற்கும் பொருந்தாத பழைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை உண்டாக்காமல் பழைமை யான நடவடிக்கைகள் பரிசுத்தமானவை, அவற்றை மாற்றிக் கொண்டால் நமது மதத்திற்கு  அழிவு வந்துவிடும்.

நமது புராதன நாகரிகத்திற்குச் சிதைவு வந்து விடும்; ஆகையால் பழைமையை விட்டுவிடக் கூடாது என்ற எண் ணத்தை உறுதியாக நிலைக்கச் செய்யக்கூடிய வேலையையே செய்கின்றனர்.

நாகரிக தேசத்தார்கள், தம்முடைய நாட்டு மக்களை உலக நாகரிகத்திற்கு வேண்டிய சிறந்த கல்விகளைக் கற்கும்படி செய்கின்றனர்.

அதாவது; கைத்தொழில் சம்பந்தமான கல்வி, வியாபார சம்பந்தமான கல்வி, விவசாயம் சம்பந்த மான கல்வி, விஞ்ஞான சாஸ்திரம் சம்பந்தமான கல்வி, சுகாதார சம்பந்தமான கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி முதலிய உலக வாழ்க்கைக்குப் பயன்படத்தகுந்த கல்வியை வளர்க்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் என்ப வர்களோ, மேற்கூறிய பலவகைப்பட்ட வசதியுள்ள நூல்கள் நிரம்பிய பாஷையையே நமது நாட்டை விட்டு ஒழித்துவிட வேண்டுமென்று வேலை செய்கின்றனர்.

மக்களுக்கு உலக நாகரிகத்தைப் போதிக்காமல், சோம்  பேறித் தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்கக் கூடிய சில புராணங்கள் மாத்திரம் உள்ளதும், சிறந்த இலக்கியங்கள் கூட இல்லாதது மாகிய இந்தி பாஷையையே எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணுகின்றனர்.

மற்ற நாட்டுத் தலைவர்கள் எல்லோரும், மக்க ளுடைய கஷ்டமான உழைப்பைக் குறைத்து, எல்லாத் தொழில்களையும் இயந்திரங்களைக் கொண்டு விருத்தி செய்து, நாட்டின் விவசாயம், கைத்தொழிலும், அந்நிய நாட்டு விவசாயத்துடனும், கைத்தொழில்களுடனும் போட்டி போடவும், வியாபாரத்தின் மூலம் தங்கள் நாட்டில் செல்வத்தைப் பெருக்கவும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ இயந்திரங்களோ இயந்திரங்களின் மூலம் தொழில் களை விருத்தி செய்ய வேண்டும் என்னும் எண்ணமே மக்களிடம் தோன்றாம லிருக்கும்படியும், எல்லாத் தொழில்களையும், பிறர் உதவியில்லாமல் தாமே கையினால் செய்து கொள்ள வேண்டு மென்னும் குறுகிய மனப்பான்மையும் தேசியம் என்னும் பெயரால் உண்டாக்குகின்றனர்.

இதனால் நாட்டின் விவசாயம், கைத்தொழில்கள் முதலியன வளர்ச்சியடைய ஒட்டாமலும், எந்த வகையிலும் அந்நிய நாடுகளுடன் வியாபாரம் செய்து போட்டி போட முடியாமலும், நாட்டின் செல்வ நிலை வளர முடியாமலும் பாழ்படுத்து கின்றனர்.

ஆஸ்திகர்களே எது நல்லது?

21.12.1930- குடிஅரசிலிருந்து...

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?

அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?


20.11.1943 - குடியரசிலிருந்து...    
பார்ப்பன மாந்தர்காள் - பகர்வது கேள்மின்,
இறந்தவராய உமை-இல்லிடை இருத்தி,
பாவனை மந்திரம், பலபட உரைத்தே,
உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது,
அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு,
கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர்,
அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது?
(உன் பசியா அவர் பசியா பார்)

என்ற இது கபிலரால் சொல்லப்பட்டது.

இப்படி இருக்க நீ திதி கொடுப்பது பார்ப்பனனுக்கு நீ மகன் என்பதை உறுதிப் படுத்தத்தானே பயன்படுகிறது?

உன் புத்தி கொண்டு பார். கபிலர் சொன்னதையும் தள்ளிவிட்டு என்னையும் மறந்து விட்டு உன் சொந்தப் புத்தியைக் கொண்டு சிறிது நன்றாய் ஆலோசித்துப் பார் அய்யா. ஓ! திதி கொடுக்கிறவனே! செத்துப்போனது உன் அப்பன். 100-க்கு 99 பாகம் அதிலே உனக்கு சந்தேகமிருக்காது.

அவன் இப்போது எங்கிருக்கிறான் என்பதும் உனக்குத் தெரியாது.

அவன் உடல் கட்டையில் வைக்கப்பட்டு, உன் கையாலேயே நெருப்பு வைக்கப்பட்டு, அது உன் கண்கள் முன்னாலே வெந்து சாம்பலாகி அதுவும் தண்ணீர் விட்டு கரைத்துவிடப்பட்டு விட்டது.

அல்லது உன் அப்பன் பிணத்தை நீயே பணங்கொடுத்து குழி வெட்டி குழிக்குள் போட்டு உன் கையாலேயே மண் தள்ளி புதைத்து மேலே கல் நாட்டியும் ஆகிவிட்டது. ஆகவே செத்துப்போன உன் அப்பனுக்கு இப்போது உடல் இல்லை. இது நிச்சயம்தானே? இனி திதி நீ யாருக்குக் கொடுக்கிறதாகச் சொல்லுகிறாய், என் அப்பனுடைய ஆத்மாவுக்குக் கொடுக் கிறேன் என்கிறாயா? அதாவது என் அப்பன் சரீரத்துக்கு அல்ல, உயிருக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா?

சரி அந்த உயிரை நீ பார்த்தாயோ? அதுவும் இல்லை.அது எங்கிருக்கிறது என்பதும் எப்படிப் போயிற்று என்பதும் உனக்குத் தெரியுமோ? அதுவும் தெரியாது. அந்த உயிர் எது எப்படி இருக்கும் என்பதும் உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியது. தெரியவும் தெரியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறான் அந்த உயிர் வேறு ஒருவர் கண்ணுக்குத் தெரியாத(சூட்சும) சரீரத்தோடு மேல் லோகத்தில் இருக்கிறது என்கிறான். அவன் சொல்லுகிற மேல்லோகத்தை நீயும் பார்த்ததில்லை; அவனும் பார்த்த தில்லை. அந்தப் படியான மேல் லோகம் ஒன்று இருப்பதாக எந்த பூகோள புத்தகத்திலும் இல்லை. வானசாஸ்திரத்திலும் இல்லை அன்றி யும் எத்தனையோ வித சயன்சு படிக்க சௌகரியமிருக்கிற வெள்ளைக்காரன் பிளானை வைச்சிக் கிட்டுக் கூட கண்ணில் தெரிகிற இமய மலையையே சரியாய்ப் பார்க்க முடியவில்லை. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான், டுஸ் இன்னா ஒரு காதம் ஓடிப்போய் திரும்பிப் பார்க்கிறவன், மேல்லோகம் ஒன்று இருக்கிறது,என்றால் நீ அதை எப்படி நம்பமுடியும் ?

அதுதான் இருக்கட்டும்

அதுதான் இருக்கட்டும் - செத்தவனெல்லாம் உடனே மறுஜென்மமாக இந்த பூமியிலேயே பிறக்கிறான். பிறக்கிறவனெல்லாம் பிறக்கு முன் ஒரு ஜன்மமாக இருந்து செத்த பிறகுதான் உடனே மறுஜன்மமாய்ப் பிறக்கிறான் என்றும் இதே பார்ப்பான்தானே சொல்லி இருக்கிறான்!

மேலும் மேலும் இதே பார்ப்பான்தான் இன்னொரு சமயத்தில் உனக்கு என்ன சொன்னான் தெரியுமா? நீ அடுத்த ஜன்மத்தில் நல்ல (மேலான ஜாதி) ஜன்மமாகப் பிறந்து மேன்மையாகப் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் எனக்குப் பணம் கொடு என்று சொல்லி உங்கப்பனிடமும் உன்னிடமும் எவ்வளவோ பணம் வாங்கிக் கொண்டு போயிருப்பதோடு அதற்காக அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ, அதிலே முழுகு, இதிலே முழுகு, அதைச் செய், இதைச் செய் என்று உன்னை நாயாட்டமா அலையவெச்சிப் பிச்சிப் பிடுங்கித் தின்றிருக்கிறான்.

இவ்வளவோடு விட்டானா? அன்றியும் அவன் உன்னை இவ்வளவோடும் விடவில்லையே. மற்றும் பலவிதமாய் அதாவது மேல்லோகத்திலே மோக்ஷம் இருக்கிறது - நரகம் இருக்கிறது என்றும் மோட்சத்தில் லட்டு மாதிரி நல்ல நல்ல பெண்கள் இருக்கிறார்கள், காமதேணு இருக்கிறது.சுடச்சுட அருமையாகச் சாப்பாடு போடும் கற்பக விருட்சம் இருக்கிறது, அது நீ எதைக் கேட்டாலும் நினைத்த மாத்திரத்திலேயே உடனே கொடுக்கும் என்றும், மேல் லோகத்தில் நரகம் இருக்கிறது, அந்த நரகத்திலே மலம் இருக்கிறது. அந்த மலத்திலே பாம்பு இருக்கிறது, தேள் இருக்கிறது. அதற்குள் தான் செத்தவன் உயிர் இருந்து அந்த மலத்தைச் சாப்பிட்டுக்கொண்டு பாம்பினிடமும், தேளினிடமும் சதா கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஆதலால் நீ மோட்சம் போக வேண்டுமானால் எனக்கு பணம், பொம்பளே, அரிசி, உப்பு, புளி, வேஷ்டி, துணி, பருப்பு கொடை இன்னம் என்னென்னமோ கொடுத்தாகணும் - கொடுக்காவிட்டால் நரகம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆசைகாட்டியும் பயப்படுத்தியும் எவ்வளவோ வாங்கிக் கொண்டும்போய் இருக்கிறான்.

இன்னொரு சங்கதி

இவைகளையெல்லாம்விட இன்னொரு சங்கதி என்ன வென்றால். அவனவன் பாவ புண்ணியம் அவனவனுடன் தான் கூடவே இருக்கும். அதை அவனவனே அனுபவித்துத் தீரவேண்டும் என்றும் அதற்குப் பேரேடு, குறிப்பு, சிட்டா கணக்கு இருக்கிறது. ஆதலால் அதற்காக வேண்டி மனிதன் நல்லதையே செய்ய வேண்டுமே ஒழிய கெட்டதைச் செய்யக்கூடாது என்றும் சொல்லி, நல்லது இன்னது (அதாவது தனக்குக் கொடுப்பதுதான் நல்லது என்றும்) கெட்டது இன்னது (அதாவது தனக்குக் கொடுக்காவிட்டால் பாவம் அது கெட்டது) என்றும் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு அதனாலும் பயனடைந்து வருகிறான்.

இத்தனை எழவு குழறுபடிகளில் நீ எதை நம்பி இந்தப் பார்ப்பாரப் பய்யனுக்குத் தெவசம், திதி கொடுக்கிறாய் என்று கேட்கிறேன்.

நீ இதுவரை கொடுத்ததற்கு ஏதாவது ரேடியோ சேதியோ போஸ்டல் ரசீதோ வந்ததா?

நீ கொடுத்த பண்டங்களைப் பார்ப்பான் வாங்கி மூட்டை கட்டிக் கொண்டு போய் உங்கப்பனுக்கு அனுப்பினானா? அல்லது குச்சிக்கார தேவடியா வீட்டுக்கு அனுப்பினானா என்பதையாவது பார்த்தாயா? இந்தப் பஞ்ச காலத்தில் எத்தனையோ சாமான்களை மூட்டை கட்டி அவன் கையில் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு அவனை அனுப்பிக் கொடுத்ததைத் தவிர வேறு சங்கதி உனக்கு என்னவாவது தெரியுமா? இவ்வளவு முட்டாளாக இருந்து கொண்டு திவசம் கொடுக்கிறாயே, இது உன் (தலையில் மூளை இல்லாத) தலைவிதி வசம்தானே.

அட முட்டாளே! உனக்குச் சுயராஜ்யம் வேறு கேடு. அடி முட்டாளே! உனக்கு சமதர்மம் வேறே அழுகுது.

“நாயிக்குப் பேரு நவநீத கிருஷ்ணனாம்.”

“விளக்குமாத்துக்குப் பேரு வீட்டு லச்சிமியாம்”

இப்படித்தானே இருக்கிறது. உன் சங்கதி.

ஒரு பரீட்சையாவது பாரு

ஒரு பரீட்சை பார்க்கிறாயா -

நீ 2 நாளைக்கு சாப்பிடாமல் பட்டினியாய் இரு. 3-ஆம் நாள் ஒரு பாப்பானைக் கூப்பிட்டு நீ உனக்கே திதி கொடுத்துக் கொள்ளப் போவதாக (அதாவது பிரயாக முதலிய இடங்களில் தனக்கே பிண்டம் போட்டுக்கொண்டு வருகிறார்களே அதுபோல் சொல்லி உனக்கு வேண்டியதை அவன் வசம் கொடுத்து அனுப்பி விடு. 2நாள் வரை பொறுத்துப்பாரு உனக்கு ஏதாவது பசி ஆறுதா அல்லது அதிகப்பசியும் களைப்பும் ஏறுதா என்று பாரு. உன் பசி தீராவிட்டால் இந்த ஊரில் இருக்கிறவனுக்கு திதி கொடுத்தே பசி ஆறாமல் இருக்கும்போது இனி மேல் லோகத்தில் இருப்பவனுக்கு திதி கொடுத்தால் போய்ச் சேருமா என்று யோசித்துப் பாரு.

தொட்டுக்கிட்டுத்...

“தொட்டுக்கிட்டுத் தின்பேன் நீ என்ன கேட்கிறது” என்றால் சரி மகராஜனாக அப்படியே செய் என்பதைத் தவிர வேறு என்னால் உன்னை என்ன செய்ய முடியும் ?

பெண்களை புராணக் கதைகளைப் படிக்கவிடக் கூடாது

15-06-1943 - விடுதலையிலிருந்து...
பெண்களுக்கு இன்றுள்ள புராணக் கதைகளைக் கேட்கவோ படிக்கவோ சிறிதும் இடம் கொடுக்கப்படாது. கற்பு என்றால் அதற்கு அறிவுக்கேற்ற அல்லது இருவர் நலனுக்கேற்ற கருத்துக் கொள்வதே இல்லை. கற்பு என்றால் நடைப்பிணமாய் இருக்க வேண்டும். வாய், கண், செவி ஆகிய மூன்று யந்திர உணர்ச்சிகூட இருக்கக் கூடாது என்ற பொருளே கொடுக்கப்படுகிறது. இதனால் யாருக்காவது பயன் உண்டா? கற்பு என்பதற்கு இது அழுத்தமானால் குருட்டுப் பெண்ணும் மொண்டி ஊமைப்பெண்ணும் மேலானதாகும்.    
(07-06-1943, 09-06-1943ஆம் தேதி காஞ்சிபுரம்
தோழர் தாண்டவமூர்த்தி அவர்கள் திருமணத்திலும்,
திருப்பத்தூர் தோழர் கேசவன் அவர்கள் திருமணத்திலும் பெண்களைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவு )

மதநம்பிக்கையின் விளைவு
27.05.1934 - புரட்சியிலிருந்து...

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டுமென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது. இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.

இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போ மானாலும் இன்று உலகில் புருஷனைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம்.

ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.


Banner
Banner